மிளகாய் பரிதாபங்கள்
இன்று என் வாழ்க்கையில் முதன் முதலாக கால் மணி நேரம் பச்சை மிளகாய் வாங்கும் ஒரு நபரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட , அவர் கிளம்பும் வரை காத்திருந்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். ஒவ்வொரு பச்சை மிளகாயாய் அவர் எடுத்து, அதை ஆராய்ந்து , பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டிருந்தார். ஒருவருக்கு இவ்வளவு மிளகாய் தேவையா என்னும் அளவிற்கு இருந்தது அவர் எடுத்து வைத்திருந்த அளவு. வேறு ஒரு காய்கறியும் இல்லை. வெறும் மிளகாய்.
அதுவும் சில மிளகாய் பிஞ்சுகளை, ஒரு குழந்தையின் குட்டி விரல்களைப் போல மெல்லத் தடவி விட்டுக் கொண்டிருந்தார். கோரமான நுனி கொண்ட மிளகாய்களையும் பதுசாக கையாண்டார்.
எந்தவொரு செயலிலும் உன்னத்ததை எதிர்பார்க்கும் ஆளாக இருப்பார் போல என்று நினைத்துக் கொண்டேன். இப்படிப் பட்டவர்கள் தான் எல்லா விஷயங்களிலும் மேலோங்கி இருப்பார்கள். பெரிதாக யாரிடமும் பேச மாட்டார்கள், அப்படியே பேசினாலும், இரண்டு மூன்று வரிகளில் சொல்ல வந்ததை தீர்க்கமாக சொல்லி முடித்து விடுவார்கள். பொறுமை , நிதானம் எல்லாம் எனக்கு அப்பாற்பட்ட விசயங்கள். இவரிடம் இருந்தது கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருப்பதாகத் தோன்றியது.
ஆளும் பார்ப்பதற்கு கொஞ்சம் ,அப்பாவியாக இருந்தார். கடா மீசை காதுவரை எட்டிப் பார்த்தது. தொப்பை எல்லாம் இல்லை , ஆனாலும் சற்றே குண்டக , ஜென்டில்மேன் பட தயாரிப்பாளர் கேட்டி குஞ்சுமோனின் தம்பி மாதிரி இருந்தார். ஆனால் இடையிடையே அவர் செல்போன் பார்ப்பதுமாய், வந்த அழைப்புகளை கட் செய்வதுமாக இருந்தார்.
கடைசியில் போனை எடுத்தவர் , “இதோ வந்துட்டேன் மா” , “கடையில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு” , “ இங்க நல்ல காயே இல்லை” என்று மிளகாய் ஸ்டாண்டை தாண்டாமல் ரீல் ஒட்டிக் கொண்டிருந்தார்.
பின்னர் தான் புரிந்தது, அவர் மனைவியுடன் வரவில்லை. மனைவிக்கு பயந்து தான் இங்கேயே நிற்கிறார் என்று. பய புள்ள வீட்டுக்கு போக பயந்துகிட்டு இங்க மிளகாய்க்கு தடவி கொடுத்து கிட்டு இருக்கு.
எனக்கு மைனா படத்தில் வரும் போலீஸ் அதிகாரியின் மனைவி ,மனதில் ஒரு கணம் வந்து சென்றார்.
அதே நேரம், என்ன எதுவென்று அறியாமல் ,அவர் மனைவி தான் பிரச்சனை என்று எப்படி முடிவெடுக்க முடியும் என்று மனதில் டெவில்ஸ் அட்வகேட் எதிர் பாய்ச்சல் பாய்ந்தது. (இதை எழுதாவிட்டால் நானும் அந்த மிளகாய் ஸ்டாண்டுக்கு படையெடுக்க வேண்டியிருக்கும்)
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு டிசைன் போல..
கடைசியாக , மிளகாய் பையுடன் , கிங் பிஷர் பீர் இரண்டையும் எடுத்துப் போட்டுச் சென்றார்.
யார் பெத்த புள்ளையோ ..
முருகா உன் பிள்ளைகளுக்கு தான் எவ்வளவு சோதனை. அந்த பீர் பாட்டில்களை எப்படியாவது காப்பாற்று.