Storytamil

காடும் பாம்பும்


இது ஒரு சுமாரான கிராமம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , அட்டகாசமான ஒரு காடாக இருந்து, இன்று சுமாரான கிராமமாக மாறிய காடு . முதலில் வந்த மனிதர்கள், காட்டின் விதிகள் அறிந்து, அதனூடே பயணித்து, அதற்கு குந்தகம் விளைவிக்காமல் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த மனிதர்கள் இவர்களை காட்டுமிராண்டி என்று அடித்து துரத்தி, தன் போக்கில் வாழ ஆரம்பித்தார்கள். அடுத்து வந்த பல ஆண்டுகளில், அந்த காடும் பொலிவை எல்லாம் இழந்து இன்று இப்படி ஒரு சராசரி கிராமமாக மாறி அவலமாக நிற்கிறது.

அந்த கிராமத்தில் இன்றும் ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது, அதன் அருகே ஒரு ஆலமரம் , இது முன்னர் கூறிய  காட்டின் மிச்ச சொச்சம். அந்த மரத்தின் கீழ் ஒரு விநாயகர் சிலை, அந்த சிலைக்கு காலை மட்டும் பூஜை.. கணேசன் தான் அந்த மொட்டை கோவிலை பராமரித்து காலை பூஜை செய்து வந்தார். அன்று சதுர்த்தி என்பதால், காலையில் கொஞ்சம் முன்னதாகவே நெய்வேத்தியம் எடுத்து சென்றார். வழக்கமான மந்திரங்களுக்கு பிறகு, கற்பூரம் ஏற்றி வந்திருந்த பத்து பேருக்கும் காண்பித்தார், ஒரு இருபது ரூபாய் தேறியது,. அதை வாங்கி இடுப்பில் இருந்த வேட்டியின் மடிப்பில் சொருகி, அந்த பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு கிளம்பும் போது தான் அந்த பாம்பு அங்கிருந்ததை கவனித்து  அதிர்ந்தார். 

கூடி இருந்த பத்து பேரும் இவருடன் சேர்ந்து பதட்டமடைந்து, ஆறு அடி தள்ளி சென்று அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை​ செய்ய ​ ஆரம்பித்தனர். ஒருவர் அதை அடித்து விடலாம் என்று  ஆரம்பிக்க, கணேசனோ அது தெய்வ குத்தம் ஆகி விடும், அதனால் அதெல்லாம் செய்யக்கூடாது , அப்படியே அடித்து கொல்ல முடிவெடுத்தாலும் , பாம்பு  ஆலமரத்தை விட்டு விலகியவுடன் செய்யுமாறு சொல்ல, இருவர் ஆமோதித்தனர். அடுத்து வந்தவர் , பாம்புக்கு பாலை வைத்தால் அது குடித்து விட்டு சென்று விடும் என்ற ஆக சிறந்த யோசனை ஒன்றை கூற, வந்திருந்த பெரும்பாலானோர்  ஆமோத்தினார். ஆனாலும் ஒருவர் மட்டும், பாம்பு முட்டை தான் சாப்பிடும் என்று கூற, அதற்கு அடுத்த ஒருவர், முட்டை என்றால், உடைத்து கொடுப்பதா, இல்லை வேக வைத்து கொடுப்பதா என்று நோண்ட ஆரம்பிக்க, கணேசனுக்கோ, கோவிலில் 

முட்டை  எல்லாம் கொண்டு வரக்கூடாது என்று கூறி, பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அந்த பாம்பின் அருகே செல்ல அந்த பாம்பு பிள்ளையாரின் சிலைக்கு பின்னே மறைய, கணேசன் சிலையை சிறிது  நகர்த்தி, பால் வைக்கும் பொழுது தான் அந்த சம்பவம் நிறைவேறியது. 

பசியில் இருந்த  அந்த பாம்பு, கணேசன் தன்னை அடிக்க வருவதாக நினைத்து பிள்ளையாரின் சிலைக்கு பின்னே செல்ல, கணேசனோ சிலையை நகர்த்துகிறேன் பேர்வழி என்று பாம்பின் உடம்பின் மீதே அந்த சிலையை போட பாம்பு நகர முடியாமல் தவித்து, கணேசன் கையில் ஒரே  போடாக போட்டது. கணேசனுக்கு, லேசாக வலித்தாலும், பாம்பு கடித்து விட்டதே என்ற பரபரப்பு ஜாஸ்தி ஆகி , உடல் வியர்த்து, மயக்கம் வந்து, சரிந்தார். அவர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவரிடம் ஓடினர். அந்த பாம்பு அங்கேயே பிள்ளையாரை வட்டமிட்டு கிடந்தது, கணேசனுக்கு நிகழ்ந்த அந்த விபத்தினால், அதனருகே செல்ல அனைவரும் பயந்தனர். 

சில மாதங்கள் ஆகியும் , அந்த இடத்தில் இருந்து  பாம்பு கிளம்பாமல் , பிள்ளையாரின் சிலையை சுற்றியே கிடந்ததால், அந்த ஊர் மடையர்கள்  பக்கத்தில் கூட வராமல்  அங்கேயே அந்த பாம்புக்கு ஒரு புற்று கட்டி, அதை வழிபட ஆரம்பித்தனர். கிடைத்த பால், முட்டை ஆகியவற்றை சாப்பிட ஆரம்பித்த அந்த பாம்பிற்கு நாக்கு செத்து போனது. அந்த பாம்பு சுமார் மூன்று  மாத   காலம் அதே இடத்தை விட்டு நகராமல் இருந்தது. இதை ஒரு அதிசயமாக்கி, அந்த ஊர்  மக்கள் அங்கேயே ஒரு பெரிய கோவிலை கட்டினர் . அடுத்த சில மாதங்களில், அது ஒரு பிரசித்தி பெற்ற தலமாக மாறி நாளைக்கு நூறிலிருந்து ஐநூறு பேர் வரும் கோவிலாக மாறியது. அடுத்த சில மாதங்களில் அந்த பாம்பு  அங்கேயே மரணிந்தது​. ​கடைசியாக ஒரு பாம்பாட்டி  வந்து  சேர்ந்து அந்த பாம்பை வெளியில் எடுக்கும் போது தான், அவன் அந்த பாம்பின் உடலில் உள்ள காயத்தை அறிந்தான். அந்த பாம்பாட்டி எங்கே இந்த விஷயத்தை வெளியே சொன்னால் காசு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்  அதற்கு இறுதி மரியாதை செலுத்தி அங்கேயே புதைத்தனர். 

பாம்பின் நினைவாக, அந்த ஊரின் பெயரை நாகநல்லூர் என்று மாற்றினர்.

Hi, I’m valaithinni

Leave a Reply