ஒரு ஜென் கதை – ஸ்வீட் சான்
ஒரு ஊரில் அர்னால்ட்சான் என்ற ஜென் குரு ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேர பாராசான் என்ற எழுத்தாளர் வந்திருந்தார்.
“நீங்கள் ஏன் , சீடராக சேர விரும்புகிறீர்கள்” என்றார் படிக்கட்டு பாடி ஜென் அர்னால்டு சான்.
“குருவே , என்னால் இனிப்பு பலகாரங்களைச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை” என்றார் பாராசான்.
“வாழ்க்கையில் எதையும் விடுத்தல், ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும், சற்று முயன்றால் எதையும் வென்று விடலாம். நான் இனிப்பு பலகாரங்களை விட்டு வருடங்கள் பல ஆகிவிட்டன ” என்று சொல்லி விட்டு அவரது மற்றொரு சீடரை அழைத்து குசுகுசுத்தார்.
ஒரு பெரிய தட்டில் இனிப்புப் பலகாரங்கள் பல கொண்டு வரப்பட்டன.
“எல்லாம் உனக்குத்தான் , இன்றோடு இதை விட்டு ஒழி “ என்றார்.
பாராசானும் பலகாரம் ஒவ்வொன்றாக , பொறுமையுடன் எடுத்துச் சுவைத்தார்.
அடுத்த நாள் காலையில் அர்னால்டு சான் சீடர்கள் அனைவரையும் அழைத்தார். அந்தக் கூடத்தின் நடுவில், ஒரு பெரிய தட்டில் பலகாரம் இருந்தது.
“தினமும் சுடச் சுட பலகாரங்கள் இங்கு வரும், ஆனால் யாரும் தொடக் கூடாது” என்று பாராசானை பார்த்தபடி சொன்னார்.
அடுத்த நாள் காலை தட்டு காலியாக இருந்தது. அடுத்த தட்டு வந்தது. பாரா சான் இரண்டு அடி பின்னால் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
ஆனாலும், தினமும் தட்டு காலியானது.
பார சானுக்கு பொறுக்க முடியாமல் , “நான் இந்தப் பலகாரங்களை திருடவில்லை, இதோ பானை போல இருந்த என் வயிறு கூட தட்டையாகி விட்டது பாருங்கள் “ என்று துண்டை விலக்கி தன் படிக்கட்டு வயிற்றைக் கட்டினார் . அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அர்னால்டு சான் தன் துண்டை வயிற்றின் மேல் போர்த்திய படி “விடுத்தால் வாழ்க்கை, இல்லையேல் தொப்பை” .
இது தான் உங்களுக்கான பாடம் என்றார்.