காஸ்ட்கோவில் காதல்
காஸ்ட்கோவில் ஒரு வயதான தம்பதிகள் எனக்கு முன் பில் போடுவதற்கு நின்று கொண்டிருந்தனர். கணவருக்கு எழுபது வயதிருக்கும். ஆமை வேகத்தில் டிராலியை தள்ளிக் கொண்டு பில் கவுண்டர் முன்னால் வந்து தஞ்சமடைந்திருந்தார் . அரக் கை டீ சர்ட், முட்டிக்கு மேல் டவுசர், டக்கின் செய்து, அமெரிக்க அதிபர் ஜோ பைதனின் தம்பி போல் ஜம்மென்று இருந்தார். காஸ்ட்கோ அமெரிக்காவில் மாதாந்திர பொருட்கள் வாங்கும் இடம். அதற்கு ஏற்றார் போல், டிராலியில் முக்கால் அளவு பொருட்களை ஏற்றி வைத்திருந்தனர்.
அவரின் மனைவி கைப்பையில் ஒரு கை வைத்தபடி, கடைசி நேரத்தில் எதுவும் மறந்து விட்டோமா, ஸ்னாக்ஸ் எதுவும் வாங்கிப் போடலாமா என்று, அருகில் இருந்த இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் .
பில் போடுவதற்கு அவர்கள் முறை வந்தது.
கணவரும் , சின்னதாக இருக்கும் பொருட்களை, மிலிட்டரி ஒழுக்கத்துடன் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரின் மனைவி ஏதோ கவனித்தவராக “சடார் “ என்று கணவர் அடுக்கி வைத்த ஐட்டங்களின் அடிப் பொந்தில் இருந்த இனிப்பு பொட்டலம் ஒன்றை எடுத்து வெளியே வைத்தார். இடுப்பில் கை வைத்த படி இது என்ன என்று கண்களால் கேள்விக்கணைகளைத்தொடுத்துக் கொண்டிருந்தார்.
கணவர், மனைவிக்கு தெரியாமல், அந்த ஸ்வீட் பொட்டலத்தை ஒளித்து வைத்திருக்க வேண்டும்.
தலைவர் நம் ரகம் என்று நினைத்துக் கொண்டேன்.
கணவரின் முகத்தில் ஒரு சொல்ல முடியாத வலி தெரிந்தது. மனைவியிடம் எதிர்க் கேள்வி கேட்டாலும் எதுவும் நடக்காது, எதுவும் மாறாது என்று தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.ஒரு மெல்லிய சோகம் அவரிடம் அப்பிக் கொண்டாலும், அவர் மனைவியுடன் சண்டை இடவில்லை. அவர் மனைவியும் அவரைக் கடிந்து கொள்ளவில்லை. அந்த இடத்தில் அவர்களைக் கடுப்பாக்க சிறு குழந்தைகளும் இல்லை. காஸ்ட்கோ பெண்மணி அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஐட்டங்களுக்கு பில் போட்டார். இது அவர்களுக்குள் , அடிக்கடி நடக்கும் பரஸ்பர விளையாட்டு என்று தோன்றியது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆண் தனக்கு தேவையானதையும் தேவையற்றதையும் வாங்கி வைக்க முயலாமல் இருப்பதில்லை. அதே நேரம் அவரே எடுத்து வைத்தாலும் அவருக்கு அது நல்லதில்லை என்று தடுத்து நிற்கும் மனைவி.
காலங்கள் கடந்த அன்பு இப்படித்தான் இருக்கும் போல.
In life You can lose the battles any day, anytime, but never the war.