தமிழ்

கருட கமன வ்ரிஷப வாகனா(கன்னடம்) – கல்ட் கிளாசிக்

ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் , கெட்டவனாக மாறுவதும்  சூழ்நிலையை சார்ந்ததே. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

ஆனால் யார் கெட்டவன்? அவன் அப்படி ஆவதற்கான காரணங்கள் என்ன. இதை அலச ஆரம்பித்தால் ஒரு தர்க சிக்கலை சிந்திப்போம்.   

உதாரணமாக , ஒருவன் கொலை செய்கிறான், அவன் கெட்டவனா ?நம்மில் முக்கால்வாசி பேர் இதற்கு ஆம் என்ற பதிலையே தருவோம். ஒருவேளை  கொலை செய்தவன் ஒரு கணவனாக இருந்து  , தன் மனைவியை கற்பழித்து கொடுமை படுத்திய ஒருவரை கொன்றால்? இதில் யார் கெட்டவன்? கொன்றவனுக்கு ஒரு நியாயம் கிடைத்து, செத்தவன் கெட்டவன் ஆகிறான். அதே போல , ஒருவன் சாகப்போகும் தன் மகனுக்கு ஆபரேஷன் செய்ய தேவைப்படும் காசை ஒரு வயோதிகரிடம் கொள்ளையடித்தால்? இதில் எது நியாயம்?   இதுபோன்ற தர்க்க ரீதியான சிக்கல்கள், பல கேள்விகளை நம்மிடம் உண்டு செய்யும்.  இதற்கு ஒரு விடை கிடைக்க வேண்டுமென்றால் , இரண்டில் யார் அதிகமாக தவறு செய்கிறார்கள், அல்லது யாரை நமக்குப் பிடிக்கவில்லையோ அவர்களை கெட்டவர்களாக எடுத்துக்கொள்ளலாம். இது சுலபமான ஒரு வழி . 

அடுத்து சாதாரண மனிதர்களான நம்மில் பலருக்கு, வாழ்நாளில் ஒரு அதிதீவிர கெட்டவனை பார்க்காமலேயே கூட வாழ்க்கை முடியக்கூடும். காரணம் ஒன்றே, நம்மை கெட்டவனாக்க ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இதையே, சாது மிரண்டால், அது இது என்றும் உருட்டலாம்.  சரி, இந்த தர்க்க சிந்தாந்தங்களுக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் ? இந்த படம் முடியும் பொழுது இதுவரை நாம் பேசிய ஒரு கேள்வியாவது மனதில் வரும். அதுவே இந்த படத்தை கொண்டாடவும் செய்யும். இந்த படத்தில் இவர் நல்லவர் , அவர் கெட்டவர் என்று  சட்டென்று சொல்லிவிட முடியாது. 

கதையை பற்றி சொல்ல வேண்டுமென்றால் , நாம் பலமுறை பார்த்து ரசித்த டான் /நண்பர்கள் கதை.  நண்பர்கள் இருவர், இருவரும் ஒரு சம்பவத்தால் அந்த ஏரியா தாதா ஆகி விட, அதிலிருந்து அவர்களுக்குள் என்ன நடக்கிறது , அதில் ஒரு காவலதிகாரி வந்து என்னென்ன செய்கிறார் , இவர்களில் ஜெயித்தது யார் என்பதே சாராம்சம்.   உடனே நாயகன், தளபதி படங்களில் ஆரம்பித்து, மகான் போன்ற சுமார் படங்களும்,  ஆயிரம் உப்புமா படங்களும்  ஞாபகம் வரலாம். இந்த கதையை/ படத்தை  பார்க்க வேண்டுமா என்றும் தோன்றலாம். நிற்க.  இது சினிமா ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்.

ஒரு சாதாரண கதையை எப்படி மிகச் சிறந்த படைப்பாக/கிளாசிக்காக  மாற்ற முடியும் என்பதற்கான சாட்சி இந்த படம். அதுவும் ஒரு பெரிய பட்ஜெட்டோ, பயங்கர சண்டை காட்சிகளோ , ரொமான்ஸ் கண்றாவிகளோ  துளியும் இல்லாத படம் இது. 

படத்தின் கதை மாந்தர்களாக சிவா, ஹரி மற்றும் பிரம்மையா. புராண புருஷர்களாக இல்லாமல், மனிதர்களாக வளம் வருகிறார்கள்.  சிவாவின் கதாபாத்திரம் சிவபெருமானைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்றாகவே உள்ளது . 

ஹரியின் கதாபாத்திரமும் ஒரு ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை காட்டுகிறது. நமக்கு ஏற்படும் ஆசைகளும் , பேராசைகளும், பொறாமைகளும்  அவனையும் ஆட்கொள்கின்றன. 

மூன்றாவதாக பிரம்மையாவின் கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய திருப்புமுனைகளுக்கு காரணமாக அமைகிறது. அவமானப்படும் காட்சிகளிலும், செய்வதரியாது திகைக்கும் காட்சிகளிலும், படத்தின் முடிவில் அவர் செய்யும் ஒன்றும், அவரது கதாபாத்திரத்தை நிறைவு செய்கின்றன. 

சுமாரான கதை, புதிய நடிகர்கள் இருந்தும், வலுவான  திரைக்கதையையும், சில பல மாஸ் சீன்களையும் வைத்து எப்படி ஒரு கல்ட் படத்தை எடுக்கலாம் என்பதற்கு சாட்சி இந்த படம். அதே போல சுமார் பட்ஜெட்டிலேயே , ஒரு படத்தை  எங்கோ கொண்டு செல்லலாம் என்பதற்கான உதாரணங்கள் இந்த படம்.

உதாரணமாக ஒரு காட்சியை சொல்லலாம். முதன் முதலில் ஹரிக்கு  ஏற்படும் ஒரு அவமானத்தை  பார்க்கும் சிவா எப்படி transform ஆகிறான் ,அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அவனது சோகங்களும், துயரங்களும், அதோடு கலந்து தெறிக்கும் பின்னணி இசையும் என்று நம்மை ஒரு பரவச நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து படம் , படம் சூடு பிடிக்கிறது. 

அடுத்ததாக புலி ஆட்டம் ஆடும் அந்த பாடலை அளவு சீக்கிரம் நம்மால் மறக்க முடியாது. 

மனிதன் போலீஸ் ஆனால் எப்படி இருப்பானோ,  அதுவே பிரம்மம் அய்யாவின் கதாபாத்திரம். அவருக்கும் கோபங்கள் உண்டு. அதே நேரத்தில் பயமும் உண்டு. அவர் வந்து இருக்கும் இடத்தில் சந்திக்கும் ஒவ்வொரு அவமானங்களும் அவரை எப்படி மாற்றுகின்றன என்பது ஒரு நல்ல திரைக்கதைக்கான பாடம்.  

படத்தின் சிவா கதாபாத்திரத்தில் நடித்தவர் அந்த படத்தின் இயக்குனர் . வழுக்கை தலை, ஹீரோவுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாதவர், பின்னி எடுக்கிறார். பிரம்மையா கதாபாத்திரமும் அப்படியே. 

அடுத்ததாக, ஸ்லோ மோஷன் காட்சிகள். அப்பப்பா ஆரம்பத்தில் என்னடா இது என்று ஆரம்பிக்கும் ஸ்லோ மோஷன் காட்சிகள், ஓர் இடத்தில் ஆர்கஸம் தரும் அளவிற்கு வருகிறது. 

மண்ணின் மைந்தர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அந்த மங்களா தேவி ஊரும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கிறது. படம் முடியும் தருவாயில் சிட்டி ஆப் காட் படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை, 

போகிற போக்கில் வன்முறை காட்சிகள் நிறைய இருப்பதால் , ரத்தம் ஒத்துக்கொள்ளாதவர்கள் ஒதுங்கிக் கொள்வது நல்லது. மற்றபடி சினிமா ரசிகர்களும், துணை இயக்குனர்களும் பார்க்க வேண்டிய படம்.

Hi, I’m tamilvalai

Leave a Reply