விபினிண்ட ஜீவிதம் – பாகம் 1
ஶ்ரீரங்கத்தின் சித்திர மாட வீதியின் தெரு முனையில் இருந்த ரங்கா ட்யூஷன் சென்டர் கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டது . அதன் வாசலில் இருந்த இளம் கூட்டம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி இருந்தது. டியூசன் சென்டரின் துருப்பிடித்த கம்பி கேட்டைத் திறந்தபடி ஒருவன்
“ இன்னிக்கு டூசன் இல்லையாம் டா, வாத்தி இன்னும் ஸ்கூல்லேர்ந்தே வராலயாம். “ என்று கோப்பையை வென்ற வீரனைப் போல கையைத் தூக்கி வெற்றிவேல் எனக் கதைத்தான் .
அவனின் குரல் அங்கிருந்த சிறு கூட்டத்தில் , குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்லைப் போல சலசலப்பை உண்டு செய்தது. ஓரமாக நின்றிருந்த பெண்கள், தன் புத்தகப் பைகளை நெஞ்சில் வைத்து அழுத்தியபடி அடுத்து என்ன செய்வது என்று பேச ஆரம்பித்தனர். மறுபக்கம் இருந்த ஆடவர் கூட்டம்,குதூகலத்தில் கொக்கரித்தது . அவரவர் வீட்டுக்குச் செல்வது ஆண் குலத்திற்கே இழுக்கு என்று முடிவெடுத்தனர்.
“பேசாம, ஆயிரம் கால் மண்டபம் போகலாமா” என்றான் அரைக் கை சட்டை போட்டிருந்த ஒருவன். அவன் வீடு கோவிலின் மேற்குச் சுவர்களுக்கு எதிராக இருந்தது. ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நாலு அடி எடுத்து வைத்தால் அவன் வீடு., அவனுக்கு எது வசதியோ அதை மட்டுமே சொல்வான், செய்வான். பெரும்பான்மையின் கருத்தையோ, முடிவையோ ஒருபோதும் ஏற்காதவன். அவன் சொன்னாலே கேட்கக் கூடாது என்றும் அங்கே ஒரு கூட்டம் இருந்தது.
அந்தக் கூட்டம் , அம்மா மண்டபம் சென்று காவிரியில் கால்களை நனைக்கலாமா என்று திசை திருப்ப, எவர் எங்கே சென்றால் எனக்கென்ன என்று பவானியை நோக்கி , காதல் அம்புகளை கண்களால் எய்து கொண்டிருந்தான் விபின். தன் மெளன மொழியில் மனக் கவிதைகளைப் படைத்துக் கொண்டிருந்தான்.
அப்பப்பா… நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க இருக்கத் தூண்டும் கண்களும், நயமாக வெட்டப்பட்ட புருவமும் அதன் மத்தியில் இருக்கும் மைக்ரோ பொட்டும், அதிலிருந்து அருவியாக ஓடி வரும் மூக்கும் என்று தன்னுள் இருந்த ஷெல்லியை பொங்க விட்டு காவியம் படைத்துக் கொண்டிருந்தான்.
பவானியோ நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம், எங்கே தன்னைப் பார்த்து விடுவாளோ என்று தன் பார்வையை அவளிடம் இருந்து விலக்கிக் கொள்வான் விபின். அப்படியே பார்த்துவிட்டால், இதயம் கழுத்து வரை துடித்து , அவனைத் தடுமாற வைத்துவிடும்.
அங்கிருந்தவர்களில் சிலருக்கு மட்டுமே விபினின் காதல் ரகசியங்கள் தெரியும். என்ன இது, நம் இடத்திற்கு வந்த மலையாளி ஒருவன் , நம் ஊர்ப் பெண்ணை காதலிக்கிறானே என்று வன்மம் கொள்ளாத நண்பர்கள். அவர்கள் அவ்வப்போது ஜாடை மாடையாக பவானியிடம் அவனைப் பற்றி சொல்லிச் சிரிப்பார்கள். பவானியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். அப்படியே பதில் பேசிவிட்டாலும் செட்டியாரின் மகள் , ஊரில் உள்ள ஆண்களிடம் எல்லாம் பேசுகிறாளே என்று அப்பாவின் மளிகைக் கடையில் பேசிவிடுவார்களோ என்ற பயம் அவளுக்கு. அதனாலேயே அவளும் ஆண்களிடம் பேசுவதை தவிர்த்து விடுவாள்.
நண்பர்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்புவது விபினுக்குப் பிடிக்கும், வார்த்தைகளால் போதை ஏற்றும் நண்பர்கள் கிடைத்தால் யார் விடுவார்கள். விபினுடன் சென்றால் , இரண்டு ரூபாய் பன்னீர் சோடா வாங்கித் தருவான் என்று நண்பர்கள் எப்போதும் அவனைச் சூழ்ந்து இருப்பார்கள். ஓசி சோடா குடித்தால் வரும் ஏப்பத்தை விட அதிகப் பொய்களை சொல்வார்கள் .
”கண்டிப்பா உனக்கு தான் மச்சி “
“அவ உன்ன தான் டா பார்த்தா “
“அவ உனக்காகத்தான் தான் மத்தவங்கள அவாய்ட் பன்றா “
என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் . ஆயிரம் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு ரங்கநாதரே மலைக்கும் அளவிற்கு , கோடிப் பொய்களை கொட்டுவார்கள் . இது அத்தனையும் பொய் என்று விபினுக்கு லேசாகத் தெரிந்தாலும் , கேட்பதற்கு குளுமையாக இருப்பதனால் அவனும் விட்டு விடுவான்.
“வாத்தி வரதுக்குள்ள கிளம்பிடலாம் “ என்று ஒருவழியாக முடிவெடுத்தார்கள் . சூரியன் மங்கத் தொடங்கியிருந்தது, ராஜ கோபுரத்தின் நிழல் அவர்கள் நின்ற இடத்தை மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மீதிருந்த வெயிலின் ஒளி அவள் முகத்தில் படர்ந்து எதிரொளிக்காமல் வருடி விட்டுக் கொண்டிருந்தது. இருந்தால் இந்த சூரியனைப் போல இருக்க வேண்டும் , எங்கயும் யார் மீதும் அவர்கள் அனுமதி இல்லாமல் தொட்டு வருட முடியும்.
விபினின் காதல் அம்புகள் விடாமல் பாய்ந்தன.
வட்ட முகம், ஒரு பரு இல்லை, ஒரு வெட்டு இல்லை, ஒரு தழும்பு இல்லை. கடவுள் எப்படி இளம் பெண்களுக்கு மட்டும் இப்படி ஒரு வாளிப்பான சருமத்தை தந்து விடுகிறார். நீண்ட கழுத்து. மலையாளிகளே தோற்றுப் போகும் திரேகம்.. காதோரம் இருந்த பூனை முடி, அவ்வப்போது அவள் இதழ்களை தொட்டு விட முடியமா என்று சோதித்துப் பார்த்து. விபின் ஒரு கணம் , அவளருகே சென்று , அவள் முடியை கோதி விட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான் , அந்த நினைப்பே கால்களில் ஜில்லுப்பை தந்தது.
ஒரு வழியாக கூட்டம் அம்மா மண்டபம் செல்லாம் என்ற முடிவுக்கு வந்தது. ஆண்களில் ஒருவனைத் தவிர அனைவரும் ஆமோதித்தனர்.
பெண்கள் முடிவெடுக்க முடியாமல் திணறினர். வீட்டுக்கு செல்லலாமா இல்லை, கொஞ்சம் நேரம் வீட்டார் கெடுபிடி இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமா என்று தர்க யுத்தம் நடத்தினர். பவானிக்கும் கொஞ்ச நேரம் வெளியே இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது.. ஆனால் தனியாக , செல்லவும் பயம், தன் கருத்தை வெளியே சொல்லவும் தயக்கம். எப்படியும் ரங்கநாயகி நல்ல முடிவை எடுப்பாள் என்று அவளை நோக்கி புருவத்தை உயர்த்தி சம்மிகையிட்டாள் . ரங்க நாயகிக்கு வீட்டிற்கு சென்றால் பாத்திரம் தேய்க்க விட்டு விடுவார்கள் என்ற பயம். அவளும் ஆண்களின் முடிவுக்கே வந்தாள்.
அந்தக் கூட்டம் அம்மா மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது. சமாஜத்தின் வாசல் வரை நூல் பிடித்த எறும்புகளைப் போல வரிசையில் நடந்தனர். பவானிக்கு தன் பின்னாலேயே விபின் வருவது பல வித உணர்ச்சிகளை உண்டு செய்தது . அவன் தன்னை தான் பார்க்கின்றானா., பார்த்தாலும் கண்கள் ஏதும் கண்ட இடத்தை பார்க்கின்றனவா என்று ஆயிரம் கேள்விகள். ரங்க நாயகி அவன் பின்னால் வருகிறாள் அவளிடம் பிறகு கேட்டுக்கொள்ளலாம்.
பவானியின் பின்னால் இருந்த விபின் ஒரு மாய லோகத்தில் இருந்தான். அசைந்தாடும் தேவதை இரண்டடியில் நடப்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவளின் பின் சடை அசையும் அழகாய் பார்த்துக் கொண்டே சென்றான். சடையைத் தாண்டி கண்கள் சென்று விடக்கூடாது என்று உறுதியாக இருந்தான்.
அம்மா மண்டபமும் அதன் பின்னால் இருந்த களங்கமற்ற காவிரி ஆறும் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தன. சடாரென்று ஆட்டோக்காரன் ஒருவன் ஓரமாக நடந்த அந்தக் கூட்டத்தை உரசிச் செல்வது போல வந்து உரசாமல் சென்றான். இதனால், நிலை குலைந்த ரங்கநாயகி, கீழே விழப்போக, அவள் விபினை தூணாக நினைத்து இழுக்க, நிலை குலைந்த விபினின் கைகளை பூமாலை ஒன்று பிடித்து நிறுத்தியது. எவ்வளவு மிருதுவான விரல்கள், பஞ்சினாலும், மயில்றகாலும்,
புனையப்பட்ட விரல்கள். கரடு முரடான தன் கை , அவள் விரல்களை காயப்படுத்தி விடுமோ என்று விபின் பயந்தான். எது நடந்தாலும் , ஏன், இந்த அண்டமே முடிந்தாலும் அந்தக் கைகளை விட்டுவிடக் கூடாதென்று பிடித்தபடியே கீழே விழாமல் திரிசங்கில் தொங்கினான். அவள் கைகளுக்ககே திருவாங்கூர் சமஸ்தானத்தின் சொத்துக்களை எழுதி வைக்கலாம் .
பவானியின் முகத்தை அப்போது தான் நெருக்கத்தில் பார்த்தான். உலகைப் படைத்த ஆதி தேவதை இவளைப் போலத் தான் இருந்திருக்க வேண்டும். அப்படியே அவள் கைகளை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் என்று சிந்தித்தான். பவானியும் சட்டென்று அவள் கைகளை விலக்கிக் கொண்டாள். நன்றி சொல்ல வாயெடுத்த விபினுக்கு கீச்சுக் குரல்கள் மட்டுமே வந்தன . என்ன தான் தன் மனம் வானத்தில் பறந்தாலும், பூத உடல் இன்னும் தரையில் தான் இருக்கிறது என்றே அறியாமல் இருந்தான் விபின். ரங்கநாயகியின் முனகல்கள் அதிகரித்த பின்னர் தான் , தான் அவள் மேல் அமர்ந்திருக்கிறோம் என்றே அவனுக்கு உறைத்தது. நல்ல பஞ்சு மெத்தை மேனி, அகன்ட திரேகம் . எழுந்ததுமே பவானி என்ன செய்கிறாள் என்று தான் அவனுக்கு தோன்றியது . ரங்கநாயகியிடம் ஏதும் அடிபட்டு இருக்கிறதா என்று பவானி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“சோரி , தெரியாம விழுந்து” என்று ஆப் பாயில் தமிழில் மன்னிப்பைக் கோரினான். பதிலுக்கு புன்னகையை பதிலாகத் தந்தாள் ரங்கநாயகி.
அன்றிலிருந்து ஆரம்பித்தது அவளின் காதல் போர். விபின் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் ரங்கநாயகியும் இருக்க ஆரம்பித்தாள். அவன் எது சொன்னாலும் சிரித்தாள். பெண்களின் சிரிப்பு ஒரு போதை தான் . அந்தச் சிரிப்பில் தான் எத்தனை விதங்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு சிரிப்பு . கடைக்காரன், கூட கொஞ்சம் கொத்தமல்லி தந்தால் ஒரு சிரிப்பு , ரம்பம் போடும் கிழடுகளிடம் இருந்து தப்பிக்க ஒரு சிரிப்பு, நேரம் கிடைத்தால் கை பிடிக்கப் பார்க்கும் கல்யாணம் ஆன ஆண் பதர்களுக்கு, கிட்ட நெருங்காதே என்று ஒரு சிரிப்பு . இதில் தான் எந்த ரகம் என்று விபின் என்னாத நாட்களே இல்லை.
தன்னை சிரிக்க வைக்கும் ஆண்களை ,பெண்கள் உள் வட்டத்திற்குள் நிறுத்த ஆரம்பித்தால் , இந்த உலகம் பத்துமா என்று அவனுக்கு தோன்றியது . அவன் மனதில் இருந்து பவானி மெல்ல விலக ஆரம்பித்தாள் . மூடு பனி விலகி , ஆதவன் தெரிவதைப் போல, அவன் கண் முன்னே பவானி இருந்தாலும் ரங்க நாயகி ஜொலிப்பாகத் தெரிய ஆரம்பித்தாள் .
ரங்க நாயகி வீட்டு தயிர் சாதத்திற்கும் அதனூடே வெறும் மாவடுவிற்கும், மோர் மிளகாய்க்கும் அடிமையானான். லீவு நாட்களில் கூட பாலக்காடு செல்லாமல் , அங்கேயே கோயில் குளம் என்று ரங்க நாயகியின் தாவணியை பிடிக்காத குறையாகச் சுற்றி வந்தான். எதிலும், நெஞ்சை நிமிர்த்தி துணிந்து பேசும் ரங்க நாயகியை கிட்டத்தட்ட வழிபட ஆரம்பித்தான். இவளைப் போன்ற ஒரு பெண் தான் வாழ்க்கைக்கு தேவை என்று முடிவெடுத்தான்.
பவானி பட்டை தீட்டப்பட்ட வைரம் என்றால், ரங்க நாயகி ஜொலிக்கும் வெள்ளி .
விபினுக்கு அன்று வைரத்திர்காக காத்திருப்பது ஏனோ பிடிக்காமல் போனது.
தனக்கான தேவை வெள்ளி தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் .
கூட இருக்கும் நண்பர்களும் ரங்கநாயகி தான் அவனுக்கு ஆத்மார்த்தமான ஜோடி என்றனர். அவன் வாங்கிக் கொடுத்த சோடாவைக் குடித்துக் கொண்டே.
அவன் டியூசன் சென்டரில் படிக்கும் அரைக் கை சட்டைக்கரான் மட்டும் , சோடா பாட்டிலை அவன் மண்டையில் உடைத்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்