விபினிண்ட ஜீவிதம்- 3

பாகம் 1 —> https://writervivek.com/2025/01/31/tentacles-of-love-1/
பாகம் 2–>https://writervivek.com/2025/02/07/tentacles-of-love-2/
போருக்கான நாள் குறிக்கப்பட்டது . சங்கர நாராயணன் அவன் பித்ருக்களை வேண்டிக் கொண்டு , மாஹாலய அம்மாவாசை தினத்தை போருக்கு பரிந்துரைத்திருந்தான் . விபினிடம் இருந்து பதில் வராவிட்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டான் . ஆனாலும் ரங்க நாயகியை இன்னொருவன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் எப்படி விடுவது . அடித்துப் பார்த்துவிட வேண்டியதான் என்று முடிவெடுத்து , உடம்பை மெருகேற்ற இரண்டு தண்டால் எக்ஸ்ட்ரா எடுக்க ஆரம்பித்திருந்தான் .
ரங்க நாயகி பக்கத்து வீட்டுப் பெண். சிறு வயதிலிருந்து நண்பர்களாக வளர ஆரம்பித்துப் பத்து வருடங்களாக நட்பு காதலாக மலர ஆரம்பித்திருந்தது . ஒருதலைக் காதலோ , இரு தலை காதலோ காதல் ஒன்று தான் என்று தீர்க்கமாக நம்பினான் சங்கர நாராயணன் . தினமும் ரங்க நாயகி கண்ணில் படும் படி அவள் வீட்டருகே சுற்றித் திரிவான் . கோலி குண்டு விளையாடவேண்டுமா , அவள் வீட்டு வாசலில்தான் வட்டம் போட்டு விளையாடுவார்கள் . கிட்டிப் புள் விளையாட்டா, போடு அவள் வீட்டு வாசலில் .
அவள் வீட்டு வாசலைக் கடக்கும் போதெல்லாம் அவள் இருக்கிறாளா , வெளியே வருகிறாளா என்று ஒரு கண் எப்போதும் வாசலைப் பார்த்தே இருக்கும். அவள் வந்து விட்டாலும், எதேச்சையாக அந்தப் பக்கம் வந்ததைப் போல காட்டிக் கொள்வான் . அவனுக்கு அவள் அப்பாவையும் நன்றாகத் தெரியும் , அவரும் இப்படி ஒரு பையன் தனக்கு மருமகனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கக் கூடும் . ஆனால் அவன் கனவுகளை தகர்ப்பதற்காவே கடவுள் படைத்த இரு ஜீவன்களில் ஒன்று அவள் வீட்டில் இருந்தது. ரங்க நாயகியின் மொட்டைப் பாட்டி .
தேய்ந்து போன சந்தனக் கலர் புடவை அணிந்து கொண்டு, வீட்டுத் திண்ணையில் அவள் இருந்தால் , அங்கே வர காகங்கள் கூட பயப்படும் . ரோட்டில் யார் சென்றாலும் “நீ பார்த்தசாரதி புள்ளையாண்டான் தானே , பக்கத்துல வா “ என்று அழைத்து , அவன் ஜாதகத்தை மட்டும் மேயாமல், அவன் அம்மாவின் ஒன்று விட்ட சித்தப்பாவின் தற்போதைய நடப்பு வரை அறிந்து கொள்ளாமல் விட மாட்டாள். அப்படியே அவன் வேறு யாராகவோ இருந்தால் , அவன் சொந்தத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்வாள் . அடுத்த முறை அவன் மாட்டினால் “நீ ராமசாமி புள்ள தானே, இங்க வா “ என்று விடாமல் துரத்துவது அவளுக்கு மாலை நேரப் பொழுது போக்கு.
தப்பித் தவறி அவள் வீட்டருகே கிரிக்கெட் விளையாடி பந்து அவளிடம் மாட்டி விட்டால் முடிந்தது கதை. பந்து அவள் வீட்டுப் பக்கம் போகும் போதே பாதி பேர் அவரவர் வீட்டைத் தேடி ஓடி விடுவார்கள் . ஆனாலும் அவர்கள் தெரு அமைத்திருந்த விதம் , சங்கரனின் சலனமும் அவர்களை அங்கேயே விளையாட வைக்கும் . பாட்டியின் துணிவையும் தெளிவையும் அப்படியே ரங்க நாயகியிடம் கண்டிருக்கிறான்.
அன்றும் அப்படித்தான் , சண்டைக்கு நாள் குறித்தகிவிட்டதா என்று கேட்க வந்த ராகவனை வழிமறித்து அரை மணி நேரம் சேதி கேட்டு ஒரு வழி செய்து விட்டிருந்தாள் மொட்டைப் பாட்டி . ராகவனும் வளைந்து நெளிந்து பார்த்து விட்டு , அவசரமாக மூச்சா வருகிறது என்று தப்பி ஓடி சங்கரனின் வீட்டுக்கு புற முதுகிட்டு வந்து நின்றான் .
பாட்டியின் கதை சங்கரனுக்கு தெரியும் , இளம் வயதிலேயே கணவனை இழந்து நிற்கதியாக நின்றாலும், எப்படியோ ஒரு சர்க்கார் உத்யோகத்தைப் பிடித்து மூன்று பெண்களுக்கு நல்ல வரம் பார்த்து கடைசி மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மகனின் வருமானத்தை விட இவளுக்கு பென்சன் அதிகம் என்று ஒரு சேதியும் அந்தத் தெருவில் உலவியது .
“ஆனாலும் பாட்டிக்கு நல்ல ஞாபகம் டா , என்னோட தாத்தாவோட சொந்தக் காரங்க பத்தியெல்லாம் தெரிஞ்சுருக்கு” திண்ணையில் உட்கார்ந்த படியே ராகவன் ஆரம்பித்தான். ஆரம்பித்தவன் பதிலுக்கு எதிர்பாராமல் “பேசாம , சண்டைக்கு இந்த பாட்டிய கூட்டிண்டு போ, விபினோட மொத்த குல கோத்திரம் கேட்டு ஒரு வழி பண்ணிடுவா “ என்று சிரித்தான் .
காதலுக்காக சண்டை என்பதெல்லாம் சினிமாத்தனமான விஷயம் என்று தெரிந்தாலும் , அவன் காதலுக்கான அளவீடாகவே அந்தச் சண்டையை பார்த்தான் சங்கர நாராயணன் . ரங்க நாயகிக்கு , தன்னால் இருவர் சண்டை போடுகிறார்கள் என்று தெரிந்தால் இருவரிடம் இருந்து கூட ஒதுங்கி விடுவாள் . அவளுக்கு தெரியக்கூடாது என்று சங்கர நாராயணன் உறுதியாக இருந்தான் .
“சரி , அவளுக்காகக் தான் நீங்க ரெண்டு பேரும் சண்டைன்னு அவளுக்கு தெரியுமா!” ராகவன் ஏதோ சங்கரநாராயணனின் மனதின் ஆழங்களில் இருப்பவற்றை நோண்டி எடுத்து கேள்வி கேட்பதைப் போல இருந்தது .
“ விபின் தான் ஊர் முழுக்க அவ தன்னோட ஆள்னு சொல்லிண்டு இருக்கான் “ என்றான் சங்கர நாராயணன் . இந்த சண்டையும் அதற்காகத் தான் என்று சொல்லாமல் சொன்னான். கதவு கிரீச்சிடும் சத்தம் கேட்டு இருவரும் திரும்ப ரங்க நாயகி நின்றாள் .
பட்டென்று எழுந்து நின்ற சங்கர நாராயணனின் காதில் “ அப்படியே ப்ரெசென்ட் மிஸ்ன்னு சொல்லு “ என்று குசுகுசுத்துச் சிரித்தான் ராகவன் .
“அத்தை இல்லையா “ என்ற ரங்க நாயகியின் குரலை மெச்ச ஆரம்பித்தான் சங்கரன் . ஆஹா என்ன இனிமையான குரல் அவளுக்கு. ஆளுக்கு சற்றும் ஒட்டாத குரல். அவள் அப்பாவும் அவளை பாட்டுக் கிளாசில் சேர்க்க எத்தனையோ பிரயத்தனங்கள் செய்து பார்த்தார் . பிடி கொடுக்காமல் நழுவி விட்டாள் .
அவள் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் அவளைப் பார்த்தபடியே சங்கர் நின்றிருக்க , ராகவன் “ஆமாம் இருக்கா , உனக்கு என்ன வேணும் “ என்றான் சற்றே கறாராக . சங்கர் அவனைப் பார்த்துக் முறைக்க “ அவ உனக்கு தான் ஆள் , எனக்கு யாரோ.. நீ ஏதாவது பேசு “ என்று சைகை காட்டினான் .
சங்கருக்கு வார்த்தைகள் குழைவாகத் தான் வந்தன . ” அம்மா உள்ள இருக்கா “ என்று சொன்னது அவனுக்கே சன்னமாகத் தான் கேட்டது .
ராகவன் தலையில் அடித்துக் கொண்டான் . அவனே வீரனானன்.
“அப்புறம் விபின் என்ன சொல்றான் “ என்றான் நக்கலாக .
ரங்க நாயகியின் கன்னங்கள் சிவந்தன .
“அவன் என்ன சொன்னா உனக்கென்ன “ என்றபடி சங்கரை பார்த்து “ இவன் கூடெல்லாம் ஏன் சேரர “ என்று சொல்லிவிட்டு அவன் அம்மாவை நோக்கி நகர்ந்தாள் .
“ஏன் டா , அவ ஏற்கனேவே என் கிட்ட பேச மாட்டா நீ வேற “ என்ற சங்கரனிடம் “இப்ப மட்டும் பேசு “ என்றான் ராகவன் .
அவர்களின் அரை நொடி சண்டையை தகர்த்தது ஒரு குறுஞ்செய்தி.
“நாம கொஞ்சம் பேசலாமா “ என்றது ..
யாருடா இது என்று தெரியாமல் அவர்கள் முழித்தனர் .
அப்போது பார்த்து ரங்க நாயகி வெளியே வர , படாரென்று கைப் பேசியை சங்கரனிடம் இருந்து பறித்து அவளிடம் ராகவன் தந்து “இது யாருன்னு உனக்கு தெரியுமா “ என்றான்
“இது பவானி நம்பர் மாதிரி இருக்கே , அவ உன்கிட்ட என்ன பேசணுமாம் … ஓஹோ கதை அப்படி போகுதோ “ என்று சிரித்தாள் .
ராகவனும் சங்கரனும் பேஸ்த் அடித்தார் போல நின்றனர் . ரங்க நாயகி விலகியதும் ராகவன் ஆரம்பித்தான்
“டேய் பலே ஆள்டா நீ , இங்க இவள் அங்க அவளா ? நடத்து .. ஆனா ரங்க நாயகி கண்ணுல கொஞ்சம் பொறாமை தெரிஞ்சுச்சு பார்த்தியா “ என்றான் .
சங்கரன் பதில் சொல்லும் முன் அடுத்த குறுஞ்செய்தி வந்தது .
விபின் “ எந்தா இடம் “ என்று அனுப்பி இருந்தான் ..