தமிழ்

அவதார் 2 – மாயாண்டி குடும்பத்தார்

அவதார் 2 – முதல் நாளே பார்க்க நினைத்து இன்று ஒரு வழியாக பார்த்து முடித்தேன். மூன்றே கால் மணி நேர படம். . இந்தியாவை போல அமெரிக்காவில் இண்டெர்வெல் என்ற வஸ்துவே கிடையாது. இதில் இரண்டு மணி நேர படம் பார்த்தாலே முதுகு வலி வந்துவிடும் அபாயம் இருக்க , மூன்றே கால் மணி நேரம் எழாமல், ஒரு படத்தை பார்த்தது ஒரு அதிசயம் தான். நல்லவேளை நான் சென்ற தியேட்டரில் recliner facility இருந்ததால், கால் நீட்டி ஒரு தாங்களாக படத்தை பார்க்க முடிந்தது. என்றும் இல்லாமல் பக்கத்துக்கு சீட்டுகளில் இளம் பெண்கள் வேறு. இந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாது . இரண்டு பிள்ளை பெத்த பிறகு அருகில் குமரி அமர்ந்தால்  என்ன , கிழவி அமர்ந்தால்  என்ன. இருந்தாலும் அவர்களை மனதில் கொண்டு கொஞ்சம் டிப்ளோமேட்டிக் பொஷிஷனில் சாய்த்து படம் பார்த்து  முடித்தேன்.புட்டம் தப்பித்தது . 

அவதார் 1 – உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற  படம் , இன்றளவும் வசூலில் நம்பர் 1 அது தான். கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் பல ஆயிரம் கோடிகள் .  ஹாலிவுட்டில் ஒரு ஒரிஜினல் ஐடியா வெற்றி பெற்றுவிட்டால், தங்க முட்டையிடும் வாத்து போல  அதை பார்ப்பார்கள். இரண்டாம்  பாகம், மூன்றாம் பாகம் என்று சிலர் பொறுமையாக சென்றாலும், முக்கால் வாசி நேரங்களில் தங்க முட்டை அதிகம் வேண்டும் என்று வாத்தை அறுத்து விட்டே மறுவழி  பார்ப்பார்கள் . உதாரணம் ட்ரான்ஸபோர்மேர்ஸ்  (transformers ) சீரிஸ்  . இதில் fast and furious போன்றவை இரண்டும் கெட்டானாக அவ்வப்போது ஓடி விடுவதும்  உண்டு. ஜேம்ஸ் கேமரூன் இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தங்க முட்டையிடும் வாத்துகள் உற்பத்தி செய்பவர், டெர்மினேட்டர், ஏலியன் , டைட்டானிக், என்று அவர் தொட்டதெல்லாம் தங்கம் தான். இதில் டெர்மினேட்டர் சீரிஸில் இருந்து அவர் விலகியதும் அறுத்து பார்த்து விட்டார்கள். கடைசியாக எடுத்த அவதார் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்கா என்ன.  என்ன, ஒரு 13 ஆண்டுகள் காத்திருந்து அடுத்த பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார் . 

படம் எப்படி என்றால், தலையை வலமும், இடமும், மேலும் கீழும் ஆட்டி ஒரு கொழகொழப்பான பதிலையே தர முடியும். visual grandeur என்று ஒரு பக்கம் எல்லா சீனிலும் காசை வாரி இரைத்திருந்தாலும்,  அதற்கேற்ற கதையோ,  திரைக்கதையோ இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜேம்ஸ் கேமரூன் படத்திலேயே  திரைக்கதை சரியில்லையா என்றால், ஆமாம் , இல்லை என்றே பதில் தர வேண்டி இருக்கிறது. காரணம், மூன்றே கால் மணி நேரப் படம்.

அவதார் 1 முடிந்த இடத்தில் படம் ஆரம்பிக்கிறது. ஜேக் , நெய்த்திரி தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். ஸ்பைடர் , மற்றும் கிரியை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இவர்கள் யார் என்று ஆரம்பித்தால் , அதற்கே ஒரு பத்தி தேவைப்படும் அதனால் அவர்களை பற்றி திரையில் கண்டுகொள்ளலாம்.  

மறுபக்கம் பண்டோராவின் நாவி  மக்களிடம் போரிட்டு தோற்ற வின் மக்கள் (ஸ்கை people ) மறுபடியும் முழு வேகத்தில் பண்டோரா வந்திறங்கி , நகரங்கள் அமைத்து அங்கிருக்கும் செல்வதை சுரண்டுகிறார்கள். அவர்களின் திட்டங்களை  ஜேக் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து பார்க்க, அவனைக் கொல்ல, முதலாம் பாகத்தில் மண்டையை போட்ட கலோனல் மைல்சை ஹாலிவூட்டுக்கே உரிய பாணியில்  , அவதார்(நீல மனிதன்) ஆக்கி மீட்டு வருகிறார்கள்.   அவரது ஒரே குறிக்கோள் ஜேக்கை கொள்வது. இதைத் தெரிந்து கொள்ளும் ஜேக் , தன்னால் நாவி மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று,  அவர்களை விட்டு விலகி, கடல் வாழ் மக்களை நோக்கி குடும்பத்துடன் நகர்கிறான்(அவர்கள் மட்டும் என்ன தொக்கா என்ற கேள்வி அப்போதே எழலாம்). இப்படி ஒரு புதிய விதமான உலகிற்கு செல்லும் ஜேக் குடும்பம் அங்கே என்ன செய்தது, மைல்ஸ் என்ன செய்தார் என்பதை, நீட்டி முழக்கி , ஆற அமர ஒவ்வொரு சீனையும் விரிவாக விவரித்து, நடு நடுவே நம்மை சோதித்து பார்த்து ஒருவழியாக, அடுத்த பாகத்தில் சந்திக்கலாம் என்று சுபம் போடுகிறார்கள். 

ஜேம்ஸ் கேமரூனின் 13 வருட உழைப்பு திரையில் நன்றாகவே தெரிகிறது. கடல்சார் காட்சிகளில் வெளிப்படும் பிரமாண்டமும் , அதன் கலர் கலரான உயிரினங்களும், புது உலகத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் நன்றாகவே இருக்கின்றன. என்ன, இதை வைத்தே ஒரு எழுபது நிமிடங்களை ஓட்டி இருக்கிறார், அங்கே தான் படம் தொய்வடைகிறது. சீக்கிரம் கிளைமாக்ஸ் போடுங்கப்பா என்று நாம் கெஞ்சாவிட்டாலும், இடுப்பும், கால்களும் கெஞ்சுகின்றன. கிளைமாக்ஸில், டைட்டானிக், ட்ரு lies படங்களின் நியாபகங்கள் வந்து செல்கின்றன. அதோடு உச்சமாய் , தமிழ் சினிமா தரத்தில் சில சண்டைக் காட்சிகளும் உண்டு. 

மூன்று மணி நேரம் ஒரு உலகத்தில் உலவ மன வலிமையும், உடல் வலிமையும் உள்ளவர்கள் தாராளமாக அவதார் இரண்டின் பண்டோராவின் ஒவ்வொரு பிரேமையும் தியேட்டரில் ரசித்து புசிக்கலாம். இல்லையேல், எப்படியும் OTT யில் வரும், இரண்டு மூன்று நாட்கள் ஒவ்வொரு மணி நேரமாக பார்த்து ரசிக்கலாம். 

இனி spoilers 

படத்தில் லாஜிக் , திரைக்கதையில் ஓட்டை என்று சொன்னேன் அல்லவா, அதற்கான காரணங்களை அலசுவோம்.

  1. வில்லன்  – மூட்டை பூச்சியை கொல்ல காட்டை கொளுத்துகிறான் வில்லன். அப்படி ஜேக்கை கொள்வதால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? அதுவும் அவனே குடும்பத்தை காப்பாற்ற, நாவியில் இருந்து வேறிடம் செல்கிறான். அப்படியானால் அவனால்  இவர்களுக்கு வேறெந்த பிரச்சனைகளும் வராது  தானே? 
  2. ஸ்பைடர் : பிறப்பிலிருந்து , அவன் எப்படி நாவி மக்களிடம், குறிப்பாக ஜேக்கிடம் வந்தான் என்பதற்கான முழு தகவல் ஒழுங்காக இல்லை. அவனைக் கண்டாலே நெய்த்திரி காண்டாகிறாள். அதன் பிறகு மைல்ஸிடம்  சிக்கிக்கொள்ளும் அவன் டக் டக்கென தடம் மாறுகிறான், கிளைமாக்ஸ் கூட ஓரளவு ஒத்துக் கொள்ளலாம், ஆனால் அவனது கதாபாத்திரம் ஒரு வித குழப்பத்தையே உண்டு செய்கிறது .
  3. ஜேக் தன்னால் நாவி மக்களுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று கடல் மக்களிடம் செல்கிறான். அவனால் அம்மாக்களுக்கும் தீங்கு தானே?  அவர்கள் செத்தாலும் பரவாயில்லையா என்ற கேள்வி கடைசி வரை நம்மை விடாமல் துரத்துகிறது. அதையே கடல் கூட்டத்தின் தலைவன் கேட்கவும் செய்கிறான்  
  4. என்ன தான் அடுத்த பாகம் என்றாலும், ஹீரோவே நாவி மக்களிடம் இருந்து பிரிந்து சென்றாலும், அவன் பிரிந்தது அம்மக்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. முதலில் நாவி மக்களை ஒரு வழி செய்துவிட்டு தானே மைல்ஸ் கடல் மக்களிடம் செல்ல வேண்டும்?  
  5. படம் முழுக்க குடும்பம் குடும்பம் என்று ஏங்கும் அப்பாவாக ஜேக், ஆனால் அவர்களை காப்பாற்ற அப்படி என்னதான் செய்கிறான் என்றே தெரியவில்லை, காரணம், கால் படத்திற்கு மேல், இது அவன் மகன்களின் படமாக மாறிவிடுகிறது. 

இதைத் தாண்டி இன்னும் பல்வேறு சிந்தனைகள் மனதில் ஓடினாலும், ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தை ஜெயிக்க வைத்து  எட்டடி பாய்வதற்கு பதிலாக அடுத்தது  நாலு பாகங்கள், அதையும் பார்த்து விடுவோம்  என்று அறுபத்தி நாலு அடி பாய்ச்சல் செய்ய முயன்று இடையிலேயே விழுந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

முதல் பாகம் வந்த பொழுதே இது வியட்நாம் காலனியின் அங்கிள் பதிப்பு என்று நம்மக்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள். இப்போது இது மாயாண்டி குடும்பத்தார் என்று சிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், நம்மால் அதை மறுக்கவும் முடியவில்லை என்பதே துயரம் தான். 

Hi, I’m tamilvalai

Leave a Reply