செருப்பு தைப்பவரின் மகன்
அந்த ஏசி அறையில் ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. அதில் தெய்வத்திரு சோமசுந்தரம், முட்டி தெரிய ஷார்ட்ஸ் அணிந்து, ஐ பேடில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார் . அவர் முதலமைச்சரின் அக்கா மகன். கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற சகலம். அவரைச் சந்திக்க பலர் காத்திருக்கையில், கனமான அமைச்சர் ஒருவர் செருப்பைக் கழட்டி விட்டு பவ்யமாக, இடுப்பை ஒருவிதமாக வளைந்து , குனிந்து, தலை நிமிராமல் ஒரு எருமை மாட்டைப் போல உள்ளே நுழைந்தார்.
உள்ளே சோமசுந்தரத்தைப் பார்த்ததும் கை கட்டி, பீ.டீ வாத்தியார் கொடுத்த தண்டனைக்கு நிற்பவர் போல நின்றார் . நிற்பவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் வைரவேல். செருப்பில்லாமல் மார்பிள் தரையில் நின்ற அவருக்கு உடம்பு உதறியது. சில்லென்று இருந்த அந்த அறை, அவர் உடம்பை குளிர் படுத்த, உடம்போ ஒத்துழைக்க மறுத்து உஷ்ணத்தை ஏற்றியது. அது அவர் கக்கத்தில் வியர்வையாக வெளியே வந்தது . அதை பொருட்படுத்தாமல் சோமசுந்தரம் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். எதிரில் அவரை விட இரு மடங்கு வயதான ஒரு அமைச்சர் நிற்கிறாரே, அவர் கால் லேசாக உதறுகிறதே என்றெல்லாம் பார்க்காமல், பொறுமையாக இருபது நிமிடம் கழித்து நிமிர்ந்தார்.
“கொஞ்சமாவது அறிவு மயிரு இருக்கா உனக்கு” என்று ஆரம்பித்தார் சோமசுந்தரம். அடுத்தாக அமைச்சரின் சின்ன வீட்டில் ஆரம்பித்து , மொத்த பரம்பரையை இழுத்து திட்டிக் கொண்டிருந்தார். “உன் அமைச்சர் பதவி காலி , தெரியுமா?“ , “பப்ளிக்ல எவனாவது இப்படி பேசுவானா? எவனையாவது திட்டனும்னா, தொ இந்த மாதிரி ஒரு ரூம் போட்டு திட்டு, அத விட்டுட்டு தேவை இல்லாம, சே ” என்று முறைத்தார்.
மேலும் அரை இஞ்ச் குனிந்து வாயில் கை வைத்தபடி “ அதில்ல தலைவரே “ என்று அமைச்சர் ஆரம்பிக்க , ஒரு விரல் காட்டி “பொத்து” என்று சொல்லாமல் சொன்னார் சோமசுந்தரம். தலைவர் என்ற வார்த்தை அவருக்கு ஒரு குளிர்ச்சியை கொடுக்கும் என்று நினைத்த அமைச்சருக்கு ,ஏமாற்றமே மிஞ்சியது. கால்கள் மேலும் நடுங்கியது.
“நீ நம்ம சாதிக்காரன் , அதனால தான் கூப்டு பேசிக்கிட்டு இருக்கேன், வேற ஆளா இருந்த இந்நேரம் களி தான். பாரு , இப்ப என்ன நடக்குதுன்னு” என்றபடி செய்தி சேனல் ஒன்றை போட்டார்.
கறுப்புச்சட்டை ஒருவர் “ அமைச்சரே இப்படி பேசலாமா , பெரியார் மண்ணில் சாதிப் பெயரைச் சொல்லி இப்படி யாரும்…”
அடுத்த சேனல் மாற்றினார்.
“தேசிய எஸ் சி , எஸ் டி ஆணையம் அமைச்சரை விசாரிக்க சென்னை விரைந்தது.” என்று அடுத்த சேனல் கதறிக் கொண்டிருக்கும்போதே “பிரேக்கிங் நியூஸ்” முழு திரையையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
அதில் அமைச்சர் வைரவேல் மழையில் நின்றபடி, வெள்ள நிவாரண வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். டிராபிக் கான்ஸ்டாப்பிலே போல அப்படி இப்படி கை காட்டி போஸ் கொடுத்து விட்டு கிளம்பிய அவரை கேமரா ஒன்று துரத்தியது. அதையறியாமல் அவர் தன் மொழியில் சகட்டு மேனிக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவர் மொழியில் கெட்ட வார்த்தைகளுக்கு நடுவே நாலு வார்த்தை வந்தாலே பெரிய விஷயம் . அதைக் கேட்க வேண்டா வெறுப்பாய் நாலு அதிகாரிகள் அவரை சூழ்ந்திருந்தனர்.
அங்கே அமைச்சர் காட்டும் வன்மம் அனைத்தையும் வீட்டில் மனைவியிடம் இறக்கி வைக்கும் அதிகாரிகள். அந்த அதிகாரிகளில் ஒருவர் நல்ல பளீர் கருப்பு. முட்டி வரை மடக்கிய பேண்ட், டக் இன் பண்ணிய இளஞ்சிவப்புச் சட்டை, துடிப்பான மீசை, தாடி இல்லா முகம் . அந்த அதிகாரி மட்டும் அமைச்சர் சொல்வதைக் கவனிக்காமல் , அட்டை போல உறிஞ்சி விஷயத்தை உறிஞ்ச நினைக்கும் அந்தக் கேமராமேனை வேறு பக்கம் போகச் சொல்லி காற்றில் காக்கை விரட்டிக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே சம்பந்தமே இல்லாமல் சேற்றில் இறங்கி வேலை பார்த்த கடுப்பு, பாதத்துக்கும் செருப்புக்கும் நடுவில் இருந்த நமநமப்பு என்று கடுப்பில் இருந்த அமைச்சர் , கவனிக்காத அந்த அதிகாரியை பார்த்து இன்னும் கடுகடுப்பானார்.
“என்னய்யா அந்த சக்*** பய நான் சொல்றத கேட்க மாட்டனாமா .. கொட்டாங்குச்சில காபி குடிச்ச நாயி , பேண்ட் ஷர்டு போட்டதும் பெரிய புடுங்கி மாதிரி நான் சொல்றத கேட்காம அங்க என்ன மயிர புடுங்குறான். அவன கக்கூஸ் கழுவ விட்டுருவேன் பாத்துக்கோ “ என்று சொல்லிவிட்டு , பதிலுக்கு காத்திருக்காமல் விருட்டென காரில் கிளம்பினார்.
இவை அனைத்தும் நல்ல ஹை டெபினிஷனில் செய்தியாக தெரிந்தது . சோமசுந்தரம் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி அவர் மீது வீச, அதற்கு மேல் குனிய முடியாமல் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார் அமைச்சர் வைரவேல். குளிர் இப்பொழுது புட்டத்திலிருந்து உச்சிக்கு ஏறியது.
கன்னம் துடிதுடிக்க இரண்டாம் ஆட்டத்தை ஆரம்பித்தார் சோமசுந்தரம் – “ஊரே மழை வெள்ளத்தில் நிக்குது, ஆனா பிரேக்கிங் நியூஸ்ல நீ தான் வர. ஒரு நல்ல விஷயத்துக்கு நியூஸ் ல வரியா நீ , மாமாக்கு ஏன்யா இப்படி டென்ஷன் கொடுக்குறீங்க.“ இங்கேர்ந்து போய்த்தொலை , நான் கால் பண்றேன் என்றபடி யாருக்கோ போன் செய்தார் அந்த சோமசுந்திரம்.
*****
“ ஏங்க, இப்படி மூணு நாளா ஆபிஸ் போகாம வீட்லயே இருக்கிறதா “. காலையில் காபி கொடுக்கும் போதே மனிமேகலை ஆரம்பித்துவிட்டாள் .
மூன்றாம் நாள் தாடியை தடவிப்பார்த்த படியே வாசல் சேரில் இருந்த பன்னீர்செல்வம், அந்தக் காபியை அவள் முகம் பாராமல் வாங்கினார். அவருக்குள் நடக்கும் பூகம்பங்கள் அவளுக்கும் தெரியும். இருந்தும் வாழ்க்கை ஓடிட வேண்டுமே? வீட்டிலேயே இருக்கும் புருஷன் அவளுக்கு ஒரு தொந்தரவு தான்.
ஆனால் பன்னீர்செல்வமோ , அடிபட்ட நாயின் ஊளையைப் போல உள்ளுக்குள்ளேயே புளுங்கிக் கொண்டிருந்தார். என்னென்னவோ எண்ணங்கள் தோன்றின. அமைச்சர் சாதிப்பெயரை சொல்லி ஒரு முறை தான் திட்டினார் . ஆனால் இந்த பாழாய்ப்போன தொலைக்காட்சிகள், அவர் செய்தியை தவிர வேறெதையும் போடாமல் , அடிக்கடி போட்டு இம்சித்தனர். இதுவே ஒரு பெரிய பிரளயத்தை அவர் மனதில் உண்டு செய்தது. , அதில் பிரதானமாக அமைச்சரின் அமிலச் சொற்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. மனைவிக்கு அது தெரிந்திருந்தாலும், தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும் , நேரில் , அதுவும் கோடி மக்கள் பார்க்க அனுபவித்திருக்க மாட்டாள். அவளுக்கென்ன மிஞ்சிப் போனால் தெருவோரச் சண்டை , பக்கத்து வீட்டு வம்பு, அதைத் தாண்டி என்ன பெரிய அவமானத்தை சந்தித்து இருக்கப் போகிறாள் .
இரண்டு நாட்களாக திரும்பத் திரும்ப எல்லா தொலைக்காட்சியிலும் போட்டுப் போட்டு அவரை ஒரு மினி பிரபலமாக்கியிருந்தார்கள். அவரோ கடவுளைத் திட்டிக்கொண்டிருந்தார்.
இந்த கடவுளுக்கு கருணையும் இல்லை, ஒன்றும் இல்லை. ஒன்று என்னை மேல் சாதியில் பிறக்க வைத்திருக்க வேண்டும். இல்லையா, சூடு சொரணை மானம் ஏதும் இல்லாதவனாய் இதே சாதியில் உலவ விட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லை, நன்றாகப் படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்தை வாங்கித் தந்து, கொஞ்சம் கொஞ்சமாக தலை நிமிர வைத்து, இன்னார் இன்ன ஜாதி என்று தெரியாத நல்லதொரு தெருவில் , இரண்டு அடுக்கு வீடு கட்டும் அளவிற்கு வசதியுடன் வாழ வைத்தார். அப்படியே விட்டிருக்க வேண்டாமா? ஒரே அடியில் என் கோட்டைகளை தகர்த்து விட்டார். இனி இந்த தெருவுக்கே தெரியுமே, இங்கே ஒரு சக்**** பயல் இருக்கிறான் என்று.
இதற்கெல்லாம் மேலாக அவரது ஆறு வயது மகள் , அப்பா டீவீல என்ன நடக்குது, சக்**** ன்னா என்ன என்று கேட்ட, அந்தக் கணத்தில் இருந்து அவர் எப்படி வெளிவர முடியும் . சாகும் வரை ஒலித்துக்கொண்டே இருக்குமே.. அன்றிலிருந்து தொலைக்காட்சியை இயக்க யாருக்கும் அனுமதி மறுத்தார். மூன்று நாட்கள் பொருத்தப் பார்த்த மனைவி , இன்று கேட்டே விட்டாள் , எப்பொழுது ஆபிஸ் மறு விஜயம் என்று. அவளும் தான் என்ன செய்வாள். அவளுக்கு இருக்கும் ஒரே உலகம், அந்த தொலைக்காட்சி. அதில் வரும் மீனாட்சி, காமாட்சி என்று தெய்வீக பெயர் கொண்ட வில்லி சீரியல்கள் இல்லாமல் கொஞ்சம் துடித்துத் தான் போனாள். காபி குடித்து அவளிடம் கொடுத்து , பார்த்துக் கொள்ள அனுமதி தந்தார்.
ஐந்து நிமிடத்தில் பதறியடித்து ஓடி வந்தாள் – “என்னங்க நம்ம வீட்டுக்கு அந்த அமைச்சரே வந்து, சாப்பிட்டு , மன்னிப்பு கேட்கப் போறாராம்” என்றாள் . அவள் முகத்தில் இனம் புரியாத ஒரு சந்தோஷம், ஏதோ அவள் சமையல் ருசி பார்க்க தேவனே வருவதைப் போல.
*****
“சார் கொஞ்சம் வழி விடுங்க” என்று பன்னீர் செல்வதை ஓரமாக நகரச் சொன்னான் அந்த படா சைஸ் இளைஞன். அவன் தனியாளாக ஒரு தேக்கு நாற்காலியை அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அமைச்சர் வரும் நேரம் என்று பன்னீருக்கு புரிந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் அவள் மகள் உயரத்தில் இரண்டு டிபன் பாக்ஸ் , ஒரு வெள்ளித்தட்டு எல்லாம் வந்தது. பன்னீரின் மனைவியின் முகம் சுருங்கியது.
இரண்டு கேமரா மேன் , ஒரு லைட் பாய் வந்து அவர் வீட்டை வெளிச்சமாக்க, அந்தக் கார் வந்து நின்றது. அதற்குள் அவர் வீட்டின் வாயிலில் ஒரு மினி கூட்டம் கூடி, செல்போனில் சிலர் படம் எடுக்க ஆரம்பித்தனர். இங்கே என்ன நயன்தாராவா வருகிறாள். எதற்கிந்த கூட்டம் என்று பன்னீர சலித்துக் கொண்டார்.
பன்னீர் செல்வம் காரை திறக்க, வெளிவந்த வைரவேல், அவரை கட்டியணைத்து , கேமரா மேனைத் தேடினார். அவர்கள் வரும் வரை பொறுத்திருந்து, போஸ் தந்தார். அதன் பிறகு மன்னிப்பும் கேட்டார்.
அதற்குள், உள்ளே டிபன் பாக்ஸ் திறக்கப்பட்டு , சகலமும் வாழையிலையில் பரிமாறப்பட்டு இருந்தது. தேக்கு சேரில் அமைச்சரும், பிளாஸ்டிக் சேரில் பன்னீரும் உணவருந்தினார்கள். அமைச்சர் கேட்டதெல்லாம் அந்த சில்வர் தட்டில் எடுத்து வரப்பட்டு பரிமாறப்பட்டது. கல்யாண ஜோடியை படம் பிடிப்பதை போல அவர்கள் இருவரையும் சுற்றிச் சுற்றி படம் எடுத்தார்கள். எங்க தன் வாயில் லட்டு ஒன்றைத் திணித்து , போஸ் கொடுக்கச் சொல்வார்களோ என்ற பயத்திலேயே பன்னீர் வேகமாக சாப்பிட்டு முடித்தார்.
என்னய்யா இவ்வளவு அவசரம், என்று முணுமுணுத்தபடி சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டார் வைரவேல். நல்ல சாப்பாடு என்று அவர் மனைவிக்கு ஒரு பொய் பாராட்டு விழாவையும் கேமரா முன் நிகழ்த்தினார். அவர் மகளிடம் ஒரு சாக்லேட் கூடையை தந்து, அவள் படிப்பு பற்றி அக்கறையில்லாமல் விசாரித்தார். கடைசியாக, அனைவரையும் நிற்க வைத்து , எல்லா கோணங்களிலும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினார்.
கார் வரை சென்றவருக்கு ஏதோ பொறி தட்ட , அங்கிருந்தே பன்னீர் செல்வத்தின் மகளை அழைத்தார்.
சும்மா ஒன்றும் அழைக்கவில்லை “அப்படியே அந்த செருப்பை எடுத்துட்டு வாம்மா , மறந்துட்டேன்” என்றார் சிரித்தபடி.
செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் போல இருந்தது பன்னீர் செல்வத்திற்கு.
ஆனால் அமைச்சரை அடிப்பதா , இல்லை தன்னைத்தானே அடித்துக் கொள்வதா?
****
அமைச்சர் செருப்பு எடுத்து வரச் சொன்ன வீடியோ வைரலாகி , அவர் போக்குவரத்து துறையில் இருந்து, கால்நடை துறைக்கு மாற்றப்பட்டார்.
ஆறு மாதங்களில், பன்னீர் செல்வமும் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்பட்டார்.