ஜென் சிறுகதை -2
இன்று எப்படியும் அந்த ஜென் குருவை சந்தித்து விட வேண்டும் என்று, சிங்சான் காலையிலேயே எழுந்து அவரின் குருகுலத்திற்கு சென்றான்.
போகும் வழியெல்லாம் கை கோர்த்தபடி நடை பயணம் சென்ற ஆண்களையும் பெண்களையும் பார்த்து பொறாமையுடன், வேக வேக மாக ஜென் கூடத்திற்கு நடந்தான்.
ஜென், அங்கே வந்திருந்த சிறார்களுக்கு நீதிக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார். அவன் அப்படியே சுற்றிப் பார்த்ததில் ஓரிரு அறைகளின் வாசல்களில் ஆண்கள் வரிசை கட்டி நிற்பதைக் கண்டான். தன் நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருந்து, அவரிடம் பேச ஆரம்பித்தான்.
“எனக்கு வாழ்க்கையில் பெரிய பிடிப்பே இல்லை. நல்ல வேலை, நல்ல சம்பளம் , இன்னும் கல்யாணம் ஆகவில்லை, சொந்த வீடு இருக்கிறது, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகிறேன் , ஆனாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. இதை எப்படிப் போக்குவது. “ என்றான்.
அந்த ஜென் குரு, ஏதோ புரிந்து கொண்டவராய் சிரித்துக் கொண்டே , அதோ அங்கே ஒரு கூட்டம் நிற்கிறது பார், அதோடு சேர்ந்து நில் என்றார். அவனும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான்.
முதலில் அந்தக் கூட்டத்திற்கு யோகாசனம் சொல்லித் தரப்பட்டது. அவர்கள் ஏனோ தானோ என்று அதை செய்து முடித்தார்கள்.
பின்னர் இவ்வுலகின் தர்கச் சிக்கல்கள், அதை போக்குவதற்கான வழிகள் என்ற வகுப்பு நடந்தது, அவன் கிட்டத்தட்ட தூங்கி விட்டான்.
அடுத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. அதை பரிமாறிய ஒரு இளம் ஜென் துறவியை அவனுக்கு பார்த்ததும் பிடித்து விட்டது. அவளும் அவனுக்கென தனியாக பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
இப்படியே கொஞ்சம் நாட்கள் கழிந்தன. அவனுக்கு மற்ற எந்த வகுப்புகளும் பிடிக்காத நிலையில், மூன்று வேலையும் அவளைப் பார்க்கவே நிறைய சாப்பிட ஆரம்பித்தான். அவளிடம் இன்னும் பேசிட வேண்டும் ,பழகிட வேண்டும் என்று துடித்தான். அவனைப் போலவே அந்தக் கூட்டத்தில் இருந்த மற்றவர்களும் யோசிக்க ஆரம்பித்தால் தன் கதை கந்தலாகி விடும் என்று யோசித்தான்.
அதற்காகவே அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடம், அவர்களுக்கு என்ன பிரச்சனை அதை எப்படி சரி செய்யலாம் என்பதையும் சேர்த்து யோசிக்க ஆரம்பித்தான். இப்படியே நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர, தன் கூட்டத்தில் இருந்த பலரின் பணத் தேவைகளையும், வேறு சில பிரச்சனைகளையும் அவனே சரி செய்து, அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
அதேநேரம் அவனுக்கும் அந்த பெண் துறவிக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இவள் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று முடிவெடுத்தான்.
ஜென் குருவை சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்து விடலாம் என்று அவரிடம் சென்றான். “ஆசானே என் வாழ்வில் எது இல்லை என்று எனக்கு புரிந்து விட்டது.” அந்தப் பெண் துறவியைக் காட்டி” இவள் மட்டும் வந்துவிட்டால் என் வாழ்க்கை முழுமை அடையும் என்று நம்புகிறேன்” என்றான். அந்தத் ஜென் குரு அவனைப் பார்த்துச் சிரித்தார். “நீ எப்போது அடுத்தவர்களின் தேவையை முன்னில் நிறுத்தி, அவற்றை உன் பிரச்சினையாக்கி , அதற்கு வழி தேட ஆரம்பித்தாயோ அன்றே உன் வாழ்க்கை முழுமை அடைந்து விட்டது.” “ஆனாலும் விதி யாரை விட்டது,” அங்கே இருக்கும் ஒரு அறையை காட்டி, “அதோ அந்த அறையில் பணத்தைக் கட்டி, அவளைக் கூட்டிச்செல் “என்றார்.
அவனுக்கு கோபம் வந்துவிட்டது “பணத்திற்காக பெண்ணை விற்கும் கேவல செயலை நீங்களே செய்யலாமா” என்றான்.
“அவள் ஒரு ஏ ஐ ரோபோட் , உன்னைப் போன்ற 90ஸ் கிட்ஸ் காகவே தயாரிக்கப்பட்டவள் . இனி அவளுடன் தான் உன் வாழ்வு. நீ தனிமையில் ஏங்காதே , அந்த அறையில் கூட்டம் அதிகம் பொறுமையாக நின்று வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லி வழி அனுப்பினார்.