தேர்தல் திருவிழா 2024
தமிழகத்தில் தேர்தல் பரமபத விளையாட்டுகள் ஆரம்பித்து ஓய்ந்துவிட்டன. ஒரு பக்கம் ராம ராஜ்ஜியம் வந்தே தீரும் என்று கோவிலை திறந்து வைத்து சொல்லாமல் சொல்கிறார்கள் பாஜகவினர். மறுபக்கம் இந்தியா எங்கள் கூட்டணியின் பேரிலேயே உள்ளது என்று ,ஆங்காங்கே இருக்கும் பெரிய கட்சிகளை திரட்டி, பலம் காட்டப் பார்க்கிறது காங்கிரஸ். யார் ஜெயிக்கப் போகிறார்கள்?
தமிழ்நாடு
தமிழகத்தைப் பொறுத்தவரை , பொது எதிரி மோடியும் , பாஜகவும் தான். இதற்கான அடித்தளம், 2002 ஆம் ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல அமைக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் அது பெரும் சுவராக மாற்றப்பட்டு , 2019 ஆம் ஆண்டில், அது ஒரு சுனாமியாக பெருக்கெடுத்து, இன்று ஆழத்தை காட்டாத கடலாக, இளைப்பாரிக் கொண்டிருக்கிறது .
பாஜகவுக்கு எதிரான கோட்டையை கட்டியதில் அதிமுகவிற்கும் பெரும் பங்கு உண்டு. மிகப்பெரிய உதாரணம் ஜெயலலிதா சொன்ன “மோடியா இல்லை இந்த லேடியா” என்று 2014 இல் விடுத்த அறைகூவல் . அதே போல பாஜக எதிர்ப்பை, அவர்கள் மத்தியில் ஜெயித்தும், வடிவேலுவின் நேசமணியை உலகம் முழுக்க டிரெண்ட் செய்து, கோ பேக் மோடியை உயிர்ப்புடன் வைத்திருந்தது திமுக தான்.
ஆனால் முன்பு போல மோடிக்கு எதிரலை இங்கே இல்லை என்பதும் கொஞ்சம் திகில் தருகிறது. என் நண்பர்கள் பலர் பாஜகவுக்கு ஓட்டு போடுவேன் இந்த முறை என்று சொல்வதும் சற்றே சந்தேகக் கண்களை உயர்த்துகிறது. அவ்வளவு கேவலமாக வா திமுக ஆட்சி செய்கிறது?
சரி எந்தக் கட்சி முந்துகிறது.
திமுக
என்னதான் பொதுமக்கள் சிலர் “ஸ்டாலின் தான் வந்தாரு நீச்சல் அடிக்க உட்டாரு” என்று கோபத்துடன் கலாய்த்தாலும், திமுக தன் கூட்டணி பலத்தை வைத்து மோடிக்கு எதிரான கோட்டையின் மதில் சுவர்களை பெருமளவு எழுப்பிவிட்டது. இந்தத் தேர்தல் இரண்டாம் இடத்திற்கான தேர்தல் மட்டுமே, நாங்கள் தான் நிரந்தர முதலிடம் என்று மார் தட்டுகிறது. அவர்கள் சொல்வதைப்போல இந்த முறையும் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த தேர்தலே இரண்டாவது மூன்றாவது நான்காவது இடங்களில் யார் வரப்போகிறார்கள்? அவர்களின் வாக்கு வங்கி எவ்வளவு? என்பதற்கான தேர்தலாக தான் தெரிகிறது.
ஆனாலும் சிட்டிங் எம்பீஸ் பலருக்கு இங்கே கிடைக்கும் எதிர்மறை வரவேற்பும் , மக்கள் கேட்கும் கேள்விகளும் திமுகவின் வாக்கு வங்கியை சற்று குறைக்கக்கூடும்.
சீட்
வெற்றி 35-40
இரண்டாம் இடம் 0-5
எதிர்-களம்
ஒரு பக்கம் சிறுபான்மையினர் வாக்குகளை, பாஜக வந்ததால் இழந்த அதிமுக, மறுபக்கம் அதிமுக இல்லாமல் தனியாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து ஒரு கை பார்த்து விடலாம் என்று அண்ணாமலை, அதற்கு எதிர் முனையில் தனியாகத்தான் வருவேன் என்று இன்றும் சிங்கிள்ஸ்களின் அரசனாக நிற்கும் சீமான். யார் எங்கே இருக்கிறார்கள்?
அதிமுக
ஆயிரம் மேகங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைப் போல, யார் கட்சிக்கு தலைமை ஏற்று நடத்தினாலும், இரட்டை இலை எனும் கோபுரத்தை அசைத்துப் பார்க்க திமுகவைத் தவிர இன்னொருவர் தமிழ்நாட்டில் வந்ததில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் என்றுமே திமுகவா அதிமுகவா என்றுதான் கடந்த 70 வருடங்களும் அதன் தேர்தல்களும் நமக்கு உணர்த்தியுள்ளன. எடப்பாடி அதிமுகவை கைப்பற்றி, இரட்டை இலை சின்னத்தை வாங்கி விட்டார். அவர்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது இந்தத் தேர்தலிலும் இதற்கு அடுத்த தேர்தலிலும் தான் தெரியவரும். இரண்டாம் இடம் பிடிப்பார்களா என்றால் , கண்டிப்பாக முக்கால் வாசித் தொகுதிகளில் இவர்கள்தான் இரண்டாம் இடம் பிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் தேர்தலை பொருத்தவரையில் அவர்கள் ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெறலாம் அவ்வளவுதான். அதேநேரம் பல தொகுதிகளில் டப் பைட் கொடுக்கும் அளவிற்கு அவர்களின் ஓட்டு சதவீதம் உள்ளது. அப்படித் தப்பித்தவறி அவர்கள் மூன்றாம் இடத்திற்கு போனால் பாஜக அவர்களின் வாக்கு வங்கியை கபளீகரம் செய்து விட்டது என்று தான் அர்த்தம்.
சீட் –
வெற்றி 1-2
இரண்டாம் இடம் 30-35
பாஜக
அண்ணாமலை இப்படி செய்கிறார் , அப்படி செய்கிறார், அவர்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் , அவர்தான் இந்தியாவின் எதிர்காலம் , அவர்தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று அளவிற்கு இங்கே கூவல்கள் ஜாஸ்தியாக உள்ளன. இந்தத் தேர்தலை பொருத்தவரை அவர் கோவையில் போட்டியிடுவது ஒரு மைனஸ் தான். காரணம் , என் மன் என் மக்கள் யாத்திரையில் அவர் காட்டிய கூட்டம், அவரை ஒரு தமிழகத்தின் மாற்றத் தலைவராக முன்னிறுத்தியது. இப்படிப்பட்ட வேலையில் அவரை ஒரே தொகுதியில் ஒதுக்குவது என்பது பாஜகவிற்கு கண்டிப்பாக பலவீனமாகத்தான் அமையும்.
அதேபோல அதிமுக இல்லாத ஒரு கூட்டணி , பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க வைக்கும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை பாஜக மிஞ்சிப்போனால் இரண்டு மூன்று தொகுதிகளில் ஜெயிக்கலாம் அவ்வளவுதான்.ஒரு சில தொகுதிகளில் இரண்டாம் இடம் பெறலாம்.
என் கணிப்புப்படி கோவையிலோ ,நெல்லையிலோ, தருமபுரியிலோ அவர்கள் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. என்னதான் மத்திய மந்திரிகள் அடிக்கடி வந்தாலும், பிரதமர் மோடி ஏழு முறை வந்து சென்று விட்டாலும், இங்கே என்றும் கோ பேக் மோடி தான். சிறுபான்மை வாக்கு வங்கியில் , கிறிஸ்தவர்கள் கொஞ்சம் அவர்களுக்கு ஓட்டு போட்டால் அவர்களின் வாக்கு சதவீதம் உயரும்.
வெற்றி 0-3
இரண்டாமிடம் 0-6
மூன்றாம் இடம் 0-30+
நாம் தமிழர்
நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று இந்த தேர்தலிலும் அண்ணன் சீமான் தன் தம்பிகளை முடுக்கிவிட்டு 40 தொகுதிகளுக்கு ஆட்களை போட்டுள்ளார் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார் என்பது அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இன்றுவரை மூன்றாவது பெரிய கட்சி நான்தான் என்று மார்தட்டி வந்த அவருக்கு பாஜக ஒரு பெரும் சவாலாக அமையப் போகிறது. ஒரு காலத்தில் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டவன் என்ற முறையில் அண்ணனின் வீழ்ச்சி இந்த தேர்தலில் அடுத்த தேர்தலிலோ ஆரம்பிக்கும் என்பது என் கருத்து.
மூன்றாம் இடம் 1-2
இந்த மண் இவர் கையில் ஒரு நாள் சிக்கியே தீரும் 😂😢
வாக்கு வங்கி
திமுக +
40-42%
அதிமுக
20-25+
பாஜக +
8-12%
நாம் தமிழர்
5-8%
இந்தத் தேர்தல் உணர்த்துவது என்ன. மத்தியில் யார் வேண்டுமானாலும் வரட்டும் ஆனால் எங்களுக்கு தெரிந்த கட்சிகளுக்குத் தான் நாங்கள் ஓட்டு போடுவோம் எனும் முறை சற்றே மாறப்போகிறது இந்த தேர்தலில் இருந்து. நோட்டாவுடன் போட்டி போட்ட பாஜக என்று மூன்றாவது இடமா , ஓரிரு தொகுதிகள் ஜெயிப்பார்களா எனும் இடத்திற்கு கொண்டு வந்ததே அண்ணாமலையின் மிகப்பெரிய சாதனை. தப்பித்தவரி பாஜக இரண்டாவது இடம் வந்து விட்டால் அதிமுகவை மொத்தமாக விழுங்கிவிடும்.
அவர்கள் 20 சதவீதமோ அதற்கு மேலே எடுத்து விட்டால் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கூட தயங்க மாட்டார்கள். இவையெல்லாம் ஏதோ கற்பனை போலவும் கனவு போலவும் தோன்றலாம் பாஜகவா தமிழகத்திலா என்று சிரிப்பு கூட சிரிக்கலாம்.
ஆனால் இன்று இல்லாவிட்டாலும் , என்றாவது ஒரு நாள் அது நடக்கலாம்.
அடுத்த கட்டுரையில் இந்தியா எப்படி ஓட்டளிக்க போகிறது என்பதையும் பார்க்கலாம்.