Storyகதை

தாந்தோவின் மாய வனம்

முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின் ஆரம்பத்தைப் போல. ஒரு வேலை இதுவே கனவாக இருக்குமோ? வாய்ப்பில்லை, கனவில் இவ்வளவு தெளிவு இருக்காது . இங்கே , எங்கும் கிடைக்காத ஒரு அமைதி நிலவுகிறது. ஒரு அளவில்லா நிசப்தம் என்னை ஆட்கொள்கிறது . எந்த ஒலியும் கேட்காத வனம் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

வாய் திறந்து பேச முயன்றேன். வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. சப்தம் எழுப்பாத வார்த்தைகள் . ஒரு வேலை என் காது தான் கேட்கவில்லையோ? இல்லை, இங்கே சத்தமே இல்லை. கனரக வாகனத்தின் ஹாரன் சத்தம் இல்லை , தூக்கத்தை கெடுக்கும் செல்போன் சினுங்கள்கள் இல்லை, நொடிக்கு ஒரு துர் செய்தி தரும் தொலைக்காட்சித் தொந்தரவும் இல்லை . ஆனால் குழந்தையின் சிரிப்பு சத்தத்தையும் , இளையராஜாவின் இசையும் சேர்த்தல்லவா இழந்துவிட்டேன் . இசை இல்லாமல் எப்படி ஒரு மனிதன் இயங்க முடியும்? வாய் திறந்து ராஜனின் பாட்டு ஒன்றை பாட முயன்றேன் , காத்து கூட வரவில்லை.

என்ன நடக்கிறது இங்கே? நான் இப்போது மனிதனா இல்லையா! இவ்வளவு நேரமாக நின்றும் கால்கள் வலிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் நாற்பது வருடங்கள் நடையாய் நடந்து , வரம் வாங்கி பெற்றிருந்த மூட்டு வலி இல்லை. மூட்டு வலி இல்லா வாழ்க்கை என்கிற எண்ணமே மனதிற்கு நிம்மதியை தந்தது.

வழக்கம் போல சும்மா இருக்க முடியாமல், அந்த இடத்தை அளக்க ஆரம்பித்தேன்.என் ஆடையில்லா உடலில் ரோமமும் இல்லை. என்ன ஒரு அதிசயம். வாலிபக் காலத்தில் இருந்து என்னுடன் பயணித்த தொப்பை இல்லை. தொப்பை மட்டுமா , அதன் கீழும் எந்த சமாச்சாரமும் இல்லை. கால்கள் இருந்தன , விரல்கள் இல்லை. என் கால்களை பாலத்தின் நுனியோடு ஒன்றிப்பினைத்திருந்தன . அசைத்துப் பார்த்தேன், நகரவில்லை.

நிமிர்ந்தால் எங்கும் பளீர் மயம். சுவர்க்கமா, நரகமா, இல்லை நடுவில் ஒன்றா , எதுவும் புரியவில்லை. ஒரு மரம் இல்லை, பறவை இல்லை, ஏன், சூரியனோ, சந்திரனோ, மேகமோ எதுவுமே இல்லை. பாலத்திற்கு அடியில் வெண்ணிற ஆறு ஓடுவதைப் போலத் தெரிந்தது. இல்லை, இது ஆறாக இருக்க வாய்ப்பில்லை . ஆறு இருந்தால் கரை வேண்டும் . இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரையேதும் இல்லை . ஒரு முடிவில்லா சமுத்திரத்தின் மேல் , ஒரு பாலத்தில் ஸ்தூபமாக நிற்கிறேன் . பாலம் என்றால் அதற்கொரு மூலம் வேண்டாமா ? திரும்பிப் பார்க்க முயற்சித்தேன் , தலை மட்டும் திரும்பியது . பாலம் வானில் மிதப்பதைப் போல ஆரம்பமே இல்லாமல் சென்றது.

யாரும் இல்லா உலகத்தை பற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள். அதிலெல்லாம் மரங்களும், செடிகளும் , பூக்களும் தானே அந்த உலகத்தை ஆக்கிரமித்திருக்கும். இங்கே ஒரு புல் பூண்டு கூட இல்லையே . சட்டென்று வானத்தில் ஒரு சாளரம் திறந்தது. அதற்குள் நான், நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒரு படுக்கையில் படுத்திருக்கிறேன். அந்த அறையில் மனிதர்களை விட, இயந்தரங்களே அதிகம் இருந்தன. என் வாயிலிலும், நெஞ்சிலும் ஏதேதோ சொருகி வைத்திருந்தார்கள். வெள்ளாடை உடுத்திய இருவர், நெஞ்சை பிடித்து அழுத்துகிறார்கள். என் உடல் அதற்கு இசையவில்லை. சட்டென்று என் உடலில் இருந்து இட்லியில் இருந்து வெளியேறும் வெண்ணிற ஆவி போல வெளி வருகிறேன் . அந்த ஆவி , ஒரு உருவம் பெற்று, அங்கேயே நின்று என் மரணத்தை நாலு அடி தள்ளி நின்று பார்க்கிறது. அதுவும் நானாகத்தான் இருக்கக்கூடும் . அந்த ஆவி காற்றில் கரைய, அந்த சாளரம் மூடிக்கொண்டது.

இது நடந்து எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை, ஆனால் இந்நேரம் எப்படியும் என் உடலை எரித்திருப்பர்கள். இல்லாவிட்டால் இங்கே வந்திருக்க முடியாது . அறுபதாண்டு கால பூமிப் பயணம் முடிந்தது. ஏதேதோ செய்ய நினைத்து, சிலதை மட்டும் முடித்த ஒரு வாழ்க்கை. என் இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை. பிள்ளைகள் இல்லாத எனக்கு யார் கொல்லி வைத்திருப்பார்கள்? யார் வைத்தால் என்ன?

சாளரம் இருந்த இடத்தில் இப்போது ஒரு ஒளி வட்டம் உருவாகி, அது பெரிதாகிக் கொண்டே போனது. அது என்னை உள்ளே இழுத்து. முருகா இது என்ன சோதனை, இந்த இடமே என்னவென்று தெரியவில்லை, அதற்குள் அடுத்ததா? கந்த சஷ்டி கவசம் சொல்லலாம் என்று வாய் திறந்தேன், முதல் வரி கூட ஞாபகம் வரவில்லை. இதை எப்படி மறந்து போனேன்? அந்த வட்டத்துக்குள் நுழைந்ததில் இருந்து முழு இருட்டு. ஆனாலும் ஒரு உந்து விசையினால் நகர்ந்து கொண்டே இருக்கிறேன். ஒரு வேலை நரகத்திற்கான பாதையாக இருக்குமோ?

அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்? சின்ன வயதில் கோலிகுண்டு, கொஞ்சம் பணம் திருடியிருப்பேன், உத்தியோகத்தில் என்னை காப்பாற்றிக்கொள்ள சில பொய்கள் சொல்லி இருப்பேன் அதன் பின்? அதன் பின் என்ன செய்தேன்? ஏன் எதுவுமே ஞாபகம் வரவில்லை? நரகத்தில் நம் நினைவுகள் கூட மிஞ்சாதோ? எதோ ஒன்று என்னை மேலிருந்து அழுத்தி கீழே தள்ளுகிறது. நான் தலை கீழாய் விழுகிறேன் .

முருகா என்னை காப்பாற்று என்று சொன்னவுடன், யார் முருகன் என்று யோசித்தேன், அவர் யார் என்பதும் மறந்து விட்டது. நான் சுருங்கிக் கொண்டே இருக்கிறேன், அதே நேரம் விழுந்து கொண்டும் இருக்கிறேன் . அதோ ஒரு சிறு பிளவு தெரிகிறது, வெளிச்சமும் இருக்கிறது . அதை நோக்கி விரைகிறேன். அடடா வட்டத்தின் அகலம் என் தலையை விட சின்னதாக இருக்கிறதே. இருக்கும் சக்தியை வைத்து தலையை நுழைகிறேன், மேலிருந்த விசையும் எனக்கு ஒத்துழைக்கிறது.

இதோ தலை வெளியே வந்து விட்டது. அந்தப்பக்கம் யாரோ என்னை இழுக்கிறார்கள், யார் இவர்கள், ஏன் என்னை இழுக்கிறார்கள்?.

இப்பொழுது என்னை முழுவதும் வெளியே எடுத்து விட்டார்கள். என் உருவம் புதிதாக இருந்தது. என்னை சுற்றிலும் ரத்தம். என்ன இது என் வயிற்றில் ஒரு கயிறு ? அட அதையும் அறுத்துவிட்டார்களே . அடேய் யாரடா நீங்கள்?,

அதை விட முக்கியமாக, யாரடா நான்? வாய் திறந்து கதறினேன். அங்கிருந்தவர்கள் புன்னகைத்தார்கள். கடைசியாக, ஒரு பெண்ணின் மேல் என்னை வைத்தார்கள். ஆனந்தமாக இருந்தது. நான் யார், இங்கே ஏன் வந்தேன் என எனக்கு எதுவும் தெரியவில்லை. எதுவமே தேவையானதாகவும் இல்லை .

நான் இப்பொழுது என் அம்மாவின் மேல் படுத்திருக்கிறேன்.

ஐந்து நிமிடக் குழந்தையாக.

Hi, I’m tamilvalai

Leave a Reply