Storytamil

கடைசி தொண்டன்

காலையே கட்சி ஆபிசுக்கு சென்று விட்டால், எப்படியும் காலை டிபனை தேர்த்தி விடலாம் என்று சோமு கணக்கு போட்டுக்கொண்டே மீதி இருக்கும் குவாட்டரை அடித்து முடித்து பாயில் சாய்ந்தான். நாள் முழுவதும், மண்வெட்டியில் தூர் வாரும் வேலை , அந்த அயற்சியில் , உடனே  தூங்கினான்.

சோமு ஏழு மணிக்கே எழுந்து ஆபிஸை நோக்கி நடந்தான்   , அவன் எதிர்பார்த்தது போலவே காலையில் இட்லி போட்டார்கள்,  அடித்தது லாபம். ஏற இறங்க பார்த்து, பிச்சைகாரனுக்கு  சிற்றுண்டி போடுவதை போல போட்டாலும், நன்றாகவே இருந்தது.   சிற்றுண்டியை முடித்து, அந்த கட்சி ஆஃபீஸின் வாசலில் தரையில் அமர்ந்தான். கல்யாண மண்டபம் தற்காலிகமாக கட்சியின் ஆபீஸாக மாற்றப்பட்டு, போஸ்டர்களும், பேனர்களும் இடையில், அமங்களகரமாக  காட்சி அளித்தது.  பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வந்து கையை உயர்த்தியதும் , சோமுவுடன் சேர்ந்து வந்த முப்பது பேறும் கையை தட்ட வேண்டும், கரகோஷம் எழுப்ப வேண்டும். “அடுத்த தமிழக முதல்வர்” என்பதை தவிர என்ன வேண்டுமானாலும் கத்தலாம். இவனுக்கு எப்படியும் கடைசியில் தான் இருக்கை கிடைக்கும், அதனால் அடி  வயிற்றிலிருந்து கத்த வேண்டும். இந்த பணிகளை செவ்வனே செய்து முடித்தால் , சோமுவிற்கு முந்நூறு ரூபாயும்  , ஒரு குவாட்டரும்  கிடைக்கும்.  

இன்னும் மூன்று மணிநேரத்தை, எப்படி கழிப்பது என்ற யோசணையே இல்லாமல் , வாசலில் வருபவர் போகிறவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தபோது அந்த தெரு நாயை கவனித்தான். குப்பை தொட்டியை சுற்றி வட்டமிற்று , நாலைந்து இடத்தில் முகர்ந்தது எதையோ தேடிக்கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த நாயிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் , இவன் ஒரு சுமாரான உடை அணிந்திருக்கிறான், அவ்வளவு தான். வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் அந்த நாயை போல தான் இவனும் வாழ்ந்து வந்தான். அந்த நாய் கடைசியில், அந்த குப்பை தொட்டியின் ஓரத்திலேயே  காலை தூக்கி “சூர்” என்று நீர் அடித்து சென்றது. மணி பத்து ஆனது, வட்ட செயலாளர் உள் நுழைந்தார், இவனை விட மூத்தவர்கள் இருவர், குனிந்து அவனுக்கு வணக்கம் வைக்க , அவன் அதை சட்டை செய்யாமல் உள்ளே சென்றான். அனைவர்க்கும் காபி பரிமாறப்பட்டது, இவன் கரை வேட்டியை சோதனை செய்து பார்ப்பதை போல பார்த்து காபி கொடுத்தனர்.மற்றவர்களுக்கு வட்டா டம்பளர் , இவனுக்கு பிளாஸ்டிக் கப். 

நினைவு தெரிந்த நாள் முதல், இவன் இந்த கட்சியில் இருக்கிறான், இவனுக்கு  முன் இவனது தந்தை. அணைத்து கூட்டத்திற்கும் செல்வான், சில சமயம் பணம் கிடைக்கும், பல சமயம், குவாட்டரும், பிரியாணியும் தான். இந்த வட்ட செயலாளர் கூட சோமுவின் கண்முன்னேயே வளர்ந்தான், வணக்கம் கூட வைத்திருக்கிறான், இன்று மதிக்க கூட இல்லை. சோமு அதே கரை வெட்டி  ,  அதே கடைசி வரிசை.. பத்தே முக்காலுக்கே அலுவலகம் பரபரப்பானது. திடீரென ஒரு படை வந்திறங்க, கோஷங்கள் ஒழிக்க தலைவரின் கார் வந்தது. 

சோமு சட்டென்று எழுந்து தனது தொண்டையை சோறுமிக்கொண்டு அவர்களுடனே உள்செல்ல தயார் ஆனான், அனால் தள்ளு முள்ளு அதிகமாகி, இவன் கால் வழுக்கி, கீழே விழுந்தான், நிமிர்ந்தால், தலைவரின் காலும், கரை வெட்டியும் தெரிந்தது. தலைவரின் இவனை பார்த்து, “சே” எனபது போல மூஞ்சியை திருப்ப, அவரது அடியாள், இவரை ஒரு எத்து விட்டு ஒரு பக்கமாக தள்ளி விட்டான். சோமுவிற்கு அசிங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, ஆனாலும், இது என்னவோ செய்தது. இவன் எழுத்து வேட்டியை சரி செய்யும் பொழுது , அரங்கத்தில் கரகோஷம் கேட்டது. அசிங்கப்பட்டதோடு நில்லாமல் , இவனுக்கு வர வேண்டிய முந்நூறு ரூபாயும் காலி. வாழ்கை நொந்து அங்கேயே இருந்தான் . அரை மணி நேரம் கழித்து , தலைவர் சென்ற பிறகு குவாட்டரும் , பிரியாணியும் கொடுத்தார்கள், அடித்து பிடித்து வாங்கி , ஆபிஸின் வாசலில் அமர்ந்தான். சரக்கை பாதி பாட்டில் ராவாக அடித்து, பிரியாணியை பிரிக்க அந்த தெரு நாய் வாலை  ஆட்டி  பக்கம் வந்து நாக்கை தொங்க போட்டு நின்றது, அதுக்கு ஒரு எலும்பு துண்டை போட்டு, மீதியை இவன் தின்றான். இருவரின் முகத்திலும் ஒரு சிறு சந்தோசம் 

எதிரே உள்ள போஸ்டரில் தலைவர் சிரித்துக்கொண்டிருந்தார். 

” ஏழைகளின் விடிவெள்ளியே” , “சமத்துவத்தை நிலைநாட்ட வந்த வள்ளலே” போன்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன.

Hi, I’m valaithinni

Leave a Reply