கதை

குல விளக்கு


“கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ  கொழவென வெளியே கொட்டின. “இனியும் இங்க இருந்து யாருக்கும் பாரமா இருக்க வேணாம், என்ன கூட்டிட்டு போயிருப்பா ” என்று மன்றாடினேன்.

இதெல்லாம்  கருப்பனுக்காவது கேட்டிருக்குமா என்று தெரியவில்லை. கொல்லையில் வழுக்கி விழுந்து  மூன்று வாரகங்களாகிறது. இடுப்பிற்கு கீழ் எதுவும் இருக்கிறதா என்று கூட உணரமுடியவில்லை. விழுந்த நாள் முதல் இதே இடத்தில் கோந்து போட்டு ஒட்டியதைப் போல படுத்து கிடக்கிறேன்   . முதுகில் சொறி சிரங்கு வந்து, சொறியவும் முடியாமல்,  அசையக்கூட முடியாமல் கிடக்கிறேன். என்ன தப்பு செய்துவிட்டேன், இப்படி ஓர் தண்டனை.  

ஊர் தெருக்களில் கம்பீரமாக, கால் வேட்டி தூக்கியபடி சுற்றித் திரிந்த எனக்கு இன்று வேட்டி மாற்றவே ஆள் தேவை. ,  படுக்கையிலேயே எல்லாமும் முடிந்து விடுகிறது . முதல் வாரத்தில் வேளாவேளைக்கு பீ , மூத்திர பாத்திரங்களை மாற்றியவர்கள்   , இப்போது  இரண்டு  நாட்களுக்கு  ஒரு தடவை  தான் கிட்டவே வருகிறார்கள் . அவர்களைச்   சொல்லியும் குற்றமில்லை. அவரவருக்கு அவர் வேலை .  இந்த நாற்றத்தை  சுவாசிக்க அவர்களுக்கு  என்ன கேடா. நானும் சோறு தின்னாமல் , ஏன் தண்ணீர் கூட குடிக்காமல்  இருந்து பார்த்து விட்டேன்  . கருப்பன் உயிரை எடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். 

 சாப்பாடே வேண்டாம் என்று   கையாட்டினாலும், ஒட்டு மொத்த சொந்தமும் பாலை ஊட்டிப் பார்க்கிறார்கள் .  பால் குடிக்க, மூத்திரம் வர, இடம் நாற என்ற இந்த சுழற்சி அயர்ச்சியைத் தருகிறது. 

“கருப்பா , உனக்கு கெடா அடிச்சு படைக்கிறேன்னு  சொல்லி ஏமாத்த  எனக்கு மனசில்லை. இப்ப இருக்குற  நிலைக்கு,  கையை கூட தூக்க முடியவில்லை, இதில் நான் எங்கே  கெடா எடுப்பது. ஆனாலும், நாற்பது வருடமாக  உனக்கு கெடா அடித்திருக்கிறேன். நீயே  இப்படி செய்யலாமா? இது நியாயமா? அடுத்த பொறப்பு ஒன்று இருந்தால் அப்பவும் உனக்கு நிறைய செய்யுறேன், கொஞ்சம் பாத்து பண்ணுப்பா” .   

கருப்பனும் என்ன தான்  என்ன செய்வான், குதிரை மேலேறி வந்து , கயிறு போட்டா தூக்க முடியும். பொம்பளையா இருந்தாக்கூட தலைக்கு  தண்ணீர் ஊற்றி , ஒரே  வாரத்துல சுரம் வந்து மேலே அனுப்புவதற்கு  வழி உண்டு .  என் தலையில இருக்கும் நாலு முடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் தங்காது, இதில் எங்கு சுரம் வருவது, அதில் நான் போய்ச் சேருவது.   

இதற்கு  மேல்  கருப்பனிடம்   கேட்பதற்கு ஒன்றுமில்லை.. சரி கண்ணைத் திறந்து பார்க்கலாம் என்றால்  ,  ஒன்று டாக்டர் வருகிறார், இல்லை பேரன்கள் வந்து நிற்கிறார்கள். நிற்பவர்கள் சும்மா இல்லாமல் எதையாவது நோண்டி வைக்கிறார்கள். போன வாரம் கடைசி பேரன் வந்து அகண்டு விரிந்த வேட்டியின் உள்ளே பார்த்து விட்டு   அலறிக்கொண்டு ஓடி விட்டான். அதன் பிறகு வரவேயில்லை. அரை நாள், பிறந்த மேனியாகக் கிடந்தேன்.  இரண்டு மகன்களும் இரவில் வந்து பார்ப்பதோடு சரி. 

ஆனாலும் பட்டணத்திலேந்து கடைசி மகனும் , அவன் பொண்ணும் வந்தா மாதிரி தெரியவில்லை . ஒரு வேலை அவர்களைப் பார்க்கத்தான்  இந்த உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறதோ. 

எந்த முகத்தைக்  கொண்டு அவர்களை வரச் சொல்வது . இரண்டு அண்ணன்களும்  சேர்ந்து , அவன் வட நாட்டு பெண்ணை கட்டி வந்த நாளன்றே ஊரை விட்டு துரத்திவிட்டார்கள். பொட்டித் துணியைக் கூட எடுக்காமல் கிளம்பிவிட்டான். 

படித்தவன் , மானஸ்தன். இங்க காலை வைப்பனா. 

 அவனுங்க தான்  துரத்தி விட்டார்கள் என்றால், நீ என்ன செய்தாய் ? சும்மாத்  தானே இருந்த. அப்படி என்ன பெரிய கவுரவ மசுரு? அதுவம் அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு, இன்ன சாதிதான்னு கூட உனக்கு தெரியாது, ஆனாலும் குடும்ப கவுரவம் , பரம்பரை பாரம்பரியம் அப்படின்னு இழுத்து அவன கேவல படுத்தல  .  அன்னைக்கு அவன்  பக்கம் நின்னுருக்கணும். நீ நிக்கல. அதான் இன்னைக்கு இழுத்துகிட்டு கிடக்குற .

சரி, அப்படி , நாள், கிழமை ,சாதி கௌரவம் பாத்து கட்டி வச்ச மருமவ  ரெண்டும் உன்னை எப்படி நடத்திச்சு ? எனக்குள்ளே மனைவி மரகதத்தின் குரல் நாக்கை பிடுங்கும் படி கேள்வி கேட்டு இம்சை தர ஆரம்பித்தது. 

பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு, இன்னைக்கு வந்து கருப்பா காப்பாத்துன்னா , அவன் எப்படி வருவான்.  இதெல்லாம் இப்ப  யோசிச்சு என்ன பிரயோஜனம்.

சரி மனைவி மரகதமாவது கூட்டிப்போவாள் என்று பார்த்தால், அவள் கேள்வி கேட்டே இம்சிக்கிறாள். அவள் எப்படி கேட்பாள் , மகனை துரத்திய பத்தாம் நாள் அவள் சரிந்துவிட்டாள். அண்ணன் தம்பி சேர்ந்து அவனை அடித்து துரத்திய போது, அவர்கள் பக்கம் தானே நின்றாய் என்று மரகதம் கெஞ்சிப் பார்த்துவிட்டு மூலையில் ஓலமிட்டு ஒடுங்கி விட்டாள்.

அதிலும்  சின்ன அண்ணன் “ உனக்கு சொத்தும் கிடையாது ஒன்னும் கிடையாதுன்னு” சொன்னப்பாவாவது தடுத்திருக்கலாம். உன் சொத்து என் மசுருக்கு சமானம்னு போயிட்டான்.   நூறு காணி நிலம் இருக்கு, தோட்டம் தொரவு எல்லாம் இருக்கு. ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டான் . 

“அப்படி என்ன கோவம்? பத்து வருடமாக அவனையும் , அவன் புள்ள குட்டியையும்  பார்க்காம இருந்துவிட்டு  இப்போது புலம்பினால் ?  .  இழுத்துக்கிட்டே கிடந்து , நாதியத்து சாவப்போற பாரு”. மரகதம் மனதிற்குள் விடாமல் விளாசினாள்.

யாரோ கையை தூக்குவது போலத் தெரிய, கண் திறந்தேன். டாக்டர் பேசுவது சன்னமாக கேட்டது,. 

“அவருக்கு வயசாகிட்டு, நாடி வீக் ஆயிடுச்சு, என்னால ஒன்னும் பண்ண முடியாது, உங்களுக்காக வேணும்னா ஒரு ஊசி போட்டு போறேன் , பாத்துக்கோங்க “ என்று பெரியவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு சொல்லிகிட்டே  , ஊசி போடுவார் டாக்டர் . இல்லாட்டி என் மவனும் காசு கொடுக்க மாட்டான். டாக்டர் பய வெவரம் தான்.  போடுய்யா , இந்த ஊசியோட உசுரு போகுதான்னு பார்ப்போம். 

சொந்தத்துக்கு சொல்லி அனுப்பிடுங்க என்று சொல்லியபடி அவர் ஊசி போட்டார்.  இரு வாரமாக சொந்தத்துக்கு சொல்லிச் சொல்லி மகன்களும் களைத்து விட்டனர்.

ஊசியின் வலி சுத்தமாக தெரியவில்லை , ஆனாலும் கண்கள் சொருகி விட்டிருந்தன. இனி முழிக்கவே கூடாது என்று கண்களை இறுக்க மூடிக் கொண்டேன் . அரை நாழியில் முழிப்பு வந்தது. மூத்திரம் போயிருக்கிறேன். ஊசியின் வலி தெரியாமல் இருப்பது போல , இந்த ஈர உணர்வும், நாற்றமும் தெரியாமல் இருந்தால் எவ்வளவு சவுகரியமாக இருக்கும். நான் மூத்திரத்தில் இப்படி ஊரனும்னு சாபம் போல. ஒரு வேலை கடைசி மவன் சாபமோ . சே , அப்படி இருக்காது, பாசக்கார பய. நாம தான்  எட்டி உதைச்சுப்புட்டோம். என்று எனக்கு நானே சால்ஜாபிகளை சொல்லிக்கொண்டேன்.

“அவன் பொஞ்சாதி செத்ததுக்கு அப்புறமாவது போய் பாத்திருக்கனும் . ஒத்த பெண் பிள்ளையோட அவன் கஷ்டப்படும் பொது கூட போய் பாக்கல.   அதான் இப்படி அனுபவிக்கிற” .

மரகதம் பேயாட்டத்தை தொடங்கினாள் .

அவனை பார்த்தே ஆக வேண்டும் போலிருந்தது. 

இருக்கும் தெம்பை வைத்து, கையை லேசாக தூக்கினேன்.

கட்டை விரலில் மை.

என் சொத்துக்குகளும் என்னை விட்டு ஓடி விட்டன..

 பெரியவன் ஓடி வந்தான். துண்டால் மூக்கை பொத்திக் கொண்டான். யாரையோ அழைத்தான். கயிற்றுக் கட்டிலின் அடியில் இருந்த மூத்திரச்  சட்டி  மாற்றப்பட்டது. எனக்கு உடையும், கம்பளியும் மாற்றி விட்டு அவன் கிளம்பினான். மறுபடியும் கையை உயர்த்தினேன் . அவனை காதருகில் அழைத்தேன். 

“ரமேசுக்கு சொல்லி அனுப்பு” என்றேன் சன்னமாக. பெரியவன் கடுப்பாவது அவன் கண்களிலேயே தெரிந்தது.   “ அவன் வந்தா தான் என் உசுரு போகும்” என்றேன். சட்டென்று கிளம்பி விட்டான். நான் சொன்னது அவனுக்கு சரியாக புரிந்ததா என்று கூடத் தெரியவில்லை. கண் மூடினேன். சில நாட்கள் அப்படியே கழிந்தன . 

“அப்பா, என்னாச்சுப்பா “ , ரமேஷின் குரல் கேட்டு கண் திறந்தேன். இன்னும் சாகவில்லை. கண்களில் நீர் ததும்ப நின்று கொண்டிருந்தான். அன்று பார்த்தார் போலவே இருந்தான். என்ன காதருகில் கொஞ்சம் நரை. “என்ன மன்னிச்சுரு சாமி” என்று கை கூப்ப முயன்றேன். முடியவில்லை. கண்களின் ஓரத்தில் நீர் வழிந்தது. அவனுக்கு அது புரிந்திருக்க வேண்டும், மண்டியிட்டு என் கைகளை பற்றிக்கொண்டான். எனக்கு ஆனந்தமாக இருந்தது. அவன் காதில், “மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுய்யா” என்றேன். அவன் கதறி அழ ஆரம்பித்து விட்டான். கால் மணி நேர அழுகையில் பத்து வருட பிரிவை ஒட்டி விட்டான். மகனை பார்த்தவுடன் உயிர் போய்விடும் என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றம் வந்தது. ரமேஷ் எழுத்து நின்று கொண்டான். 

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ரமேஷின் இடுப்புக்கு பின்னால் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்தாள். 

அவன் மகளையும் கூட்டி வந்திருக்கிறான். அவன் மூக்கை அப்படியே கொண்டிருக்கிறாள். என்ன ஒரு லட்சணம். ஆறு தலைமுறையாக ஆண் வாரிசுகளையே பார்த்த இந்த குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு. அவள் முகத்தை பார்க்கப்  பார்க்க  என் கண்களில் நீர் அதிகரித்தது. என் தாயை நான் நேரில் கண்டதில்லை.அவள் புகைப்படம் கூட இல்லை. அவள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் . கண்களில் கூர்மையும், முகத்தில் மென்மையும் கொண்ட மாரியம்மனைப்  போல ஜொலித்தாள் .  இப்படிப்பட்ட ஒரு குழந்தையை, கவுரவம் பார்த்து, பிறந்ததில் இருந்து பார்க்காமல் இருந்ததற்கான தண்டனை தான் இவ்வளவும்  என்று எனக்கு புரிந்தது. உடம்பில் இருக்கும் நரம்பிற்கெல்லாம் சேதி சொல்லி என் உடலை எழுப்பினேன். இரு கைகள் கூப்பி “தாயே மகமாயி என்ன மன்னிச்சுடும்மா” என்றேன். அவளுக்கு புரிந்தும் புரியாமலும் அப்பாவை பார்க்க, நான் சாய்ந்தேன். 

என் உடம்பு துடித்தது. நான் உள்ளுக்குள் துடிப்பதை அறிந்த மக்கள், அவளிடம் பாலை கொடுத்தனர். 

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகலமாக வாயை திறந்து வைத்தேன் . அவள் வாயில் பாலை ஊற்ற, அவள் கண்களில் தெரிந்த அந்த மினுமினுப்பை பார்த்த படியே , மூச்சை இழுத்து பிடித்துகொன்டேன். என் சாமி என்ன மன்னிச்சிடுமா என்று மனதில் வேண்டினேன். பட் என்று ஒரு சத்தம் கேட்டது. என் வாயில் இருந்து பால் வெளியோடிட , கண்கள் இருண்டன . 

ஆறு குதிரை கணைக்க , கருப்பன் வந்து நின்றான். தூரத்தில்  மாரியம்மன் சிறுமியாக மஞ்சள் பூசி , மங்களகரமாக காட்சி தந்தாள் .அவளை கை கூப்பி  வணங்கி விட்டு, கருப்பனுடன் புறப்பட்டேன். 

Hi, I’m tamilvalai

Leave a Reply