கதை

சர்க்கரையும் மரப் பல்லியும்

Image by Alexa from Pixabay

“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே  அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா. 

ஓரமாக தரையில்  உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே வேட்டைக்கு கிளம்பிட்டாங்க” என்று கீச்சு குரலில் பதிலளித்தான். 

“வேட்டைக்கு போய் அப்படியே கிழிச்சு பூடுவார் பாரு,  அங்க போய் ராத்திரி பூரா குடிச்சிட்டு , குறவன் எவனையாவது புடுச்சி அவன் கிட்ட என்ன இருக்கோ அத வாங்கிட்டு வரதுக்கு பேர் வேட்டையா ”  என்று படுக்கையில் இருந்தபடியே அன்னம்மா ஆரம்பித்தாள். 

அன்னம்மாவின் ஒவ்வொரு வார்த்தையையும்  நாக்கை நீட்டி கேட்டுக்கொண்டிருந்த அந்த பழுப்பு நிற மரப் பல்லி , சத்தம் எழுப்பி ஆமோதித்தது . 

“சர்க்கரை , போய் கதவ சாத்திட்டு வா, அந்தக் கிழவிக்கு காது கீது கேட்டுட போகுது. கண்ணு மங்களா தெரிஞ்சாலும் , பாம்புக் காது,  தொண்ணூறு வயசாகியும் சாவாம  , என் உசுர எடுக்குது” 

திருகிவிட்ட பொம்மையைப் போல கதவை சாத்தி விட்டு தாழ்ப்பாள் போடாமல் வந்தான் சர்க்கரை. வந்ததும் நேராக , இடுப்புயர ஊறுகாய் ஜாடியின் அருகில் அமர்ந்தான். அன்னம்மாவிடம் கொஞ்சம் இது கிடைக்குமா என்று கண்களால் தூது விட்டான். 

ஒரு கை மட்டும் எடுத்துக்கோ என்று அன்னம்மா ஆணையிட்டது தான் மிச்சம், சட்டென்று ஜாடியில் கைவிட்டு , ஒரு கைப்பிடி சர்க்கரையை எடுத்து வாயில் திணித்தான். 

சர்க்கரை , அந்த ஊரைப் பொறுத்தவரையில் ஒரு பைத்தியம் . கைப்பிடி சர்க்கரை கொடுத்தால் , நாள் முழுக்க வேலை செய்யும் அடிமை. கருத்த தேகம் , கட்டுடல் மேனி காட்டி, காக்கி டவுசரும் போட்டு , தினமும் எந்த வீட்டில் எதை சொன்னாலும் செய்து விட்டு, ஒரு கை சர்க்கரை கேட்கும் பூச்சி.  கிணற்றில் இருந்து நூறு வாளி தண்ணீர்  இறைக்க வேண்டுமா கூப்பிடு சர்க்கரையை. அரை கிலோமீட்டர் ஓடி வெற்றிலை பாக்கு வாங்க வேண்டுமா, பிடி சர்க்கரையை. 

அவனது ஒரே தேவை கைப்பிடி சர்க்கரை. வீடு முழுக்க கூட்டிப் பெருக்கி, துடைத்து , ஒரு பிடி சர்க்கரை மட்டும் வாங்கும் வேலைக்காரப் பயல் கிடைத்தால் எவன் சும்மா விடுவான். ஊருக்கே அடிமையாக இருந்தான். பிறப்பும் தெரியவில்லை, புத்தி சுவாதீனம் இல்லை. ஊரார் ஒரு பிள்ளையை வளர்த்தால் எப்படி வளர்ப்பார்கள்  என்பதற்கான சான்றாக வாழ்ந்து வந்தான் சர்க்கரை. வக்கிரம் பிடித்த சிலர் அவனிடம் வேலையும் வாங்கிவிட்டு, சர்க்கரையும் தர மாட்டார்கள், ஆனாலும் அடுத்த நாள் அவர்கள் அழைத்தால் முதல் ஆளாக வருவான். சில் வண்டுகள் அவன் டவுசரை பிடித்து இழுத்துப் பார்க்கும், அவன் அங்கிருந்து  ஓடுவானே தவிர முகம் சுழிக்க மாட்டான்.  இவ்வளவு இருந்தும் யாரும் சர்க்கரைக்கு பதில் பத்தோ இருபதோ தந்தால் அவன் சிறுவர்களிடம்  கொடுத்து விடுவான்.  

ஊருக்கே பைத்தியமாக தெரியும் அவனை , ஆரம்பத்தில் அன்புடன் அரவணைத்து , மூன்று வேளை சோறு போட்டு பார்த்துக் கொண்டவர்  பண்ணையின் அம்மா.  அதற்கும் ஊரில் ஒரு கதை உண்டு. பண்ணையார் சின்ன வயதாக இருந்தபோது , அவர் ,சக்கரை இன்னும் சில இளசுகள் , கிட்டிப்புல் விளையாடிய போது, பண்ணை அடித்த சில் , சக்கரையின் நெற்றிப் பொட்டில் பட்டு , அவன் பைத்த்தியம் ஆனதாகவும் , அதனாலேயே பண்ணையின் அம்மா அவன் மீது கரிசனம் கொண்டதாகவும் பேசிக்கொள்வார்கள். ஒரு சிலரோ , பண்ணையின் அம்மா ஒரு முறை சர்க்கரையின் நெற்றியில் முத்தமிட்டு , அப்படியே ராஜா ராமனைப் போலவே இருப்பதாகச் சொன்னதாகவும் சத்தியம் அடித்து சொல்கிறார்கள். ராஜா ராமன் பண்ணையின் அப்பா. ஊருக்கே உண்டான வேலையாளை ஒரே வீட்டுக்குள் வைத்துக் கொண்ட பண்ணையின் குடும்பத்தைப் பற்றி, பல்வேறு வதந்திகளை பரப்பி ஊரார் நிம்மதி கொண்டனர். 

அவர்களின் சாபமோ என்னவோ , நாளாக நாளாக பண்ணையின் அம்மாவுக்கு  கண் பார்வை மங்களாகி , ஒரு ஓரத்தில் சாய்ந்து விட்டாள். , சர்க்கரை மறுபடியும் தெருவில் விடப்பட்டான். இந்த முறை ராஜா வீட்டு கன்னுக்குட்டி தங்களுக்கு கிடைத்ததை எண்ணி ஊரே அவனை வஞ்சம் தீர்த்தது. அவன் சுரத்தில் படுத்தாலும், சர்க்கரையை காட்டி அவனை ஒரு பொதி சுமக்கும் மாட்டை விட கேவலமாக நடத்தினார்கள் . ஆனால் அதிலிருந்து அவனுக்கு சீக்கிரமே விடுதலை கிடைத்தது. 

 காரணம் அன்னம்மா. பதினேழு வயதிலேயே பண்ணைக்கு தாரமாக கொடுக்கப்பட்டவள் . வட்ட முகமும், மானிற மேனியும் கொண்டு , அரக்கு கரை புடவை கட்டி அவள் பண்ணை வீட்டுக்கு  வந்ததைப் பார்த்து ஓரிரு வேலையாட்கள்  கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.  அவர்கள் காட்டின் வனதேவதையே நேரில்  வந்து விட்டதைப்  போல சிலர் காலில் விழவும் செய்தார்கள் . என்னதான் தேவதையாக இருந்தாலும், மாமியாரும், மகனும் அவளை  திருவிழாவில் வாங்கி வந்த பொருளைப் போலவே பந்தாடினார் . 

புகுந்த வீட்டில் நுழைந்து ஒரு இரண்டு மாதங்கள் சந்தோஷமாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருந்திருப்பாள் . பின்னர் தான் பண்ணையின் சுயரூபம் கண்டாள் .   தினமும் குடி, சுருட்டு என்று முடித்து விட்டு அதிகாலை நாலு மணிக்கு கட்டிலுக்கு வந்து குறட்டை விட்டு தூங்கி விடுவார் பண்ணை. ஒரு முறை ராக் குடியில் பாதியில் அழைத்ததற்கு அடிக்கவே வந்து விட்டார். பண்ணைக்கு நாற்பது வயதாகியது தெரிந்தாலும், ஆயிரம் ஏக்கர் நிலம் அவள் அப்பாவின் கண்ணை மறைத்தது. எதுவும் தெரியாத கன்னிப் பெண்ணனான அன்னம்மா, அப்பனின் பேச்சை கேட்டு, எரியும் காட்டில் நீரோடையாக சேர்ந்துவிட்டாள்.   

 ஒரு பக்கம் எதற்கெடுத்தாலும் கோபப்படும் பண்ணை, மறுபக்கம் , கண் தெரியாவிட்டாலும்  , வார்த்தைகளால் அமிலத்தை வாரிக் கொட்டும் பண்ணையின் அம்மா என்று நிரந்தர நரகத்தில் வாழ ஆரம்பித்தாள் . கல்யாணமாகி ஆண்டுகள் ஏற ஏற, கிழவியின் சுடுச் சொல்லும் எல்லை மீறியது. குழந்தை இல்லை என்றால் அவள் மட்டும் ஏன் மலடிப்  பட்டம் சுமக்க வேண்டும் . பண்ணையை எத்தனையோ முறை டாக்டரை பார்க்கச் சொல்லிப் பார்த்தாள். அதை தன் ஆண்மைக்கு வந்த இழுக்காக பார்த்தார் பண்ணை. குடியை விடச் சொன்னாலும் விட மாட்டார், தினமும் நேரத்திற்கும் வர மாட்டார், பிறகு எப்படி அவள் விருச்சமாவது .  எவனோ எதோ சொன்னான் என்று ஓணான் இரத்தத்தையும் , கண்டந்திப்பிலி தைலத்தையும் வாங்கிக் கொண்டு வருவார். அதைத் குடித்து, தடவி , தலை கீழ் பல்டி அடித்துப் பார்ப்பார் . அன்னம்மாவிற்கு குளத்தில் இருந்து எடுத்துக் போட்ட மீனின் துள்ளல்களே ஞாபகம் வரும். இருந்தும் அதியசம் ஏதேனும்  நடந்து விடாதா என்று அன்னம்மா வேண்டாத தெய்வங்களே  இல்லை. 

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேவகம் செய்ய நூறு பேர் இருந்தாலும் , தன் மனக் கொதிப்புகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று அவள் அழாத நாட்களே கிடையாது. அப்போது தான் அவள் சர்க்கரையை கண்டு கொண்டாள் . 

கூச்சலிட்டு கொக்கரிக்கும் பயித்தியங்களுக்கு மத்தியில் , சர்க்கரை ஒரு புத்தராகத் தெரிந்தான் . எதைச் சொன்னாலும் வெளியே சொல்ல மாட்டான். ஒரு கைப்பிடி சர்க்கரைக்கு கண் துடைத்து விடுவான் .. காலடியில் நாயைப் போல படுத்துக் கிடப்பான் . பண்ணையும் சக்கரை அருகில் இருந்தால் , சத்தம் போட்டு பேச மாட்டார், எப்படியாவது இரவிலும் அவனை அங்கேயே தங்க வைத்துவிட்டால் என்ன என்று அன்னம்மா எண்ணிய நாட்களே அதிகம். உலகமே சர்க்கரையை போல  மவுனப் பைத்தியங்களாக  மாறினால் கூட நன்றாக இருக்கும் என்று நினைத்து கண்ணீர் விடுவாள் . 

பல்லி சத்தம் எழுப்பி அவளை அந்த அறைக்குள் கொண்டு வந்தது. சக்கரை சீனியை தின்று விட்டு தேமே என்று ஓரத்தில் நின்றான். அன்னம்மாவிற்கோ  பொழுது விடிந்தால் பண்ணை வேட்டையில் இருந்து என்ன கொண்டு வருவாரோ என்ற பயம் . அந்த பயத்திலேயே உறங்கிப் போனாள். சர்க்கரையும் ஊறுகாய் ஜாடியில் கை வைத்து, உட்கார்ந்தே தூங்கிவிட்டான். 

காலையில்  சேவல் கூவாமல் , பண்ணையின் அம்மா கூவினாள். 

” அய்யய்யோ , இப்படி இந்த ஜமீன் வாரிசு இல்லாமலேயே போய்விடும் போலயே, இந்த கட்டை வேகுறதுக்கு  முன்னால ஒரு பிஞ்சுக் கையை பாக்காமையே  போய்டும் போலையே” என்று பண்ணை அப்பாவின் புகைப்படத்திற்கு முன் நின்று பேசுவதாக நினைத்து ,பண்ணையின் கல்யாணப் போட்டோவுடன் கை கூப்பி கூச்சலிட்டாள் . 

அன்னம்மா அவளை கண்டுகொள்ளாமல், பண்ணையைத் தேடினாள்.அவரோ கொல்லையில் , கிணற்றில் சுவரில் அமர்ந்து , கீழே இருக்கும் குறவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அன்னம்மா வருவதை உணர்ந்து , “அடியே, இது உடும்புடி . வேட்டையில் சிக்கிச்சு, இதோட விரையை குழம்பு வச்சு குடிச்சா , ஒன்பது மாசத்துல பையன் வந்துருவான் பாரு  ” என்றார். குறவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே , உடும்பை வெட்டினான். 

தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, அண்ணமா அங்கிருந்து நகர்ந்தாள் . பண்ணையார் உடும்பை விடாமல் , குழம்பு வைத்து அதை அன்னமாவுக்கும்  ஊட்டினார், இரவு சற்று சீக்கிரமே படுக்கைக்கு வரவும் செய்தார். அடுத்த நாளே அன்னம்மா வாந்தி எடுத்தாள், பண்ணையாரும் தான். கிழவிக்கு வாந்தி மயக்கம் வந்து , ஆசுபத்திரி வரை சென்று வந்தார்கள் , வாந்தி எடுக்காத ஒரே ஜீவன் சர்க்கரை மட்டும் தான். பண்ணை அடுத்த வேட்டையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தினசரி குடிக்கு மாறினார். 

ஆனால் ஆறே மாதத்தில் , அன்னம்மா கர்ப்பமானாள் . பண்ணையார் அந்த குறவனுக்கு ஒரு தங்க மோதிரமே போட்டார் . சர்க்கரைக்கு தினப்படி அளவில்லா சக்கரை கிடைத்தது. ஒன்பதே மாதத்தில் , அந்த வீட்டில் குவா குவா சத்தம் கேட்டது. 

ஊருக்கே ஆடு கோழி அடித்து, தடபுடலாக விருந்து வைத்தார். ராஜா  ராமன் என்று அந்த குழந்தைக்கு தாத்தா பெயரை வைத்தார்கள். விழா முடிந்ததும் பண்ணையார்  சோகமாக இருந்தார். யாரோ ஒருவன் போகிற போக்கில் , குழந்தை யார் ஜாடை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு சென்றிருக்கிறான் . பண்ணை வேலையாள் அத்தனை பேரிடமும் கேட்டு விட்டார். அத்தனை பேரும் அவர் மூக்கு, முழி காது எல்லாம் குழந்தைக்கு இருப்பதாக சொன்னார்கள். ஜோசியரை கூட கூப்பிடு கேட்டுப் பார்த்தார். அவரோ, சந்தேகமே வேண்டாம் இது ராஜ ஜாதகம் என்றார். பண்ணைக்கு அப்போதும் அடங்க வில்லை. கடைசியாக அவர் தன் தாயிடம் சென்று கேட்டு விட்டார். அவர் தாயோ , அந்தக் குழந்தை அப்படியே சின்ன வயது பண்ணையை ஒட்டி இருப்பதாகச் சொன்னாள். பண்ணை உச்சி குளிர்ந்தது. 

வேக வேகமாக அன்னம்மா அறைக்கு. வந்தார் . ” அடியே  , அம்மாவே சொல்லிடுச்சு, அப்படியே என் ஜாடையாம் ” என்று கரை பல்லைக் காட்டி சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தார். 

அறை ஓரத்தில் சீனி ஜாடிக்கு அருகில்,  சர்க்கரை குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டு இருந்தான். 

அன்னம்மா வெளியில் யாரும் கேட்காமல் சொன்னாள் “பைத்தியக்காரப்  பய ” 

அந்த பழுப்பு நிறப் பல்லி , சத்தம் எழுப்பி ஆமோதித்தது .. 

Image by Alexa from Pixabay
Hi, I’m tamilvalai

Leave a Reply