எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)
” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு குணமடைந்தால், அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் அந்த அடிமைகள் அவர்களின் சொத்து.”
எங்கேயோ யாராலோ எப்போதோ எழுதப்பட்ட பைபிள் வாசகம் .
எக்சோடஸ் 21:20-21
*****
சிகாகோவின் புகழ்பெற்ற டன்கிர்க் மாநாட்டு மையம் பரபரப்பாக இருந்தது . “நானும் கடவுளும்” என்று அறிவிக்கும் பிளக்ஸ் பேனர்கள் இரண்டும் பிப்ரவரிப் பனியில் உறைந்து, அசையாமல் தொங்கின. அதில் சிரித்துக் கொண்டிருக்கும் தத்துவஞானி செகோவை எதிர்பார்த்து , ஆயிரத்து ஐநூறு பேர் காத்திருந்தனர். அமெரிக்காவின் பணக்கார வர்கத்திற்கு மட்டும் அனுமதி இல்லை, என்று அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் கருத்தரங்கம் அது. அதுவே அந்த மாநாட்டிற்கு ஒரு விளம்பரத்தை தந்திருந்தது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் கறுப்பினத்தை சார்ந்தவர்களாக இருந்தனர். அனுமதி, சாப்பாடு இரண்டும் இலவசம் என்பதனால், கொட்டும் பனியையும் தாண்டி, அரங்கின் வெளியே நூறு பேர் வரிசையில் காத்திருந்தனர். ஒரு வேளையாவது இலவசச் சாப்பாடு கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்பில் கால் கடுக்க நின்று கொண்டிருந்தனர்.
அரங்கின் உள்ளே இருக்க வேண்டிய அந்தோணி , பார்க்கிங் கிடைக்காமல் காரில் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் சிகாகோ மெயிலின் தலைமை நிருபர். எந்த ஒரு இடத்திற்கு நேரம் தவறாமல் சென்று விடும் பழக்கம் கொண்டவன். ஆனால் அன்று மட்டும், சிகாகோவின் பனி படர்ந்த சாலைகளில் சிக்கித் தவித்து, சற்றே தாமதமாக அந்த மையத்தை வந்தடைந்தான். பேரலல் பார்க்கிங் செய்ய இடம் கிடைக்காமல் அரங்கத்தை இரண்டாவது முறையாக சுற்றிக் கொண்டிருந்தான்.
எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்து விடுவார்களோ, செகாவ் பேச ஆரம்பித்து விடுவாரோ , உள்ளே விடாமல் தடுத்து விடுவார்களோ என்று பலதரப்பட்ட எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இத்தனைக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தான் அந்தோணி. ஆனாலும் அரங்கின் வெளியில் நின்ற கூட்டம் அவனை இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது.
நிகழ்ச்சி ஆரம்பிக்க ஆறு நிமிடங்கள் இருக்கையில் ஏதோ ஒரு மூலையில் வண்டியை பார்க் செய்துவிட்டு, அரங்கை நோக்கி ஓட ஆரம்பித்தான் . போலீஸ் வந்து பார்க்கிங் டிக்கெட் கொடுத்தாலும் பரவாயில்லை . இந்த நிகழ்வு அதற்கெல்லாம் மேலானது என்று அவனுக்குத் தெரியும். அவசரத்தில் ,கோட் அணியாமல் வந்துவிட்டான், இருந்தும் குளிர் அவனை ஒன்றும் செய்யவில்லை. ஓட்டம் கொடுத்த சூடு , அவன் மேல் விழுந்த வெண் பனியைக் கரைத்து, சிறு வாய்க்கால்களாக உடம்பில் புகுந்தது சட்டையை நனைத்தது. குளித்துவிட்டு துடைக்காமல் ஆடையணிந்து வந்தவனைப் போல , தொப்பலாக அரங்கினுள் நுழைந்தான் .
செகாவை அப்போது தான் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள்.
முண்ணிருக்கைகள் அனைத்தும் அசையாத டெரகொட்டாச் சிலைகளாகத் தெரிய, கடைசி வரிசையில் அமர்ந்தான் . அரங்கம் நிரம்பி வழிந்தது. முக்கால் வாசி கறுப்பினத்தவரும் , மீதி வெள்ளையர்களும் இருந்தனர். வெள்ளையர்கள் முதலிரண்டு வரிசைகளை ஆக்கிரமித்து இருந்தனர். கொஞ்சம் சீக்கிரமாக வந்திருந்தால் அந்தோனிக்கும் முதல் வரிசை கிடைத்திருக்கும்.
“இப்போது செகாவ் உரையாற்றுவார்” என்று கால் மணி நேரம் ரம்பம் போட்டவர் சொல்லிவிட்டு அமர்ந்தார் .
செகாவ் ஆரம்பித்தார் .
“நான் இங்கே சொற்பொழிவாற்ற வரவில்லை – உங்களிடம் பேசவே வந்திருக்கிறேன். கேள்விகள் இருந்தால் கேட்கலாம். சாப்பிட மட்டும் வந்தவர்களுக்கு பேகளும், டோனட்டும் , காபியும் பக்கத்துக்கு அறையில் இருக்கிறது , அங்கு உண்டபடியே கேள்விகள் இருந்தால் கேட்கலாம், இல்லையேல் தேவையான உணவை பார்சல் செய்து எடுத்துச் செல்லலாம் “ என்று சொல்லிவிட்டு அமர முனைந்தவர் , ஏதோ நினைத்தவராய் தொடர்ந்தார்.
அதற்குள் ஒரு சாரார் சாப்பாட்டுக் கடையை நோக்கி படையெடுத்த படி இருந்தனர்.
புன்னகைத்தபடியே செகாவ் தொடர்ந்தார்.
“கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி யாரிடமும் இருந்தால் – இப்போதே சொல்லி விடுகிறேன் . கடவுள் இல்லை. வேறு கேள்விகள் இருந்தால் கேட்கலாம் ” – என்றபடி அமர்ந்தார்.
இதுதான் செகாவ்.
கரவொலி அந்த கட்டிடத்தை பதம் பார்க்க முயன்று தோற்றது .
அந்தோணி கையைத் தூக்கினான். அவனோடு சேர்ந்து ஐம்பது பேர் தூக்கி இருக்கக் கூடும். அவன் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். சரி நடப்பவற்றை பேட்டி போல எழுதி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஆனால் ஒரு கேள்வி கேட்கக் கிடைக்க வேண்டுமே.
அந்நாட்களில் அமெரிக்காவே லீ மன் பிரத்ரசர்சும் , மற்ற வங்கிகளும் செய்த மோசடிகளால் சின்னாபின்னமாகி , மிகப் பெரிய ரிசஸ்ஸனை சந்தித்துக் கொண்டிருந்தது. அமெரிக்க காங்கிரஸ் சபை , திவாலான வங்கிகளை பாதுகாக்க லட்சம் கோடிகளை எப்படிச் செலவு செய்வது என்று வாசிங்டனில் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். எங்கு திரும்பினாலும் வேலை பறிப்பு, மக்களின் அழுகுரல்கள், திருட்டு, துப்பாக்கிச் சத்தங்கள் , சோகக் கதைகள். சிகாகோவில் தினசரி நடக்கும் குற்றத்தை வைத்தே ஒரு நாவல் எழுதிவிடலாம். ஆனால் யார் படிப்பது.
சராசரி அமெரிக்கன் , சுபிக்சம் நிறைந்த நாட்களிலேயே தினசரிகளைப் படிப்பதை நிறுத்தி விட்டான் . இப்போதோ நிலைமையே தலைகீழாக உள்ளது . எப்படி வாங்குவான். அவனை வாங்க வைக்க ஒரே வழி , அதிர்ச்சி தரும் அளவுக்கு தலைப்புச் செய்தி அமைய வேண்டும். இல்லையேல் ஓரப் பார்வை பார்த்துவிட்டு கடந்து விடுவான் . ஆனால் தினமும் அதிர்ச்சிக்கு எங்கே செல்வது. கொலை, கற்பழிப்பே அன்றாடச் செய்தி ஆகிவிட்ட காலமது . அவர்களை சொல்லியும் குற்றமில்லை, வயிற்றுக்கு ஒன்றும் இல்லாத போது , மூளைக்கு யார் தீனி போடுவார்கள்.
அந்தோணியின் பத்திரிகையிலும் நிலைமை மோசம் தான். எட்டு பேர் இருந்த இடத்தில் இப்போது நாலு பேர் மட்டுமே . ஒரே நாளில் நான்கு பேரை வேலையிலிருந்து தூக்கி கிலியை ஏற்படுத்தியிருந்தார் அவனது தலைமை எடிட்டர் கம் ஓனர். அதில் மூவர் கருப்பினத்தவர். இந்த மாநாட்டிற்கு அனுமதி வாங்கவே அவன் படாத பாடு பட்டான். இலவசம் என்றால் கூட அனுப்ப மாட்டேன் என்று அடம் பிடித்தார் அவனது எடிட்டர். பிரேக்கிங் நியூஸ் நிச்சயம் என்று சத்தியம் செய்து கொடுத்து வந்திருந்தான். அரைமனதாக அனுப்பி வைத்தார். ஒரே காரணம், எடிட்டர் ஒரு கத்தொலிக். இறை நம்பிக்கைக்கு எதிராக ஒரு வரியைக் கூட எழுத விட மாட்டார். வாரம் தோறும் ஞாயிறு கூட வரத்தவறும், ஆனால் அவர் , சர்ச்சுக்குப் போகாமல் இருக்க மாட்டார். அவருக்கும் செகாவை பற்றித் தெரியும். நேர் எதிர் கருத்துக்கள் கொண்ட அவரின் சொற்பொழிவைக் கேட்க எப்படி அனுமதிப்பார். அவருக்கு வலிக்காமல் செகாவ் செய்தி ஒன்றை எப்படியாவது தலைப்புச் செய்தியாக மாற்ற வேண்டும் என்றே வந்திருந்தான்.
கடவுள் விஷயத்தில் அந்தோணி ஒரு அக்நோஸ்டிக், மதில் மேல் பூனை ரகம். அதற்கும் செகாவிடம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தான்.
பத்திரிக்கையில் ஆட்குறைப்பிற்கு பிறகு, அந்தோணி மட்டுமே நாளைக்கு ஆறு செய்திகள் தர வேண்டும். அதில் ஒன்றாவது தலைப்புச் செய்தி ரகமாக இருக்க வேண்டும். எப்படியாவது ஒரு குதர்க்கமான கேள்வி கேட்டு , தலைப்புச் செய்தியை தயார் செய்து விடலாம் என்றே இருந்தான் .
கை தூக்கியவர்களில் , நடுவரிசையில் இருந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து மைக்கை கொடுத்தார்கள்.
“ஏன் பணக்காரர்களுக்கு அனுமதி இல்லை, அதுவும் அமெரிக்க பணக்காரர்கள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள் ”
“ அமெரிக்காவே, பணக்காரப் பேய்கள் உண்டு களிக்க ஏற்படுத்தப்பட ஒரு நாடு தான். இந்த நாட்டில் மட்டும் தான் தப்பு செய்தவருக்கு அதிக சிலைகள் இருக்கும். இதோ இந்த மையத்தின் பெயரில் இருக்கும் குடும்பம் , ஒரு கறுப்பின கிராமத்தையே அடிமையாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது . அதெப்படி கருப்புத் தோலில் சிவப்பு இரத்தம் வருகிறது என்பதை சோதிக்க , பன்னிரண்டு அடிமைகளைத் தோலுரித்து வெயிலில் வேக வைத்தவர்கள் வாழ்ந்த நிலம் இது. இந்த நாடு இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்குக் காரணமே பணக்கார , அதிகார வர்க்கங்கள் தான். அவர்களை சந்திக்க நான் இங்கே வரவில்லை ” என்றார்.
“உங்களிடம் பணம் இருக்கிறது, நீங்களே ஒரு பெரும் பணக்காரர், அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என்று வக்கீல் தோரணையில் கேட்டார் ஒரு கோடாரி தாடிக்காரர்.
சிரித்துக்கொண்டே செகாவ் “ ஆம், என்னிடம் பணம் இருப்பதால் தான் , பணக்காரர்களை எதிர்க்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்துகிறேன். அதே நேரத்தில் , முதலில் அது என்னுடைய பணமே அல்ல. என் பாட்டன் நிலத்திற்கு அடியில் ஆயில் ஆறு ஓட, அதை ராக்கர் பெள்ளரிடம் விற்றார். அதில் வந்த பணத்தில் அவர் பணக்காரர் ஆனார். நான் அதை உரியவர்களிடம் திருப்பித் தர முயன்று கொண்டிருக்கிறேன்.” என்று அடுத்தவரிடம் போகச் சைகை செய்தார்.
முன்வரிசயில் இருந்து ஒரு குரல் எழுந்தது.
“கடவுள் இருக்காரா என்றால் இல்லை என்று சொன்னீர்கள் , ஏன் கடவுள் பெண்ணாக இருக்கக் கூடாது?“
“அப்படி ஒரு ஆளே இல்லை என்கிறேன், அது யாராக இருந்தாலும் பொருந்தும். மூன்றாம் பாலினமாக இருந்தாலும் “ என்றார்.
இதைப் போன்ற தேறாத கேள்விகளுக்கு, பதில் வேறு வேண்டுமா என்ற நிலையில் இருந்தது அவரின் பதில்.
மறுபடியும் ஐம்பது கைகள் உயர்ந்தன.
“அதெப்படி கடவுள் இல்லையென்று , அவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள். ஆதாரம் இல்லாத ஒன்றை , உண்மையாக எப்படி ஏற்க முடியும்? அது விஞ்ஞானபூர்வமாக சரியாக இருக்காதே ” கேட்டுவிட்டு அமர்ந்தார் அந்த வயோதிகர்.
“கடவுள் இருப்பதற்கான ஆதாரமும் இல்லையே? கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஒரு ஆதாரத்தைத் தருகிறேன் , கேளுங்கள் “.
“அது ஒரு ஈஸ்டர் ஞாயிறு. அதில் கலந்து கொள்ள , டைலரும் அவனது எட்டு வயது மகனான கார்டரும் காலையிலேயே சர்ச்சுக்கு செல்கிறார்கள். சிகாகோவில் அவர்கள் குடியேறி இரண்டு நாட்களே ஆகியிருந்தன.
சர்ச்சுகள் , கார்ட்டருக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. நல்ல சாப்பாடு, நண்பர்கள் என்று ஆனந்தமாக இருப்பான். சர்ச் போகும் வழியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே வருவான்.
“அப்பா, ஏசு கிறிஸ்து ஏன் நம்மைப் போல கருப்பாக இல்லை? “
“அப்பா, ஆதாம் ஏவாள் எல்லாம் ஏன் வெள்ளையாக இருக்கிறார்கள்”
“ஏன் நம் நிறத்தில் ஒரு கடவுள் கூட இல்லை” என்று அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பான் டைலர். முக்கால் வாசி நேரங்களில் பாதிரியாரிடம் கேட்டுக்கொள் என்றபடி கடந்துவிடுவான்.
கார்ட்டருக்கு, அம்மா ஏன் நம்முடன் இருப்பதில்லை என்ற கேள்வி தோன்றினாலும் , ஏதோ புரிந்தவனாய் அந்தக் கேள்விகளை தவிர்த்தான்.
காரணம் ,டைலரின் மனைவி வேறு யாருடனோ ஓடி விட்டாள். அந்தச் சோகத்தை மறக்கவே டைலரும், கார்ட்டரும் சிகாகோவில் குடியேறி இருந்தார்கள்.
சர்ச்சில் அவர்களை ஒரு பாதிரியார் வரவேற்றார் . டைலருக்கு சர்ச்சைச் சுத்தம் செய்யவும், கார்டரை சங்கீதங்கள் பாட என்னுடன் வா என்றும் உத்தரவிட்டு கிளம்பினார். அவர் பின்னால் சென்ற மகன் கார்டரை, மூன்று மணி நேரம் கழித்தே பார்த்தான் டைலர். அச்சிறுவனின் முகம் பேயை சந்திதவனைப் போல இருந்தது. கார்ட்டர் அன்றிரவு சாப்பிடவும் இல்லை. டைலர் எவ்வளவோ கேட்டும் பதில் தரவில்லை.
அதன் பிறகு கார்டர் அந்த சர்ச்சுக்கு செல்லவே இல்லை. எந்த சர்சுக்கும். அம்மா இல்லாத அந்த வீட்டில் அப்பாவுடன் சேர்ந்து படுப்பதையே நிறுத்தினான்.
ஒரு நாள் கனவில் “நோ டோன்ட் டச் மீ” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
விஷயத்தை தெரிந்து கொண்டு அதிர்ந்தான் டைலர்.
எந்த ஒரு தந்தையும், தங்கள் குழந்தைகளுக்கு எது நடக்கக் கூடாது என்று நினைப்பார்களோ அது நடந்தே விட்டது. நரக வேதனையில் துடித்தான் டைலர். அவன் நிறத்தவரே அவனுக்கு இப்படி ஒரு அநீதியை செய்வார்கள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
அன்றிரவே பாதிரியார் வீட்டை நோக்கி அடங்கா கோபத்துடன் விரைந்தான். பாதிரியார் வீட்டுக் கதவை , அவரின் முகமாகவே நினைத்து , அறைந்தான். கதவைத் திறந்த பாதிரியாரின் சட்டையை பிடித்தான். அவர் ஒரு நொடி கூட யோசிக்காமல் துப்பாக்கியை இயக்கினார். டைலர் அங்கேயே சரிந்தான்.
வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றதால் , சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தார் அந்தப் பாதிரியார். சட்டம் அவர் பக்கம் நின்றது. இன்று வரை இதே சிகாகோ நகரின் சர்ச் ஒன்றில் பாதிரியாக இருக்கிறார். என்ன செய்து கொண்டிருப்பார் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா”.
தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தார்.
“கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் , பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருப்பாரா? நான் சொன்னதெல்லாம் நடந்தது கடவுளின் இடமாகச் சொல்லப்படும் சர்ச்சில். செய்தது அவரின் தூதுவரான ஒரு பாதிரியார். தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது , காரணம் அந்தப் பாதிரியார் இன்றும் இருக்கிறார். சொல்லுங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் உங்கள் கடவுள் – இருக்கிறாரா, இல்லையா ? ” என்று முடித்தார்.
ஒரு மயான அமைதி நிலவியது.
அந்தோணி ஒரு வரி விடாமல் குறித்துக்கொண்டான். இங்கே செகாவை கடவுளைத் தாண்டி பேச விட மாட்டார்கள். எடிட்டர் இதில் எதையும் எழுதவும் விடமாட்டார். என்ன செய்வது என்று குழம்பிய நிலையில் இருந்தான்.
கேள்வி கேட்டவர் விடாமல் “கதை நன்றாக இருந்தது, இதெல்லாம் வைத்து மட்டும் எப்படி முடிவுக்கு வருவது, எத்தனையோ குழந்தைகள் ஒரு தொந்தரவும் இல்லாமல் வாழ்கிறார்கள், அமெரிக்கா எவ்வளவோ மாறிவிட்டது , உலகமே பெரும் முன்னேற்றங்கள் கண்டு செழிக்கிறதே“ – என்று நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்டார் அந்த வெள்ளைக்கார தாடி.
“உலகெங்கும் வலிமை படைத்தவன் , வலுவற்றவனை கொடுமைப் படுத்திக் கொண்டே இருக்கிறான். இந்தியாவின் தலித்துகளும் , சீனாவில் உய்குர் இனமும், மியான்மரின் ரோஹிங்யாக்களும் , ஆப்கான் நாட்டு பெண்களும் அதன் நவீன உதாரணங்கள். இவ்வளவு ஏன் , உங்கள் மூதாதையர்கள் , சிவப்பிந்தியர்களை என்னென்ன செய்தார்கள் என்று தேடிப் படியுங்கள். அவர்களின் ரத்தம் , அமெரிக்கர்களின் சோற்றில் எப்போதும் இருக்கும். இந்த இனம் வாழும் வரை அது நீங்காது. வெள்ளைக்காரன் மலத்தை தின்றால் , கருப்பன் வெள்ளையாவானா என்று அடிமைகளுக்கு மலத்தை ஊட்டியவர்கள் வாழ்ந்த தேசம் இது . ஒரே ஒரு சாரார் மட்டும் காணும் முன்னேற்றம் முன்னேற்றமே இல்லை, அதே போல ஒரு குழந்தைக்குத் தான் என்று அநீதியை தடுக்காத எவரும் கடவுளாக இருக்க முடியாது.. “ என்று கர்ஜித்தார். கோபத்தில் அவர் கன்னங்கள் சிவந்திருந்தன .
இரு நிமிடங்கள் கழித்து தொடர்ந்தார். குரலில் ஒரு கடு கடுப்பு தெரிந்தது.
“ அதே போல நான் சொல்வது வெறும் கதையல்ல. நிஜம். அது அங்கேயே முடிவு பெறவும் இல்லை.
அப்பாவை இழந்த சோகம் ஒருபுறம் , அவர் , தன்னை துன்புறுத்திய பாதிரியாரால் கொல்லப்பட்டு இறந்தது மறுபுறம் என்று செய்வதறியாது திகைத்தான் அந்தச் சிறுவன். அந்தச் சோகங்கள் அவன் மனதில் ஆறாத வடுக்களை உண்டு செய்தது. ஓடிப்போன அவனது தாயாரை கண்டுபிடித்து கேட்டார்கள். அவளும் , இவன் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாள். வேறு வழியில்லாமல் அவனை சோஷியல் சர்வீஸ் ஒரு நவீன அனாதை இல்லத்தில் அடைத்தது. அங்கும் அவன் வெள்ளைக்காரச் சிறுவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டான். கொடுக்கும் சாப்பாட்டில் சிறுநீர் அடிப்பார்கள். தூங்க விடாமல் உளவியல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.
நித்தம் சோகத்தில் சுழன்று பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானான் கார்ட்டர் . பல முறை தற்கொலை முயற்சி செய்து தோற்றான். ஒவ்வொரு முறையும் அதற்குப் பரிசாக , ஜன்னல் இல்லாத, தனிச் சிறையில் அடைக்கப்பட்டான். பீ , மூத்திரம் அனைத்தும் அந்த சிறிய அறையில் தான்.
கருப்புத் தோல் , அவனை அந்த ஹோமிலேயே வைத்திருந்தது. பல வருடங்கள் அப்படியே ஓடின. அந்தக் காலங்களில் அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கைக் கீற்று – கசாண்ட்ரா . கருப்பழகி.
எப்போதும் தனிமையில், தலை குனிந்தபடி சுற்றும் கார்ட்ரை, பள்ளியில் கொஞ்சமேனும் படிக்க வைத்தது அவள் தான். அவள் இல்லாவிட்டால் , அவன் என்றோ இறந்திருப்பான். தாய்மை என்றால் என்ன என்பதை உணராமல் வளர்ந்த அவனுக்கு, தாய்ப் பாசம் தந்தாள். அவனை நல் வழிக்கு கொண்டு வந்தாள் . அவளுடன் இருந்த நாட்களில், அவன் தேவலோகத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்தான். “
அதற்குள் யாரோ சிலர் இடைமறித்து “கடவுளே இல்லை என்று சொன்னீர்களே, இதோ பெண் ரூபத்தில் இருக்கிறாளே , அவள் கடவுள் இல்லையா?” என்று கத்தினார்கள்.
செகாவ் பெருமூச்சு விட்டு “முழுவதும் கேட்டு விட்டு கேள்வி இருந்தால் கேட்கலாம் “ என்றபடி தொடர்ந்தார்.
“படிப்பே வராத கார்ட்டர், வாழ்க்கையில் எப்படியாவது படித்து முன்னேறி கசாண்ட்ராவைத் திருமணம் செய்து , தனது தந்தைக்கு கிடைக்காத வாழ்வை வாழ வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தான்.
இந்த உலகிலேயே கொடுமையானது எது தெரியுமா, ஒருவன் மனதில் இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டு, அது வேரூன்றிக் கிளை விட ஆரம்பிக்கும் போது அதைச் சிதைப்பது தான். கார்ட்டரின் நம்பிக்கையும் சீக்கிரமே தகர்ந்தது. ”
“கசாண்ட்ராவின் தந்தை, தாய் இருவரும் ஒரு நாள் ஒரு கோர விபத்தில் இறந்திட, அவளது சித்தப்பாவுடன் கலிபோர்னியாவுக்கு குடியேறினாள் . அவருடன் செல்லவில்லை என்றால் , அவளுக்கும் அனாதை இல்லம் தான். கலிபோர்னியாவில், அவளை ஐநூறு டாலருக்கு விற்றான் அவளது சித்தப்பன். வாங்கிய வெள்ளைக்காரன் அவளை விடாது துன்புறுத்தினான். சிகரெட்டால் சூடு வைப்பது, சாட்டையைக் கொண்டு அடிப்பது , அம்மணமாக வீட்டு வேலைகளை செய்ய வைப்பது என்று கொடுமை படுத்தினான். பதினைந்து வயதே ஆன கசாண்டராவை தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவான். அதில் அவள் இரு முறை கர்ப்பமானாள். வயிற்றில் உதைத்தே அவற்றைக் கலைத்தான் . இரண்டாம் முறை அவளது உடம்பு தாக்குப் பிடிக்காமல் படுத்த படுக்கையானாள் . தொடைகளில் உதிரம் சொட்டச் சொட்ட அவளை வெளியே தூக்கி எறிந்தான் . அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று, அவளும் அங்கிருந்து ஓடினாள் . சற்று உடல் தேறியதும் பிராத்தல் செய்து பிழைக்க ஆரம்பித்தாள் .அதோடு போதை பழக்கத்தையும் தொடங்கினாள் . அவன் கொடுத்த ரணங்களில் இருந்து வெளியேறவே அவளுக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது.
மறுபக்கம், கார்ட்டர். வாழ்க்கையில் இருந்த ஒரே நம்பிக்கை கீற்றையும் தவற விட்டிருந்தான். அவனும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தான். “
“இது ஒரு நல்ல சோகமான கதை, சந்தேகமேயில்லை.” என்றபடி கேள்வி கேட்டவர் அமர்ந்தார்.
அடுத்து அந்தோணிக்கு கேள்வி கேட்க அனுமதி கிடைத்தது.
“இவையெல்லாம் வெறும் கதையா ? உண்மை என்றால் அந்தப் பெண் என்ன ஆனாள்? கார்ட்டர் என்ன ஆனான்? அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த பாதிரியார் இப்போது எங்கே இருக்கிறார்“ என்று நினைத்த அத்தனையும் கேட்டான்.
உண்மையில் , அவனுக்குத் தெரியும். செகாவ் சொன்னதெல்லாம் அமெரிக்காவில் சகஜமாக நடக்கும் விஷயங்கள் என்று . இருந்தும் , கார்ட்டர் , கசாண்ட்ராவின் கதை அவனை ஏதோ செய்தது. இதை எப்படியாவது, அவனது எடிட்டர் ஒத்துக் கொள்ளும்படி எழுதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அவன் கேள்விக்கு பதில் வருவதற்குள் , ” இவ்வளவு கதை சொன்ன நீங்கள் என்ன செய்தீர்கள் , கடவுளை குற்றம் சொல்வதைத் தவிர” என்று சிலர் குரல் எழுப்பினார்கள் .
அவர்களை அமரும் படி சைகை செய்துவிட்டு செகாவ் தொடர்ந்தார்.
“அந்தப் பெண் , இன்று கசாண்ட்ரா செகாவாக பிரான்சில் என்னுடன் நிம்மதியாக வாழ்கிறாள்“
அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
செகாவ் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.
“வாழ்க்கையில் நல்லதையே அனுபவிக்காத கார்ட்டர் , போதைக்கு அடிமை ஆனான். கசாண்ட்ராவை தொடர்பு கொள்ள முடியாமல் நித்தமும் தவித்தான். அவனைக் கேலி செய்த வெள்ளை இனத்தாரை தாக்கினான். அதன் காரணமாக பல முறை ஜெயிலுக்கு சென்றான். ஒரு முறை சாப்பாடு கேட்டு ஹோட்டலில் ரகளை செய்ய, போலீஸ் வர, இவன் முரண்டு பிடிக்க, அவர்கள் இவன் கழுத்தில் முட்டியை வைத்து நசுக்க, ஐ காண்ட் பரீத் என்றபடியே இறந்தான். “
“அந்தப் பாதிரியார் , தென் சிகாகோவில் உள்ள சர்ச் ஒன்றில் ஊர் மதிக்க வாழ்கிறார்” .
அந்தோணிக்கு அது எந்த தேவாலயம் என்று தெரிந்துவிட்டது.
“இதில் வரும் கார்ட்டர், டைலர், கசாண்ட்ரா எல்லாம் நிஜம். இதே போல நூறு உண்மைச் சம்பவங்கள் என்னிடம் உள்ளன. இதற்கெல்லாம் இங்கே இருக்கும் சாட்சி, எனது மனைவி – கசாண்ட்ரா ” என்றார்.
அவருக்கு பக்கவாட்டில் இருந்த கதவு திறக்கப்பட்டது. அதிலிருந்து, கால்கள் இல்லாத ஒரு பெண்ணை , சக்கர நாற்காலியில் அழைத்து வந்தார்கள்.
அவள் கருப்பத் தங்கம் போல ஜொலித்தாள். வந்தவளின் கைகளை முத்தமிட்டுத் தொடர்ந்தார் செகாவ்.
“இந்த நாட்டில் உண்மையான தங்கத்திற்கு மதிப்பில்லை. ஒவ்வொருவரும் தனக்குக் கீழ் யார் இருக்கிறார்கள், அவர்களை எப்படி ஏமாற்றலாம், எப்படி வஞ்சிக்கலாம் என்றே வாழ்கிறார்கள். “
“பணம் , நிறம் , வன்மம் – இவ்வளவு தான் உங்கள் அமெரிக்கா” என்று முடித்தார்.
அவருக்குத் தெரியும் , கைதட்டல்கள் வராது என்று.
அந்தோணி பேச்சில்லாமல் , அதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியாமல் , மங்கலாகத் தெரிந்த மேடையை பார்த்தபடி இருந்தான். அவன் கண்கள் ஈரமாக இருந்தன. வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அமெரிக்கனாக இருப்பதை அசிங்கமாக கருதினான் . கார்ட்டர், டைலர், கசாண்ட்ராவிற்காக வருத்தப்பட்டான்.
கடவுளின் விஷயத்தில் அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது, அதேபோல அவனுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் கிடைத்தது.
******
அடுத்த நாள் பத்திரிகையில் இரண்டு செய்திகள் வந்தன.
மூன்றாம் பக்க தலையங்கத்தில் –
“கடவுள் இருக்கிறார், ஆனால் செகாவ் கண்களுக்கு தான் தெரியவில்லை.
அவர் கண்ணாடி வீட்டில் வாழ்கிறார். ஆனால் அதில் முகம் பார்க்க மறுக்கிறார்.”
அதே பத்திரிகையின் தலைப்புச் செய்தி இப்படி இருந்தது ,
“சர்ச் வாசலில் பிணமாக பாதிரியார் கண்டெடுப்பு, முன்பகை காரணமா என்று போலீஸ் விசாரணை ”.
வாழ்த்துக்கள் பரத். ரொம்ப தத்ரூபமாக இருந்தது. way writing is also very nice.it was very interested till the end.hats up bharat . There is no words to tell.