தமிழ்

காக்கையும் எதிர்வீட்டுக்காரனும்


ஐந்து நிமிடம் பறந்து , ஒரு வீட்டை அடையாளம் கண்டு அமர்ந்தது, அந்தக்  காகம்.  வீட்டை நோட்டம் விடுவது போல அங்கும் இங்கும் அதன் தலையை சடக்-படக்கென  திரும்பி பார்த்தது. 

நொடிக்கு ஒரு முறை அக்குலை சொரிந்து, இந்த வீடு தானா என்று  சரி பார்த்துக் கொண்டது.  ஆம், இதே வீடு தான். 

“அடேய் , பரதேசிப்பயலே ! ” என்று கத்த ஆரம்பித்தது . மனிதர்களுக்கு  “கா கா” என்றே கேட்டிருக்கும் … 

” நீ வச்ச சோத்த தின்ன  என் புள்ளைக்கு, பேதியா போகுதுடா, நாசமா போறவனே ”  என்று தொண்டை வற்ற கதறியது. 

அதை கேட்டு , அதன் இனத்தை சேர்ந்த நாலு பேர் அங்கு கூடினர்.. அவர்களிடமும்  அலகால், அந்த  வீட்டைக்  காட்டி , தன் மனக்குமுறலை கொட்டியது .  அவர்களும் தங்கள் பங்கிற்கு “கா கா கா “ என வருத்தத்தை பதிவு செய்தனர் . 

அந்த வீட்டுக்காரன் வெளியே வந்து பார்த்தான் . மனைவியை அழைத்தான். 

“நம்ம ஊட்டுக்கு யாரோ வரப் போறாங்க போல, இம்புட்டு காக்கா  வந்து கத்துது ” என்று மூக்கை நோண்டினான்..

அதை கேட்ட அத்தனை காகமும் திகைத்தன. முதலில் வந்த அப்பா காகம் அவனது முகத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டது. மற்ற காக்கைகள் கலந்தாலோசித்து, பஞ்சாயத்தை கூட்டுவது என்று முடிவு செய்தன. தலைவருக்கு செய்தியும் அனுப்பின. 

அந்த அப்பா காகம் மட்டும் அங்கேயே காத்திருந்தது. கால் மணி நேர காத்திருப்பின் முடிவில் அவன் வெளியே வந்தான். அவனை பின் தொடர ஆரம்பித்தது. முதலில் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றான் . ரத்னா கபே மொட்டை மாடியில் இருந்து அவனது செயல்களை உன்னிப்பாக கவனித்தது . அவன் நகர நகர அவனது பையில் கணம் கூடியது . 

காய்கறிகளை முடித்து கரிக்கடை பக்கம் சென்றான் . சிக்கலான சந்து என்பதனால் அவன் இருக்கும் இடம் சரி வர தெரியவில்லை . வெளியில் வரும் பொழுது கருப்பு நிற பிளாஸ்டிக் கவர் ஒன்று அதிகமாகியிருந்தது. மறுபடியும் வீட்டுக்கு வந்தான். 

அதற்குள் அவன் வீட்டின் எதிரில் இருந்த பழைய தண்ணி டேங்கில் பஞ்சாயத்து கூடியிருந்தது. தலைவர் நடுவில் இருக்க, வட்டமாக மற்ற காக்கைகளும் , கடைசியாக தலைவருக்கு நேரெதிரே அப்பா காகம் அமர்ந்தது. 

முதலில் அந்த காகத்திடம், அதன் மகனை குறித்து விசாரித்து விட்டு, வழக்கை ஆரம்பித்தனர். 

தலைவர் ஆரம்பித்தார் – “ நம்ம ரங்கன் எல்லா விஷயத்தையும் சொன்னான், எனக்கு ஒரே கேள்வி தான், இந்த வீட்ல சாப்பிட்டு தான் உன் புள்ளைக்கு இப்படி ஆச்சுன்னு சொல்றதுக்கு எதுவும் ஆதாரம் இருக்கா” 

“இருக்கு, இந்த தெரு எங்க பாட்டன் காலத்தில் இருந்து  என் குடும்பத்துக்கும், சொக்கன் குடும்பத்துக்கும் எழுதி  கொடுத்தாங்க. நேத்திக்கு என் பிள்ளையும் , சொக்கனும் தான் வந்தாங்க” என்றது அந்த அப்பா காகம். 

சொக்கனை அழைத்தார்கள் 

“ஆமாங்கய்யா , நேத்திக்கு  நான் இவன் பையன் கூட வந்தேன் , அதோ அந்த ரோஸ் கலர் வீட்ல, திவச சாப்பாடு போட்டாங்க,  நான் அத எடுத்துக்கிட்டேன், அவன் பையன் இந்த வீட்ல தான் சாப்பிட்டான்” என்று சொக்கன் வாக்குமூலம் கொடுத்தான். 

தலைவர், அதை ஆமோதித்து, “சரி, அடுத்து, அவன் வேணும்னே கெட்டுப் போன சோறு தான் வச்சான் , அப்படிங்கறதுக்கு ஆதாரம் இருக்கா ? என்றதும் அப்பா காகம் அவரை இடை மறித்து 

“என் பையனுக்கு பேதியா போகுது, பழைய சோறு சாப்பிட்டெல்லாம், அவனுக்கு அப்படி ஆவாது.  கெட்டுப்போன சோறு தின்னா தான் அப்படி ஆகும்”  என்றது , கண்களில் கோபம் கொப்பளிக்க.

“எனக்கு உன் ஆதங்கம், ஆத்திரமெல்லாம், புரியுதுய்யா. ஆனா முழுசா விசாரிக்காம, தண்டனை கொடுக்க முடியாதுல்ல “ , “ இங்க வேற யாராச்சும் இந்த வீட்டுக்காரனுக்கு எதிரா ஆதாரம் வச்சுருக்கீங்களா” என்றது தலைவர் காகம்.

மற்ற காகங்கள் , அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தன . அவர்களின் சொந்தகளுக்கும் சொல்லி அனுப்பின. சிறிது நேரத்தில் காகக் கூட்டம் இரட்டிப்பானது. ஆனாலும் அந்த வீட்டுக்காரனுக்கு எதிராக யாரிடமும் ஆதாரம் இல்லை.  

“நாம ஏன் ஓட்டு போட்டு முடிவெடுக்க கூடாது” என்று புதிதாக வந்த அந்த பெருத்த காக்கை கொளுத்திப்போட, அதற்கு பல காகங்கள் “கா கா “ ஆமோதித்தன. 

“ஒட்டு போட்டு முடிவு பண்ணா, நான் எதுக்கு “ என்று தலைவர் தன் அலகை இடமும் , வலமும், குறுக்கும் நெருக்கும் திருப்பி தன் மறுப்பை பதிவு செய்தது. 

அதற்கும் சில காகங்கள் “கா கா “ போட்டு  ஆமோதித்தன.  

இத்தனை சத்தத்தையும் கேட்டு வெளியில் வந்தான் அந்த வீட்டுக்காரன். 

“அடியே, என்னமோ நடத்துக்குதுடி, இம்புட்டு காக்கா வந்திருக்கு, பழசு அத்தனையும் வெளில போட்டு விடு” என்றான். 

“வீட்ல பழைய சோறெல்லாம் இல்ல, அழுகிப்போன காய்,பழம்  மட்டும் தான் இருந்துச்சு, அதையும் இப்ப தான் குப்பைல போட்டேன்” என்ற அவன் மனைவியின் குரல் சன்னமாக கேட்டது. 

“பரவால்ல அத எடுத்து இதுக்கு குடு, துண்ணுட்டு போய்த் தொலையட்டும் , கத்தி கத்தி, எரிச்சலா இருக்குது ” என்றான் அந்த படா மீசை வீட்டுக்காரன். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த காகங்கள் தலைவரை நோக்கி தலையை திரும்பின. 

தண்டனைக்கான நேரம் வந்துவிட்டது. 

தலைவரும் தொண்டையை செருமி ஆரம்பித்தார். 

“இந்த வீட்டுக்காரன் இப்ப பேசுனத வச்சே, இவன் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியுது. அதனால இவன், நம்மள மறக்கவே முடியாதபடி பண்ணிரலாம்” 

மற்ற காகங்கள் ஆமாம், ஆமாம் என்று கரைந்தன.  

“நாம் எல்லாரும், இவன் முகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கணும். இவன் இன்னிலேர்ந்து எங்க போனாலும், அவன் தலையில தான் நாம ரெண்டுக்கு போவணும். இவன் பொருள் எது வெளில இருந்தாலும், அது காரோ, வண்டியோ, காயப்போட்ட இவன் வேட்டியோ, ஜட்டியோ, எது கிடைச்சாலும், அதுல போவணும்” என்று சொல்லி மூச்சு விட்டுவிட்டு, தலைவர் தொடர்ந்தார்.

“நாம மட்டும் இல்ல,  நம்ம சங்கதியினரும், நம்ம சொந்தங்களும், பந்தங்களும் அத கடைபிடிக்கணும். இவன் எந்த ஊரு போனாலும், நாம தகவல் சொல்லி, நம்ம இனத்தான் இவன எங்க பார்த்தாலும் , தலையிலேயே பேலனும்  ,புரியுதா” 

கா-கா சத்தம் விண்ணை பிளந்தது. 

“என்னப்பா உனக்கும் சரின்னு படுதா” என்று தலைவர் அப்பா காக்கையை பார்க்க, அதற்கும் இந்த தண்டனை சரியென பட்டது. 

“கா கா” என்று கண்றாவியான குரல் ஒன்று கேட்டது. அந்த வீட்டுக்காரன், கெட்டுபோன சங்கதிகளை அவன் காம்பவுண்ட் சுவரில் வைத்து , இந்தக் காகங்களை  கூப்பிட்டான். 

அங்கிருந்த காகங்களுக்கு வந்த கோபத்தை  எழுத்தில் அடக்கிவிட முடியாது. 

“நீயே ஆரம்பிச்சு வை”  என்று தலைவர் உத்தரவிட , அப்பா காகம் தீர்க்கமாக பறந்தது. 

“தொ வந்துடுச்சு பாரு, கா கா” என்று வாயை திறந்தான் அந்த வீட்டுக்காரன். 

அதே நேரம் அந்த அப்பா காகமும் , தன் கழிவுகளை கீழிறக்க, அது எங்கே விழுந்தது என்று சொல்லவா வேண்டும்? 

ஆனந்த கூச்சலிட்டன அங்கிருந்த காக்கைகள். 

பி.கு. அவன் இறக்கும் வரை, இது தொடர்ந்தது. 

Hi, I’m tamilvalai

Leave a Reply