அது ஒரு வெள்ளி இரவு, நாலு தூறல் போட்டு வானம் ஹே என்று பொய்த்து விட , மே மாதத்தின் வெக்கை இரவிலும் ஒரு காட்டு காட்டியது  . நண்பர்கள் வருவதற்கு முன்னரே ஒரு குவாட்டரை முடித்து அடுத்த குவாட்டரை எடுத்தான் அசோக் . முதல் குவாட்டருக்கே அரை பாக்கெட் சிகிரெட்டை ஊதி தள்ளி , அந்த ரூமையே ஒரு புகை மண்டலமாக  மாற்றி வைத்திருந்தான். சரக்கில் சுடு தண்ணீர் கலந்து அடித்தால் உடம்புக்கு நல்லது என எவனோ ஒருவன் டாஸ்மாக் வாசலில் கொளுத்தி போட , முதல் குவாட்டர் முழுவதற்கும் வெண்ணீரேயே கலந்து அடித்தான். முன்னை விட நெஞ்சு இன்னும் கரித்ததே தவிர வேறு ஒரு லாபமும் வெந்நீரால் இல்லை என முடிவு எடுத்தான். 

மீதம் இருந்த நாலு குவாட்டரையும் ஒரு பார்வை பார்த்து யாருக்கு எவ்வளவு என்று மனக்கணக்கு போட்டு வைத்தான் . சட்டை போடாத அவன் உடம்பில் வியர்வை துளிகள் எட்டி பார்த்தன . முதலில் மூத்தவராக இருக்கும் சந்தோஷ் வந்து சேர்ந்தார் , அவர் ஒரு அரை குவாட்டர் பேர்வழி .. அதற்கே போதை ஆகி , தனது சோக கதையை சொல்லி ,இரு சொட்டு கண்ணீர் விட்டு , மட்டை ஆகி விடுவார் , மீதி குவாட்டர் அசோக்கிற்கு .. அடுத்து வந்தவன் அரசு , மொடா குடிகாரன் , ஓசி குடி வேறு , அவனுக்கு ஒரு குவாட்டர். கடைசியாக அவர்களின் பைனான்சியர் சந்திரன் , அவனுக்கு தேவையானதை அவன் குடிப்பான் . 

ஒரு வழியாக அனைவரும் வந்து சேர்ந்து , உடை மாறி , இவனிருக்கும் ரூமில் அமர , சந்தோஷ் இவனருகில் அமர்ந்தார் . வரும் போதே முகத்தில் சோகம் கலந்த ஒரு கோபம் தெரிந்தது . அவரே ஆரம்பித்தார் , அதிசயமாக ஒரு குவாட்டரை முடித்தார் , நல்ல வேலை சந்திரன் ஒரு முழு பாட்டில் , அவன் பங்கிற்கு வாங்கி வந்ததால் அனைவரும் கணக்கில்லாமல் குடித்தனர் . சந்திரனும் , அரசுவும் தூக்கம் வருவதாக கழண்டு விட்டனர். மீதம் இருந்தது அசோக், சந்தோஷ் மற்றும் ஒரு குவாட்டர்.

சந்தோஷ் தனது சோக கதையை ஆரம்பித்தார். இரண்டு சகோதரிகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்து, கடன் அடைத்து , பெண் பார்க்க ஆரம்பிக்கவே  45 வயது ஆகிவிட்டது என புலம்பினார் . அசோக் பன்னிரெண்டாவது சிகிரெட்டை பற்ற வைத்து குவாட்டரையே பார்த்துக்கொண்டிருந்தான் . அவனது கவனத்தை இடை மறித்து , சந்தோஷ் அதையும் அடிப்போம் என்ற பொழுது அவர் கண்ணில் தண்ணீர் . இன்று மேட்ரிமோனியில் அவருக்கு நடந்த அவலத்தை சொல்லி அந்த பெண்ணின் புகை படத்ததை காட்டினார் . அந்த பெண் சந்தோஷிடம் , ப்ரொபைல் நல்லா இருக்கு  அங்கிள் , அனால் உங்கள் பையன் படத்திற்கு பதிலாக உங்கள் படத்தை போட்டு இருக்குறீர்களே என்று கேட்டதும், சந்தோஷிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது என முடித்தார் . அசோக் அந்த போட்டோ வை பார்த்தும் அடித்த போதை எல்லாம் இறங்கியது, கட கட என சிரித்தான்  . சந்தோசிற்கு கோவம் ஏறியது .

சரி சந்தோஷிற்கு எப்படியும் நமது சித்தப்பா வயதாகிவிட்டதே என்று எண்ணிய அசோக் , அவரிடம் ஒரு உண்மையை சொன்னான் . கடந்த ஆறு மாதங்களாக இவன் அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணிடம்  செய்த சம்பவங்களையும் , மேட்டர்களையும் சொல்லி முத்தாய்ப்பாய் அவளுடன் அரை குறையாய் இருக்கும் ஒரு படத்தை காட்டி, இவளுடன் இருப்பதற்கு சும்மாவே இருக்கலாம் என்று முடித்தான் . அந்த குவாட்டரை திறந்தான் . தண்ணீர் காலி என்பதை உணர்ந்து சமயல் அறை செல்ல முற்பட்டான் . சந்தோஷ் சட்டென எழுந்து அவர் எடுத்து வருவதாக கூற , இவன் அடுத்த சிகிரெட்டை பற்ற வைத்தான்.

சந்தோஷ் வந்தார் , முகத்தில்  ஒரு தெளிவு இருந்தது , முகம் கழுவி வந்திருப்பார் போல.  சரக்கை இரு  பங்காக பிரித்து , ஒரு பங்கில் அசோக்கிற்கு தண்ணீர் ஊற்றி கொடுத்தார் . அவனும் அடித்தான் . அரை நொடியிலேயே நெஞ்சு எரிந்தது , கண் இருண்டது , சந்தோஷ பார்த்தான் , அவர் முகத்தில் புன்னகை .. அசோக் சரிந்தான் 

இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் தான் , இந்த வாழ்க்கை எதற்கு என்று முடிவெடுத்த சந்தோஷ் , விஷம் வாங்கி வைத்திருந்தார் .. அசோக்கிடம் பேசிய பிறகு முதலில் சாக வேண்டியது தான் அல்ல ,அவன் தான் என்று முடிவு எடுத்தார். தண்ணீரில் விசத்தை கலந்தார் . இவனை போன்ற ஆண்களால் தான் சமுதாயம் கெட்டு விட்டது என்று தன்னை தேற்றிக்கொண்டார். 

இவர் பங்கை அடித்தார், சரிந்தார் ..

அந்த அறையில் சிகிரெட் புகை மெல்ல மறைய தொடங்கியது …

Hi, I’m valaithinni

Leave a Reply