அஸ்தமனம்
“அப்படியே மெயின் ரோட்ல வந்தா , பைபாஸ் வரும். அத கிராஸ் செஞ்சா ஒரு சறுக்குப் பாதை இருக்கும் , அங்கிருந்து அபார்ட்மெண்ட் தெரியும். அங்க வந்து கால் பண்ணா, நான் வந்து கூட்டிண்டு போறேன்”. போனில் பேசியவர் பதிலுக்கு காத்திராமல் வைத்து விட்டார். பின்னணியில் யாரோ ஒருவர் இருமும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சரி வீட்டில் உடம்புக்கு முடியாதவர்கள் யாரும் இருக்கக் கூடும் என்று இரண்டு கிலோ ஆப்பிள் வாங்கிக்கொண்டேன். அரை கிலோமீட்டர் தாண்டியதும் அவர் சொன்னபடி பைபாஸ் ரோடு வந்தது. காரை அங்கேயே நிறுத்தச் சொல்லிவிட்டு , அவர் சொன்ன சறுக்குப் பாதை எங்கே என்று தேடினேன். கீழிருந்து யாரோ கை அசைப்பது தெரிந்தது. இவராகத்தான் இருக்க வேண்டும் என்று கை அசைத்து வைத்தேன். கீழே வரும்படி சைகை செய்தார். நான் யோசிப்பதை பார்த்து, “அப்படியே மெதுவா, கீழ வாங்கோ ” என்றார். எனக்கும் அவருக்கும் ஒரு பத்தடி உயரம் இருக்கும்.
“ மெல்ல கால் ஊனி வாங்கோ, ஒன்னும் ஆகாது. நான் வரட்டுமா” என்றார். வழியில்லாத பாதையில் வரச் சொல்கிறாரே என்று திட்டிக்கொண்டே அவரைப் பார்த்தேன். மெல்லிய தேகம் ,ஒட்டிய கன்னங்கள், முக்கால் நரை முடி , தொள தொள முழுக்கை சட்டை போட்டிருந்தார் . சட்டை காலரை மீறி அவரின் ஒற்றைச் சரடு பூணூல் வெளியே தெரிந்தது .எப்படியும் ஒரு ஐம்பது வயதிருக்கலாம். சரி இவரை எதற்கு கஷ்டப்படுத்த வேண்டும் என்று கீழே இறங்க ஆரம்பித்தேன். ஒரு மலை உச்சியில் இருந்து இறங்குவதைப் போல இருந்தது. மெதுவாக கால் ஊன்றி அவர் பக்கம் வந்துவிட்டேன். கடைசி அடியில் ஒரு செடி தடுக்கி அப்படியே விழப்பார்த்தேன் . கை கால்களை ஆட்டி சமாளித்து நின்று விட்டேன். ஆனால் பிளாஸ்டிக் பை பிய்ந்து , ஆப்பிள் பழங்கள் கீழே சிதறின. கீழிருந்தவர் அத்தனையையும் எடுத்து, கிழிந்த பையிலேயே ஒரு பக்கமாக போட்டு வைத்தார்.
“வேற வழி இல்லையா “ என்றதற்கு , “அது கொஞ்சம் சுத்து , நேரம் ஆகிடும்” என்றார்.
“உங்க பேர் சார்”.
“சுப்பிரமணியன்” என்றார்.
நான் பார்த்த சுப்ரமணியன்களில் இவருக்கு மட்டும் தான் அந்தப் பெயர் பொருந்தாமல் இருந்தது. பதிலுக்கு என் பெயரைக் கேட்காமல் நடக்க ஆரம்பித்தார்.
அபார்ட்மெண்ட் வாசலிலேயே கடை இருந்தது. ஆப்பிள் அழுக்காகி விட்டது, பேசாமல் பிஸ்கட் ஏதும் வாங்கிச் செல்லலாம் என்று நினைத்தபடி அந்தக் கடையை நோட்டம் விட்டேன்.வியாபாரம் நடக்கும் எந்த ஒரு அறிகுறியும் அந்தக் கடையில் இல்லை. அதன் முன் வரிசையில் இருந்த டப்பாக்களில் படிந்திருந்த தூசி,போனியாகாத கடை என்பதை உணர்த்தியது. கடை வாசலில் ஒருவர் நின்று கொண்டு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டு வேறு கடைக்கு சென்று வாங்கி வரலாமா என்று யோசித்து நகர்வதற்குள், சுப்ரமணி என் கையை பிடித்து வேறு பக்கமாக கூட்டிச் சென்றார். சைடு வாசலில் இருந்த பிவிசி பைப்பில், ஆப்பிள்களை நன்றாக சுத்தம் செய்து, ஈரத்தை சட்டையில் துடைத்து, பையில் போட்டு ,“இந்தப் பக்கம் பிடிச்சுக்கோங்கோ “ என்று , நசுங்கிய ஆப்பிள் ஏதும் மேலே இருக்கிறதா பார்த்தபடியே கிழிந்த பையை கொடுத்தார்.
வீடு கீழ் தளத்தில் இருந்தது. எதிரிலேயே பார்க்கிங் . ஓரளவுக்கு வெளிச்சம் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் சந்தன வாசனையும், இருமல் சத்தமும் கலந்து வரவேற்றன . உள்ளே ஒரு பெரிய ஹால், வலது பக்கத்தில் இரண்டு பெட்ரூம், இடது பக்கத்தில் கிச்சன்,ஒரு பாத்ரூம்.ஹாலின் நடுவில் தேக்கு மரத்திலான சோபா. திண்டு ,ஜரிகை வஸ்திரமெல்லாம் போட்டு சிம்மாசனம் போல இருந்தது. அதற்கு எதிரே, ஒரு பெரிய சாலிடார் டிவி . அந்த சோபாவில் உட்காரச் சென்ற என்னை , ஒரு ஓரத்தில் இருந்த மற்றொரு நாற்காலியின் பக்கம் நகர்த்தினார் சுப்பிரமணியன். ஹாலின் அப்பழுக்கற்ற சுவர்கள், அந்த வீட்டில் குழந்தைகள் இல்லை என்று சொல்லியது . வீடு முழுக்க மேஜைக் கண்ணாடி, தேக்கு பீரோ என்று மரச் சாமான்கள். நடப்பதற்கு மட்டும் சொற்ப இடம்.
மறுபடியும் இருமல் சத்தம் கேட்டது.
சுப்பிரமணி “கொஞ்ச நேரம் இருங்கோ” என்று சொல்லிவிட்டு, மூலையில் இருந்த பெட்ரூமிற்குள் நுழைத்தார். கதவை தாளிட்டு, ஏதோ பேசும் சத்தம் சன்னமாகக் கேட்டது. ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தார். உள்ளே இருமல் சத்தம் குறைந்ததைப் போல தெரிந்தது.
“பெரிய ஐய்யா, கொஞ்சம் உடம்பு முடியல” என்று இரும்பு சேர் ஒன்றை போட்டு என் எதிரில் அமர்ந்தார். கைகளை தொடையிடுக்கில் போட்டு குழைந்தார். அவர் பார்வை வாசலை நோக்கி இருந்தது.
“புரோக்கர் சொன்னார், நல்ல பெரிய வீடுன்னு. நல்லா மெயின்டைன் பண்ணி வச்சு இருக்கீங்க” என்றதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
“இருங்கோ, நான் சின்ன அய்யாவ கூட்டிண்டு வரேன். அவா கிட்ட பேசிக்கோங்கோ “ என்றபடி கிளம்பினார்.
அதுவரை அவரை வீட்டு ஓனர் என்று நினைத்த எனக்கு அவர் சொன்னது பெரிய ஏமாற்றத்தை தரவில்லை. என் தேவை நல்ல விலைக்கு வீடு. ஆளில்லாத வீட்டில் இப்படி தனியொருவனாக விட்டுச் சென்று விட்டார்களே என்று யோசிக்கும் போதே, பலமான இருமல் சத்தம் கேட்டது. சரி சுப்ரமணி வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன் . ஆனால் இருமல் சத்தம் அதிகரித்துக் கொண்டே போனது. சரி தண்ணீர் ஏதும் குடுத்துப் பார்க்கலாம் என்று ஆப்பிள் பை சகிதம் அந்த அறையின் பக்கம் சென்றேன். ஜவ்வாது வாடையும் மூத்திர வாடையும் சேர்ந்து அடித்தது. கதவை திறப்பதற்குள் சுப்ரமணி வந்து விட்டார்.
“யாரோ இருமிக்ட்டே இருக்காங்க” என்றதற்கு , அவர் பார்த்துக் கொள்வதாக சைகை செய்தார்.
“சின்ன அய்யா வரும் போது கொஞ்சம் எழுந்து நிக்க முடியுமா , அவா எதிர்பார்ப்பா ” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார் .
“நான் எதுக்கு எழுந்து நிக்கணும் , அவர் என்ன பெரிய மகாராஜாவா , அதெல்லாம் முடியாது . வீடு வாங்க வந்தவனுக்கு ஒரு காபி தண்ணீர் கொடுக்க வக்கில்லை , எழுந்து நிக்கணுமாம். ஆபிசில் நான் வந்தாலே , எழுந்து நிப்பாங்க தெரியுமா ” வார்த்தைகள் வெளியே கொட்டவில்லை, ஆளில்லாத ஹாலில் யாரிடம் போய் கத்துவது. வரட்டும் சுப்பிரமணி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று இருந்தேன்,. எனக்கு கழுத்து வேர்த்தது. உடலெங்கும் மெல்லிய உஷ்ணம் பரவியது. கர்ச்சீப் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டேன். யாரோ கதவை திறந்து வந்தார்கள்.
கடை வாசலில் சாக்லேட் கொடுத்த அதே ஆள். ஒரு ஐந்தடி இருப்பார். தொட்டால் சிவக்கும் கலர். பருமன் என்று சொல்ல முடியாத தேகம். முகத்தில் நல்ல தேஜஸ் இருந்தது. தோல் வரை முடி விட்டிருந்தார். அவர்கள் வீட்டுக்கு வந்து தொலைத்த பாவத்திற்கு , ஆப்பிள் பையை அவரிடம் நீட்டினேன்.
சுப்பிரமணி வெளியே வந்தார். “பெரிய அய்யாக்கு” என்று சுப்ரமணியே வாங்கிக் கொண்டார்.
அவர் திண்டு சோபாவில் அமர்ந்து , என்னையும் அமரச் சொன்னார். சுப்ரமணி என் அருகில் நின்று கொண்டார். எனக்குள் வெடித்த எரிமலைகள் இன்னும் அடங்கிய பாடில்லை. இந்த வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்ற முடிவு எடுக்கச் சொல்லி மனசு ஆணையிட்டது.
“சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணும்” என்றார் சுப்ரமணியின் சின்ன அய்யா.
எவ்வளவு நெஞ்சழுத்தம் இவர்களுக்கு. என்ன வேண்டுமாம் . நான் என்ன கிள்ளுக்கீரையா, “உன் வீடும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் போய்யா” என்று சொல்வதற்குள் வாசல் கதவு தட்டப்பட்டது. சுப்ரமணி திறந்து விட்டார்.
“வாங்கோ , வீடு பாக்க ஆள் வந்திருக்கா, நல்ல வேல டைமுக்கு வந்துட்டேள்“ என்று உள்ளே நுழைந்த பெண்ணிடம் கூறினார். அவரிடம் ஒரு சிறு நிம்மதி தெரிந்தது.
“வாங்க சார். சாரி, ரொம்ப நேரம் ஆகிடுச்சா. காபி ஏதும் குடிக்கிறீங்களா ” என்றபடி , அமர்ந்தாள். அப்பாடா வீட்டில் ஒருவருக்காவது மரியாதை தெரிகிறதே.. அவளை உற்றுப் பார்த்தேன், நீள முகம், கண்ணில் கருவளையம் , கழுத்தில் எலும்புகள் அப்பட்டமாக தெரிந்தன, ஒரு மாதமாக சாப்பிடாத பெண்ணைப் போல இருந்தாள் . அவள் உட்காரவும் ,சோஃபாவில் இருப்பவர் எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது. பட்டு ஜிப்பாவை சரி படுத்திக் கொண்டே, “ உங்களை யார் இங்க வரச் சொன்னது “ என்று என்னை பார்க்காமல் கேட்டார் .
நான் சட்டென்று எழுந்து நின்று விட்டேன். கத்தி விடக் கூடாது என்று சுய கட்டுப்பாடு போட்டுகொண்டு “ வீட்டு புரோக்கர் இன்னைக்கு வந்து பாக்கலாம்னு சொன்னார்” என்று சொல்லி முடிக்கவில்லை “நீங்க கெளம்பலாம்” என்று சொல்லி விட்டு விருட்டென்று அருகில் இருந்த அறைக்குள் சென்று விட்டார்.
நான் கோபத்துடன் அந்தப் பெண்ணை பார்க்க , “ சாரி! சாரி சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, ப்ளீஸ் “ என்று சொல்லிவிட்டு அவர் சென்ற அறைக்குள் நுழைந்தாள்.
“சாரி சார் , தப்பா எடுத்துக்க வேண்டாம் , பக்கத்துல கடை இருக்கு , நாம போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாமா “ என்றார் சுப்ரமணி. சுப்பிரமணி சார் என்று சொன்னதும் ஏதோ இழந்த மரியாதை மீண்டுவந்த உணர்வு வந்தது. கொஞ்சமே சாந்தமானேன்.
அதோடு எனக்கும் ஒரு காபி தேவை பட்டது. வீட்டை விட்டு வெளியே வந்ததும் , வாசலிலேயே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.
“சார், அலமாரி எடுக்க வந்திருக்கோம். சார் வெயிட் பண்ண சொன்னாங்க” என்றனர். “இருங்கோ, அவரே வருவார் “ என்று சொல்லிவிட்டு சுப்பிரமணி நகர்ந்தார்.
மாலை சூரியன், மங்கத் தொடங்கியிருந்தது. பாலாஜி கபேவில் இருவரும் அமர்ந்தோம்.
“சார் , எனக்கு பில்டர் காபி, உங்களுக்கு “ சுப்ரமணியன் பரபரப்பு குறைந்து காணப்பட்டார்.
“ம்ம்ம் , அதே சொல்லுங்க” என்று அதிகாரத் தொனியில் பதில் தந்தேன். வேண்டுமென்றே சார் என்ற சொல்லை தவிர்த்தேன். நான் ஆபிசில் பார்க்காத ஆட்களா . என் சாதியை வைத்து என் காலை எத்தனை பேர் இழுத்துவிட பார்த்திருப்பார்கள் . எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் எவனாக இருந்தால் என்ன? காபி குடித்துவிட்டு , சுப்ரமணியை ஒரு எகிறு, எகிறி விட்டு , நகர்ந்து விடலாம் என்றிருந்தேன். ஆனால் அவர் விடாமல் சார் என்று சொல்கிறார், அவருக்கும் வீட்டிற்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை, பொறுமையாக கேட்போம் என்று ஆரம்பித்தேன்.
“யாருங்க அந்த ஆளு , வீடு பார்க்க ஆள் வந்திருக்கேன் , என்னமோ பெரிய புடுங்கி மாதிரி பாதியிலேயே எந்திரிச்சு போறார்.”
“சார், கொஞ்சம் கோவிச்சுக்க கூடாது, அவா கொஞ்சம் பெரிய இடம், அதான்..”
“அப்படி என்ன பெரிய இடம், வீட்டுக்கு வரவங்களுக்கு மரியாத கூட தர மாட்டாங்களா “, கிட்டத்தட்ட கத்திவிட்டேன். என் கழுத்து துடித்தது. கால்கள் தரையை தட்டின.
“அய்யோ , அப்படிலாம் கிடையாது சார். நீங்க வீடு வாங்க வந்துருகீங்கன்னு தெரிஞ்சதும் சின்ன ஜமீனுக்கு கோவம் வந்திருக்கும், அதான். அவா பரம்பரைக்கே கோவம் ஜாஸ்தினு சொல்லுவா”
ஜமீன் என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. சரி ஜமீனாக இருந்தால்தான் என்ன, மரியாதை கேட்டுப் பெரும் நிலையில் தானே இருக்கிறார்கள்.
காபி வந்தது. சுப்ரமணி நன்றாக ஆற்றிவிட்டு, ஒரு வாய் குடித்துவிட்டு ஓரமாக வைத்து விட்டார்.
“ஜமீனா , இங்க சிட்டில , இவ்ளோ சின்ன வீட்டிலயா” என்றேன் .
“அது ஒரு பெரிய கதை சார். என் அப்பா, பெரிய ஜமீன் – தாமோதர பகதூர் கிட்ட வேலைக்கு சேர்ந்தப்போ, பிரிட்டிஷ்காரா இந்தியால தான் இருந்தாலாம். அவாளுக்கு அப்போல்லாம் ஆயிரம் காணி நிலம் இருக்கும் , அத்தனையும் விளைச்சல் தர்ற நிலம். மகசூல் நேரத்துல ,நெல் மூட்டை கொண்டுவரவே கிலோமீட்டர் கணக்கா மாட்டு வண்டி நிக்குமாம்.. “
ஒரு மடக்கு காபி குடித்துவிட்டு அவரே தொடர்ந்தார்.
“என்ன சார் , கதை விடுறேன்னு நினைச்சுன்டேலா. சொல்றதெல்லாம் சத்தியம்”
சுப்ரமணி பொய் சொல்பவராகத் தெரியவில்லை. “அதெல்லாம் இல்ல, மேல சொல்லுங்க” என்றேன்.
“எல்லாம் கர்மவினை சார். எவ்ளோதான் தான தர்மங்கள் செஞ்சாலும் , செஞ்ச பாவமும் கணக்குல சேரும் பாருங்கோ.”
“ பெரிய பகதூர் பத்தி அப்பா சொல்லிருக்கா. அவர் பெரிய பெண் பித்தனாம். அவருக்கு காட்டுக்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ் உண்டு. அங்கே வாரா வாரம் கதறல் சத்தம் கேட்டுண்டே இருக்குமாம். என் அப்பா, அங்க ஒப்பாரி வச்சுண்டு இருக்கும் பொம்மனாட்டிக்கு கணக்கு பைசல் பண்ணி , காசு பணம் கொடுத்து , வெளியூர் பஸ் ஏத்தி அனுப்பி விட்டுடுவாராம் . சில சமயம் பெரிய பகதூர் ரொம்ப மோசமா நடந்துப்பாராம். அந்த கெஸ்ட் ஹவுஸில் செத்துப் போன கேசெல்லாம் உண்டு. அப்பா தான் எல்லாத்தையும் சமாளிப்பர்.எவ்ளோ கேவலமான பொழப்பு பார்த்தேளா, பேர் மட்டும் கணக்குப்பிள்ளை. ஹ்ம்ம் ” அவர் முகத்தில் ஒரு அருவெறுப்பு எட்டிப் பார்த்தது.
“பிராமின்ல பொதுவா இந்த மாதிரி வேலைக்கு போக மாட்டங்களே, நீங்க மட்டும் எப்படி “ என்றேன்.
“நாங்க ஆறு தலைமுறையா இவாளுக்கு கணக்குப்பிள்ளையா இருக்கோம் சார். எனக்கு நன்னா படிச்சு சர்கார் வேலைக்கு போனும்மு ஆசை. ஆனா அப்பா விடல. நல்ல வேளை நான் கல்யாணமே பண்ணிக்கல பாருங்கோ ” என்று வலிய சிரித்தார்.
அவர் சிரிப்பின் பின்னால் இருந்த சோகம் , அவரைப் பற்றி மேலும் கேட்கக் கூடாது என்பதை சொல்லியது. சுப்ரமணியை பற்றி நான் எழுப்பியிருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றும், அவர் ஒவ்வொரு முறை “சார்” என்று என்னை கூப்பிடும் போது தகர்ந்தன.
“உள்ள இருமிட்டு இருந்தாரே அவர் யாரு “
“அவர் தான் பெரிய ஜமீன். ஆடின ஆட்டத்துக்கு இப்போ அசைவில்லாமல் கிடக்கரார். பண்ணினது கொஞ்ச நஞ்சமா. சின்ன பகதூர் பிறந்து கொஞ்ச நாள்ல, அவர் வீடு பக்கம் வரதையே நிப்பட்டிடாரம். அவர் பொஞ்சாதியும் பொறுத்துப் பார்த்தா . ஒரு நாள் கெஸ்ட் ஹவுசுக்கே போயிட்டா . அங்க சில பொண்ணுங்களோட கையும் களவுமா பிடிச்சுட்டா. ஏண்டா இப்படி பண்றன்னு கேட்டுருக்கா. கைப்புள்ளக்காரி சார் அவா, கிணத்து பாக்கெட்டை வச்சு அடிச்சே கொண்ணுருக்கார் மனுஷன். இப்போ போய் பார்த்தா, இவரா இப்டிலாம் பண்ணினதான்னு தோணும். பத்து வருஷமா இழுத்துட்டு இருக்கு.”
கொலை அது இதுவென்று சுப்ரமணி சொன்னதும் , நமக்கு இவர்கள் சகவாசம் தேவையா என்று மனம் ஒரு பக்கம் கணக்கு போட்டது. எதற்கும் முழு கதையையும் கேட்டு வைப்போம் என்று சுப்பிரமணி காபி குடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“சின்ன பகதூர், அம்மா, அப்பா ரெண்டும் இல்லாமையே தான் வளர்ந்தார்.அடிச்சு வளர்க்க ஆள் இல்லனா, என்ன ஆகும்னு அவர பார்த்து தெரிஞ்சுக்கலாம். என் அப்பா இருந்த வரைக்கும் ஒழுங்கா இருந்தார், ஆனா அப்பாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணு மங்க ஆரம்பிச்சுது. எல்லா இடத்துக்கும் போய் வர முடியல.. எனக்கு பதினாறு வாய்சானப்ப, அப்பா போயிட்டார்.அவர் பார்த்த வேலைக்கு பகவான் தண்டனை தந்துட்டான். கேன்சர் வந்து இழுத்துண்டு போயிட்டார். அவர் ரத்த ரத்தமா கக்கினப்ப , நமக்கு இந்த இடம் வேணுமான்னு தோணாத நாளே இல்லை. ஆனாலும் வேற வழியில்லை. ஜமீன் ஆள் அனுப்பி வச்சுட்டா. நானும் மாட்டிண்டுட்டேன்.” சிறிது நேரம் பேசாமல் இருந்தார்.
“அப்புறம் என்ன நடந்தது”
“நான் சொல்றத ஜமீன் ஆத்துல யாருமே கேக்கல. சீ, போடா பொடிப் பயலேன்னு போய்டுவா. நானும் எனக்கு தெரிஞ்ச கணக்கெல்லாம் போட்டு , ஓரளவுக்கு சமாளிச்சு பார்த்தேன் . ஆனா , பெரிய பகதூருக்கு பொம்மனாட்டின்னா ,அவா பிள்ளைக்கு, குடி, சீட்டாட்டம். சின்ன பகதூர் பகல்ல தங்கமான மனுஷன், ஊருக்கெல்லாம் தானம் தர்மம் குறையில்லாம பண்ணுவா. அந்தக் காலத்திலேயே கல்யாணம்னு வரவாளுக்கு ஒரு லட்சம், பத்து பவுன் நகை. கேட்கறவாளுக்கெல்லாம் விளைச்சல் பூமிய தான தர்மம் பண்ணிட்டு, ஆயிரம், பத்தாயிரம்ன்னு சீட்டாடி விட்டா எப்படி உருப்படும்? அவா சொந்தக்காரால்லாம் கல்யாணம் செஞ்சா எல்லாம் சரியாகிடும்னு, சொல்ல, அதையும் செஞ்சோம். பொண்ணு கேரள நகை கடைக்காரர் வாரிசு, முன்னூறு பவுன் நகையோட வந்தா, அத்தனையும் காலி. நீங்க வந்தப்ப ஒல்லியா ஒரு பொண்ணு வந்தாலே, அவா தான். எனக்கா, தெரிஞ்சே இந்தப் பொண்ண பாழும் கிணத்துல தள்ளறோமேன்னு ஒரு பக்கம் சோகமா இருந்தது. அதுவும் கல்யாணம் முடிச்சு, என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க வந்தா பாருங்கோ, கண் கலங்கிடுத்து . நடக்காதுன்னு தெரிஞ்சும், நல்லா சீரும் சிறப்புமா இருப்பன்னு ஆசீர்வாதம் பண்ணேன். என் உடம்பு கூசிருக்க வேண்டாமா சார், அப்பா தான் கேவலமான வேலை பார்த்தார் , அவர் புள்ள நானும் அதே தான் பண்ணிருக்கேன் ” என்று என் கண்களில் பதிலைத் தேடினார்.
பெருமூச்சு விட்டு அவரே தொடர்ந்தார்.
“கல்யாணம் ஆகியும் சின்ன பகதூர் திருத்தல. கொஞ்சம் கொஞ்சமாக தானம் குறைஞ்சது. எல்லாத்தையும் வித்து குடிச்சாச்சு. அதுக்கும் மேல கடன் வாங்கி சீட்டாட்டம். சொந்தக்காரா, அவன் இவன்னு உள்ள புகுந்து விளையாடினான். என்னால ஒன்னும் கேக்க முடியல. வட்டி கட்டி மாலல . கடன் கொடுத்தவன் வாசல்ல வந்து நின்னதும், சந்தி சிரிச்சுபோச்சு. நானும் அவர் பொஞ்சாதியும் சேர்ந்து தான் , அவா அப்பா சொத்தை எல்லாம் வித்து, கடனை அடச்சோம். மிச்சம் இருந்த காசுல இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டையும் , வாசல்ல இருந்த கடையையும் வாங்கினோம். “
இடைவெளி விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டார். கண்கள் குளமாக இருந்தன.
“இங்க வந்ததும் தான் சின்ன பகதூருக்கு உரைச்சிது. அவரும் கடை முதலாளியா உட்கார்ந்து பார்த்தார். ஆனா முடியல. கொடுத்தே பழக்கப் பட்ட கை பாருங்கோ. காசு வாங்க கூசிடும் . நான் கடைல தனியா இருந்தா, வரவா கிட்ட கடன் சொல்ல விடாம காசு வாங்கிடுவேன் . அதனால என்ன கடைக்குள்ளேயே விடமாட்டார்“ .
அவர் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அரை நூற்றாண்டு ஜமீன் வம்சக் கதையை சொன்ன அயர்ச்சி எட்டிப் பார்த்தது.
“ கடையிலும் வியாபாரம் பெருசா இல்லை. பெரிய பகதூரும் படுத்த படுக்கை. மாசம் டாக்டர் வரணும். எல்லாத்துக்கும் காசு வேணுமே. அதனால தான் அந்த அம்மா வேலைக்கு போக ஆரம்பிச்சா. தன்ன நம்பி வந்தவளை வேலைக்கு அனுப்பி சாப்டாக வேண்டிய நிலைமை சின்ன பகதூருக்கு. அதனாலேயே மறுபடியும் குடி. காசில்லைனா, மேஜையை வித்து குடிப்பார். தோ, நாம வெளில வந்தப்போ வீட்டு வாசல்ல நின்னாலே, அவா அலமாரியை வாங்க வந்திருக்கா. ஏன்னா பொஞ்சாதி குடிக்க காசு தர மாட்டா பாருங்கோ ” என்று சிரித்தார்.
அவர் மனதெல்லாம் புண் பட்டிருப்பது தெரிந்தது.
“இவாள்லாம் பண்ண தப்புக்கு , அந்த பொண்ணு மாட்டிண்டு முழிக்கிறா. கொடுமைய பார்த்தேளா , பெரிய பணக்கார வீட்டுப் பெண் , ஏதோ ஒரு ஆபிஸ்ல வேலை பார்த்து சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆனா அந்த அம்மா, வைராக்கியமான ஆள் சார். பகல் முழுக்க பெரிய பகதூருக்கு என்னென்ன தேவையோ நான் பாத்துப்பேன். நைட்டு அவா தான் பாத்துப்பா . பெரிய பகதூர் செஞ்ச பாவத்துக்கு , அவர் ஜீவன் இன்னும் இழுத்துட்டு கிடக்கு. உடம்பு பூரா ஒரே சொறி சிரங்கு. என்னாலையும் முன்ன மாதிரி அவர தூக்கி குளிப்பாட்ட முடியல. மாசம் ஒரு தடவ ஆள் வச்சு பண்றோம். இப்போலம் ஜமுக்காழ்த்தொட அவர் சதை வேற ஒட்டிண்டு ஒரு மாதிரி ஆகிட்றது. அப்பப்ப கை கூப்பி மன்னிச்சுடுன்னு சொல்றா மாதிரி, ஓ ன்னு அழறார். இப்ப அழுது என்ன பிரயோஜனம். “
“ ஆனா சார், இத்தனை பிரச்சனையையும் பார்த்து வேறொரு ஆளா இருந்தா ஓடிருப்பா. இவாளுக்கு என்ன தலையெழுத்து. எவ்ளோ கனவோடு இருந்திருப்பா . இப்போ கூட சின்ன ஜமீனுக்கு கிட்னில ஒரு பிராப்ளம். அதான் இந்த வீட்ட வித்துட்டு , வர்ற காசுல அவருக்கு ஆபரேஷன் பண்ணிட்டு , வாடகை வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கா.”
எதோ உணர்ந்தவராய் “சார், இதெல்லாம் கேட்டுட்டு இந்த வீட்ட வேண்டாம்னு சொல்லிட்டு போயிடாதீங்கோ. ப்ளீஸ்” , என்று என் கைகளை பிடித்துக் கொண்டார். கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
“இந்த வீடு வித்துட்டா , கடைய எனக்கு தரேன்னு சொல்லிருக்கா. எனக்கு அம்பத்தி அஞ்சு வயசாகறது சார்., இதுவரை எனக்குன்னு ஒண்ணும் பண்ணிக்கல. பகதூர் குடும்பமும் என்ன அப்டி கை விட்டுடல. ஆனா இந்த அம்மா தெனைக்கும் கஷ்டப்படுறத பார்த்தா , மனசு வலிக்குது சார். எப்படியும் அந்தக் கடையை நான் நண்ணா நடத்தி அவாள ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் சார்.. நமக்கெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா விட்டுடுவோமா சார் .ப்ளீஸ் வீடு வேண்டாம்னு சொல்லிடாதீங்கோ“
கைகளை விட்டு விட்டார். சட்டையில் கண்களை துடைத்துக் கொண்டு , யாரும் தான் அழுததை பார்த்திருப்பார்களா என்று ஒரு எட்டு பார்த்துவிட்டு , தலை குனிந்த படியே காபி டம்ளரை பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த வீட்டை வாங்கி விடுவது என்று முடிவு செய்தேன். பகதூர் குடும்பத்தின் மீதான கரிசனத்தால் இல்லை.
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவ்வளவு தான்.