Uncategorized

சோமாவாமாவில் சாமி மாமா

“டீ-3 , டீ -2 , டீ -1 “, “லிஃட் ஆப் ” – “பான் வாயேஜ்” என்று அந்த இயந்திர மங்கை சிந்தடிக் குரலில் குசுகுசுத்தாள் . அடுத்து ராக்கெட்டின் அடியில் பத்தாயிரம் வாலா வெடித்தது.  அதுவே ஒரு தீப்பிழம்பாக  உருமாறி , சாமிநாதன் உட்கார்ந்திருந்த அந்த ராக்கெட்டை விர்ரென மேலே செலுத்தியது  . இது அவனது முதல் விண்வெளி பயணம், அதனால் படபடப்பு அதிகமாகவே இருந்தது . அவனுடன் பயணம் செய்யும்  கோவிந்தன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான் . கோவிந்தனோ , இதற்கே பயப்பட்டால் அடுத்து ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறதே ,அதற்கு என்ன செய்ய போகிறாய் ? என்பது போல இவனை பார்த்தான். ஆனாலும் சாமிநாதன் ஒரு கையால் அவனையும் , மறு கையில் இடுப்பில் கட்டியிருக்கும் பஞ்ச கஜ வேட்டியை பிடித்தபடியே கண்ணை மூடிக்கொண்டான். ராக்கெட் மேலே செல்ல செல்ல , அவனது இதயமும் அதற்கேற்ப துடித்தது . 

கோவிந்தனும் , சாமிநாதனும் வைதீகர்கள் . அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தினால் நிறுவப்பட்ட அர்ச்சகர்  பல்கலைக்கழகத்தின் 200ஆவது பேட்சை சேர்ந்தவர்கள்.  இந்த பல்கலைக்கழகத்தால் சமூக நீதி  நிலை நாட்டப் பட்டதோ இல்லையோ , படிப்பை முடித்து வெளியே வரும் அனைவருக்கும் பூனுலையும் , கழுத்தில் ஒரு ருத்ராட்ச கொட்டையும் போட்டு அனுப்பினார்கள். 

இதுவும் ஒரு வித சமூக நீதி தான் என்று கருப்பு சட்டைக்காரர்கள் ஒதுங்கி கொண்டார்கள் .. இஸ்லாம் உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறி , இந்தியாவிலும் மைனாரிட்டி அந்தஸ்தில்  இருந்து மெஜாரிட்டியாக மாறி இருந்தார்கள். அவர்களுக்கும் கருப்பு சட்டை காரர்களுக்கும் வார்த்தை யுத்தம் சில காலமாக நடந்து  கொண்டிருந்தது .. ஆனாலும் முன்பை விட இறை நம்பிக்கை அதிகமாகி இருந்தது.

தமிழகத்தின் டாஸ்மாக் உலகிற்கே முன்னோடியாக மாறி , உலகத்தின் இருபத்தி மூன்று சதவிகித சரக்கு வர்த்தகத்தை தன் வசமாக்கி  வைத்திருந்தனர் . அடுத்ததாக  அண்ட சராசரத்தில் கடை திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் . அவர்கள் செவ்வாயில் கட்டியிருக்கும்  புதிய ஆலைக்கு “கிரகப்பிரவேசம்”  செய்யவே சாமிநாதனும், கோவிந்தனும் ராக்கெட்டில் பறந்து கொண்டிருந்தனர் . செய்வாய் என்றாலும் சம்பிரதாயம் முக்கியம் என்று டாஸ்மாக்கின் சி யி ஓ ராஜு-லால்-சேட் கருத , அந்நேரம் பார்த்து அனுபவமுள்ள “அய்யர்” கிடைக்காததால் , இவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் ! அதே நேரம்  பூமியில் தண்ணீர் பஞ்சம் உச்ச கட்டத்தை எட்டி இருந்தது . டாஸ்மாக் சரக்கெல்லாம் கடல் நீரிலிருந்து தான்.

இதெல்லாம் நடப்பது  2321 ஆம் ஆண்டில் ., மனித குலம் சந்திரனிலும்  , செவ்வாய் கிரகத்திலும் குடியேறி இருந்தார்கள் . எல்லா மனிதர்களும் அல்ல , வழக்கம் போல அரசியல்வாதிகளும் , பணக்காரர்களும் தான் . சுமார் பணக்காரர்களுக்கு சந்திரனும், பெத்த பணக்காரர்களுக்கு செவ்வாயும் என்று பிரித்து அன்றாடம் காய்ச்சிகளை, பூமியிலேயே தவிக்க விட்டு வந்திருந்தனர். பூமியும் வழக்கம் போல சண்டை சச்சரவுடன், உலகின் மிகப்பெரிய சக்தியான சீனாவை நம்பி பிழைப்பை ஒட்டிக்கொண்டிருந்தனர். 

சரி சாமிநாதன் கதைக்கு வருவோம். அவனும் , கோவிந்தனும் ஏழை இனம் என்பதால் அவர்களுக்கு  ராக்கெட்டில் ஏறும் முன்னறே ஏகப்பட்ட கெடுபிடி. கட்டியிருக்கும் வேட்டி, சட்டை தவிர ஒரு பை மட்டுமே இலவசம். அதுவும் மூன்று கிலோ வரைக்கும் தான். இதனாலேயே வேட்டியை கட்டியபடியே வந்திருந்தான் சாமிநாதன். அதையே இருமுறை உருவி பார்த்து விட்டு தான் ராக்கெட்டில் உட்கார வைத்தார்கள். ஒருவழியாக, அந்த ராக்கெட் வானில் இருந்த மிக பெரிய மிதக்கும் வின் களத்தில் தன்னை சொருகிக்கொண்டது . அது அங்கிருந்து சந்திரனுக்கு ராட்சத பாய்ச்சலில் சென்றது .

அது சந்திரனில் தரை தட்டியதும், முதலில் கோவிந்தன் ஜீரோ கிராவிடியில் பறந்து  அந்த பிரம்மாண்ட அரங்கில் நுழைய , வேட்டியை பிடித்த படியே சாமிநாதன் பின் தொடர்ந்தான்.  அடுத்து கண்டைன்மெண்ட் பகுதியில் சுத்தப்படுத்தப்பட்டு , ரிசெப்ஷன் வந்து சேர்ந்தனர்.

புரியாத மொழியில் “சந்திரன் தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்பதை போன்ற ஒரு போர்டு போட்டு அதன் அருகில் அழகான முகமும், முகத்திற்கு கீழ் பளக்கும் பைபரினால் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரமும்  தென்பட்டது. அது அவர்களை வரவேற்று, அவர்கள் கழுத்தில் இருக்கும் அட்டையை சரி பார்த்தது. சுந்திர தமிழில் அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புட்டு புட்டு வைத்தது.  முதலில் சந்திரனில் ஒரு நாள் டேரா , அடுத்து செவ்வாய்க்கு இரு நாள் பயணம் , அங்கே  செக்டார் 16  என்ற பகுதிக்கு செல்ல அறிவுறுத்தியது.  . சாமிநாதனுக்கோ ராக்கெட் அனுபவமே வயிற்றை கலக்கி இருந்ததால் , அவன் அவளிடம்  பாத்ரூம் போக வழி கேட்க, அவள், அம்புக்குறி உங்களை வழி நடத்தும் என்று கூறி ஒரு பொத்தானை அமுக்கினாள் .  

கண் சைசிலான சின்ன ட்ரோன் ஒன்று வந்து, ஒளியில் வழி காட்ட தொடங்கியது. சாமிநாதன் பராக்கு பார்த்த படியே அதனை தொடர்ந்தான்.  வழியெங்கும் கடைகள், நியான் வெளிச்சத்தில் தக தகவென மின்னின . அங்கே செல்வந்தர்கள் சிலர், மாட்டு வண்டியை போல சில பறக்கும் குட்டி கார்களில் மிதந்து அவர்களை கடந்து சென்றனர் . சாமிநாதனும், கோவிந்தனும், அந்த டிரோனை பின் தொடர்ந்து அந்த பாத்ரூம் வந்தடைந்தனர். 

அதில் ஆறு அறைகள் மட்டும் இருந்தன. ஒன்றில் உள்ளே சென்ற சாமிநாதன், வேலையை முடித்து இருந்த ஒரே சிவப்பு பட்டனை அழுத்த, அது விர் என்று அனைத்தையும் உள்ளிழுக்க ஆரம்பித்தது . அதனுள் இவனது நுனி வேட்டியும் மாட்டி விட , இவன் கெட்டியாக பிடித்து இழுக்க, அந்த மகா யுத்தம் ஆரம்பமானது . ஒரு கையில் வேட்டியை பிடித்தபடியே குய்யோ முய்யோ என்று  சாமி நாதன் கத்த , அந்த இடமே களேபரம் ஆகியது. கோவிந்தன் வந்து அதே பொத்தானை இரண்டு முறை அழுத்திய பிறகு தான், இவனது வேட்டியை விட்டது அந்த கக்கூஸ் . வேட்டியெல்லாம் ஜலமாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று சாமிநாதன் ஓட்டம் பிடித்தான்.

அடுத்து அவரவர் அறைக்கு செல்ல, நாற்றம் அடிக்கும் வேட்டியை மாற்றாமல் அயர்ச்சியில் தூங்கிவிட்டான் சாமிநாதன். அரை நாள் கழித்து கோவிந்தன் வந்து அவனை உலுக்கி எடுத்து  , இன்னுமா தூங்கிகிட்டு இருக்க , செவ்வாய்க்கு விமானம் தயாராம் என்று முடிக்க, சாமிநாதன் வியர்த்து ஒழுகி , சட்டென எழுந்து கிளம்பினான். 

கோவிந்தனுடன் சாமி நாதன் அடித்து பிடித்து ஓட ஆரம்பிக்கும் போது வேட்டியின் நாற்றம் அவன் மூக்கை எதோ செய்ய, வேட்டியை மாற்ற பாத்ரூமிற்கு விரைந்தான். கோவிந்தன் இடம் பிடிப்பதற்காக முன்னரே சென்று விட, இந்த முறை ஒழுங்காக வேலையை முடித்து வெளியே வந்தான். அவசரத்தில் தான் எங்கே செல்ல வேண்டும் என்று  கோவிந்தனிடம் கேட்க மறந்திருந்தான்.  ரிசப்ஷன் செல்லவும் வழி தெரியவில்லை. “உதவி” என்று அங்கே இருந்த சிவப்பு பொத்தானை அமுக்கினால் ஒன்றுமே நடக்கவில்லை. நேரம் ஆக ஆக, அவனுக்கு பயம் அதிகரித்து ,பின்னங்கால் பிடரியில் அடித்து ஓட ஆரம்பித்தான். ஓடும் வழியில் செக் 16 என்று ஒரு அறையை பார்த்து , அந்த இயந்திர மங்கை  இதற்குள் தானே போக சொன்னாள் என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டு உள்ளே சென்றான். அங்கே ஒரே ஒரு இருக்கையுடன் கூடிய சிறிய விமானம் மட்டும் இருந்தது. ஒரு வேலை கோவிந்தன் முன்னரே சென்று விட்டான் போல என்று எண்ணி, ஈ.டி ஆல்பா 923 என்ற தானியங்கி விமானத்தில் ஏறினான். 

அந்த விமானம் அதாகவே எதையோ சொல்லி,  தானாகவே கதவை மூடியது.  தனியாக இருந்த சாமி நாதனுக்கு அழுகையே வந்து விட்டது. இவன் அழுவதை மதிக்காமல், அந்த விமானம் மேலே பறந்து, விர்ரென கிளம்பியது. கிட்டத்தட்ட மூன்று நாள் கடந்து, நாலாவது நாளில் அந்த கிரகத்தில் இறங்கியது. வெளியே செல்லும் முன் கவச உடை அணிந்து செல்லவும் அந்த விண்கலம் வற்புறுத்தியது. தொள தொளவென இருக்கும் அதை அணிந்து வெளியே வந்தான் சாமிநாதன்.

மானுடத்தால் கண்டுபிடிக்கப்படாத கோடான கோடி கிரங்களில் ஒன்றான, சோமாவாமா கிரகத்தில் காலடி எடுத்து வைக்கும் முதல் மனிதன் எனும் பெருமையை பெற்றான்.

கால் வைத்த மறு நொடி , ஆறு மனித சைஸ் காரன்பான் பூச்சிகள் நடந்து வந்து அவனை கைது செய்தன,. 

அங்கிருந்து ஒரு பொந்து மூலமாக, தரைக்கு அடியில் இறங்கினார்கள். அடேயப்பா இவ்வளவு பெரிய நகரம் தரைக்கு அடியிலா என்று சாமி நாதன் வாய் பிளந்தான்.  அங்கிருந்து,  பறக்கும் தட்டில் மிதந்து அந்த ஊர் காவல் துறைக்கு மாற்றப்பட்டான் . அங்கே இவன் துணிகளை உருவி , சுத்தப்படுத்தி, கரப்பான் நிறத்தில் ஒரு ஆடையை தைத்து தந்தார்கள். கொண்டு வந்திருந்த பையை பிடுங்கி வைத்துக்கொண்டனர் . அடுத்து நீதி மன்றத்தில் ஆஜர் படுதப்பட்டான் . 

நல்லவேளை அவர்கள் அண்டத்தின் அனைத்து மொழிகளையும் பேசும் வல்லமை  கொண்டிருந்தனர். அதனால் இவனது கதை புரிந்தது.  அதை  கேட்டு அவர்களுக்கு சிரிப்பு வந்தாலும், இவன் போட்டிருக்கும் ருத்ராட்சம் ஏனோ உறுத்தியது. அதை உருவி இப்படித்தான் உங்கள் உலகம் இருக்குமா என்று கரப்பான் நீதி அரசன்  கேட்க, ஆட்டை போல தலை ஆடிட்டனான்.  பல கேள்விகளை கேட்ட பின்னர், நீதியரசர் கரப்பான் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன தான் வழி தவறி வந்தாலும் , இந்த கரப்பான் தேசத்திற்கு சாமி நாதன் வந்தது குற்றமே. அவன் முன்னர் இரு தண்டனைகள் கொடுக்கப்பட்டன. ஒன்று , மூளை சலவை செய்து, வந்த வழியே திரும்பி ஓடுவது. இரண்டாவது அவர்களின் அடிமையாக கடைசி வரை இருப்பது. 

விட்டால் போதும் என்று நினைத்த சாமிநாதன் முதல் தண்டனையை தேர்ந்தெடுத்தான். , அத்தனை நினைவுகளையும் கரப்பான் டாக்டர் அழித்து முடித்தார். அரைமணி நேரம் கழித்து சாமிநாதனை எழுப்பி, கிளம்பு என்பதை போல கை காட்ட, சாமிநாதனோ எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கிறது என்று கிலியை கிளப்பினான். என்னடா சோமவாமா கிரகத்திற்கு வந்த சோதனை என்று கலக்கம் கொண்ட டாக்டர் அவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறை செல்லும் வழியில்  , அவனது பையையும் கொடுத்து அனுப்பினார் . சிறைக்கு வந்த சாமிநாதன், பையை திறக்க, குமட்டிக்கொண்டு வந்தது. சந்திரனில் இருந்த கழிவறையில் மாட்டிய அதே நாற்றம் பிடித்த வேட்டி. சிறையின் வாசலில் இருக்கும் கரப்பானிடம் அதை துவைக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டான். அந்த கரப்பு வேண்டா வெறுப்பாய் கதவை திறந்து, அந்த வேட்டியை எட்டி பார்த்தது. அதை நுகர்ந்த அடுத்த நொடி உயிரை விட்டது. சாமிநாதன் திகைத்தான். கூச்சல் போட்டு மற்ற காவலர்கள் வர, அவர்களும் அதே வேட்டியை நுகர்ந்து பார்த்து மண்டையை போட்டனர். 

சாமிநாதன், இது தான் சாக்கு என்று அந்த வேட்டியை வைத்தே அவர்களை வழிக்கு கொண்டு வந்தான். அடுத்து செவ்வாய் கிரகத்திற்கு தகவல் அனுப்பினான்., மனிதர்களை குடி அமர்த்தி, தரைக்கு மேல் மனிதர்களும், கீழே கரப்பான்களும் வாழ ஆரம்பித்தனர். கரப்பான்கள் மேலே வந்தால், அடுத்த நொடி தெவசம் என்று சாமிநாதன் மிரட்டி வைத்திருந்தான். தரைக்கு மேல் இருக்கும் நகரத்திற்கு இவனே தலைமை அதிகாரியாகவும் நியமிக்க பட்டான். அங்கேயும் டாஸ்மாக்  வியாபாரம் ஆரம்பிக்க திட்டம் போட்டார் ராஜு லால் சேட், அதற்கான ஆலை கட்டி, சாமிநாதனை வைத்தே ரிப்பன்  வெட்ட வைத்தார். நாற்றம் பிடித்த வேட்டிக்கு பயந்து கரப்பான் மனிதர்கள் தரைக்கு மேலே வருவதே இல்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாமிநாதன் , சோமாவாமாவில் ஒரு தேசத்தையே உருவாக்கி , அதன் நிரந்தர அதிபராக தன்னையே பதவியில் அமர்த்திக் கொண்டான் . 

அந்த தேசத்திற்கு சாமி நாமா தேசம் என்று பெயர் சூட்டவும் செய்தான் .


Hi, I’m valaithinni

Leave a Reply