கதைதமிழ்

கலாட்டா கல்யாணம் 

அந்த கல்யாண மண்டபம் களை கட்டத் தொடங்கியிருந்தது. வரும் அனைவரையும் வாசலில் இருந்த , சூம்பிப் போன வாழைத்தார் தலை வணங்கி வரவேற்றது . உள்ளே நுழைந்ததும்,  ஒரு இயந்திரம், ஆள் வந்தாலும் வராவிட்டாலும்,  அங்கும் இங்கும் திரும்பியபடி பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தது.  ஏசி குளிரூட்டப்பட்ட அந்த மண்டபத்தின் கட்டைக் கதவைத் திறக்க, பெரியவர்கள் கஷ்டப்பட்டனர். இளசுகள் வாசலிலேயே நின்று கொண்டு, உள்ளே செல்லும் பெண்களுக்கு ,  கதவை திறப்பதில் தங்கள் ஆண்மையைக் காட்டிக் கொண்டிருந்தனர். 

உள்ளே வலது பக்கம் காபி ஸ்டால் , இடப் பக்கம் ஜூஸ் பந்தல் போட்டு , அமர்களம் ஆகியிருந்தது. ஓர் ஓரத்தில், சின்ன மேடை ஒன்றில் கெட்டி மேளம், நாதஸ்வரக் கலைஞர்கள் காபி குடித்தபடி, வாத்தியங்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். சின்னஞ் சிருசுகள் அங்கும் இங்கும் ஒடியபடி, அந்த இடத்தை களேபரமாக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர் . அதில் ஒரு குண்டு பையன், நேராக வந்து என் கால் நடுவில் விட்டு விட்டு, “சாரி அங்கிள்” என்று சொல்லிவிட்டு ஓடினான். பெண் வீட்டுக்காரனாக இருப்பான் போல. நான் இருந்த வேதனையில் அவன் அடித்த வேதனை  எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 

ஏசி அறையிலும் மாமா வியர்வை பூத்து வேகமாக ஓடி  என்னிடம் வந்தார். 

“என்ன தம்பி நீ, காலையிலேயே உம்  பாட்டுக்கு, வெளில  போயிட்ட. எல்லாருக்கும் ஒரு நிமிஷம் ஆடிப் போச்சு, ஆள் அனுப்பி கூப்பிடற மாதிரியா  வச்சுக்கணும்.” என்று கை பிடித்து மணமகன் அறையில் அடைத்தார். அங்கும் ஏசி. இந்த ஜனவரி மாதக் குளிரில் இவர்களுக்கு ஏசி அறை தேவையா. 

வெளியே சென்ற மாமா அப்பாவிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.  அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதில் பெரிய மாமாவுக்கு பெரிய  பிரியம். 

அப்பா ஆரவார என்ட்ரி கொடுத்தார். “என்னடா நினைச்சுகிட்டிருக்க  நீ , இங்கேர்ந்து நவுந்த , கல்யானம்னு கூட பாக்காம , கைய கால உடைச்சு புடுவேன், பாத்துக்க” என்று கச்சேரியை ஆரம்பிக்க , அம்மா சுருதி சேர்க்கும் விதமாய், “ எங்க போயிருந்த நீ, இன்னும் வேட்டி சட்ட கட்டணும், மாமன் மால போடணும், சொந்தக்காரங்க, செயின் , மோதிரம் போடணும் , இப்ப போய் வெளில போவியா? “ என்று கோவம் கலந்த பாசத்துடன் அறையில் இருந்த பீரோக் கண்ணாடியில், மேக் அப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவரவருக்கு  அவரவர் வேலை, அவசரம்.  

ஏன் வெளியே போனேன் என்று என்னை யாருமே கேட்கவில்லை. கோபி கேட்டிருப்பான். அவன் வந்துவிட்டனா என்று பார்க்கவே வெளியே சென்றிருந்தேன். அதற்குள்  இவ்வளவு அக்கப்போர்.  

வெளியே கால் மணி நேரம் பொட்டிக்கடையில் இரண்டு சிகரெட் ஒரு சமோசாவுடன்  நின்று, நான்கு முறை கால் செய்து விட்டேன் , எடுக்கவும் இல்லை, ஆளையும் காணவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன். நான் மட்டும் வரவில்லை என்றால் நாம் போட்ட அனைத்து திட்டம் பாழாகிவிடும். 

பெட்டிக்  கடைக்காரன் , மண்டபத்தைச் சுற்றி இருந்த   பேனரையெல்லாம் பார்த்து, வாய் பிளந்தான்.  “நீங்க தான் மாப்பிள்ளையா “ என்று ஏற இறங்கப் பார்த்தான். பேனர்களில்  கடா மீசை , ஜாதிப் பெயருடன் இருந்த என் குடும்ப ஆண்களின் உருவம் அவனுக்கு ஒரு கலக்கத்தை உண்டு செய்திருக்க வேண்டும். என்னை காணாமல் அவர்கள் சித்தப்பாவை அனுப்பி வைத்து தேட விட்டனர்.  விசாரிக்க வந்த சித்தப்பாவிடம், கை காட்டி வேலையைக் காட்டினான். என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டு அவர் சிகரெட்டை இழுக்க ஆரம்பித்தார். 

புளிப்பு மிட்டாய் போட்டு உள்ளே வந்ததும்  அப்பா அம்மாவின் அர்ச்சனைகள் .கோபி ஏதும் தகவல் தந்திருக்கிறானா என்று பார்ப்பதற்குள்,  போனையும் பறித்துக்கொண்டார் அப்பா. 

பத்து நிமிடத்தில் பெரிய மாமா வந்தார் . மஞ்சள் நிற பட்டு வேட்டியைக் கொடுத்து, “ரொம்ப இறுக்கிக் கட்டிறாத, அப்புறம் நைட்டு இரத்தக்கட்டு ஆகி ஒரு மாதிரி ஆகிடும் பாத்துக்க “ என்று நக்கல் அடித்தார்.

 “அவுராம கட்டுவியா , இல்ல நான் கட்டி விடட்டுமா “ என்று விவஸ்தையே இல்லாமல் சின்ன மாமா பல்லிளித்தார். 

இவர்களுக்கெல்லாம் நம்மை பார்த்தால் எப்படித் தெரிகிறது. நானே எப்படியும் கோபி வருவான் , ஒரு நல்ல தகவல் சொல்லுவான் என்று சுள்ளெரும்பு  கூட்டத்தின் மேல் கால் வைத்தபடி காத்துக் கொண்டிருக்கிறேன். இதில் இவர்கள் வேறு. 

கோபம் வந்தது, வெளிக்காட்டவில்லை .  சின்ன மாமா நமக்குத் தேவை. கரடு முரடான ஆண்கள் நிறைந்த எங்கள் குடும்பத்தில் , மென்மையான ஒரே ஆண் சின்ன மாமா தான். என்னைப் போலவே .  இதனாலேயே எனக்கு அவரை பிடிக்கும் . கண்டிப்பாக என் அம்மாவின் வளர்பாகத் தான் இருக்க வேண்டும் . வயது வித்தியாசம் அப்படி. தனக்கு தங்கை இல்லாதக் குறையை, இந்த மாமாவை விட்டு தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

“ அடப்போங்க மாம்ஸ், நானே கட்டிகிட்டு வரேன், நீ போய் என் ப்ரெண்ட் கோபி வரானானு  பாத்து சொல்றியா  “ என்றேன் .

“ யோவ் மாப்ள , நீ எவளையாவது கூட்டிக்கிட்டு ஓடுற பிளான்ல இருக்கியாம்ல , எல்லாரும் பேசிக்குறாவ , அப்படி எதுவும் பிளான் வச்சிருக்கியா . உங்க அப்பன் ஒரு மாதிரி டே , நீ அந்த பொண்ணுங்க சேர்த்து வெட்டிப்புடுவான்  பாத்துக்க”  என்று அப்பாவியாய் ஒரு குண்டை போட்டார். 

நான் அதிர்ந்தேன் . போச்சு. இனி மண்டபத்திற்கு வெளியே கூட போக விட மாட்டார்கள் .  கோபி வேறு வராமல் உயிரை எடுக்கிறான். என் சிந்தனைகள் என்னைத் தாண்டி ஓட முயல , பேஸ்தடித்த என் முகத்தை பார்த்த மாமா மனம் உருகினார் .

“சரி விடு , கோபி வந்தா நான் கூட்டியாரேன், நீ எங்கேயும் போயிடாதே” என்றார். “ஆனா மாப்ள இங்கே இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது. அப்படியே நீ பொண்ண கூட்டிட்டு வந்தாலும், உங்க அப்பா அருவா தூக்கி போடுவாரு பாத்துக்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். 

வேட்டியைக் கட்டி வெளியே வந்தேன் . வாசலில் மாமனார் , நெஞ்சில் சந்தனத்தை  தடவிக் கொண்டே  வரவேற்றார். எட்டு பவுன் தங்க சங்கிலியை கழுத்தில் போட்டார்.  அவர் அடுத்து மாலையை எடுக்க நகர ,” சார் ஒரு போட்டோ ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் குறுக்கிட்டார். மறுபடியும் கழுத்தில் இருந்து செயினை எடுத்து, மறுபடியும் போட்டு , நகராமல், கன் அசைக்காமல், சிரித்தபடி போஸ் தந்தார் .

“மாப்பிள்ளைக்கு ஒரு காபி சொல்றா “ , இது பெரிய மாமா. மாலயை போட்டு வித விதமாக போஸ் தந்தார் . கல்யாணம் எனக்கா இல்லை அவருக்கா என்ற அளவில் இருந்தது அவர் கொடுத்த போஸ்கள். மாலை என் கழுத்தை அறுக்க ஆரம்பித்தது . வாசலைப் பார்த்தேன் , கோபியும் இல்லை, சின்ன மாம்சும் இல்லை. நான்  வாசலை பார்ப்பதை அறிந்த அப்பா, அதை மறைக்கும் விதமாய் என்னெதிரில் நின்றார் . மீசையைத் தொட்டு உருமியும் காட்டினார் . மீசை இல்லா என் முகத்தில் சோகம் அப்பியது .

இதற்குள்  மாமாவின் பின்னால் ஒரு வரிசை உருவாகியிருந்தது . வரிசையாக பங்காளி , அங்காளி என்று அனைவரும் வந்து மொய் கவரையும் , மோதிரங்களும், செய்யிங்களையும் போட்டு ,என்னை நடமாடும் நகைக் கடையாக  மாற்றினார்கள் . செயின்களில் எண்ணிக்கை ஏற ஏற, தங்கச் சங்கிலிகளால் தொழுவத்தில் கட்டப்பட்ட எருமை மாட்டைப் போல உணர்ந்தேன். 

அனைவருக்கும் ஒரே குரங்கு முகத்தைக் காண்பித்தேன் , ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஓரத்தில் சித்தப்பா யார் என்ன செய்கிறார்கள் என்பதை வரிசையாக குறித்துக் கொண்டார். இப்படியும் இரவு,  நாம் செய்ததற்கு மறுசீர் ஒழுங்காக வந்துவிட்டதா என்று கணக்கெடுத்து பார்ப்பார்கள். அடுத்து நடக்கும் சீட்டு ஆட்டத்தில் அதுவே சண்டையாகக் கூட மாறக்கூடும்.  

கடைசியாக வந்த ஒருவர் , “பையனுக்கு மீசை மட்டும் இருந்தா , அவுக தாத்தா மாதிரியே இருப்பாக” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். 

அரை மணி நேரத்தில் பெண்ணை அழைத்து வந்து விட்டார்கள் . அவளும் பார்க்க மங்கலமாக தான் இருந்தாள். நல்ல நாளிலேயே கலராக இருந்து அவளுக்கு மேலும் இரண்டு அடுக்கு மேக்கப் போட்டிருந்தார்கள். 

யாரோ ஒருவர் அய்யரை அழைக்க , அவர் வந்து ஹோமம் வளர்த்தார் . 

என்ன செய்து கொண்டிருக்கிறான் இந்த கோபி . அவன் மட்டும் வரவில்லை என்றால் , நான் இவளுக்கு தாலி கட்டி , வாழ்க்கையே ஒரு மாதிரி ஆகிவிடுமே. 

அவனையும் குற்றம் சொல்ல முடியாது. அவனுக்கு எத்தனை பிரச்சனைகளோ! எப்படியாவது வந்து விடு கோபி . வந்து என்னை காப்பாற்றி விடு. 

என்னை இடது புறத்திலும் , அவளை வலது புறத்திலும் உட்கார வைத்தார்கள் . புகை கண்களைக் கலக்கியது . 

இன்னும் பத்து நிமிடம் தான். 

அதோ வந்து விட்டான் கோபி .என்ன இது தனியாக வருகிறான். இனி வரும் பிரச்சனைகளை யார் சமாளிப்பது? இவன் என்ன பெரிய ஹீரோவா இவனை அத்தனையும் சமாளிப்பதற்கு. 

தாலியை ஊரார் தொட்டு வணங்கிட , கோபியிடமும் தந்தார்கள் . அவனும் வணங்கி விட்டு என்னருகில் வந்து அமர்ந்தான்.. அயர்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது .

அய்யர் தாலியைத் தந்து கட்டச் சொன்னார் .

நான் தாலியை அவனிடம் கொடுத்தேன் .

அந்த இடத்தில் , அந்த நொடியில் , மயான அமைதி நிலவியது. 

ஹோமத்ததில் நெய் ஊற்ற வந்த்த அய்யர் அதை நிறுத்தினார். மங்கல வாத்தியக் காரர்கள் விசயம் புரியாமல் மங்கள தாரனம் வாசித்துக் கொண்டிருந்தனர். அப்பா வேகமாக எதையோ எடுத்து அடிக்க வந்தார். அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். 

யார் கையில் தாலி இருக்கிறது என்று தெரியாமல் ஊரார் அட்சதை தூவி வாழ்த்தினர். சின்ன மாமா எல்லாம் உணர்தவராய் கண்களைத் துடைத்துக் கொண்டார். 

அனைவரும் கோபியையும் அந்தப் பெண்ணையும் கள்ளக்காதல் ஏதும் இருக்குமோ என்று சந்தேகிக்க ஆரம்பித்த அந்தத் தருணத்தில், கோபியின் கைகள் நகர்ந்தன. 

கோபி என் கழுத்தில்  தாலியைக் கட்டினான் . 

கோபி , என் ஆருயிர்க்  காதலன்.

Hi, I’m tamilvalai

Leave a Reply