தமிழ்

யார் இந்த எலான் மஸ்க்

இன்றைய தேதியில் அடிக்கடி உலக செய்திகள் அடிபடுவது இரண்டு விஷயங்கள். ஒன்று உக்ரைன் ரஷ்யா போர், மற்றொன்று ஸ்ரீலங்காவின் இடியாப்ப பொருளாதார நெருக்கடிகள். இதை தாண்டி சைனா ஒரு மாகாணத்தையே அடைத்து கொரொனாவின் ஆறாம் ஆட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படி உலகமே ஒரு பக்கம் சோதனைகளில் சிக்கித் தவிக்க, கூலாக சுமார் 45 பில்லியன் டாலர் கொடுத்து, ட்விட்டரை வாங்க கடிதம் அனுப்புகிறார் எலான் மஸ்க்.

கடும் நெருக்கடியில் இருக்கும் ஸ்ரீலங்காவின் மொத்த தேவையே முப்பது பில்லியன் டாலர் தான் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தியை பார்த்தவுடன் எப்படித் தோன்றியிருக்கும்?எலான் மஸ்க் போன்ற பெரும் பணம் படைத்தோர் நினைத்தால் இந்த பிரச்னையை தீர்க்க  முடியும். அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? லாபம் இல்லாத ஒன்றை செய்ய நினைத்துக்கூடப் பார்க்காதவர்கள்  தான் இன்றைய தேதியில் பெரும் பணம் படைத்தவர்களாக உருவாகிறார்கள். 

ஒரு மனிதன் , தன வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ,எங்கோ மூலையில் இருக்கும் ஒரு நாடு கஷ்டப்படுகிறது என்று  வாரிக் கொடுத்துவிட முடியுமா? ஏன் இந்த விபரீத கம்யூனிச சித்தாந்தம் என்ற குரல்களும் வந்தபடியே உள்ளன. உதவி செய்வதும், செய்யாததும் அவரவர் விருப்பம் தான். இருந்தாலும், உலகெங்கிலும் எப்போதெல்லாம் பணப்பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் பணக்காரர்களின் தலை உருளும். 

இதற்கு மற்றொரு உதாரணம் ஆப்பிள் நிறுவனம், கிரீஸ் தேசமே திவாலாகும் நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அன்று அப்பிளின் மொத்த கையிருப்பு தொகையை கொடுத்தால் சரியாகிவிடும் என்றார்கள். நமது புண்ணிய தேசத்தில், தொட்ட தொன்னூருக்கும் அம்பானி, அதானியை வம்புக்கு இழுக்கிறோமே அப்படி. 

மத்திய வர்கத்தின் சிந்தனையே இப்படித்தான் இருக்கும் போல. பணம் படைத்தவனெல்லாம் வில்லன்.  எப்படியும் ஏமாற்றி சம்பாதித்தவன் தான் என்று ஒரு விஷயமும் தெரியாமலேயே முடிவுக்கு வந்துவிடுவோம்.   இதை வைத்து நடக்கும் அரசியல் ஒரு பக்கம். மக்களின் மனநிலை ஒரு பக்கம் என்று, இரு பக்கமும் வசைபடும் இனமே இந்த பெரும் பணக்கார இனம். 

சரி , விசயத்திற்கு வருவோம். 

நாற்பது பில்லியன் டாலர் பணத்தை விட்டெறிந்து ஒரு கம்பெனியை முழுசாக வாங்கும் எலான் மஸ்கின் இன்றைய  சொத்து மதிப்பு – 275 பில்லியன் டாலர். மூஸாவை போல தங்கம் கிடைத்து செல்வந்தரானவர் அல்ல. சொந்த உழைப்பில், பல கம்பனிகளை உருவாக்கி அதை விற்று, அதில் வரும் பணத்தை வைத்து அதைவிட பெரிய கம்பெனிகளை உருவாக்கியவர் இவர். இன்று நடக்கும் நடப்புகளை வைத்து தொழில் செய்பவர்கள் பணக்காரர் ஆகிறார்கள். ஆனால் நாளை இப்படித்தான் இருக்கும் என்று நம்பி , அதை நோக்கி ஒரு சிறு கல்லை நகர்த்தி வெற்றி பெறுபவர்கள் பெரும் பணக்காரர் ஆகிறார்கள். எலான் மஸ்க் இதில் இரண்டாம் சாதி. 

கடைக்கோடியில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் மஸ்க் . சிறுவயதிலேயே பெற்றோர் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். இந்த சோகங்களைத் தாண்டி  , தன் சிந்தனைகளை கம்ப்யூட்டர் சமாச்சாரங்களின் பக்கம் திருப்பினார். அவரது குடும்பம் அப்போதே ஓரளவுக்கு செல்வம் படைத்த குடும்பம் ஆதலால் மஸ்கிற்கு கேட்டதெல்லாம் கிடைத்தது . 1980 களில் கம்ப்யூட்டர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. எந்த ஒரு தொழில்நுட்பமும் முதலில் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருந்தே வெளிவரும். அன்றைய தேதியில் மூன்றாம் தர நாடக இருந்த  தென் ஆப்பிரிக்காவில்  ,  கிடைத்த புத்தகங்களை வைத்து ப்ரோக்ராமிங் படித்தார். பள்ளிகளில் மற்றொரால் கேலிக்கும் கிண்டலுக்கும் உண்டான மஸ்க் , முழு கவனத்தையும் கம்ப்யூட்டர் பக்கம் திருப்பினார் . 

தனது பதிமூன்றாம் வயதில் ஒரு கம்ப்யூட்டர் கேம் ஒன்றை உருவாக்கி, அதை ஐநூறு டாலருக்கு விற்கவும் செய்தார். 

பெரும் பணக்காரர்களின் முதல் சூத்திரம் இது தான். அவர்கள் ஆகச்  சிறந்த வியாபாரிகள். தன்னிடம் இருக்கும் ஒன்றை, எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், எப்படி விற்க வேண்டும் என்று சிறு வயதிலேயே கற்றவர்கள். 

பதின் பருவ வயதில் மஸ்க்கிற்கு தென் ஆப்ரிக்காவில் இருந்தபடியே படித்த மஸ்கர்கு , அமெரிக்காவின் மேல் தீராக்காதல் உண்டானது. அமெரிக்கா செல்ல அம்மாவின் உதவியை நாடி ,முதலில் கனடா சென்று பின்னர் அமெரிக்காவில் நுழைந்தார் . அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை .

1960களிலேயே  இணையம் (இன்டர்நெட்) உருவாக்கப்பட்டிருந்தாலும் , தொண்ணூறுகளில் ஏச் டி எம் எல் வந்த பிறகே வீரியம் பெற்றது  . இதை உணர்ந்த மஸ்க் ஒரு திட்டத்தை தயார் செய்தார் . அந்நாட்களில் பொருட்களை வாங்க அமெரிக்கர்கள் பெரும்பாலும் எல்லோ பேஜஸ் எனும் தடித்த புத்தகத்தையே நாடினர் . மஸ்க் அதை இணையத்தில் அனைவரும் பார்த்து உபயோகிக்கும்படி பதிவேற்றி ஒரு தொழிலாக மாற்ற முயன்றார். முதலீட்டுக்கு பணக்கார தந்தையின் கதவை தட்டினார் . அவர் எதிர்பார்த்தது போலவே அது வெற்றி பெற்றது . நாலு வருட கடின உழைப்பை அதில் கொட்டினார். 

1999 ம் ஆண்டு இணையம் வெறி பிடித்த நிலையில் இருந்தது . டாட் காம் பூமின் உச்சகட்டத்தை எட்ட தொடங்கியிருந்தது . நாம் நம் பெயரை போட்டு ஒரு இணையதளம் ஒன்றை தொடங்கி அதை நாலு பேர் உபயோகப் படுத்தினால் போதும் . அது லாபமே தராவிட்டாலும், நீ நான் என்று போட்டி போட்டு முதலீடு செய்ய வரிசையில் வந்து விடுவார்கள் . நிலைமை அப்படி இருக்க , லாபம் கொடுக்கும் தொழிலை நடத்தி வந்த மஸ்கை மட்டும் விட்டிவைப்பர்களா என்ன? 

அவரது கம்பெனியை முன்னூற்று சொச்சம் மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது காம்பாக் நிறுவனம் . இதில் மஸ்கிற்கு கிடைத்தது முப்பது மில்லியன் . இந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம் ? பணத்தை அப்படியே ஒரு வங்கியில் போட்டு , வரும் வட்டியை கணக்கு போட்டபடியே ஈஸி சேரில் சாய்ந்திருப்போம் . அந்த  யோசனையாவது நம்மை கடந்து செல்லும் . 

ஆனால் மாஸ்க் செய்ததே வேறு . வந்த பணத்தின் ஒரு பகுதியை எடுத்து அடுத்த கம்பெனியை ஆரம்பித்தார் . இது வெட்டியாளர்களுக்கே உரிய பழக்கம். அடுத்த கம்பெனியை விற்று அதிலிருந்து உருவான பே பாலின் சி ஈ ஓ ஆகி , அதிலிருந்து துரத்தப்பட்டார் . ஆனாலும் பே பாலின் பங்குகளை அப்படியே விட்டு வைத்தார். அந்த பே பாலை ஈ பே வாங்கிய போது, மாஸ்க் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு 165 மில்லியன்  . தன்னை துரத்தி விட்ட பே பால் என் கால் தூசிக்கு சமானம் என்று அவர் அன்று அதன் ஷேர்களை விற்கவில்லை. இது சொல்லும் சேதி , உணர்ச்சிவசத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்பது தான் .

இப்படி 500 டாலரில் முதல் கணக்கை தொடங்கி , அதை மில்லியனாக மாற்றி , பின்னர் பில்லியங்களாகவும் மாற்றினார். உபயம் டெஸ்லா ஆட்டோ, ஸ்பேஸ் எக்ஸ். உலகமே ஒரு பக்கம் ஓடினால் அவர் எதிர் திசையில் , எதிர்காலத்தின் திசையை கணித்து ஓடுவார். மிகப்பெரிய கார் கம்பெனிகளே கால் வைக்கத் தயங்கிய பேட்டரி கார் விசயத்தை ஜஸ்ட் லைக் தட் தொட்டு வெற்றி கண்டார் . தனது டெஸ்லா ஆட்டோ பேட்டரி கார்களை மட்டுமே தயாரிக்கும் என்று சொல்லி அதில் வெற்றியும் கண்டார். அன்று தயங்கிய கார் கம்பெனிகள் இப்போது தான் விழித்துக் கொண்டு பர பரவென பேட்டரி கார்களை தயாரிக்கிறார்கள் . 

மற்றொரு கம்பெனியான ஸ்பேஸ் எக்ஸின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. திவாலாகும் நிலைக்கே சென்று திரும்பியது. எலான் மஸ்கே திவாலாகும் நிலையில் இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று இஸ்ரோவிற்கு போட்டியாக பண்டல் பண்டலாக சேட்டிலைட்களை அனுப்புகிறது . ஏவிய ராக்கெட்டுகளை மறு சுழற்சிக்கு விட்டு நாசாவுக்கே டஃப் காட்டுகிறார் . இப்போது உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிசினஸ் மேன் யார் என்றால், எலான் மஸ்கின் பெயரும் அதில் இருக்கும்.  

Hi, I’m tamilvalai

Leave a Reply