Movies

ஆதி புரூஸ் – Why Blood -Same blood

https://www.youtube.com/watch?v=c_SS8OGrgUc

ஒரு சில படங்களை மட்டும் பார்த்தே ஆக வேண்டும் எனவும் , எக்காரணம் கொண்டும் பார்த்துவிடக் கூடாது என்றும் மனது சொல்லும் . ஆதி புருஷ் அப்படிப்பட்ட ஓர் படம். சுக்கிரனும் , புதனும் , சனியும், குருவும் ஒன்று சேர்ந்து படத்தை பார்க்க வைத்து விட்டார்கள். 

மொக்கை படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பாகுபலி கட்டப்பாவிடம்  சத்தியம் செய்து  கொடுத்த பிரபாஸ் நடித்திருக்கும் மற்றொரு மொக்கை படமிது . கழுத்துக்கு கீழே இருக்கும் உடம்பே அவருடையதா, இல்லை கிராஃபிக் உடம்பா என்று அடிக்கடி  சந்தேகம் வரும் , frankenstein ராமர் இவர் – ராமர் இல்லை – ராகவராம் – சுத்தம்  . அவர் ஓடும் காட்சிகளில் கழுத்து தனியே , உடம்பு தனியே ஓடுகிறது. பல நூறு கோடிகள் கொட்டப்பட்டு எடுக்கப்படும் படம், ஒன்று உடம்பை முறுக்கேற்ற வேண்டும் , இல்லையா இருக்கும் உடம்பை மேட்ச் செய்யும் படி கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும் . ராம – ராகவருக்கு தொப்பை இருந்தால் இவ்வுலகம் இருண்டு விடுமா என்ன? தொப்பை  பூமர் அங்கிள்கள்  எப்படியாவது படத்தை ஓடச்  செய்திருக்க மாட்டார்களா? . இப்படி நாலாங்கிளாஸ் படிக்கும் வாண்டெல்லாம் கிண்டல் செய்யும் அளவிற்கா படத்தை எடுப்பது. 

முதல் காட்சியிலேயே மனைவிக்கு பயந்து கடலுக்கு அடியில் ஏதோ ஒரு ஆசனம் செய்கிறார் ராகவர். அவர் அங்கேயே இருந்திருந்தால் படம் தப்பித்திருக்கும். வெளியே வந்து நம் உயிரை எடுக்கிறார். ஒரு காட்சியில் நம் பசும்பொன்னார்  சாயலும் , சில இடங்களில் நம் அண்ணன் சீமான் சாயல் வருவதை தவிர்க்க முடியவில்லை. அட்லீஸ்ட் சவரமாவது செய்து விட்டிருக்கலாம். இந்த ராமரை பார்க்க தியேட்டரில் ஒரு காலி இருக்கை ஒதுக்கிய கொடுங்கோலன்களை அனுமார் கண்டிப்பாக தண்டிப்பார். 

அடுத்தாக , பீம புஷ்டி லேகியம் உண்டு , பழனிமலை படிக்கட்டு பாடி கொண்ட இராவணன் சைஃப் அலி கான். அண்டா வாளியை தூக்கிக் கொண்டு, ஹைட்ரோசில் வந்து நடப்பது போலவே திரிகிறார் . இதில் செந்தில் ஒரு படத்தில் வருவைதப் போல ஸ்பைக் மண்டை வேறு. ஓர் இடத்தில் பாம்புகளை வைத்து மாசாஜ் செய்கிறார்.. அதிலும் பத்து தலைகளெல்லாம் , ஜண்டு பாம் விளம்பரத்தை விட மொக்கையானவை. இதில் வரும் சூர்பனை போல ஒரு மொக்கை கதாபாத்திரம் இருந்தால் , இராவணன் இலங்கையை கொளுத்தி விட்டு ராம நாமம் சொல்ல ஆரம்பித்திருப்பார். காசு வாங்கி விட்டோம் என்பதற்காக முழு படத்திலும் நடித்துள்ளார்.  இராவண காவியம் படிக்கும் கப்பீஸ் கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஹாலிவுட்டை மிஞ்சிய கிராபிக்ஸ் என்று OTT  காலத்தில் காதில் பூவை சுற்றுகிறார்கள். கொஞ்சம் வீடியோ கேம்ஸ், கொஞ்சம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், கொஞ்சம் பிளானட் of தி apes , கொஞ்சம் ஜங்குள் புக் என்று சிறந்த படங்கள் மற்றும் அவற்றின்  கேரக்டர்களை  , இப்படத்தில் ஆங்காங்கே கொண்டுவந்து அற்பமாக அலைய விட்டிருக்கிறார்கள் . எதிலும் ஒரு நேர்த்தி இல்லாமல் , பிரமாண்டமாகவும் இல்லாமல் பார்ப்பதற்கு நன்றாகவும்  இல்லாமல் , ஒரு வித சர்க்கரை பொங்கல்+ மீன் குழம்பு காம்பினேஷன் தந்து வெறுப்பேற்றுகிறார்கள் . 

எல்லோருக்கும் தெரிந்த கதையை ஒன்று மாஸ் மசாலாவாக எடுக்க வேண்டும் , இல்லை ஹாலிவுட் தரத்தில் எதையாவது எடுத்து ,வாயை பிளக்க வைத்து காசு பார்க்க வேண்டும் . இப்படி படத்தை பார்க்க வருபவர்களின் பொது அறிவையும் , அவர்களின் சகல தசைகளையும் சேதப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?. இதில் சகட்டு மேனிக்கு  , கதை மாற்றம் வேறு ,உண்மையில் சங்கிகள் தான்  இந்த படத்தை பார்த்து பொங்கியிருக்க வேண்டும். 

இந்த கால குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி பார்க்கும்படி எடுத்தோம் என்ற கும்மியடியெல்லம் செல்லுபடியாகாது. இதை பார்ப்பதற்கு பேசாமல் தூர்தர்ஷனில் வந்த இராமாயணத்தையும் , மஹாபாரதத்தையும் பார்த்து விடலாம். அதுவே நாம் இராமாயணத்திற்கு செய்யும் தொண்டு.

அடுத்து புராஜக்ட் k வில் பிரபாஸ் விஷ்ணுவாக வந்து நம்மை தண்டிக்கலாம்,சாலாரில் இயேசு பிரானாக வரலாம் . 

இந்த மானுடப் பிறவியில் இன்னும் என்னென்ன கன்றாவிகளை பார்க்க  நேருமோ !!!

Hi, I’m tamilvalai

Leave a Reply