ரஜினி 5 – என் இனிய எந்திரா
முந்தைய பாகங்களை படிக்க —
என் இனிய எந்திரா
குசேலன் படத்தால் ரஜினிக்கு பல கஷ்டங்களே மிஞ்சியது. அதை துடைக்கும் விதமாக அடுத்த படத்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று மும்முரமாக இயங்க ஆரம்பித்தார். படம் ஆரம்பிக்கும் போதே இந்த படம் நடக்குமா என்ற சந்தேகங்களையும் கிளப்பியது. காரணம் , இதே கதையை அரை டஜன் ஹீரோக்களிடம் ஷங்கர் ஏற்கனவே சொல்லி ஒவ்வொரு முறையும் நடக்காமல் போனது தான் . இங்கே கமலஹாசனில் ஆரம்பித்து, விக்ரம் வரை இந்த கதையை சொல்லி வைத்திருந்தார். அதே போல பாலிவுட்டில் அமீர் கான், ஷாரூக் கான் போன்றோருக்கும் சொல்லியிருந்தார். ஷங்கருக்கு நோ சொல்லிவிட்டு, அதே கதையமைப்பில் ரா ஒன் என்று வேறொரு படம் நடித்தார் ஷாரூக் என்பது உபரி தகவல்.
அடுத்ததாக, ரஜினியை வைத்து எடுக்கப்படும் படம் என்றாலும், அதிரி புதிரி பட்ஜெட்டில் தயாராகும் படம் என்பதால், ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐங்கரன் என்று இரு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தனர்.
அதோடு, ரஜினி என்பதனால் சில கூடுதல் சிக்கல்களையும் இந்த கதை சந்தித்தது. இந்த படம் ஆரம்பித்த 2008 ஆண்டில், ரஜினிக்கு வயது 58. சர்கார் உத்தியோகத்தில் இருந்திருந்தால் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். இந்த வயதில் அவரால் என்ன செய்ய முடியுமோ அதற்கு தகுந்தாற்போல் கதையை மாற்றினார் ஷங்கர் . அதிலும் ஒரு சிக்கல் வந்தது.
முதல்வன் படத்தில் இருந்து, சுஜாதாவுடன் பணியாற்றி வந்திருந்தார் ஷங்கர். அதன் பிறகு வந்த படங்களில் வசனம், ஸ்கிரிப்ட் திருத்தம் , லாஜிக் மீறல்களை எப்படி அமுக்குவது போன்றதில் சுஜாதாவின் தலையீடு அதிகம். உதாரணமாக, சிவாஜி படத்தில் வரும் கருப்பு பணத்தை பற்றி வரும் பகுதியை பாமரனுக்கும் கொண்டு சேர்ந்ததில் பெரும் பங்கு சுஜாதாவிற்கு. சுருக்கமாக சொன்னால் ஷங்கர், சுஜாதா ஒரு ஹிட் காம்போ. எந்திரன் படத்திற்கும் அவர் வசனகர்த்தாவாக சேர்க்கப்பட்டார் . சுஜாதா ஏற்கனவே “என் இனிய எந்திரா” என்ற பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு நாவலை எழுதியிருந்தார். எதிர்காலத்தில் நடக்கும் கதை அது. அதில் ஒரு நாய்க்கு மனிதனை போல் பேசும் ஆற்றலும், உணர்ச்சிகளும் வந்து அட்டகாசங்கள் செய்யும். இப்படி அறிவியல் புனைகதைகளில் நிபுணரான சுஜாதா இந்த படத்தில் என்ன செய்யபோகிறர் என்று அவர்களின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் நடந்ததோ வேறு. சுஜாதா அவர்களுக்கு திடீரென உடல் நல குறைவால் பிப்ரவரி மாதம் இறைவனடி சேர்கிறார். அவர் மட்டும் இருந்து இந்த படத்தை முடித்திருந்தால் , படம் வேறு விதமாக வந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் மற்றவர்களை வைத்து படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் ஷங்கர்.
ஷங்கருக்கு எப்போதும் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிப்பதில் சிக்கல் உண்டு. சிவாஜி படத்தையே ஒரு நாள் கழித்து தான் வெளியிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அதோடு, பரந்த பிரும்மாண்டமான சிந்தனைகள் கொண்டவர் ஷங்கர். சாதா படத்திலேயே காசு பிடிக்கும் பல அயிட்டங்கள் வைத்து, நம்மை வாயை பிளக்க வைத்து விடுவார். சாதா படத்திற்கே இப்படி என்றால், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகவும் எந்திரனுக்கு எவ்வளவு செலவு பிடித்திருக்கும்? சுமார் 150 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்த எந்திரன் அதன் தயாரிப்பு நிறுவனங்களையும் பதம் பார்த்தது. போதாத குறைக்கு 2008 ஆண்டில் அமெரிக்க நிர்வாகங்கள் சட்டென்று படுக்க, உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை தலைவிரித்து ஆடியது. இதை காட்டி பட்ஜெட்டை குறைக்க தயாரிப்பு நிறுவனம் கேட்க, ஷங்கர் மறுத்துவிட்டார். 35 கோடி செலவில் ஏற்கனவே இரண்டு பாடல்களையும் முடித்து விட்டனர். ரஜினியின் படம் ட்ராப் ஆகுமா என்று செய்திகள் வர ஆரம்பித்தன.
ரஜினி எப்போதும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு தன்னால் முடிந்த தீர்வை கொடுப்பதில் வல்லவர். அவரின் படத்திற்கே பிரச்சனை என்றால் சும்மா விடுவாரா? 2008 இல் திமுக ஆட்சி. சன் பிக்சர்ஸ் மெல்ல திரைத்துறையை சுரண்ட ஆரம்பித்திருந்த தருணம். ரஜினி கலாநிதி மாறனுக்கு போன் போடுகிறார். சந்திப்பு நடக்கிறது. கலாநிதி மாறன் ஒரு தேர்ந்த வியாபாரி. 150 கோடி பட்ஜெட்டை தாண்டாமல் எடுத்தால் வெற்றி உறுதி என்று கணிக்கிறார். ஓடிடி / ஸ்ட்ரீமிங் போன்ற வஸ்துக்கள் இல்லாத காலம் அது. படம் வந்தால் தியேட்டரில் பார்க்கலாம், அல்லது திருட்டு விசிடி தான். இல்லையேல் அவர்களாக படத்தை டிவி சேனலில் போடும் பொழுது பார்க்கலாம். அப்படி அவர் கணக்கு போட்டு ஓகே சொல்ல படம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.
வயதின் காரணமாக ரஜினியால் படத்திற்கு தேவையான சண்டை காட்சிகளில் முழு சக்தியுடன் நடிக்க முடியவில்லை. இந்த வயதில் இந்த மனிதனை இவ்வளவு கஷ்டப் படுத்த வேண்டுமா என்ற முமுணுப்புகளும் எழுகிறது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் டூப் போட்டு எடுக்கிறார்கள். இப்படி பல தடைகளை கடந்து படம் நத்தை வேகத்தில் நகர்ந்து ஒரு வழியாக முடிவடைகிறது. 150 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட படம், சுமார் 165 கோடி வரை இழுத்து விடுகிறது, ரஜினியின் சம்பளம் 45 கோடி, கிராபிக்ஸ் காஸ்ட் 60 கோடி ஷங்கருக்கு பத்து கோடி, ஏ ஆர் ரஹ்மானுக்கு சில கோடிகள் என்று இந்தியாவின் காஸ்ட்லியான படமாக மாறுகிறது.
பாடல்கள் வெளியாகி சில நாட்களில் ஹிட் ஆகிறது. படத்தின் எதிர்பார்ப்பை கூட்ட சன் டிவி ஐந்து கோடி செலவிட, புரமோட் செய்ய மலேசியா வரை செல்கிறார் ரஜினி. டீசர் செப்டம்பர் 2010 இல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்புகிறது. அதே நேரத்தில் இது என்னுடைய கதை என்று சில பேர் நீதிமன்றம் செல்கிறார்கள். அந்த வழக்குகள் 2022 வரை நடக்கிறது என்பது உபரி தகவல். 2010’ இல் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுக்க, படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகிறது.
தமிழ் திரையுலகம் அதுவரை கண்டிராத வெற்றியை அடைகிறது. முதல் வாரத்தில் மட்டும் 118 கோடி வசூல் என்று யாரும் நினைக்காத சாதனையை நிகழ்த்துகிறது. இந்தியாவிலேயே அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமான, தபாங் படத்தின் முதல் வார வசூல் 85 கோடி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தி பதிப்பில் மட்டுமே 30 கோடி வசூலித்து , ஒரு பாண் இந்தியன் ஹீரோவாக அந்தஸ்து பெறுகிறார் ரஜினி.
இந்த படம் செட் செய்த ரெக்கார்டுகளை பல வருடங்களுக்கு பிறகே பாகுபலி படம் உடைத்து.
குசேலன் படத்தால் துவண்டு போன ரஜினிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது இந்த படம். இவ்வளவு பெரிய வெற்றியுடன் ரஜினி நடிப்பதை நிறுத்தி இருந்தால், அதன் பிறகு நடக்கவிருக்கும் துன்பியல் சம்பவங்களிலிருந்து தப்பியிருப்பார் ரஜினி என்றே சொல்ல தோன்றுகிறது.