மின்னல் முரளி – விமர்சனம்

மூஞ்சி புக்கில் எங்கு திரும்பினாலும் ராக்கி / மின்னல் முரளி பட பில்டப்புகள் தான். இதில் மின்னல் டைரக்டு ott ரிலீஸ் என்பதால் அதை ஆரம்பித்தேன் .

 
 

மலையாள சினிமாக்களின் மொழியே அலாதியானது . மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அதனருகில் நின்று பார்க்கும் ஒரு சிறுகதையை போல எடுப்பார்கள் . தேவயே இல்லாத பில்டப்கள் கிடையாது . வழக்கமான க்ளிஷே இருக்காது. உதாரணமாக நம்மூர் ஆட்கள் பயன்படுத்தும் அரைத்த மாவு  க்ளிஷே   – காவல் நிலையத்தை காட்டும் காட்சி . கண்ணை மூடிக்கொண்டு யோசித்து பாருங்கள், என்ன காட்சி இருந்திருக்கும் என்று? 



ஒரு பையன் டீ எடுத்துக்கொண்டு போவான் . கேமரா அவனது டீ எடுத்து செல்லும் இடத்தில் இருக்கும் . ஒவ்வொரு டேபிளாக சென்று டீ கொடுத்து விட்டு,  ஒரு இடத்தில் முடியும் . அங்கே அடுத்த காட்சியோ அல்லது வசனமோ ஆரம்பிக்கும் . இதை போன்ற க்ளிஷே மலையாளத்தில் மிக மிக குறைவு. 

 

இதை தாண்டி இது ஒரு சூப்பர் ஹீரோ படம் வேறு. நம்மூரில் சுமார் உடம்பு ஹீரோக்களே அஞ்சு மீல்ஸ் சாப்பிடும் ரவுடிகளை அடித்து துவைப்பார்கள் (தனுஷ் நியாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பில்லை) . சற்றே திட காத்திரமான விஜயகாந்த் போன்றவர்கள் ஒரே அடியில் ஒன்பது பேரை வீழ்த்தும் சக்தி கொண்டவர்கள். ரஜினியை பற்றி சொல்லவே வேண்டாம். இங்கே நிலைமை இப்படி இருக்க , சேட்டன்கள் இந்த சப்ஜெக்டை எப்படி அனுகுவார்கள் என்ற ஆர்வத்தில் படத்தை ஆரம்பித்தேன் .

 

கதையின் படி ஹீரோ அமெரிக்கா  சென்று பணம் சம்பாதிக்க ஆசைபடுபவன். வில்லன் ஏனோ தானோ என்று வாழ்க்கையை ஒட்டுபவன். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு காதல் தோல்வி. இப்படி நாட்கள் ஓட ஒரு மங்களகரமான சுப தினத்தில் அவர்களை மின்னல் தாக்க , அதிலிருந்து சூப்பர் பவர் கிடைக்க ஆரம்பிக்கிறது அந்த துவந்த யுத்தம் .

 

இந்த படம் எங்கே ஜெய்க்கிறது என்று யோசித்தால், சில பல காரணங்கள் தென்படலாம்.

 

முதலாவதாக , ஹீரோ/வில்லனுக்கான பின் கதைகள்.  

 

அடுத்து நடித்தவர்கள் – குறிப்பாக குரு சோமசுந்தரம். 

 

மூன்றாவதாக- யதார்த்தம் . சூப்பர் பவர் தான் இருக்கிறதே என்று ஒடும் டிரெயினை சுண்டு விரலால் நிப்பாட்டுவது, புல்லட் வண்டியை தூக்கி போட்டு விளையாடுவது போன்ற அக்கிரமங்களை யாரும் செய்யவில்லை.

 

இந்த படம் இவ்வளவு நன்றாக வரும் ஆகப்பெரும் காரணம் – குரு சோமசுந்தரம். ஆனால் அவரது கதா பாத்திரம் தான் படத்தின் பெரிய மைநசும் கூட.

 

ஸ்பாய்லர் கருத்து கொண்ட பாரா இது 

 

ஒரு தாயில்லா பையனை ஊரே ஒதுக்கி வைக்க , அவனுக்கு அன்பு காட்டுகிறாள் ஒரு தேவதை. இதனால் அவனுக்கு அந்த பெண்ணின் பால் ஒரு ஈர்ப்பு. காலங்கள் ஓட காட்சிகள் மாறுகிறது. அவளுக்கு திருமணம் ஆகி , கணவன் விட்டு ஓடிவிட அவள் ஊர் திரும்புகிறாள் . அதன்பிறகவாது இருவரும் சேர முடிந்ததா? இல்லை. ஊரார் விட வில்லை

 

அப்பொழுது அவனுக்கு எவ்வளவு கோவம் வந்திருக்க வேண்டும்? ஜகத்தை அழிக்க கிளம்புவானா மாட்டானா? அவன் பழிவாங்குதல் தானே மீதி கதையே? இந்த படத்தில் இப்படிபட்டவன் ஒரு வில்லன். 

அவன் என்ன தீங்கு செய்தாலும்  நமக்கு பரிதாபமே வருகிறது. இது தான் இந்த படத்தின் ஓசோன் சைஸ் பிரச்சினை. 

 

இந்த கதாபாத்திரத்தில் நடித்த சோமசுந்தரம் தேசிய விருதை புக் செய்து விட்டார். 

 

இதை தாண்டி படத்தின் கால கட்டம், யூகிக்க முடிந்த சில காட்சிகள் என்று இருந்தாலும் , முதல் இரண்டு மணிநேரத்திற்கு எந்த தொய்வும் இல்லாமலே செல்கிறது இந்த படம்.

 

அளவான கிராஃபிஸ், தேவையான ஏமோஷன்ஸ், வலுவான பிர்கதைகள் என்று இந்திய சூப்பர் ஹீரோ படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்கை செட் செய்கிறது இந்த படம்.  ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறது.

 

நம்மவர்கள் பார்த்து திருந்துவார்களா? 


Leave a Reply

Your email address will not be published.