கடைசி விவசாயி – உன்னதமான அனுபவம்

நம் கடவுள்களில் முருகனுக்கு ஒரு பெரும் இடம் உண்டு. தமிழ் கடவுள் என்று ஒரு வட்டத்தில் முருகனை அடக்க பார்த்தாலும், முருகனின் ஈர்ப்பு அளக்க முடியாதது.  சின்ன வயதிலேயே அண்ணனால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தில் ஆரம்பித்து, கோவணத்தில் காட்சி தந்து, போர் புரிந்து,  இரட்டை திருமணம் வரை செய்த கடவுள்கள் எத்தனை உண்டு இங்கே?நம்மை போல அவருக்கு தொப்பை கூட இருந்திருக்க கூடும், யார் கண்டது. இப்படி நமக்கும் முருகனுமாக தொடர்பு, தொப்புள் கொடி உறவு  .  நம்மிடம் மிஞ்சிய அறுபடை வீடுகளில் முருகனின் வளர்ச்சியை காணலாம். மலைகளின் கடவுள், போர்களின் கடவுள் என்று ஆரம்பித்து, காதல் கடவுள் என்பது வரை முருகனுக்கு பொருந்தும் . என்னடா பட விமர்சனம் என்று போட்டு விட்டு , முருக புராணமா இருக்கே என்று யோசிக்க வேண்டாம். இந்த கடைசி விவசாயிக்கும் முருகனுக்கும் ஒரு பெரும் தொடர்பு உண்டு. 

சரி படத்திற்குள் செல்வோம். 

நம் தலைமுறையினர் முக்கால்வாசி பேர் ஒன்று கிராமத்தில் இருந்து வந்திருப்போம். அல்லது கிராமத்திற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய அளவிலாவது ஒரு தொடர்பை வைத்திருப்போம். இன்று நினைத்தபடி  கிராமத்திற்கு சென்று ஒரு நாள் நம்மால் தங்க முடியுமா என்றால், சந்தேகமே. அப்படிபட்டோற்கென்றே ஒரு படத்தை எடுத்திருக்கிறார் மணிகண்டன். நம் கை பிடித்து ரம்மியமான ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். கதை மாந்தர்கள் யாரும் “நடிக்கவில்லை” என்பதால் நம் குடும்பத்தின் கதை ஒன்றை அருகில் இருந்து பார்ப்பதை போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது இந்த படம்.

கதை இது தான் என்று வரையறுக்க முடியாத ஒரு படம் இது. சற்று கூட செயற்கை தனமோ , வேண்டுமென்றே புகுத்தப்பட்ட கமர்ஷியலிசமோ இல்லாத படம். கதையின் நாயகன் எண்பது வயதுக்காரர். அதனாலேயே , சண்டை, காதல் போன்ற கிளிஷே இத்யாதிகளுக்கு இடம் இல்லை. ஆனாலும் படத்தில் காதல் உள்ளது, சண்டை உள்ளது, சமூக கருத்து உள்ளது. எதையும்  திணிக்காமல் , அதே சமயம் போகிற போக்கில் சொல்லாமலும் ஒரு மெல்லிய கோட்டில் சொல்லவேண்டியதை சொல்கிறது இந்த படம். 

ஹீரோவான  மாயாண்டிக்கு வயது ,எண்பது. இன்று  நிஜத்தில் அவர் இல்லை, ஆனால் திரையில் பல நூறு ஆண்டுகள் வாழ்வார். அவரின் தயங்கிப்  பேசும் தன்மையும், காது கேட்காமல் மறுமுறை கேட்கும் இடங்களும், நீதிமன்றத்தில் காட்டும் அப்பாவித்தனமும், ஆடு , மாடு, பயிர்களை பிள்ளைகளாகவே நினைக்கும் அந்த உன்னதமும் , அது திரையில் வெளிப்பட்டிருக்கும் விதமும் , கண்களை குளமாக்கும் .  அவரின் வாழ்க்கையில் ஒரு கிராமத்தின் வாழ்க்கையையும் , அதன் பிரச்சனைகளையும் காணலாம். . அப்பன் ஆதி சிவன், அவர் மாயாண்டி, மகன் ராமையா என்று லேயர்களும் படத்தில் உண்டு. , அவருக்கும் மயிலுக்குமான உறவும் அப்படியே

அடுத்து முருக பக்தரான விஜய் சேதுபதி.  அவரின்  கதாபாத்திரம் உண்டு செய்யும் அதிர்வலைகளை சொல்லினால் அடக்கி விட முடியாது. அந்த  கதாபாத்திரத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரு உலக புகழ்பெற்ற சிறுகதையை  போன்றது. அவர் சித்தரை சந்திக்கும் காட்சி, ஒரு அதி அற்புதமான காட்சி. வரும் நேரம் மிக குறைவு ஆனாலும் மனிதன் பின்னி எடுத்துவிடுகிறான். 

இயக்குனர் மணிகண்டன் – அவரது சிறந்த படம்.  ஆங்காங்கே அவர் வைத்திருக்கும் வசனங்கள் பிற்பாதியில் முழு அர்த்தத்தை கொடுக்கும். அதே போல, எவ்வளவு சிறிய கதாபாத்திரம் ஆனாலும் , அதற்கென்று மெனெக்கெட்டு அதற்கு ஒரு நல்ல முடிவையும் தருகிறார். நினைத்திருந்தால்  எவ்வளவோ இடங்களில்  நுண்ணிய அரசியலை புகுத்தியிருக்கலாம் , ஆனால் செய்யவில்லை. அதேபோல் இந்த படத்தை மெலோ ட்ராமாட்டிக் ஆக மாற்றி சோகத்தைப் பிழிந்து , எடுத்திருக்க முடியும், அதையும் செய்யவில்லை. கிளைமாக்ஸ் அருகில் வரும் காட்சி  ஒரு உதாரணம், நம் கண்கள் அவ்விடத்தில் நிறைந்தே தீரும். ஆனால், அவர் எல்லாவற்றிலும் உள்ள நல்லதை பெரிதாக காட்டி , அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  

படம் பார்த்து இரு நாட்கள் கடந்தும் என்னை ஆட்கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. இது இந்த வருடத்தின் மிக சிறந்த படம், தேசிய விருது உறுதி, தராவிட்டால் அதற்கு தான் அசிங்கம்.

Leave a Reply