tamil

ஆண்கள் அழுவதில்லை


பாட்டி இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தது.எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் ஒரு நிமிடம் நகர்ந்து. எதிர்பார்த்த ஒன்று என்ற நினைப்பு மின்னலாய் வந்து கூசியது.    இத்தனைக்கும் மிகவும் பிடித்த பாட்டி அவள். ஏன் எனக்கு அழுகை வரவில்லை?.புது மாட்டுப் பாலில் எனக்குப் பாதி கன்றுக்குப் பாதி கொடுத்தவள் இன்று இல்லை.  சோகம் சூழ்ந்து , உலகம் இருண்டிருக்க வேண்டாமா ? கட்டித் தயிரை மெல்ல பிசைந்து, நிலாச் சோறு ஊட்டியவள், இப்போது ஐஸ் பெட்டியில். நிலா சிவந்திருக்க வேண்டாமா. எதுவும் நடக்கவில்லை.

 கடல் தாண்டி வந்து விட்டதால்  , பாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, தரை தட்டி விட்டதோ என்ற ஐயம் எழுந்தது. இதே நான் பத்து வயது பையனாக இருந்திருந்தால் ,  சோகம் அப்பி , வாய் விட்டு அழுதிருப்பேனோ?. முப்பது வயதில் சற்றே முதிர்ச்சி வந்து , உணர்ச்சி குறைந்து , ஜடமாய் உட்கார்ந்திருந்தேன்.வந்த அந்த குறுஞ்செய்தியை ஆறாவது முறையாக பார்த்துக்கொண்டிருந்தேன். 

சுற்றும் பார்த்தாலும் , மனம் இந்தச் செய்தியிலியே உழன்றது. அதோடு ஏன் அழுகை வரவில்லை என்பதும் சேர்ந்துகொண்டது. 

ஒருவேளை கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் இருப்பதால், பொது  நாகரிகம் கருதி  கண்ணீர் வரவில்லை போல என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். என்ன பெரிய பொது இடம்? பிரியமான பாட்டி இறந்துவிட்டாள், கண்களில் ஒரு துளி நீர் வர வேண்டாமா ? இதே கேள்வியை எனக்குள் வீசிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. வீட்டுக்கு வந்து, யாரும் பார்க்காத இடத்தில் இருந்தால் வருமோ? நம்மை சமாதானப் படுத்த தான் மூலையில் எவ்வளவு நரம்புகள்! ஆனால் வீட்டிற்கு வந்தும் அழுகை வரவில்லையே ! வெள்ளையர்களிடம் பேசிப் பேசி அவர்களைப் போலவே உணர்ச்சிகளை பரணில் ஏற்றி விட்டேனா? அவர்களைப் போலவே புரதம் மட்டும் தின்னும் சதைப் பிண்டமாகிவிட்டேனா? 

ஒரு மணி நேரம் கடந்தது . 

ஆபீஸ் மீட்டிங்கில் , யாரோ ஒருவரின் கேள்விக்கு பதில் தரும் சமயத்தில் , சில பத்தாண்டுகளுக்கு முன் பாட்டி செய்த பால் கோவாவின் சுவை நாக்கில் பட்டது. சிரித்தேன் . உடனே உள் மனதில் – இறந்த செய்தி கேட்ட பின்னும் எப்படி சிரிப்பு வருகிறது என்று யாரோ கேட்டார்கள். கேட்டது பாட்டியாக மட்டும் இருக்காது. அவள் அண்டத்தில் பறந்துகொண்டிருப்பள்.  

இதோ இதை எழுதும் வரையிலும் நினைவுகள் ஒரு ஊஞ்சலில் ஆடி வந்து வந்து செல்கிறது. அந்த  நினைவலைகளை ஓரிடத்தில் நிறுத்தி  , அதில் நான் அழுத தருணங்களைத்  தேடிப் பார்த்தேன்.அம்மாவின் அப்பா இறந்தவுடன் அழுத ஞாபகம் இல்லை. அப்பாவின் அப்பா இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. முதல் நாள் கேக் சாப்பிட்டு மறுநாள் எழவில்லை. 

சமீப காலங்களில் என்னை பாதித்த மரணங்கள் இரண்டு. ஒன்று எதிர்வீட்டு விசு மாமா இறந்தது. அடுத்து என் அத்தை இறந்து அவளைப் பிணமாக பார்த்த தருணம் . அவளை தூக்கும் போது, துக்கம் தொண்டை அடைத்து , கண்களில் குளம் நிரம்பியது. நிரம்பிய குளம் வெளியில் கொட்டவே இல்லை. இதைத் தாண்டி சில மரணங்கள் வந்தாலும் , அவை வாழ்வில் ஒரு பகுதி என்ற சிந்தனை எங்கிருந்து வருகிறது. அதெப்படி ஒன்றிரண்டு மட்டும் உசத்தி? 

தேவையில்லாத நேரங்களில் , தேவையில்லாத இடங்களில் அழுதிருக்கிரெனே தவிர , முக்கியமாக நான் கருதும் தருணங்களில் பெரிதாக அழுத ஞாபகம் இல்லை.   ஒரு முறை , மகள் பிறந்த அந்தத் தருணத்தில் , வலது கண்ணில் ஒரு சொட்டு . புது உயிர் வருகிறது, ஒரு சொட்டு கண்ணீர்,  அவ்வளவுதான். 

சிறிய  வயதில், சொந்தத்தில் சாவு வந்தால்  ,  ஸ்கூலுக்கு லீவு என்ற அற்ப சந்தோஷங்கள் வந்திருக்கும். அறியாத வயது.   வளர்ந்தும் சாவு வீடுகளில் எனக்கு பெரிய சோக அனுபவங்கள் இருந்தில்லை. உயிரற்ற உடல் இருந்தால்  அசைகிறதா என்றே பார்ப்பேன். அவர்கள் எழுந்து அமர்ந்தால் என்ன ஆகும் என்று  குதர்க்கம் எட்டிப் பார்க்கும்.  இதில் நான் எங்கே துக்கம் கேட்பது.  அவ்விடங்களில் காலையில் காபி , மதியத்தில் சாப்பாடு என்று வயிற்று அமிலத்திற்கு இரை போட்டதே அதிகம். 

பின்னர் தான் ஒன்று புரிந்தது.சில ஆண்கள் எதற்கும் அழுவதில்லை. அசாதாரண நிலைகளில் கூட , உர் என்று இருப்பார்களே தவிர , கண்களில் திரவியம் வராது. பெண்கள் இந்த விஷயத்தில் பாக்கிய சாலிகள். ஏய் என்று அதட்டினாலே கண்களில் இருந்து கால் லிட்டர் கண்ணீர் விடுகிறாள் மகள். நல்லவேளை இத்தனை ஆண்டுகளில் மனைவியின் கண்ணீர் தேக்கத்தை அதிகம் சோதித்துப் பார்த்ததில்லை. அவள் தாய்க்கு ஒன்று என்று கேட்டதுமே கண்ணீர் கரைபுரண்டு ஓடும். இந்தக் குடும்பத்தில் நானும் இருக்கிறேன். ஆண்கள் ஏனோ , வெற்றிலை போட்டு , துப்பாமல் ,   குதப்பிக் கொண்டே  இருந்தால் ஏற்படும்  படிமம் போல ,  அத்தனையையும் படிமாமகவே மூலையில் தேக்கி வைத்திருக்கிறார்கள். அது என்றோ ஒரு நாள் வெளிப்படும். 

அன்றாவது அழுவார்களா? 

Hi, I’m tamilvalai

Leave a Reply