தமிழ்

விபினிண்ட ஜீவிதம் – பாகம் 2

First Part – Herehttps://writervivek.com/2025/01/tentacles-of-love-1/

ராஜ கோபுரத்தில் இருந்து ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில்  இருந்தது சுந்தரி டீ ஸ்டால் . பேனர்கள் சூழ்ந்த கடை போர்டுகளுக்கு மத்தியில் , அழகாக வரையப்பட்ட மங்கை ஒருத்தியைக் கொண்டிருந்தது அந்த டீக்கடை . ஒரு தேய்ந்து போன மர பெஞ்ச், அதற்கு பக்கவாட்டில் ஒரு மேஜை, அதன் மேல் பல கண்ணாடி ஜார்களில் இனிப்புப் பண்டங்கள், அதன் பின்னால் இருந்த சேரில் விபினின் அன்னான் சுஜின். மலையாள ஹீரோக்களுக்கே உண்டான கோதுமை நிறம். நறுக்கி வெட்டப்பட்ட மீசை, திரண்ட தோள்கள், யார் பார்த்தாலும், வயது முப்பதுக்கு மேல் என்று சொல்ல மாட்டார்கள்.    

அந்தக் கடைக்கு  ஸ்ரீரங்கத்து  ஆட்கள் நாயர் கடை என்றே பெயரிட்டு இருந்தார்கள் . இது கடை ஓனர் சுஜினுக்கும் ,விபினுக்கும் கடுப்பைத் தந்தாலும் , பெரிதாக வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். “நாயர் ரெண்டு ஸ்பெஷல் சாய் “ என்று அவ்வபோது வம்பிழுக்கும்  ஸ்ரீரங்கத்தார்களுக்கு மட்டும் கழுதை லத்தி போல இருக்கும் பழைய டீத்தூளில், சாய் போட்டு , அதை மறைக்க இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுத் தருவார்கள் . இவர்களும் , “என்ன சேட்டா, சர்க்கரை தூக்கலா, ஹாஹா “, என்று சப்பு கொட்டி குடித்துவிட்டு  நகர்வார்கள் . 

அன்றும் அப்படித்தான் , இரண்டு கட்டம் போட்ட சட்டை பார்ட்டிகள் சுஜினிடம் , மலையாளத்து நடிகர்கள் ஒரு காலத்தில் சகிலா பட வசூலைப் பார்த்து பயந்து நடுங்கினார்களாமே என்று ஒரண்டை இழுக்கப் பார்தார்கள். சுஜின் சிரித்தபடி தலையாட்டி தன் வேலையைப் பார்த்தபடி இருந்தார் . அவர் முகத்தில் மம்முட்டியின் சாயல் நன்றாகவே தெரியும் . மம்முட்டியைப்  போலவே கலையான முகம்   , மம்முட்டியைப் போலவே  மிருதுவான சருமம் . ஆனால் சுஜின் மோகன்லாலின் ரசிகர் . 

“ நாயர் ரொம்ப விவரம் , எதுக்கும் வாய திறக்கிறது இல்லை “ என்று சொன்னபடி முதல் கட்டம் போட்ட சட்டை ஜோப்பில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கும், விபின் அவன் நண்பர்களுடன்  அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் வந்து அமர்த்ததில் இருந்து எதோ கார சார விவாதம் செய்து கொண்டிருந்தனர். 

“அவன் என்ன பெரிய ஆளா, எவன் வந்தாலும் பார்த்துப்போம்” என்றான், கண்ணாடி போட்டிருந்த கோவிந்த். எந்த சண்டையிலும் இதுவரை பங்கேற்க்காதவன் . காற்றடித்தால் மரத்தை பற்றிக் கொள்ளும் உடம்பு. பார்ப்பதற்கு அப்பாவி போலத்  தெரிந்தாலும், சரியான பிராடு. அவன் சொல்லைக் கேட்டு சங்கர நாராயணனிடம் சண்டைக்கு செல்வது , லாரிக்கு அடியில் தலையை வைப்பதற்குச் சமம் என்று விபினுக்கு நன்றாகவே தெரியும் . 

“ஆமா மச்சி , நமக்கு பெரிய சம்பவம் பண்றவங்களத் தெரியும், அடி பொளந்துடலாம் “ என்று கடலை பர்பி இருக்கும் பாட்டிலைப் பார்த்தபடியே  சொன்னான் அருண் . ஆள் பார்ப்பதற்கு சினிமா ஹீரோவைப் போல இருந்தாலும், பொய் மூட்டை அவன் . இரண்டு பர்பிக்காக கோர்த்து விட்டு அடி வாங்க வைத்து விடுவானோ என்ற பயம் விபினிடம் எப்போதும் இருந்தது.  

“என்ன ஆச்சு “ விபினுக்கும் அவன் நண்பர்களுக்கும் டீ கிளாசை கொடுத்துவிட்டுக்  கேட்டார் சுஜின் . 

விபின், ஒன்றும் இல்லை என்று தலையசைக்க, விஷயத்தை அண்ணனிடம் சொன்னால் சிக்கல் என்று பேச்சை மாற்ற அவர்கள் முயன்றார்கள்  .

“இந்த கோபுரத்து உச்சிலேர்ந்து பார்த்தா சிலோன் தெரியுமாம் டா “ ஒரு சிட்டிகை டீயை உறிஞ்சிக் கொண்டு சொன்னான் அருண்  . 

“மயிருல தெரியும் , இதோட பெருசு மலைக்கோட்டை,  அதுல இருந்து பார்த்தாலே ஒன்னும் தெரியாது “ என்று விஷயம் புரியாமல் கோவிந்த் சொல்ல , அனைவரும் அவனை முறைக்க , அவன் வழக்கம் போல நிசப்தமானான். 

“அப்படியா , மேல நம்பல விடுமா “ என்றான் விபின், அப்பாவியாக. 

“பர்மிஷன் வாங்கணும் , நம்பல எப்படியும் விட மாட்டாங்கடா “ என்றான் கோவிந்த்.

“ஏன்” என்பது போல விபின் பார்க்க  “நீ போய் அங்க , ‘விபின் ஹார்டீன் ரங்க நாயகின்னு’ கோபுரத்துல  கிறுக்கி வச்சுட்டா ரங்க நாதருக்கு சங்கடம் ஆகிடுமோல்யோ,  அதான் “ என்று சொல்லிவிட்டு  கண்ணாடியைக் கழட்டிச் சிரித்தான் கோவிந்த். 

“விபின் பிரேமா ரங்க நாயகி “ என்று காற்றில் படம் வரைந்து காட்டி அருண்  சொல்லி முடிக்க , சுஜின் அவர்களைப் பார்த்து முறைத்தார் .  

“என்ன பிரேமா, சண்டை? அது இதுன்னு ” இது சுஜின். 

, “சங்கர நாராயணன் விபின சண்டைக்கு வரச் சொல்லியிருக்கான் “ என்று போட்டு உடைத்தான்  சித்தப்பா . ஸ்போர்ட்ஸ் கோட்டாக்காக இரண்டு மூன்று முறை பதினொன்றாம் வகுப்பு படித்தவர் , ஒரு வழியாக இவர்களுடன் சேர்ந்து , படிக்காமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் பெருசு .  

“எதுக்கு நமக்கு சண்டை” சுஜின் விபினைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தார் . 

தனி  ஆளாக இங்கே வந்து கடை போட்டு , ஆறரை நாட்கள் வேலை செய்து, ஏதோ கொஞ்சம் லாபம் பார்த்து , எல்லா செலவுகளையும் மிச்சம் பிடித்து, மீதியை ஊருக்கு அனுப்பி வைத்து , தங்கைக்கு கல்யாணம், தம்பிக்கு படிப்பு என்று ஒவ்வொரு டீ கிளாசிலும் ஒரு கனவை புதைத்து வைத்திருந்தார் சுஜின். இதெல்லாம் முடிந்தால் தான் கல்யாணம் என்றும் முடிவாக இருந்தார் . 

“சரி நான் வரட்டுமா” என்று நகரப் பார்த்த கோவிந்தை , காலரைப் பிடித்து உட்கார வைத்தார்கள் . “ என்னமோ , எவன் வந்தாலும் பார்த்துக்கலாம்னு சொன்ன , அதுக்குள்ள வயித்த கலக்குதோ “ என்று கூட்டாக சிரித்தார்கள் . 

“சண்ட வேணாம் “ என்று விபினிடம் சொல்லிவிட்டு , சித்தப்பாவிடம்  இவர்களைப் பார்த்து நடந்து கொள்ளச் சொல் என்று நகர்ந்தார் சுஜின் . அண்ணன் நகர்ந்ததும் அவர்கள் குதுகலமானார்கள் . அந்த நேரம் பார்த்து ரோட்டில் தாவணி அணிந்து ஐந்தாறு பெண்கள் நடந்து செல்ல அவர்களின் மொத்த கவனமும் அந்தப் பெண்கள் மேல் குவிந்தது .

“சரி தாவணிக்கும் சேலைக்கும் என்ன வித்யாசம் “என்றான் கோவிந்த் . தேவை இல்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதிலும் ஆராய்வதிலும் வல்லமை கொண்டவன் .

“தாவணி போட்ட பொண்ணுங்கள  நாம பார்ப்போம்  , சேலை கட்டியிருந்தா சித்தப்பாக்கு விட்டுடனும்” என்று சொல்லிச்  சிரித்தான் அருண்  . அவன் தலையில் சித்தப்பா ஒரு தட்டு தட்டினார். 

சித்தப்பாவிற்கும் வேறு வழி இல்லை . மூன்று வயது தான் அதிகம் என்றாலும் , இந்த கூட்டத்தை தவிர வேறு யாரும் அவருடன் பேச மறுத்தார்கள் . அந்த குரூப்பில் மரியாதை எதிர்பார்க்காமல் இருக்கும்  முதியவர் . அவர்களும்  உள்ளுக்குள் சித்தப்பாவை கலாய்த்தாலும் வெளியே விட்டுக் கொடுக்க மாட்டார்கள் . 

“சங்கர என்ன செய்யணும்” என்று அவர்களின் அதி முக்கியப் பிரச்சனைக்குள் இழுத்தான் விபின். 

“அவன் உன்கிட்ட என்ன சொன்னான் , ஃபுல்லா சொல்லு” , என்று இரண்டு ஓசி பர்பி எடுத்தபடியே  கேட்டான் அருண் . 

“ரங்க நாயகி வேண்டாம், இல்லைனா அடி பொளக்கும்ன்னு சொல்லி “ விபினுக்கு இன்னும் தமிழ் முழுதாக கைப்படவில்லை . 

“அவனே ஒரு பயந்தாங்கொள்ளி, நாமலாவது நாலு பேர் இருக்கோம் , அவனுக்கு மிஞ்சிப்போனா இரண்டு பேரை தான் தெரியும். வரட்டும் பார்க்கலாம் “ என்று கோவிந்த் நம்பிக்கை ஊட்டினான் . 

“எப்படி நீயே அவங்கள அடிப்பியா மாப்ள , இல்ல நாங்களும் வரணுமா “ என்று அருண் டபாய்த்தான் . 

“சித்தப்பா ஷார்ட் புட் சாம்பியன் தெரியும்ல , வீட்ல வேற நிறைய இரும்பு குண்டு வச்சுருக்கார், எடுத்து அடிச்சா, தொ இருக்குற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேர்த்துடலாம் “ என்று லாவகமாக விஷயத்தை சித்தப்பாவின் பக்கம் நகர்த்தினான் கோவிந்த் . 

“ஆமா போலீஸ் வந்தா கூட, சித்தப்பா கை ரேகை தான் கிடைக்கும், நாம எஸ்கேஎப்” 

“டேய் நான் எப்படா சண்டை போட்டு இருக்கேன் , நீங்க வேற “  இது சித்தப்பா. 

“ எங்க வரணும் அப்படினு அவனுக்கு ஒரு எஸ் எம் எஸ் போட்டு விடு , அவன் எப்படியும் பதில் சொல்ல மாட்டான் “ என்று அருண் சொல்ல , கோவிந்த் பட்டென்று விபினின் நோக்கியா செங்கல் போனை பிடுங்கி,  சங்கர நாராயணனை யுத்தத்துக்கு அழைத்தான். யுத்தங்கள் பல சமயங்களில் இப்படித்தான் சம்பந்தம் இல்லாத ஆட்களால் தொடங்கப்படுகின்றன . 

குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த கணமே இவர்கள் விளையாட்டை ஆரம்பித்தார்கள் . 

“பெரிய ஆள் டா நீ, வெளியூர்ல இருந்து வந்து  , உள்ளூர்காரனையே அடிக்க நாள் குறிக்கிற “

“இருடி, அவன் ஸ்ரீரங்கம் கோயில்  பிரசாத ஸ்டால்ல இருக்கிற ரெண்டு ரவுடி அய்யர கூட்டிட்டு வந்து பொளக்கப் போறான் பாரேன் “ 

“சரி ரங்க நாயகிக்கு இவன் கிட்ட அடி வாங்கப் போற , பவானிக்கு மூணு ஆள் இருக்காங்களாம் , அவங்கள அடுத்த வாரம் வர சொல்லட்டா “ 

“எப்படியும் விசயத்தை கேட்டு இவங்க அண்ணனே இவன் கால உடைச்சு விட்டுருவாரு “ “அத சொல்லியே பைட்ட கேன்சல் பண்ணிடுவோம் “ என்று மாற்றி மாற்றி பேசி கிலியை கிளப்பினார்கள் . 

விபின்  “என்னடா “ என்று இழுத்தான் .

“இதுக்கு ஒரே வழி தான் இருக்கு சொல்லட்டா “ என்றான் கோவிந்த் . 

அருண் கொஞ்சம் பொறுமையா இரு என்று கையசைக்க , சுஜின் அங்கே ஆஜரானார். ”இப்போ சொல்லு, ஏது பிரச்சனை “ என்றார்.

அண்ணா கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு , “ சித்தப்பா என்னென்னு  சொல்வார் “ என்று சொல்லிவிட்டு, டீக் கடையின் மாடியில் இருந்த விபினின் வீட்டிற்கு ஓடினார்கள் . அருண் ஓடும் முன் இன்னும் இரண்டு பர்பிகளை எடுத்துக் கொண்டு ஓடினான் .

மாடிக்கு வந்து முதல் வேலையாக அருண் தலை அலங்காரம் செய்யப் போக , “இருக்கிறது பத்து முடி , கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சொட்டை தான் போ “ என்று கோவிந்த் சிரித்தான் . 

“நீ பொத்து” 

“வழி எந்தா?” 

“சொன்ன அடிக்க மாட்டியே “ “பேசாம ரங்க நாயகி கிட்ட சொல்லி அவளையே சண்ட போட சொல்லு . அவ மொத ஆளா சண்டைக்கு போறவ . சங்கர நாராயணனும் பொண்ணுன்னு சண்டைக்கு வர மாட்டான் , எப்படி நம்ம ஐடியா “ என்றவனை மற்ற இருவரும் முறைக்க ஆரம்பித்தனர். 

“சரி என்ன தான் எஸ் எம் எஸ் அனுப்பி? “, கோவிந்த் குறுந்செய்தி அனுப்பிவிட்டு அதை டெலிட்டும் செய்திருந்தான். 

“சண்டைக்கு வாடா சுண்டக்கா பயலே”ன்னு அனுப்பினேன் டா. 

விபினுக்கு வயிற்றைக் கலக்குவது போல இருந்தது .

 ***

அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது  சங்கர நாராயணன் வீடு .  அங்கே அவனும் கொஞ்சம்  பதட்டமாகத்தான் இருந்தான். அவன் கோபத்தை எல்லாம் தட்டில் இருந்த மாவடுவை பிதுக்குவதில் காட்டிக்கொண்டிருந்தான். 

Hi, I’m tamilvalai

Leave a Reply