rajinirajnirasiganதமிழ்

ரஜினி 6 – சோதனை மேல் சோதனை

எந்திரன் படத்தின் மூலம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிலேயே நம்பர் 1 நடிகர் தான் தான் என்பதை நிரூபித்தார்  ரஜினி. சம்பளத்தில் நம்பர் 1, வசூலில் நம்பர் ஒன் என, ஆசியாவின் ஜாக்கி சானுக்கே சவால் விட்டார். கணக்கிலடங்கா ரெக்கார்டுகளை படைத்த படமாக இன்றும் பேசப்படுகிறது எந்திரன் திரைப்படம். இந்தப் படம் கொடுத்த  உத்வேகத்தில் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார்.   தனது ஆஸ்தான இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் அவர்களுக்கு போன் போட்டு வரவழைக்கிறார். அவரை அழைக்கவும் ஒரு காரணம் இருந்தது. என்னதான் என்கிற ஒரு வெற்றிப் படமாக இருந்தாலும் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் அவர்கள் செலவு செய்த காலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள். 

அதேபோல் நாம் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு பெரிய படம் செய்துவிட்டது அடுத்ததும் பெரிய படம்  செய்வது என்பது ரஜினிக்கு பிடிக்காத விஷயம். அதைத் தாண்டியும் ஒரு விஷயம் உள்ளது. பாபா படத்திற்கு பிறகு அவரது குடும்பத்தை சினிமா வணிகம் பக்கம் சேர்க்காமல் பார்த்துக் கொண்டார் ரஜினி. அதை இன்று வரை லதா ரஜினிகாந்த் அவர்கள் கடைபிடித்து வருகிறார் . 

ஆனால் 2007 ஆம் ஆண்டு சௌந்தர்யா அவர்கள் ரஜினியை வைத்து  சுல்தான் தி வாரியர் என்று  அனிமேஷன் படத்தை இயக்க முற்படுகிறார். சௌந்தர்யா அவர்கள் அனிமேஷன் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதனாலும் ரஜினியால் அவரது மகளின் மீது உள்ள பாசத்தினாலும்  தட்டிக் கேட்க முடியாமல் ஓகே சொல்கிறார். ஆனால் எந்திரன் முந்தியதால்  அந்தப்படம் அப்படியே ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சௌந்தர்யா எடுக்க நினைத்த படத்திற்கு தேவையான தொழில்நுட்ப வசதி இந்தியாவில் அப்போது இல்லை, அதனால் அந்த படத்தை டிராப் செய்கிறார்கள். 

 அடுத்து  கே எஸ் ரவிக்குமார் அழைக்கிறார் ரஜினி.  பதினேழாம் நூற்றாண்டு கதை ஒன்று உள்ளது , அதற்கு நீங்கள் திரைக்கதை எழுதி இயக்க முடியுமா என்று  ரஜினி கேட்க, கே எஸ் ரவிக்குமார்  ஓகே சொல்கிறார் .அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் “ராணா” என்ற அந்த படம். 

இது ஒரு பீரியட் பிலிம் என்பதனால் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கும் அதனால் ஒரு டெக்னிக்கல் டைரக்டராக உள்ளே நுழைகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.  கதை வளர வளர இது சின்ன பட்ஜெட்டில் எடுக்க போகும் படம் என்ற எண்ணம் போய் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக மாறுகிறது. எந்திரன் அதிரிபுதிரி ஹிட் என்பதனால் இந்த படத்தின் பட்ஜெட் அதை விட குறைவாகத்தான் இருந்தது.  

பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவர் நடிக்கிறார் அவர் நடிக்கிறார் என்று வதந்தி கிளம்பி அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரவிக்குமார். படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. ரஜினிக்கு இதில் மூன்று வேடங்கள் . அதில் ஒருவர் பட்டத்து இளவரசர். அவர் ராஜ தோரணையில், கையில் வாளுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்புகிறது. எந்திரன் படத்தை விட்ட ஈராஸ் நிறுவனம் தயாரிக்க முன் வருகிறது. 

அதன் பிறகு  நடந்ததே வேறு. 

ஏப்ரல் 2011 இறுதியில் ரஜினிக்கு உடல்நிலை குன்றி, அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறார். முதலில் நார்மல் பிரச்சனை என்று செய்தி வர ஆரம்பித்து, பின்னர் டயாலிசிஸ், லிவர் என்று பிரச்சனைகள் பெரிதாகிக்கொண்டே போகிறது. அவர் icu விற்கு மாறிய தகவல் காட்டுத்தீ போல பரவுகிறது.  மருத்துவமனைக்கு முன் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர் கூட, போரூர் பகுதி ஸ்தம்பிக்கிறது. கலைஞரே வந்து நேரில் பார்க்கிறார். மோடி, சந்திரபாபு நாயுடு என்று இந்தியாவின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வருகிறார்கள். ஜெயலலிதாவே குசலம் விசாரிக்கிறார். இதன் பிறகும் இங்கேயே இருந்து பார்க்க வேண்டுமா என்று ரஜினியின் குடும்பத்தார் எண்ணுகிறார்கள். 

கடைசியாக மே இறுதியில் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூருக்கு அவர் மாற, தமிழகமே சோகத்தில் ஆழ்கிறது. ரஜினி சிங்கப்பூர் செல்வதற்கு முதல் காரணம், அமிதாப். அவர் கொடுத்த அறிவுரையின் படியே ரஜினி அங்கே செல்கிறார். தினமும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முன் நின்ற ரசிகர் கூட்டம், செய்வதிராது திகைக்கிறது. 

தனது ஆஸ்தான நாயகன் என்பதை தாண்டி, தமிழர்களுக்கு ரஜினிக்கு இருக்கும் வசீகரத்தால், அவரது உடல்நிலை தினசரி தலைப்பு செய்தியாகிறது. அதோடு வதந்திகளும் கொடி கட்டி பறக்கின்றன. ரஜினி நீண்ட காலமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். மதுவும் கூட, இவையெல்லாம் கலந்து, ரஜினி அவ்வளவு தானா என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது. அல்லது கிளப்படுகிறது. 

இவை சாதாரண ரசிகனுக்கு மிகுந்த சோகத்தை தர, அவன் கோவிலுக்கும் , தேவாலயத்திற்கும் நடையாய் நடக்கிறான். அலகு குத்தி வேண்டுகிறான். மண் சோறு சாப்பிட்டு வேண்டுகிறான். ஒரு பக்கம் ரசிகர்கள் இப்படி என்றால், திரை உலகிலும், இயக்குனர்களும், துணை இயக்குனர்களும் அவர்கள் பங்குக்கு பிரார்த்திக்கிறார்கள். ஆயிரம் தான் மருத்துவ வசதிகள் முன்னேறினாலும், 61 வயதும், அவர் பழக்கங்களும், ரஜினிக்கு எதிராக இருந்தன. சிங்கப்பூரின் உலக பிரசித்தி பெற்ற எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை நடக்க, இங்கே வதந்திகள் உச்சத்தை எட்டின. அவர் நல்லபடியாக இருக்கிறார் என்று யார் சொன்னாலும் நம்ப மறுத்தது ஒரு கூட்டம். கடைசியாக அவர் குரலில் வந்த ஆடியோவால் தமிழகம் நெகிழ்ந்தது .  அதே நேரத்தில் அது அவரே இல்லை, மயில்சாமியை பேச வைத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின. 

சிங்கப்பூரிலேயே ஒரு மாத காலம் இருந்து விட்டு சென்னை திரும்பினார். அவரை ஏர்போர்ட்டில் வந்திறங்கியதும் ஒரு உணர்ச்சிவசப்பட கூட்டம் கண்ணீர் வடித்து வரவேற்றது. ரசிகர்கள் வேண்டுதல் செய்ததால்  தான் பிழைத்தேன் என்று ரஜினி கண்ணீர் மல்க கூறினார். , அந்த ஒரு வார்த்தைக்காக காத்து கிடந்த, ரசிகர் கூட்டம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

இதோடு ரஜினியின் திரை வாழ்க்கை ஓவர் என்று அவர் காதுபடவே ஒரு கூட்டம் பேசியது.   ரசிகர்கள் அவர் நலமுடன் இருந்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்திருப்பார்கள் . 

ஆனால் வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமானது? பிரச்னையை கண்டு துவண்டு விழும் நபரா ரஜினி? ஆனாலும் இந்த முறை அடி ஜாஸ்தி. அடுத்து என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள், திரைத்துறையினர், ஏன் இந்திய மக்களே எதிர்பார்த்தார்கள்.  

Hi, I’m tamilvalai

Leave a Reply