Uncategorized

தமிழனுக்கு இந்தி தேவையா – பாகம் 1

 தமிழனுக்கு இந்தி தேவையா?


தமிழுக்கு நிகரான ஒரு மொழியே இல்லை என்பது தான் இன்று வரை என்னுடைய கருத்து.  அதே போல மத்த மொழிக்காரர்களுக்கும் அவர்கள் மொழியே பெரிது என்ற கருத்துக்கும்  நியாயம் உண்டு.  இந்தியாவை போல மொழிவாரியாக மாநிலங்களை கொண்ட தேசம் வேறொன்று இருக்கிறதா என்று தெரியவில்லை, ஒரு வேலை ஐரோப்பா கிட்ட வரலாம். ஆனால் அவர்களுக்கு ஒரே நாடும் கிடையாது , ஒரே மொழியும் கிடையாது, அப்படியே தேவை பட்டாலும் ஆங்கிலம் இருக்கிறது. அதுவும் , எப்போது தேவையோ அப்போது மட்டும் தான். ஜெர்மனிக்கு சென்று இனி அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள் என்று சொன்னால் அடித்து துவைத்து விடுவார்கள். ஜப்பானியர்களும் அப்படியே, அரபு தேசத்து மக்களும் அப்படியே. சுருக்கமாக சொல்லப்போனால் பிராந்தியத்திற்கு ஒரு மொழி, உலகளாவிய தேவைக்கு ஆங்கில மொழி.

சரி அப்படியே, பாரத தேசத்திற்கு வருவோம், இங்கேயும் அதே கட்டமைப்பு தான்,. வடக்கே குஜராத்தி ,ஒடியா, பங்காளி , மராத்தி. தெற்கே வந்தால், இருக்கும்  நாலு மாநிலத்திலும் நாலு மொழிகள். அவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள ஆங்கிலம். இருக்கும் ஒரே பிரச்சனை தெற்கே ஆங்கிலம் வளர்ந்த அளவிற்கு , வடக்கே வளரவில்லை. அதோடு ஒரே மொழி , ஒரே தேசம், அத்தோடு  அதற்கு தெவசம் என்பதை  ஆளும் பாஜக சித்தாந்தமாகவே வைத்துள்ளது. உண்மையில் தமிழரான நமக்கும் (நாம் தம்பி மார்கள், பரிசோதித்து சான்றளிக்கலாம்) , மொழிவாரி  மாநிலத்தார்க்கு ஹிந்தி தேவையா? அடித்து துவைத்த விஷயம் தான் என்றாலும், காவிரி பிரச்சனை போல இதுவும் ஒரு ஸீஸனல் பிரச்சனை , அடுத்த முறை இந்த பிரச்சனை வரும் முன் இந்த பதிவை போட்டு வைக்கிறேன். 


வடக்கே ஹிந்தி பெல்ட் (அ) cow பெல்ட் என்று ஒரு சொல்லாடல் உள்ளது, எப்படி திராவிடமோ அப்படி. இதில் வரும் மாநிலங்கள் மேற்கே குஜராத்தில் இருந்து, அடுத்து மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம் ஆகியவற்றை இந்த கவ் பெல்ட்டில் அடக்கி விடலாம். இது இந்தியாவின் நாற்பது சதவீத மக்கள் தொகையை கொண்டதொரு பெல்ட், அனைவரும்  ஹிந்தி பேசும் மக்கள் (குஜராத்தில் பாதி மட்டும்  ), இதை ஒட்டி இருக்கும் பஞ்சாபி, மராத்தி, ராஜஸ்தானி மக்களும் ஹிந்தி தெரிந்தவர்களே. 


அதாவது ஹிந்தி மட்டும் தெரிந்தால் வட இந்தியாவில் நம்மாலும் இருக்க முடியும். அதோடு ஒரே நாடு , ஒரே மொழி என்பது அலுவல் ரீதியாகவும் பல வசதிகளை தரும், அரசியல் ரீதியாக இன்னும் பல வசதிகளையும் தரும். அதனால் தான், மக்கிப்போன காங்கிரஸ் முதற்கொண்டு அதை கொண்டு வர துடித்தது. இதில் தமிழர்களான நமக்கும் சில நன்மைகள் உண்டு, சந்தேகமே வேண்டாம். ஆனால் நமக்கு இது தேவையா? 

“நல்ல வேலை/நல்ல சம்பளம்” என்று ஒற்றை புள்ளியை நோக்கியே நமது பள்ளி/கல்லூரி படிப்பு நம்மை நகர்த்தும் . தமிழ் மட்டும் கம்பல்சரி சப்ஜெக்ட் ஆக இல்லை என்றால், அதை சீண்டும் தனியார் பள்ளிகள் இங்கே மிக குறைவாக தான் இருக்கும். யோசித்து பாருங்கள் , இந்த கம்பல்சன் இல்லை என்றால், தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும், மெல்ல சாகும். இப்படி தாய் மொழியான  தமிழை  படிப்பதற்கே சுணக்கம் காட்டும் நமக்கு மூன்றாவது மொழி தேவையா? அதுவும் அந்த மூன்றாவது மொழியாக இந்தி தேவையா? 


அடுத்த கேள்வி, ஹிந்தி படித்தால் என்ன நன்மை? நாம் வடக்கே செல்லும் பொழுது உதவலாம், அதை தாண்டி? ஹிந்தி படித்தால், வடக்கே வேலை தருகிறோம் என்று யாராவது சொல்கிறார்களா என்று பாருங்கள்? ஹிந்தி பேசும் மக்களான பீஹாரி, உபி மக்களே வேலை தேடி தமிழ் தேசம் வரும் பொழுது , நாம் ஹிந்தி கற்று என்ன செய்ய போகிறோம்? சுந்தர ஹிந்தியில் எக்ஸ்ட்ரா பாணி பூரி வேண்டுமானால் கேட்டு வாங்கலாம். ஹிந்திக்கு பதில் ஜெர்மன் மொழியை கற்றலாவது  வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். நமக்கு என்ன தேவை? நல்ல பாணி பூரியா இல்லை வேலையா? 


பணக்காரர்கள் மட்டும் ஹிந்தி படிக்கிறார்கள் , நமது எளிய தமிழ் பிள்ளைகள் ஹிந்தி படிக்காமல் பின் தங்கி விட மாட்டார்களா என்று அடுத்த வாதத்தை வைத்தால், அங்கிருந்து அப்படியே  கிளம்பி விடவும். இதை விட ஒரு மொக்கையான வாதமே இருக்க முடியாது. ஹிந்தி படிக்காமல் என்ன பின் தங்கி விட்டோம்? இன்னும் சொல்லப் போனால், இந்தி தெரியாமல் தானே இவ்வளவு வளர்ந்திருக்கிறோம்? தமிழ் மண்ணை விட்டு வெளியே செல்லும் தமிழன், எங்கே வேலை தேடி செல்கிறான்? வெளி நாட்டிற்கா இல்லை வட மாநிலத்திற்கா? டிமாண்ட் vs சப்ளை என்ற ஒன்றை வைத்து  தான் உலகமே  இயங்குகிறது, இப்படியிருக்க டிமாண்டே இல்லாத ஹிந்தி தேவையா?  இந்தியை விருப்ப பாடமாக யார் வேண்டுமானாலும் படிக்கலாம், யார் தடுக்க போகிறார்கள். யாருக்கு வேண்டுமோ அவர்கள் படித்துக் கொள்ளட்டும்.


இதில் இருக்கும் அரசியலை அடுத்த பார்ட்டில் பாப்போம் 

Hi, I’m valaithinni

Leave a Reply