https://thirans.blog/2020/08/11/ஊஞ்சல்/

மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அக்ரஹாரம். உள்ளே செல்லும் போதே வரதராஜப் பெருமாளின் கடைக்கண் பார்வை படும்படி அமைப்பு கொண்ட கிராமம் அது . பெருமாளே அவர்களைப் பாராமல் உள்ளே விட்டாலும், வருவோர் போவோரை குசலம் விசாரித்து , கோவிலுக்குள் இழுத்து, தட்சணை வாங்க முயலும் குருக்களிடம் இருந்து தப்பிவிட முடியாது.  இந்த முறை அவர் தான் செல்லும் காரை வழிமறிப்பாரா என்ற சந்தேகம் ஷங்கருக்கு இருந்தது. ஆனால் அவன் கண்ணில் பட்டதோ சிதிலமடைந்த , புதர் மண்டிய ஒரு கோவில். வாசலில் இருக்கும் கருடன் தெரியவில்லை என்றால் அதை கோவில் என்றே சொல்ல முடியாது. கோவிலுக்கு சற்று தள்ளி இருக்கும் குருக்களின் வீடும் பூட்டிக் கிடந்தது. இது அவன் பார்த்து வளர்ந்த அக்ரஹாரம் இல்லை என்று புரிய அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தன. 

ரோட்டில் வளம் வந்த இரு சக்கர வண்டிகளும், அதில் இருந்த மனிதர்களும் அவனுக்கு அவ்விடத்தின் மாற்றத்தை உணர்த்தின. இருபது ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள். அந்த அக்கிரகாரத்தின் முடிவில் இருந்தது அவர்களின் வீடு. ஒரே சீராக தெருவில் கோலம், அதற்கடுத்து ஒரு பந்தல், பந்தலின் கீழ் ஒரு திண்ணை, அடுத்து வாசல், ரேழி என்று கட்டப்பட்டிருந்த வீடுகளில் பலவற்றை அந்த அக்ரஹாரம் இழந்திருந்தது. 

வீட்டிற்கு நேராக கார் நிற்க அவர்கள் இறங்கினார்கள். பெட்டிகளை இறக்கி திண்ணையில் வைக்கும் போதே அவனின் அம்மா வந்துவிட்டாள். ஒன்பது கஜ மடிசாரில்,  கிடைக்கும் கதவுகளையும்,  பொருட்களையும் பிடித்தபடி , தாங்கித் தாங்கி நடந்து வந்தாள் .

“வாப்பா ஷங்கரா , ஆத்துக்காரி வரலையா , ஒரு நிமிஷம் இரு ” என்று பாதி பற்கள் காட்டி புன்னகை செய்துவிட்டு  , திண்ணையில் ஓரமாய்  இருந்த ஆரத்தி தட்டை எடுத்து சுற்ற ஆரம்பித்தாள். அவ்வளவு நேரம் ஐ பேடில் விளையாடிக்கொண்டிருந்த ஷங்கரின் மகன் அத்ருத் “டாட் , வாட்ஸ் திஸ் ரெட் லிகுய்ட்” என்று அதை நோண்ட முயன்றான்.  சுற்றி முடித்த அம்புஜம், மகன் சில்லறை  ஏதும் போடுவான்  என்று தட்டை நீட்டியபடியே நின்றாள். ஐந்து டாலரை எடுத்து அம்மாவின் கையில் திணித்தான்.  கோலத்தில் ஓரமாக ஆரத்தியை கொட்டிவிட்டு உள்ளே கிளம்பினார்கள். ரேழியில் பெட்டிகளை வைத்து விட்டு கூடத்திற்குள் நுழைய, ஊஞ்சலில் தலைக்கு கை வைத்த படி படுத்திருந்தார் ஷங்கரின் அப்பா சிவராமன்.அவர்களைப் பார்த்ததும், பூணூலை சரி செய்தபடியே எழுந்திருந்து புன்னகைத்தார். வாசல் வரை வந்து  வரவேற்க முற்பட்டாலும், மூப்பு அவரை அங்கேயே அமர்த்தியது. பேரனைப் பார்த்த சந்தோஷத்தில் ஊஞ்சலை நிறுத்தி இறங்கினர்.  பேரனை தூக்க வேண்டும் என்ற ஆவல் பீறிட, அவனருகில் வந்து தூக்கிப் பார்த்தார். சில நொடிகளிலேயே விட்டுக் கொடுத்து, “போன்ல பார்த்ததுக்கு, இப்போ நன்னா வளந்துருக்க” என்று கன்னத்தை கிள்ளி விட்டு ஊஞ்சலில் ஒன்றிப் போனார். 

“பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்ததா” என்று ஷங்கரை பார்த்துக் கேட்க, குட்டிப்பையன் அத்ருத் அதற்குள் ஊஞ்சலில் என்ற வேண்டும் என்று ஓடினான். ஷங்கருக்கு என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் அதிகரித்தது. அவனுக்கும்  அந்த ஊஞ்சலுக்குமான ஊடல் அப்படிப்பட்டது.

ஷங்கருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே , அப்பா அந்த ஊஞ்சலில் தான் வாழ்க்கை நடத்தினார்.   காலை சந்தியாவந்தனர்த்திக்கு பிறகான காபியில் ஆரம்பித்து, பஞ்சாங்கம் பார்ப்பது, பேப்பர் படிப்பது, காலை குட்டித் தூக்கம், என்று அவர் அந்த ஊஞ்சலை விட்டு நகராத கணமே கிடையாது. அதிலும் பார்க்க வருபவர்களுக்கு எதிரில் ஒரு சேர் போட்டு , அவர் ஊஞ்சலில் சம்மணங்கால் போட்டபடி  , ஏதோ உலகிலேயே மிகப் பெரிய பீடத்தில் அமர்ந்துவிட்ட தோரணையில் பேசுவார். 

ஷங்கருக்கு அதில் ஏறி வேகமாக ஆட வேண்டும் என்று ஆசை. ஆனால் அப்பா இருக்கும் பொது ஊஞ்சலில் அவன் எங்கே ஏறுவது. ஒரு முறை அவர் வெளியே காரியம் செய்யப் போகையில் , அவரைப் போலவே சம்மணங்கால் போட்டு அமர்ந்து விட்டு, காலை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட , அம்மா வந்து இரண்டு சாத்து சாத்தி இறக்கி விட்டாள்.  அதுவே அம்மா தூரமான நாளென்றால் நாள் முழுவதும் அவன் அப்படியே இருந்திருப்பான் . தூரமான பெண்களை ஏதோ ஒரு அறையில் சிறைபட்டுக் கிடக்கும் அந்தக் காலத்தில்,   அம்மா மட்டும் எப்படி அதை உடைத்து வெளியே வருவாள். மகனுக்காக சாஸ்திரங்களை அவள் உடைத்து வெளியே வந்துவிட்டாலும் , அது அப்பாவுக்கு தெரிந்து விட்டால்?  இதனாலேயே அவன் ஜாக்கிரதையாக ஊஞ்சலில் ஆட ஆரம்பித்தான். 

சில சமயங்களில் அவன் ஊஞ்சலில் இருக்கும் போதே அப்பா வந்து விடுவதும் உண்டு. வாசலின் கதவு கிரீச்சிட்டு நகர்ந்தால் , ஊஞ்சலை நிறுத்தி விட்டு  சிட்டாக விளையாடக் கிளம்பிவிடுவான். ஆனால் விளையாடும் இடத்தில் அவனை சவுண்டி என்று கூப்பிட்டு கேலி செய்தார்கள். அப்படியானால் என்ன என்று கூட தெரியாமல் கூனிக் குறுகிப் போவான். ஒரு நாள் அப்பாவிடம் கேட்டே விட்டான். அவர் பதிலேதும் சொல்லாமல் முகத்தை திரும்பிக் கொண்டார். அப்போது அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் , இது கேட்கக் கூடாத விஷயம் என்பதை உணர்த்தியது. அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி விஷயத்தை பெற்றான். ஈமக் காரியம் செய்யும் ப்ராஹ்மண வம்சம் அவர்கள் என்றும் , ஊரின் ஒரே சவுண்டிக் குடும்பம் அவர்கள் தான் என்றும், அதனாலேயே , அக்ரஹாரா ஓரத்தில் , கீழத் தெருவின் ஆரம்பத்தில் அவர்களுக்கு வீடு என்றும் புரிந்து கொண்டான்.  

ஷங்கருக்கு மீசை முளைக்க ஆரம்பித்ததில் இருந்து புது பிரச்சனைகளும் ஆரம்பித்தது. வேதம் படிக்க வேண்டும் என்று அப்பா கட்டளையிட, கிராப் வெட்டி காலேஜுக்கு செல்ல வேண்டும் என்று  அவன் துடித்தான். “பிராமணனுக்கு படிப்பே வேதம் தான்,  நீ என்ன படிச்சு கிழிக்கப் போற “ என்று அவர் கேட்க, “உங்கள மாதிரி என்னால சவுண்டி ப்ராஹ்மணா அக்ரஹார மூலையில  வாழ  முடியாது. இதுக்கு , நான் படிச்சுட்டு சர்கார் உத்யோகத்துக்கு போயிடறேன்” என்று எதிர் கணை வீசினான். அப்பா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போனார். ஊரார் சவுண்டி என்று சொல்லும் போதெல்லாம் வராத அவமானம் , அவர் பையன் சொன்னதால் அவரை அப்பியது. எப்போதும்,  தேஜஸுடன், கடவாய்ப் பல்லில் வெற்றிலையை மென்று கொண்டே உழலும் அவர்,   வாய் பேசாமல் ஊஞ்சலில் ஒரு ஓரமாய் , அடிபட்ட நாயைப் போல ஒதுங்கி கொண்டார். 

அதன் பிறகு அவன் என்ன கேட்டாலும் ஒற்றை வரி பதிலைத் தந்து, படிப்பிற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்தார். ஆனால் ஊஞ்சலில் மட்டும் உட்கார விடுவதில்லை. அந்த ஊஞ்சலை அவர்  , பெருமிதமாக சுமக்கும் ஒரு பட்டத்து  யானையாக கற்பனை செய்துகொள்வரோ என்று ஷங்கருக்கு தோன்றியது. அவரைப் பொறுத்த வரையில் இந்த வீட்டில் அவர் சொல் கேட்கும் இரண்டே ஜென்மங்களில் ஒன்று அந்த ஊஞ்சல், மற்றொன்று அவனது அம்மா. 

நல்ல படிப்பு, நல்ல நேரம், எல்லாம் கூடி வர அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க, அடுத்த யுத்தம் ஆரம்பமானது. ஊஞ்சலில் வேகமாக ஆட்டியபடியே “கடல் தாண்டிப் போறவன் பிராமணனே இல்லை, அப்படியே போனா, திரும்பி வராத  “ என்று அவர் பங்கு கோபத்தையும், நியாயத்தையும்  உதறித்  தள்ளி அமெரிக்க கிளம்பி இருபது ஆண்டுகள் ஓடி விட்டன.  இதோ அப்பேர்ப்பட்ட பிராமணனின் பேரன் , அரை பிராமணனாக அவர் இருக்கும் ஊஞ்சல் பீடத்தில் ஏற ஓடுகிறான். 

ஓடி வந்த பேரனைத் தூக்கி உட்கார வைக்க அப்பா கீழே இறங்கினார். அவர் இறக்கத்தில் வேகம் பிடித்த ஊஞ்சல் பேரன்  தலையில் முட்டியது. ஒரு நிமிடம் துடித்துப் போனார் அப்பா. அவனை தாங்கிப் பிடித்து, நெற்றி, கன்னம், கழுத்து வரை, தடவி தடவி பார்த்து, முத்தமிட்டார். அப்பா அழுது இன்றுவரை அவன் பார்த்ததில்லை,ஆனால் இப்போது அழுகிறார். கோத்திரம் தெரியாத வெள்ளைக் காரிக்கும் எனக்கும் மகனாய் பிறந்த , பார்த்து அரை மணி நேரமே ஆன என் மகன், என்னால் முடியாததை சாதித்து விட்டான். அவனை அப்படியே ஆரத் தழுவி , ஊஞ்சலில் படுக்க வைத்து , என் அப்பா கீழ அதை ஆட விடாமல் தடுத்த படி தரையில் அமர்ந்தார். அவரின் கை இன்னுமும் அவன் முகத்தில் ஏதும் காயம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் அந்த ஊஞ்சல் அந்த வீட்டில் இல்லை. 

Hi, I’m tamilvalai

Leave a Reply