மகா சிவராத்திரி
இன்று மகா சிவராத்திரி – நமக்கு மிகவும் பிடித்தமான, நெருக்கமான சிவனின் தினம். அவருக்கென்று இருக்கும் ஒன்றிரண்டு தினங்களில் இதுவும் ஒன்று.. ஆறு லட்சம் கடவுள்கள் இருந்தாலும், ஹிந்து மதத்தில் நமக்கு பிடித்தவர்களை மட்டும் கும்பிடலாம். மற்றவர்களை ஒதுக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு பிடித்த கடவுள்களிடம் கோரிக்கை வைத்து விட்டு, மற்றவர்களிடம், என் அப்பன் சிவன் எனக்கு செய்வார், நீ பார் என்று கெத்து காட்டலாம்.
என்னப்பா நீ, உனக்கு தெரியுமா? எல்லா கடவுளும் ஒன்றே , நாமே கடவுள், “நீ ” தான் கடவுள் , அவன் தான் கடவுள், அல்ல அது தான் கடவுள் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வர வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு interpretation வைத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த மாதத்தில் அனுமதி உண்டு. உனக்கு எது கடவுளோ அதை நீ கும்பிடு, என்னை என் வழியில் விடு.
சரி இவ்வளவு கடவுள்களில் ஏன் சிவன்? படைத்துவிட்டு ஒதுங்கி விடுகிறார் ப்ரஹ்மா. பல அவதாரங்களில் நம்மை காக்கின்றார் விஷ்ணு. சிவன் அழிப்பவர் என்றெல்லாம் நம்மிடம் மேலோட்டமான கதைகள் உண்டு. இதையெல்லாம் வைத்து முன் இருவரையும் ஒரு படி மேலேயும் , சிவனை ஒரு படி கீழும் பார்க்க முடியாது. சிவன் நின்றால் காலம் நிற்கும். அந்த கால படங்களில் பறக்கும் பறவைகளையும், கடலையும் ஒரு frame ஸ்டாப் செய்து காட்டுவார்களே, அப்படி. அவனில்லாமல் இவ்வுலகு இல்லை. இதையெல்லாம் தாண்டி , சிவன் ஒரு குடும்பஸ்தர். பல அவதாரங்கள் எல்லாம் இல்லை. ஒரே ஒன்று , அதிலும் ஒரு பழத்தை வைத்து அண்ணன் , தம்பியை ஓட விட்டு என்டேர்டைன்மெண்ட் பார்க்கும் அளவிற்கு கை தேர்ந்த குடும்பஸ்தர். சிக்ஸ் பேக் மேனி, male பண் முடியெல்லாம் இவரிடமே உண்டானது.
சிவனின் முதல் – தெரியாது. ஆதி-தேவனான அவர் ஒரு சுயம்பு. ரஜினிகாந்த் சொல்வதை போல எங்கிருந்து வந்தார் , எப்படி வந்தார் என்று தெரியாது ஆனாலும் சரியான நேரத்திற்கு வந்து, ஒரு யுகத்தின் முடிவில், அனைத்தையும் அழித்து, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து வைப்பவர். அவர் இல்லை என்றால் இங்கு எவருக்கும் டப்பா டான்ஸ் ஆடாது என்பது மட்டும் உறுதி. அவரை போலவே நாமும், கெட்டதை அழித்து , நல்லதை ஆரம்பிப்போம்.