Comedy

கிஸ்மு – சனியுடன் ஒரு பயணம்

  

29 ஏப்ரல் 2022 அன்று, சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

வெளிநாடு செல்லும் யோகம் எல்லாம் கொடுத்த சனி பகவான் , என்னை தாய் நாடு என்னென்ன பாடு படுத்தினார் தெரியுமா? ஒரு கட்டத்தில் அவரே அவதாரம் எல்லாம் எடுத்து, வைத்து செய்தார். 

ஜூனில் தம்பி கல்யாணம் , ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுக்க முடியாத நிலை, சரி விமான பயணத்தை கன கச்சிதமாக முடித்து விடலாம் என்று எண்ணி , இரண்டு மணி நேர ஸ்டாப் ஓவர் இருக்கும் விமானமாக புக் செய்தேன் .  தம்படி காசுக்கு பிரயோஜனம் இல்லாமல் போனது எனது ராஜ தந்திரம். 

விமானம் ஏற மூன்று மணி நேரம் இருக்கையில், அது கேன்சல் என்று அறிவித்தார்கள். மனைவி கத்தார் ஏர்வேஸ் இடம் மன்றாடி அடுத்த நாளைக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

சனி வாய்விட்டு சிரித்தார். 

அடுத்த நாள் மங்களகரமாகத் தொடங்கியது, முதல் விமானம் சார்லட் → பாஸ்டன் , அது இரண்டு மணி நேரம் தாமதமாக ஆட்டிக்கொண்டு வந்தது. இம்முறை என்ன நடந்தாலும் சரி, புட்போர்டு அடித்தாவது சென்னை செல்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு விமானத்தில் ஏறினேன். என்னுடன் தோகா வரை வரும் ஒரு பாகிஸ்தான் பெண்மணி ஒருவரையும் சிநேகிதம் பிடித்து வைத்திருந்தேன். தனியாக மாட்டினால் தானே தண்ணி காட்டுவார்கள் என்று. ஒரு வழியாக பாஸ்டனில் இறங்கி , பின்னங்கால் பிடறியடிக்க ஓடினால் , கத்தார் விமானம் வானில் – டாட்டா காட்ட முடியாத தூரத்தில்  சென்று கொண்டிருந்தது.  கன்னம் சிவக்க, விஜயகாந்த் அடைமொழியில் வெளுத்து வாங்கிவிட வேண்டும் என்று கத்தார் கவுண்டருக்கு சென்றால், அவர்கள் கேட்டை பூட்டிவிட்டு எப்போதோ ஓடிவிட்டார்கள். அடுத்த நாள் , கோழி கூவினால் தான் வருவார்களாம். 

நடு இரவு, ஊருக்கு எப்படி போவது என்று ஒரே சஞ்சலம். அப்போது தான் சனியின் உக்கிர ஆட்டம் தொடங்கியது. 

யாரிடம் போய்  கேட்பது,  அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் முழி பிதுங்கி நின்ற இக்கட்டான சமயமது. இந்தியா செல்ல முடியுமா , டிக்கெட்க்கு போட்ட காசு கோவிந்தாவா , தம்பி கல்யாணத்துக்கு போகவே முடியாதா என்று கதி கலங்கி நிற்கும் நேரத்தில் , 

கரகரப்பான ஒரு குரல் , “இஞ்சி மரப்பா வேண்டுமா “என்று ..நீட்டியவர் கிஸ்மு .. ஆள் பார்ப்பதற்கு சந்தனக் கவுண்டர் போல புஷ்டியாக கன்னத்தில் சிறு தொப்பையும் , வயிற்றில் ஒன்பது மாத கர்ப்பிணி பெண்களுக்கு ஒப்பான தொப்பையை கொண்டிருந்தார்.

துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டும் என்று எங்கேயோ யாரோ ஒரு நாதஸ் கொளுத்திப் போட்டிருக்க வேண்டும், இல்லையேல் சொன்னவர் கிஸ்முவாக இருக்க வேண்டும்.  சரி நாமிருக்கும் நிலைமையின் தீவிரம் புரிந்து, சற்றே சாந்தப்படுத்த  இஞ்சி மரப்பாவை கொடுக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால் அதை இஞ்சி மரப்பா என்று நினைத்துக் கடித்த பாகிஸ்தான் அம்மணியின் கண்களில் கண்ணீர். காரணம் அது , இஞ்சி  மரப்பாவே, அல்ல சக்கரைச் சாறில் முக்கி எடுத்த வெறும் இஞ்சி .. வலுக்கட்டாயமாக மேலும் ஒரு துண்டை அந்த அம்மணியின் கைகளில் திணித்தார் – இது தான் கிஸ்மு

இஞ்சித்  துண்டு தந்த வேகத்தில் , அமெரிக்காவில் எதுவுமே சரியில்லை, இவர்களை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்றார் கிஸ்மு. அவர் இந்தியராக இங்கு வந்து, அமெரிக்கராக மாறி, அவர்களின் பாஸ்போர்ட் எல்லாம் வைத்திருந்தார். சரி பெரிய ஆள் போலிருக்கிறது என்று நான் வாய் பிளந்த நேரத்தில்,  கூட வந்த பாகிஸ்தான் அம்மணி , இவர் கிடக்கிறார் என்று எனக்கும் சேர்த்து பத்து நிமிடத்தில் புது டிக்கெட் வாங்கித்  தந்தார்.  

கிஸ்மு  போனை எடுத்தார். கணம் கோர்ட்டார் அவர்களே என்ற தொனியில் ஆரம்பித்து , சுமார் ஒன்றே கால் மணி நேரம் பேசி அதே டிக்கெட்டை வாங்கினார் – இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று மறுபடியும் ஆரம்பித்தார். 

பாகிஸ்தான் அம்மணி விவரமாக வேறொரு பக்கம் திரும்பி சிரித்து விட்டார். எனக்கு சிரிப்பை அடக்கி கண்களில் நீர் வந்தது. கிஸ்மு – நீ ஒன்னும் பயப்படாதே உனக்கும் டிக்கெட் வாங்கித் தரவா என்றபடி போனை எடுத்தார். 

இந்நேரத்தில் பாகிஸ்தான் அம்மணியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் ஒரு மருத்துவர். அவரின் இரண்டு மகன்களும் அமெரிக்காவிலேயே டாக்டருக்கு படிக்கிறார்களாம். பத்து பன்னிரண்டு வருடங்கள் இழுக்கக் கூடிய படிப்பு. க்ரீன் கார்டில் இருக்கிறார். அவருக்கு மோடியை பிடிக்காவிட்டாலும், இந்தியா பரவாயில்லை, எதோ செய்து முன்னேறி வருகிறார்கள், ஆனால் பாகிஸ்தானில் இம்ரான் கான் நல்லதே செய்ய நினைத்தாலும் விட வில்லை என்று நொந்து கொண்டார். பூகோள அறிவை வளர்த்துக் கொள்வோம் என்று நானும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தேன்.  அவர் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, அமெரிக்க வந்து, இங்கேயே செட்டில் ஆகியிருக்கிறார்.

 டாக்டருக்கே உரிய நிதானத்துடன் கிஸ்முவின் செயல்களை மென் சிரிப்புடன் கடந்து விடுகிறார். எனக்கோ கிஸ்மு எப்போது பொன்னம் பலமாக மாறி அடுத்த விமானத்தையும் கேன்சல் செய்து விடுவாரோ என்ற பயம் ஆரம்பித்திருந்தது. 

அடுத்த விமானம் மாலை ஆறு மணிக்கு , தற்போது மணி அதிகாலை இரண்டு. 

பாஸ்டன் விமான நிலையம் முழுவதும் தேடிப் பார்த்தும் படுக்க ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை . அமெரிக்காவில் வீடற்ற மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் எல்லாம் , உட்காரும் பெஞ்ச் கூட உருப்படியாக இருக்காது. எல்லா இடத்திலும் குறுக்க இந்த கௌசிக் வந்தா என்ன செய்வாய்,  என்பதை போல பல  இடைச்செருகல்கள். சரி அக்கம் பக்கம் இருக்கும் ஹோட்டல்களில் புக் செய்யலாம் என்று சில மலிவு ஹோட்டலுக்கு பேசிப் பார்த்தால், துண்டை விரித்து விட்டார்கள்.

 பணம் போனாலும் பரவாயில்லை என்று விமான நிலையத்தில் இருந்த ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றால் , அங்கேயும் இடமில்லை. இருந்தும் விடாமல் 

 , அங்கே இருந்த காத்திரமான பெண்மணியிடம் கெஞ்சிக் கூத்தாடி , வரவேற்பரையில் உட்கார மட்டும் அனுமதி வாங்கிய ஐந்தாவது நிமிடம் – கொண்டு வந்த மேத்தி ரொட்டி- ஊறுகாயை வைத்து நக்க ஆரம்பித்தார் – கிஸ்மு. எனக்கு பகீர் என்றிருந்தது. அது நாலு ஸ்டார் ஹோட்டல் . பல சி ஈ ஓ வரும் இடமது. அதன் வரவேற்பறையில் , ரொட்டித் துண்டுகளை நக்கிப் பார்த்தால் என்ன செய்வார்கள்?  ஊறுகாயை நக்கி முடிக்கும் வரை காத்திருந்து , நாசூக்காக வெளியே தள்ளிவிட்டது ஹோட்டல் நிர்வாகம் . உட்கார மட்டும் இடம் இருந்தால் போதும், அதிலேயே தூங்கி விடலாம் என்று நினைத்த எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதில் ஹோட்டல் வாசலில் என்னிடம் “இன்னும் இரண்டு ரொட்டி இருக்கிறது வேண்டுமா” என்று கேட்டார். இவரை என்ன செய்யலாம் சொல்லுங்கள்? 

வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பது, அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு எனக்கு தெரிந்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்  கடையைத் திறந்தார்கள். முதல் ஆளாய் கிஷ்மு.  ஃப்ளைட் ஏன் delay ஆனது என்று ஐம்பத்தி ஆறாவது முறையாக அதே கேள்வியை கேட்டார்  – எதிரே அவரை விட இரண்டடி உயரமாக இருந்த அந்தக் கருப்புப்  பெண்மணி பார்த்த பார்வையிலேயே தெரிந்தது – அடுத்தது அடிதான் , இப்போதே ஓடி விடு என்று . அவருக்குப் பின்னால் ஒரு அனகோண்டாவின்  வாலைப் போல வரிசை நின்றது. அந்தப் பெண்மணி பெருமூச்சு விட்டபடியே weather காரணமாக delay என்றாள். கிஸ்மு விடாமல் , நன்றாக வெயில் அடித்தது, இதிலென்ன பிரச்சனை ,  எப்படி flight delay ஆனது என்று அந்தப் பெண்மணியின் மேஜையில் ஒருக்களித்த படியே கேட்டார்.  நான் இரண்டடி தள்ளி  நின்று கொண்டேன். கிஸ்முவை தாங்கிப் பிடிக்க. 

ஒரு வழியாக காலையில் ஒரு ஹோட்டலை பிடித்து, களைப்பு தீர தூங்கி அடுத்த விமானத்தைப் பிடிக்க விரைந்தோம். கேடயமேந்தி போருக்கு செல்லும் தோரணையுடன் கிஸ்மு கத்தார் கவுண்டரில் சண்டையிட ஆயத்தமானார் .  ஆனால் கிஸ்முவை, ஏர்  சுவிதா பார்ம்  இல்லையென்று ஒரு ஓரத்தில் உட்கார வைத்து விட்டார்கள் . அவருக்குள் இருக்கும் போராளியை இது மேலும் மூர்கமாக்குமா , அல்லது பெட்டிப் பாம்பாக , பாப்பா பாடும் பாடும் பாட்டு போல தலையை ஆட்டுவாரா என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . 

ஆனால் சிஸ்டத்திற்கு முன் நாமெல்லாம் அற்பப் பதர்களே என்று கிஸ்மு உணர்ந்து கொண்ட தினம் அது . காட்டாற்று வெள்ளம் போல கேள்விக்கணைகளுடன் செக் இன் செய்யப் போனவர் , ஏர்  சூவிதா இல்லை என ஒரு ஓரத்தில் அமர வைத்து அதிகாரத்தின் இருப்பை கட்டிவிட்டார்கள்  . எல்லாவற்றிலும் எதிர்த்துப் பேசும் கிஸ்மு, இங்கேயும் வேலை காட்ட முயன்றார்  , அந்த அரபிப் பெண்ணோ ,  registration செய்தால் ஊருக்கு இல்லையேல் வீட்டிற்கு என்று ஒரே போடாக போட்டார் . 

அவள் அதிகாரத்தின் அளவை புரிந்து கொண்ட கிஸ்மு, பவ்யமாக பால் குடிக்கும் பூனை முகத்துடன் registration ஐ முடித்து சென்னைக்கு ஃப்ளைட் ஏறினார்.

நம் அனைவருக்குள்ளும் ஒரு கிஸ்மு இருக்கிறார், அவர் உள்ளேயே இருப்பது நமக்கும் , இந்த உலகிற்கும் நல்லது. 

யோக்கியனவான்களுக்கு இவ்வுலகில் வேலை இல்லை. 

Hi, I’m tamilvalai

Leave a Reply