பொதிகை எக்ஸ்பிரஸ்
இதுவரை ஆறு ரயில்கள் என்னைக் கடந்து சென்று விட்டன. ஒவ்வொன்றும் நான் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அடியில் புகுந்து , என்னை விட்டு தூரமாக ஓடுகின்றன . நான் மட்டும் பாலத்தின் மேல் , கம்பி கட்டாமல் விடப்பட்ட அந்தச் சுவற்றின் விளிம்பில் கைவைத்தபடி அசையாமல் நிற்கிறேன்.
ஒவ்வொரு ரயில் வந்து நிற்கும் போதும் , இது தான் என்னுடைய கடைசி பயணம் என்று முடிவெடுக்கிறேன் . ஆனால் ரயில் நகர்ந்தது அருகில் வர வர வலுவிழக்கிறேன். கை கால்கள் உதறுகின்றன. அது என்னை தாண்டிச் செல்லும் போது, நான் தோற்று, தலை தாழ்ந்து நிற்கிறேன் . இதோ ஆறு முறை தோற்று விட்டேன், ஏழாவதற்கு ஆயத்தமாகி , எதிரே இருக்கும் ஒட்டாத கோடுகளை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன்.
முதல் ரயில் வந்த பொழுது ஒரு காலை , பாலத்தின் சுவரில் போட்டுப் பார்த்தேன். இரண்டாம் கால் வர மறுத்தது. எதிலுமே ஸ்திரமான முடிவெடுக்க முடியாமல் இயங்கும் நான், தற்கொலையில் கூட எந்த ரயிலின் முன் பாய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறேன். எத்தனையோ பேர் ரயிலில் பாய்ந்து இறக்கிறார்கள், அவர்களெல்லாம் இவ்வளவு யோசித்தார்களா என்று தெரியவில்லை.
தண்டவாளத்தில் பாய்ந்து சாகப்போகும் ஒருவனுக்கு இவ்வித கேள்விகள் வரலாமா? என் கேள்விகளை கேட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
உள்ளூர் ரயில்கள் சற்று மெதுவாகவே புறப்படுகிறது. ஒருவேளை அவற்றில் விழுந்து, ஓட்டுநர் நிறுத்தி, நான் தப்பி, அங்கிருப்பவர்கள் என்னை நையப் புடைத்து விட்டால்? அடிவாங்குவதோடு, ஊராரின் கேவலமான அந்த பார்வையே என்னை கொல்லும், ஆனாலும் உயிர் போகாதே .
சரி, ஒரு ஓரமாக குதித்து கை கால் மீது ரயில் ஏறி , உயிர் மட்டுமே மிச்சம் இருந்தால்? ஊனமாக இருப்பதற்கு செத்தே தொலையலாம். இந்த உலகம் அவர்கள் நடத்தும் விதத்தைப் பார்க்கையில் கடவுளுக்கு கண்ணீர் வந்து விடும் . அப்படி ஒருவர் இருந்தால், ஊனிகளை அப்படியே விட்டு வைப்பாரா?
வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் போது குதிக்க வேண்டும், எப்போது குதித்தல் மரணம் நிச்சயம் என்ற கணக்கு கண்களை மறைக்கிறது. அது எதிரே இருக்கும் நிலையத்தில் நுழையும் போதே ஏறி நின்று விட வேண்டும். அடுத்த நொடியே குதிக்க வேண்டும். கரணம் தப்பி, மரணிக்காமல் மட்டும் இருந்துவிட கூடாது.
உயிரோடு இருந்தால், வீட்டில் அவளுடன் இருக்க வேண்டும். அது தினசரி மரணம். நாற்றமடிக்கும் பிணத்துடன் ஒரே படுக்கையில் இருந்த அனுபவம் உண்டா? அது இருந்தால் நீங்களும் என்னைப் போலவே தற்கொலைக்கு இடம் தேடிக்கொண்டு இருப்பீர்கள்.
அவள்! என் வாழ்வில் விளக்கேற்றுவாள் என்று சொல்லப்பட்டு ,என் வாழ்க்கையில் வலிய திணிக்கபட்டவள் . அவளுக்கு பிடித்திருக்கிறதா என்று ஊரே கேட்டது, என்னிடம் கேட்பாரில்லை. நாற்பது வயதான ஆணிடம் யார் கேட்டார்கள்? அவர்களாவே முடிவெடுத்தார்கள். கல்யாணத்திற்கு முன், எப்படி எல்லாம் பேசினாள் !
சரி வந்தவள் ஒழுங்காக இருந்தாலா? நான் மிகச் சுமார் சம்பாத்தியத்தில் இருப்பவன் என்று தெரிந்தே கல்யாணம் செய்துவிட்டு, பியூட்டி பார்லருக்கும் , சத்யம் தியேட்டருக்கும் வாரா வாரம் போக முடியவில்லை என்றால் நான் என்ன செய்வது. நான் இருக்கும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சத்யம் செல்லவே அரை நாள் தேவைப்படும்.
இத்தனைக்கும் அவளே கிராமத்தாள் தான். இங்கு வீடெடுத்து சுற்றித்திரியும் ஐடி இளவட்டங்களை பார்த்து இவள் ஏன் சூடு போட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் முகத்தில் பூசினால், இவளும் பூச வேண்டும், அவர்கள் மூவாயிரம் ஜீன்ஸ் அணிந்தால் இவளும் போட வேண்டும். இதற்காக சம்பளத்தில் நான்கில் ஒரு பாதியை எவன் இழப்பான்? காசில்லாமல் இவளை தொடவே கூடாதாம். ஐட்டமா இவள்?
என்ன என் மனைவியை பற்றி இப்படி சொல்கிறேன் என்று உங்களுக்கு தோன்றலாம். இரண்டொரு முறை வெவ்வேறு இளைஞர்கள் எனது வீட்டில் இருந்து வெளியேறுவதை ஹவுஸ் ஓனர் பார்த்து கேவலமாக கேட்கிறார். நானே ஒரு நாள் கடையில் நின்று பார்த்தேன், உண்மைதான். இனி ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது. வெந்து கொண்டே வாழ்வதற்கு சாவதே மேல். என் பிணம் வேண்டுமானால் அந்த வீட்டிற்கு போகட்டும். வேண்டாம் அதைப் பார்த்தும் அவள் எள்ளி நகையாடக்கூடும் . அந்தச் சனியன் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் என் அஸ்தி கூட இருக்கக் கூடாது.
நேரத்தைப் பார்த்தேன். நாலே முக்கால். அடுத்து வரப்போகும் கன்னியாகுமரி எஸ்பிரஸிற்கு என் உயிரைத் தந்து விடலாம் என்று முடிவெடுத்தேன். இன்னும் இருபதே நிமிடங்கள். இருட்டுவதற்கு முன் இறக்க வேண்டும்.. ஒரு நொடியில் மரணம் என்றே உத்தேசிக்கிறேன்.
“சார், ரொம்ப பசிக்குது சார், ஏதும் காசு இருந்தா கொடுங்க சார்” ;
குரல் கேட்டு திடுக்கிட்டேன்.
அருகில் வந்து நின்ற அவளுக்கு ஏழு வயதிருக்கலாம். கிழியாத பெரிய சட்டை ஒன்றை கால் வரை இழுத்துப் போட்டிருந்தாள். தலை முழுதும் செம்பட்டை அடித்து, பாதி கட்டப்பட்டும், மீதி காற்றிலும் இருந்தன. அவள் முகத்தில் அவ்வளவு அழுக்கில்லை . ஆனால் கண்களில் ஒரு பொலிவிருந்தது. பல வருடங்களாக சிரித்திராத முகம்.
தலையைச் சொரிய ஆரம்பித்திருந்த அவளுக்கு, காசு தருவதா வேண்டாமா என்று யோசித்தேன். என்ன கேவலம் பார்த்தீர்களா! அடுத்து வரும் நிமிடங்களில் சாகத் துடிப்பவன் , காலம் முழுவதும் பிச்சை எடுத்து , உதை பட்டு, ஊராரால் புணரப்பட்டு , எல்லோரின் வன்மத்தில் வளரப்போகும் அந்த குழந்தைக்கு காசு தருவதா வேண்டாமா என்று யோசிக்கிறேன். நான் அப்படிதான். ஒரு நொடி யோசனை தான், இருந்தாலும் எனக்கே அசிங்கமாக இருந்தது. பர்சில் இருந்த சில்லறைத் தாள்களை ஒதுக்கி விட்டு ஒரு ஐநூறை அவளிடம் நீட்டினேன்.
“இருவது ரூவா நோட்டு இருக்கா சார், இத அடிச்சு புடுங்கிடுவாங்க” என்று கொடுத்த ஐநூறை வாங்கலாமா இல்லையா என்று யோசித்தாள்.
“பரவால்ல, வெச்சுக்க” என்றதும் அவள் வாங்கிகொண்டாள். நமக்கு சொர்க்கம் தான் என்று மனம் ஒரு கணம் குதூகலித்தது.
“சாப்பாடு வாங்கித் தா சார்” என்று நகராமல் கேட்டாள். அவள் கண்கள் ஏதோ ஒரு சேதி சொன்னது. நாங்கள் பேசிக் கொள்வதை சுற்றும் முற்றும் இருப்பவர்கள் பார்த்து தலையத்துச் சென்றார்கள். இவள் இங்கே தினப்படி பிச்சை போல என்று நினைத்துக் கொண்டேன்.
சரி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தான் உயிர் போக வேண்டுமா என்ன? அடுத்து சம்பத் கிராந்தி இருக்கிறது , அதற்கு கொடுப்போம் என்று முடிவெடுத்து அங்கிருந்து அவளுடன் நகர்ந்தேன்.
“என்னம்மா சாப்பட்ற” என்றதற்கு “எதுனாலும் ஓகே சார்” என்றாள் அப்பாவியாக .
அருகில் இருந்த ஒரு மிதமான ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வேண்டியதை சாப்பிட சொன்னேன். பாவம் அவளுக்கு என்ன வாங்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. சர்வர் ஒரே பிளேட் எடுத்து வந்தான்.
இரண்டு பிளேட் கேட்டதற்கு சர்வர் ஒரு மாதிரி பார்த்துச் சென்றான். அழுக்குடையில் வருபவர்கள் காசு கொடுக்க மாட்டார்கள் என்று அவன் நினைத்திருக்கலாம். இந்த உலகமே முழு விவரம் அறியாமல், வெறும் முக லட்ச்னத்தையும், அது தரும் போலி பும்பங்களையும் வைத்து தானே நகர்கிறது. அதில் இவன் மட்டும் எப்படி தப்புவான். சாவதற்கு முன் சர்வருக்கு சாபம் தரக் கூடாது என்று சொல்லிக் கொண்டேன்.
அவள் முகத்தில் முழு மகிழ்ச்சி இல்லை.
அவள் சாப்பாட்டில் கை வைக்க யோசித்தாள்.
என்னையும் சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“பரவால்ல சொல்லு”
“அம்மாக்கு ஏதும் வாங்கிக்க வா?” என்றாள்.
“எவ்வளவு வேணுமோ வாங்கிக்க ” என்றேன். எனக்கு அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.
சர்வரை அழைத்து, பார்சல் வாங்கிக் கிளம்பினோம். நான் வைத்த பத்து ரூபாய் டிப்ஸையே கண் எடுக்காமல் பார்த்தாள் அவள். பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தும், சர்வர் சந்தேகக் கண்ணுடன் திரிந்தான். ஒருவேளை என்னை ஒரு மாதிரியான ஆளாக நினைத்திருப்பானோ. சே.. வாய்ப்பில்லை. நினைத்தாலும், நான் அப்படிப்பட்டவன் அல்ல. இன்னும் கொஞ்சம் நேரத்தில் சாவு , இதற்கெல்லாம் எதற்கு கவலைப் பட வேண்டும்? அவள் காதை நோண்டியபடி என் கை பிடித்து நடந்தாள்.
“அப்பா இல்லையாமா “
“அந்த ஆள், எங்கம்மாவை உண்டாக்கிட்டு ஓடிட்டானாம் சார்” , அவள் அப்பாவை குறிப்பிட்ட விதமும், என்னை சார் என்று அழைத்ததும், ஒரு அன்யோன்யத்தை உண்டு செய்தது.
“அம்மா, வேலைக்கு போகலையா”
“இல்ல சார், யாரு வேல கொடுப்பாங்க” என்று நிறுத்தியவள் ஒரு நொடி யோசித்தாள் .
“கொஞ்ச நாள், அம்மா பிச்சை எடுத்துச்சு, ஆனா அதையும் அடிச்சு புடுங்கிட்டாங்க, எங்க சேரி ஆளுங்க” , அவள் கண்களில் இப்பொழுது ஒரு சோகம். அதற்கு மேல் கேட்க கூடாது என்று முடிவெடுத்தேன்.
அம்மா பாவம் சார், யாருமே இல்லை. தெனம் சோத்துக்கே கஷ்டம். என்று முனகிக் கொண்டே நடந்தாள்.
ஹோட்டலில் இருந்து வெளியே வந்தோம். இனி காசை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று முடிவெடுத்தேன். அருகில் இருந்த ஏ டி எம் வாசலில் அவளை நிற்க வைத்து விட்டு, கணக்கில் இருந்த ஆறாயிரம் ரூபாயையும் எடுத்து வெளியே வந்து அவளிடம் நீட்டினேன் .
செக்யூரிட்டி முறைத்தான்.
“சார், நீங்களே அம்மா கிட்ட தாங்க சார், ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஆனா உதவின்னு சொல்லி கொடுக்காதீங்க, வேற மாதிரி எடுத்துப்பாங்க” என்றாள்.
“…”
“அவங்களுக்கு கால் போயிருச்சு சார், அதனால் தான்” என்றாள். இந்த உலகில் யாரைத் தான் நிம்மதியாக விட்டு வைத்திருக்கிறாய் என்று கடவுளுக்கு சாபமிட்டேன்.
“சரிம்மா நான் வேற எதும் சொல்லி , பணத்தை கொடுக்கிறேன்”
அவள் கண்களில் ஒரு மின்னலை பார்த்தேன்.
நேரம் இரவு தொட ஆரம்பித்திருந்தது. என் தற்கொலை திட்டத்தில் இவள் ஒரு தாமதத்தை உண்டு செய்திருந்தாள். சம்பத் கிராந்திக்கு தலையை கொடுக்கா விட்டால் என்ன , பொதிகை எக்ஸ்பிரஸ் இருக்கிறதே என்று யோசித்தபடி அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.
அங்கிருந்து கால் மணி நேர நடையில் அவர்களின் குடிசை தென்பட்டது. குப்பை குவியல்களுக்கும், சாக்கடைகளுக்கும் நடுவில் இருந்தது. வயிற்றை புரட்டும் நாற்றம். குடிசை என்பதை விட, குப்பைக் குவியலில் குடைந்து எடுத்து வைத்திருந்த ஒரு இருப்பிடம்.
“குடிசை மாற்று வாரியத்துல வீடு கிடைக்கலையா “
“அட போங்க சார், இந்த வீடே சாக்கடை வாடையால தான் தப்பிச்சுது”.
வீட்டின் வாசலுக்கு வந்தோம். கதவில்லை, ஒரு கீற்றை போட்டு மறைத்திருந்தார்கள். அதுவும் ஓரத்தில் பெரிய பகுதியை இழந்திருந்தது.
“ஒரு நிமிஷம் சார், அம்மா எப்படி இருக்குதோ “ என்று என்னை வாசலில் நிற்க வைத்து ஓட்டை வழியாக உள்ளே புகுந்து சென்றாள் .
“உள்ள வாங்க சார் “ சத்தம் மட்டும் கேட்டது.
உள்ளே நுழைந்ததும், என்னை எதிர்பாராதவளாக அவளின் அம்மா கொஞ்சம் பதறினாள்.
கண்களில் சந்தேகம், அச்சம் , யோசனை என்று கலவையான முக பாவனைகளை காட்டி “யார் நீங்க ” என்றாள். கை எதையோ தற்காப்புக்காக தேடியது. அவள் உடல் அசைவதற்கு முற்படதைப் போல தெரிந்தாலும் அசையாமல் இருந்தாள்.
அவளின் மகள் என்னைப் பற்றி எதுவும் சொல்லியிருப்பாள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
வீட்டைப் பார்த்தேன், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேற்கூரையில், முதல்வரின் பேனர் சிரித்தது. அமர்வதற்கு ஒன்றும் இல்லை. ஒரு மூலையில் கால்களின் மேல் துணி போர்த்தியபடி ஒரு அவளின் அம்மா அமர்ந்திருந்தாள். கால்கள் இல்லாத அரை உடல். கைகளை நம்பி நகர்ந்து புன் பட்ட கைகள். எனக்கு ஏதோ ஒரு மாதிரி செய்தது. வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தேன்.
இரு கால்களும் இல்லாமல் உலாவ வசதியாக ஒரு மூலையில் ஸ்டவ், மற்றொரு மூலையில் படுக்கை, வாசலுக்கு அருகில் ஒரு அலுமினிய டப். மஞ்சள் நிற தண்ணீர் பாட்டில்கள். இருந்தும் நேர்த்தியாக இருந்தன. ஷூவை கழட்டி உள்ளே நுழைந்தேன். உணவை கொடுத்தேன்.
“ நான் கவர்ன்மெண்ட் ல இருந்து வரேன். அரசு கஜானா இந்த வருடம் நிதி பாக்கி இருக்கு. அதுக்கு தான் எல்லாரையும் தேடி பிடிச்சு, சிஸ்டம் ல பதிவு பண்ணிட்டு இருக்கோம். சொல்லுங்க , என்ன ஆச்சு, உங்களுக்கு எப்படி கால் போச்சு” என்று ஆரம்பித்தேன்.
என்னுடைய கேள்வி அவள் விரும்பினாளா என்று தெரியவில்லை .
“நைட்டு தண்டவாளத்தில் கிராஸ் பண்ணப்ப கால் மாட்டிக்கிச்சு சார்” என்றாள். எனக்கு பகீரென்றது. அவளை உற்று நோக்கினேன். கலையான முகம் , அதில் சோகத்தை மட்டுமே காட்டும் கண்கள் . அவளுக்கும் , அவள் மகளுக்கு ஒரே ஜாடையில் மூக்கு.
இப்பொழுது நான் கொடுத்த ஆறாயிரத்து ஐநூறை அவளிடம் கொடுக்க, அம்மாவின் முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். அதில் அவளின் கோபத்தையும், ஆற்றாமையையும், நன்றியையும், ஒரு சேரக் கண்டேன். பெண்களால் தான் எவ்வளவு உணர்ச்சிகளை வெளிக்கொண்டுவர முடிகிறது.
அவள் கண்களில் நீர் ததும்ப கைகளைக் கூப்பினாள்.
“சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை , இந்த பணத்தை வச்சு நான் மூணு மாசம் ஓட்டிடுவேன் சார்” என்று கைகூப்பினாள்.
“கவலப் படாதீங்க மா , மாசா மாசம் நானே வந்து தரேன், கொஞ்ச நாள்ல வேற எடம் பாத்து தரேன்“ என்றேன் .
அவள் கண்களில் நன்றி தெரிந்தது. இது என் மனைவியின் கண்களில் நான் பார்த்திராத ஒன்று. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்
“பாப்பாவையும் அப்டியே ஸ்கூலுக்கு அனுப்பிடலாம்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டே , கூட வந்த அந்தச் சிறுமியை தேடினேன்.
“யார சார் தேடுறீங்க ?”
“உங்க பொண்ணு தான் இங்க கொண்டு வந்து விட்டா , ஆனா வீட்டுக்குள்ள வரல , அதான் தேடினேன்”
அவளின் அம்மா அழ ஆரம்பித்திருந்தார். “என் பொண்ணு ரயில்ல அடிபட்டு இறந்து இரண்டு வருடங்கள் ஆச்சு சார், அவ எப்படி” என்றாள் .
அவளின் மகள் , ஒரு நொடியில் அம்மாவின் பின் நின்று, புன்னகைத்து மறைந்தாள்.
தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.
பொதிகை எஸ்பிரஸாக இருக்ககூடும்.