ரஜினி எனும் மாயோன் – 2 -அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை
முதல் பாகத்திற்கு இங்கே செல்லவும் –> ரஜினி எனும் மாயோன் – 1
ஒரு வாலிபன் தோல்வி கண்டால் ஒன்று அவன் உத்வேகம் எடுத்து உலகை ஆள்வான். இல்லை துவண்டு போய் மரணிப்பான் . இதை தாண்டி தண்டமாக யாருக்கும் உபயோகம் இல்லாமலும் இருக்கலாம். இதில் வாலிபனை எடுத்து விட்டு , ஒரு 52 வயது மனிதன் என்று பொருத்தி பார்க்கவும். அதுவும் சாதாரணமான மனிதன் அல்ல. திரை உலகில் பல ஆண்டுகளாக ராஜாவாக வலம் வருபவர் அவர் . அவர் முடிந்து விட்டார் என்று ஒவ்வொரு ஐந்து வருடமும் ஒரு செய்தி வரும் . அதன் பின்னர் அவர் கொடுக்கும் அடி மரண அடியாக இருக்கும் . அந்த மனிதனின் பெயர் ரஜினி .
1990 இன் ஆரம்பத்தில் இருந்து அவர் நடித்த ஒரே ஒரு படம் தான் தோல்வி அடைந்தது . அதுவும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத படம் தானே தவிர , தோல்வி படம் என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. அப்படி வெற்றி மேல் வெற்றி கண்ட ரஜினியை , ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது பாபா படத்தின் தோல்வி.
ஒரு மனிதன் வெற்றியை கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வான்? ஒரு மரண உழைப்பை தருவானா மாட்டானா. அப்படி இருக்கும் பொழுது யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ரஜினியின் பெரிய வெற்றிப் படங்கள் பலவும் அமிதாப்பச்சன் படங்களின் தமிழாக்கமே. அதே பாணியில் பி.வாசு அவர்களின் கன்னட படம் ஆப்தமித்ரா பார்த்து , அவரை அழைக்கிறார். ஏற்கனவே மன்னன் எனும் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கூட்டணி இது .
படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிவிட்டு நாம் இதை செய்யலாமா என்று கேட்கிறார். ரஜினி கூப்பிட்டால் யார் மறுக்க முடியும். பி வாசு அதற்கு சம்மதிக்கிறார். அடுத்து யார் என்ற படத்தை தயாரிப்பது என்ற கேள்வி எழுந்தது . ஏற்கனவே சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட ரஜினி இதற்கு மேலும் லதா ரஜினி படம் தயாரிக்க விடக்கூடாது என்ற முடிவிலேயே இருந்திருப்பார். பாபா படத்திற்கு பிறகு அவர் சொந்த படத்தில் நடிக்கவே இல்லை. ஏற்பட்ட ரணம் அப்படி.
பாபா படத்தின் தோல்விக்கான மிக முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. அது சொந்த தயாரிப்பில் வந்த படம் என்ற போர்வையில் ஒளிந்திருக்கிறது. லதா ரஜினி அவர்கள் ஒரு பிசினஸ் வுமனாகவும் , ஒரு பத்திரிக்கையாளராகவும் அறியப்படுகிறார். அவரே பாபா படத்தின் பிசினஸை பார்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. படையப்பா என்னும் மாபெரும் வெற்றிப்படம் ஒரு பக்கம், மூன்று வருடங்களுக்கு பிறகு வரும் ரஜினி படம் என்பது மறுபக்கம். இதைவைத்து ஒரு மாபெரும் பிசினஸை நடத்தி முடிக்கிறார் லதா.
படத்தில் ஒரே ஒரு நிமிடம் எந்த ஒரு பொருள் வந்தாலும் அதற்கு ஒரு விலை நிர்ணயித்து பல லட்சம் பெற்றதாகவும் செய்திகள் இருக்கின்றன. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகவே பாபா படத்தின் பிசினஸை பற்றி சொல்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ரஜினி குடும்பத்திற்கே வெளிச்சம். ஆனாலும் இந்த படம் கொடுத்த பாடத்தால் சொந்த தயாரிப்பையே விட்டார் ரஜினி. நிலைமை இப்படி இருக்க அடுத்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பேசு பொருளானது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் அவர்களின் ஐம்பதாவது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தார் ரஜினி . ராம்குமார் , பிரபு அவர்களை சிவாஜி இல்லத்தில் சந்திக்கிறார் . சொந்த படம் என்பதால் படத்தில் பிரபுவும் இருப்பார். அதுவும் ஒரு ஹிட் காம்பினேஷன் . ரஜினியின் படங்கள் அனைத்தும் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். படத்தின் 90 சதவீத காட்சிகளில் அவர் மட்டுமே வருவார் அல்லது அவரோடு சேர்ந்து மற்றவர்களும் வருவார்கள். ஆனால் இந்தப் படம் அதைப் போல இல்லாமல் ரஜினிக்கும் ஜோதிகா விற்கும் சமமான அளவில் திரையை பங்கு போட்டு கொடுத்திருந்தார்கள்.
இந்தப் படம் ஜனரஞ்சகமாக வர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர் ரஜினி . அந்த ஒரே காரணத்தினாலேயே வடிவேலுவை எப்பாடுபட்டாவது புக் செய்யும்படி கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளராக வித்யாசாகரை போட்டார்கள் . அவர் அற்புதமான ஆறு பாடல்களை கொடுத்தார். பாடல் உரிமை மட்டுமே ஒரு கோடிக்கு விலைபோனது .இவை அனைத்தும் ரஜினிக்கும் மாபெரும் நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். இதன் வெளிப்பாடாக கேசட் வெளியீட்டில் வந்த வார்த்தைகளே “நான் யானை அல்ல குதிரை ” , ” விழுந்தவுடன் சட்டுன்னு எழுந்து விடுவேன்” என்பவை.
நினைத்துப் பாருங்கள் ஒரு தோல்வியை கொடுத்த நடிகர் என்றுமே அடக்கி தான் வாசிப்பார். இங்கே வெற்றியின் பின்னர் ஆடுபவர்கள் மிக மிக அதிகம். தோல்வியின் பின்னர் வெளியே தலைகாட்டாமல் சுற்றுபவர்கள் இன்னும் அதிகம். அப்படி இருக்கும்போது அடுத்த படத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இப்படி எல்லாம் சொல்லத் தோன்றும்.
படம் ரிலீஸ் ஆகிறது அதிரி புதிரி வெற்றி என்பார்களே அதைப் போன்ற ஒரு வெற்றியைத் தருகிறது இந்தப் படம் இதற்கு ஒரே சான்று- சிவாஜி குடும்பத்திற்கு சில பழக்கங்கள் இருந்ததாகவும் சந்திரமுகி என்னும் ஒரே படத்தினால் அவர்கள் ஏற்கனவே இருந்த தனது சொத்துக்களை மீட்டு லாபகரமாக மாறியதாகவும் தகவல்கள் உண்டு. தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள் வரும். அந்த வரிசையில் இந்தப் படம் சேர்ந்தது.
இத்தனைக்கும் இந்த படம் தனி ரிலீஸ் கூட கிடையாது . கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் தானு / விஜய் காம்போவில் வந்த சச்சின் என்ற இரு பெரும் படங்களுடன் மோதி இந்த வெற்றியை பெற்றது சந்திரமுகி . வெறும் இருபது கோடியில் தயாரான படம் ,70 கோடி வரை வசூலித்தது . பல இடங்களில் ரெக்கார்டு ப்ரேக் . “லக லக லக” மற்றும் “மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு” போன்றவை ட்ரெண்ட் ஆகின .
ரஜினி தான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்று நிரூபித்த தருணம் அது . இந்த வெற்றி கொடுத்த உத்வேகம் தான் இன்று வரை ரஜினியை நகர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. பாபா படத்தின் அத்தனை தவறுகளையும் நிறுத்திக்கொண்டார். சொந்த படம், குடும்ப தலையீடு , தேவை இல்லாத அரசியல் , ஆன்மிகம் இல்லாமல் வந்த படம் இது.
ரஜினியே நடித்தாலும், பாபா போன்ற படங்கள் தோல்வி தான் அடையும் அதே நேரத்தில் நல்ல கதை, காமெடி , பாடல்கள் உள்ள படம் என்றும் ஜெயிக்கும் என்பது சந்திரமுகியில் நிரூபணமானது. 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் ரஜினி. அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது.