தி சைலன்ட் ஸீ / The Silent Sea – Netflix
எதிர்காலத்தில், ஆறுகள், கடல்கள் எல்லாம் வற்றிப் போய் மனிதர்கள் தண்ணீருக்காக அலைந்து திரியும் காலம் வருகிறது. வழக்கம் போல வசதியானவர்களுக்கு நல்ல தண்ணீரும், இல்லாதவர்களுக்கு மட்டமான தண்ணீரும் ரேஷன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. செல்லப்பிராணிகளுக்கு இடம் இல்லை. என்னடா இது, மேட் மேக்ஸ் பட போல இருக்கிறதே என்ற நினைப்பு வரலாம். ஆனால் நாம் பார்க்க இருப்பது “தி சைலன்ட் சீ “ என்ற கொரிய சீரிஸ் பற்றியது. நெட்பிலிக்ஸில் வருகிறது.
கொரிய நாடகங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டவை. அங்கிருந்து வரும் ரொமான்ஸ் நாடகங்களுக்கு இங்கே பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவர்களும் முக்கால்வாசி 2கே கிட்ஸை குறி வைத்தே நாடகம் எடுப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த சீரிஸ் கண்ணில் பட்டது. இது சயின்ஸ் பிக்சன் என்பதனால் கவனத்தையும் ஈர்த்தது. சரி பார்க்க ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்து முடித்துவிட்டேன்.
சயின்ஸ் பிக்ஷன் கதைகளுக்கு என்று ஒரு டெம்ப்ளட் உண்டு. ஏதோ ஒரு பிரச்சனை, அதை சந்திரானிலோ , செவ்வையிலோ கிடைக்கும் ஒரு வஸ்துவை வைத்து தான் தீர்க்க வேண்டும். அதற்கு ஒரு குழுவை சேர்ப்பார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின் கதை. அதன் காரணமாக அவர்கள் அதில் சேருவார்கள். அவர்களுக்கு முன் சென்றவர்கள் பெரிய விஷயம் ஒன்றை கண்டுபிடித்து இருப்பார்கள். பின்னர் ஒன்று காணாமல் போயிருப்பார்கள்; அல்லது மண்டையை போட்டிருப்பார்கள். அவர்களை கண்டுபிடிக்க இவர்கள்.
இங்கும் அதே கதை தான், தண்ணீரை மையமாக வைத்திருக்கிறார்கள். என்ன தான் எடுத்த கதையையே எடுத்தாலும், சில சமயங்களில் டீடைலிங் , வலுவான திரைக்கதை அல்லது கதாபாத்திரங்களின் நடிப்பு என்று ஏதாவது ஒன்றை வைத்து ரசிக்கும் படி செய்துவிடுவார்கள் .
அதிகார வர்க்கம், தன வாசத்துக்கு என்னென்ன செய்யும் என்பதையும் ஆங்காகே காட்டியிருக்கிறார்கள். எங்கே எந்த பிரச்சனை வந்தாலும் , முதலில் தப்பிப்பது அவர்கள் தான். மொத்தத்தில் அடிபடும் இனமாகவே பொது ஜனம் இருக்கிறது என்பதையும் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். தண்ணீர் எனும் ஒரு ஆதார பொருள் இல்லையென்றால் நம் டப்பா எப்படி டான்ஸ் ஆடும் என்ற நினைப்பே திகைப்பை தருகிறது. அதுவே இந்த சீரிஸையும் பார்க்க வைக்கிறது.
இந்த சீரிஸ் கதை இது தான். பயப்பட வேணாம். ஸ்பாய்லர் இல்லை. உலகெங்கிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட, நிலாவில் இருக்கும் ஒரு விண்வெளி மையத்தில் இருந்து முக்கியமான ஒரு பொருளை எடுத்து வர வேண்டும். அதற்கென ஒரு குழு வரவழைக்கப்படுகிறது. நாயகன் தன் மகளுக்காக வருகிறான். நாயகி நிலாவில் இறந்து போன தனது தங்கைக்காக, இன்னபிறர் அவரவர் அஜெண்டாகளுக்காக. சந்திரனை அடைந்ததில் இருந்து அவர்களுக்கு அதிர்ச்சிகள் சில காத்திருக்கிறது. அதை மீறி வந்த காரியத்தை முடித்தார்களா, இல்லையா என்பது தான் ஒன் லைன் கதை.
கொரிய நாடகமாக இருந்தாலும், நல்ல கிராபிக்ஸ் , நடிப்பை தந்திருக்கிறார்கள். வெறி கொண்டு ஒரே நாளில் பார்க்கும் அளவிற்கு நல்ல சீரிஸ் இல்லை. அதே நேரம் சஸ்பென்ஸ் வைத்து எப்படி எடுக்கலாம் என்றும் செய்து காட்டியிருக்கிறார்கள். கொரோனா உக்கிரமாக ஆறாவது முறையாக அடிக்க வந்திருக்கும் இந்த நேரத்தில் பொழுது போகாமல் இருந்தால் இதை பார்க்கலாம்.