சென்னை, நெல்லை மற்றும் தென் தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கன மழை , பதை பதைப்பை உண்டு செய்கிறது. இயற்கைக்கு முன் நாமெல்லாம் தூசி தான் என்று மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என்று வண்ண வண்ண அலர்ட்டுகள் வந்த படியே உள்ளது. வீடு, கடை, நகரம், கிராமம் , பணக்காரர் , எழை வர்க்க வேறுபாடு பார்க்காமல் பிளக்கிறது இந்த மழை.

அதிலும் ஓர் வீடு அப்படியே பெயர்ந்து , தண்ணீரில் கரையும் அந்த காட்சியும் , “அய்யோ போச்சே” என்ற அழு குரலும் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிப் பார்த்து விடுகிறது. எத்தனை கனவுகள் அந்த வீட்டினுள் இருந்திருக்கும்.

நான்கு சுவர்கள் கொண்ட அந்த வீட்டிற்குள் தான் என்னென்ன நம்பிக்கைகளும், ஆசைகளையும் பூட்டி வைத்திருக்கிறோம். தன் எதிர்காலம், பிள்ளைகளுக்கு சொத்து, கடைசி கால செலவுக்கு என்று ஒவ்வொரு செங்களிலிலும் ஓர் எடையை வைத்திருக்கிறது, இந்த மத்திய வர்க்கம். மலரும் நினைவுகள்மறக்க முடியா தருணங்கள் ஆறா வடுக்கள் என்று ஒவ்வொரு மூலையிலும் ஓர் கதை. இரத்தம், சதை கொண்டு தான் ஒவ்வொரு வீடும் கட்டப் படுகின்றது. பெரும் செல்வந்தர்களின் வீடுகளில், கொத்தனார், சித்தாலின் இரத்தம் இல்லை என்று சொல்லி விட முடியுமா?

ஒரு வீடு வாங்க , பல வங்கிகள் ஏறி இறங்கி, தாலியை தவிர அனைத்தையும் விற்று, தெரிந்த இடத்திலெல்லாம் கடன் வாங்கி, வியர்வையில் நனைந்து , பல அவமானங்களை சந்தித்து ஒவ்வோர் வீடும் கட்டப்படுகிறது.

ஆயுளில் பாதியை , வட்டி, அசல் கட்டி

முடிப்பதற்கு கொடுத்து விட்டு, முழு கிணறு தாண்டி, அப்பாடா என்று ஒரு ஈஸி சேரில் உட்காரும் போது, மழை வந்து அப்படியே வீட்டை அள்ளிக் கொண்டு போனால், மக்களும் தான் என்ன செய்வார்?

இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்.

அரசையோ, மக்களையோ குறை சொல்லும் நேரம் இதுவல்ல. 90 சென்டி மீட்டர் மழைக்கு, தாங்கும் ஊர் இவ்வுலகில் இல்லை.

Hi, I’m tamilvalai

Leave a Reply