Day: November 24, 2021

Storytamilதமிழ்

ஏழாவது குப்பை தொட்டி

அடுத்த  வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்து  விட்டது . சுதா  ஹோட்டலில் இருந்து விழும்  எச்சில் இலைகளுக்கு பக்கத்தில், இடம் போட்டு படுத்தே விட்டான் கோபி. கால் மணி நேர தாமதத்தால் அம்மா உணவக தொட்டியையும் தவற விட்டிருந்தான் . பசி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பித்தது. என்னடா வாழ்க்கை இது என்று நொந்தான் . சரி கடவுள் நமக்கென்று ஒரு குப்பை தொட்டியை கூடவா ஒதுக்க மாட்டார் என்று  தேட ஆரம்பித்தான் . ஒரு ஐந்து  ரூபாய் இருந்தால் கூட புது இட்லியை ருசி பார்க்கலாம் . அதையும் திருடி, குடித்து, கவுந்து கிடந்தான் அவனது அப்பன் . கல்லை தூக்கி தலையில் போட்டு விடலாம் என்று தோன்றியது . வேண்டாம்  . சிறுவர் ஜெயிலை பற்றி அவனுக்கு இதுவரை வந்த  தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை . வெறும் சோற்றுக்கு ஆசைப்பட்டு அங்கு போய் குனியவேண்டுமா? சோறு கிடைக்காமலா போய்விடும். அத்தோடு அப்பன் போய்விட்டால்,  பாலத்திற்கு அடியில் இருக்கும் வீடு போய் விடும். பெருசுகளுடன் சண்டை செய்யும் அளவிற்கு தசை இல்லை. அவன் இருந்து தொலையட்டும்.. இந்த யோசனைகள் பசியை அதிகப்படுத்தின.  இதுவரை மூன்று குப்பை தொட்டிகளை பார்த்து விட்டான்.. ஒரு கருமமும் கிடைக்கவில்லை . இந்த காலத்தில் அவரவருக்கு ஒரு  சிக்கல். எப்பொழுதுமே சிக்கல்களுடன் இருக்கும் இவனுக்கு இன்னும் பல சிக்கல் . கல்யாண மண்டபமாகட்டும் , சிறு ஹோட்டல்கள் ஆகட்டும் , அனைத்தையும் மூட வைத்திருந்தது இந்த கொரோனா.  சரி குப்பை தொட்டிகளாவது நன்றாக இருக்கிறதா . கார்ப்பரேஷன் கனவான்கள் , சின்ன குப்பை தொட்டியை எல்லாம் பெரியதாக மாற்றிவிட்டார்கள். அதில் உள்ளே குதிக்காமல் ஒன்றையும் எடுக்க முடியாது. ஒரு முறை இவன் உள்ளிருந்த போது ஒரு வண்டி வந்து தூக்கிவிட்டது. குய்யோ முய்யோ என்று கத்தி தப்பித்தான். வண்டியை ஓட்டி வந்தவன் விட்ட அரையில் மூன்று நாட்கள் குயில் பாட்டு மட்டுமே கேட்டது.  அன்றிலிருந்து ஒன்று தெளிவாகியது . சிமிண்ட்டில் செய்த வட்டமான தொட்டிகளே இவனுக்கு தோது படும் என்று . ஏறி குதிக்க வேண்டாம்.  கைவிட்டு எடுத்து பார்க்கலாம். உள்ளே ஏதும் ஜந்து இருந்தால், குறிபார்த்து கல்லால் அடிக்கலாம். வெளியே நாய் இருந்தாலும் , கால் காததூரத்தில் இருந்தே துரத்தலாம்.  பசி அதிகமாகியது.ஆறு தொட்டிகளை பார்த்து விட்டான். வெறும் பிளாஸ்டிக் குப்பைகளே இருந்தன. வயிறு ரொம்பி இருந்தால், அதை எடுத்துசில காசு தேத்தலாம்.  என்ன பெரிய நகரம். குடிக்க தண்ணீர் கூட இல்லை. குப்பை தொட்டியில் சோறு இல்லை. வீட்டை தட்டி தண்ணீர் கேட்டால் கூட  அடிக்க வருகிறார்கள். எல்லா குப்பை தொட்டிகளையும் நாசப்படுத்தி வைத்திருந்தார்கள் . நாற்றம் பிடித்த மனிதர்கள்.. இவர்களுடன் எல்லாம் வாழ வேண்டுமா?  ஏன் வாழக்கூடாது என்பது போல காட்சி தந்தது அந்த ஏழாவது குப்பை தொட்டி .  இதில் மட்டும் சோறு கிடைத்தது விட்டால், முப்பாத்தம்மன் கோயில் வாசலில் இனி செருப்பு திருடுவதில்லை என்று முடிவெடுத்தான் .தொட்டியை நோக்கி விரைந்தான். ஒரு நாயும் அந்த தொட்டியை சுற்றி வர ஆரம்பித்தது. குப்பை தொட்டிக்கு அருகில் சென்றான், நாய் வல் என்றது. ஓங்கி ஒரு உதை விட்டான். வாலை சுருட்டி ஒதுங்கியது. வலியவனே இங்கு வாழ தகுதியானவன் என்பதை அன்றைய தினமும் உணர்த்தியது.  குப்பை தொட்டியில் மேலே இருக்கும், தெர்மகோலை எடுத்து பார்த்தான். மருத்துவ குப்பைகளாக இருந்தது. அவற்றை  ஒதுக்கினான் . பீசா டப்பா ஒன்று இருந்தது. அவன் கண்களில் ஒளி மின்னியது. ஏதோ ஒரு புண்ணியவானுக்கு பீசாவின் ஓரம் பிடிக்கவில்லை போல. வட்டமாக அதைமட்டும் விட்டு வைத்திருந்தான். எடுத்து உன்ன ஆரம்பித்தான். இதை போன்ற கடினமான சோற்றை உண்ணும் பொழுது நிதானம் முக்கியம் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்தான். மெதுவாக மென்று தின்றான். இதை மட்டுமே  தின்றால் அடுத்த நாள் காலை சங்கட பட வேண்டும்,  அதனால்  அதை ஓரம் கட்டினான். உள்ளே தோண்டி துழாவ ஆரம்பித்தான். ...