பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?
பாஜக தமிழகத்தில் வளர்கிறதா ?
அண்ணாமலை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவராகி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வழிகிறது , நயன்தாராவுக்கு அடுத்த படியாக தினமும் அவரது முகம் தான் தொலைக்காட்சியில் வருகிறது, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் என்று மார் தட்டுகிறார்கள் பாஜக காரர்கள் . உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது இடம் பிடித்து , அதிமுக, திமுகவிற்கு மாற்று நாங்கள் தான் என்று சற்று அதிகமாகவே கூவுகிறார்கள். உண்மையிலேயே பாஜக வளர்ந்துவிட்டதா? தெருவுக்கு தெரு அண்ணாமலை சொல்வதைப்போல, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க எம்பி சீட்டுகளைப் பெருவார்களா? தமிழகம் பாஜக vs திமுக என்ற நிலைமைக்கு வந்துவிட்டதா? வாருங்கள் அலசலாம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக , அதிமுக கூட்டணியில் இருபது தொகுதிகள் பெற்று , நாலு தொகுதிகளில் வென்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தது பாஜக. அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் பன்னிரண்டு லட்சத்து சொச்சம். கிடைத்த அத்தனை ஒட்டுகளும் பாஜகவிற்காக மட்டுமே விழுந்ததாக என்ன முடியாது. அதில் அதிமுக ஓட்டுகளும் , பாமக ஓட்டுகளும் அடக்கம் தானே? அதனால் தான் வெறும் வாக்குகளை வைத்தோ, வெற்றி பெற்ற தொகுதிகள் வைத்தோ பாஜகவை தர நிர்ணயம் செய்ய முடியாது. காரணம், கடந்த தேர்தலில் பல்முனைப் போட்டி இருந்தது . அதிமுகவில் இருந்து ஒரு பக்கம் ஓட்டுக்களை தினகரன் பிரிக்க, “விக்ரம்” கமல் தொடங்கிய ம நீ மய்யம் , சீமானின் நாம் தமிழர் போன்றவை தன் பங்கிற்கு ஓட்டுக்களை பிரித்தன. ஓட்டுகளை மட்டும் வைத்துப் பார்த்தல், முப்பது லட்சம் வாக்குகளை வாங்கிய நாதக தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி. வெற்றி பெற்ற சீட்டுகளை வைத்து மதிப்பிட்டால் , காங்கிரஸ் 18 சீட் ஜெயித்து மூன்றாம் இடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணியில் கூட பாஜகாவிற்கு மூன்றாம் இடம் தான், இரண்டாம் இடம் பாமகவிற்கு.
நிலைமை இப்படி இருக்க, எங்கிருந்து வந்தது இந்த “பாஜக தான் தமிழகத்தின் மூன்றாம் பெரிய கட்சி?” என்கிற வாதம் ?
சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின், தமிழக பாஜகவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன . எப்படி தமிழிசைக்கு கவர்னர் போஸ்ட் , இல கணேசனுக்கு ஒரு போஸ்ட் என்று தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கினார்களோ, அப்படியே அன்றைய பாஜக தலைவர் முருகனையும் மந்திரி பதவி கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார்கள். அதன் பின்னர் நடந்தது தான் உச்சக்கட்ட டுவிஸ்ட். தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு , தலைவர் பதவியை தூக்கித் தந்தார்கள் . கட்சியில் சேர்ந்து ஓராண்டுக்குள் தலைவர் பதவியா என்று வாய் பிளந்தனர் அக்கட்சியினர். அடுத்த தலைவர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் இருந்த பழம்பெரும் தலைகளுக்கு வள்ளுவர் சிலை சைசில் ஆப்பு வைக்கப்பட்டது. கட்சிக்காக ஐபிஎஸ் பதவியை உதறியவர், வெல்ல முடியாத சீட்டு என்று தெரிந்தே நின்றவர், தமிழக பாஜக வரலாற்றில் இல்லாத வகையில் இளம் தலைவர் என்றெல்லாம் ஒரு பக்கம் கொண்டாடினார்கள். அவருக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆசீர்வாதம் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர்களின் ஆதரவு இல்லாதவரை வளர விட்டதாகவும் வரலாற்றில் இல்லை.
இப்படி ஒரு கருப்புக் குதிரையாக காலத்தில் இறங்கிய அண்ணாமலை, ஆரம்பத்தில் சிறிது அடக்கி வாசித்தாலும் , பின்னர் அதிமுகவையே பின்னுக்கு தள்ளும் தினசரி அரசியலை ஆரம்பித்தார். உள்ளாட்சித் தேர்தல் என்ற முதல் அமிலப் பரிட்சை அவரை நெருங்கியது. அண்ணாமலை எப்படியும் அதிமுக கூட்டணியில் இருந்து , இருபது சதவீத இடங்களை பெற்று வென்று விடலாம் என்று தான் நினைத்திருப்பார். அதிமுகவினருக்கோ , தங்களின் இடத்திற்கு பாஜக வேட்டு வைக்கிறதே என்ற எரிச்சல். தேர்தல் பங்கீட்டில் அதை வெளிக்காட்டவும் செய்தார் எடப்பாடியர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வரை தந்திரமாக இழுத்தடித்து, பாஜகவை தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு தள்ளினார். அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக கட்சிப் பெருசுகள் முணுமுணுத்தனர்.
கடைசி நேரத்தில் ஆட்களை தனித்து போட்டியிட வைத்தாலும் , எத்தனை பேரைத் திரட்ட முடியும் ? ஆரம்பத்திலேயே எண்ட் கார்டா என்று அண்ணாமலை பதறி இருக்கக்கூடும். என்னதான் அவசர அவசரமாக ஆள் தேடினாலும் , பாஜகவின் அடிப்படை உட்கட்டமைப்பு பிம்பிலிக்கி பிளாக்கி போல இருப்பதால் , வெறும் நாற்பது சதவிகித இடங்களுக்கே ஆள் சேர்க்க முடிந்தது. பிரச்சாரத்தை முடிப்பதற்கே அவர்களுக்கு நாக்கு தள்ளியது . தேர்தல் முடிவுகளில் அது எதிரொலித்தது.
ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றது பாஜக. சீட்டுகளின் எண்ணிக்கையில் முன்நூறைத் தாண்டியது . அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சொற்ப இடமே தேறும். இது ஒரு பெரிய வெற்றியே இல்லை என்று எதிர்தரப்பு பேச ஆரம்பித்தனர் . பாஜகவின் நல்ல நேரம் , நாதக மற்றும் பாமக அவர்களைவிட கம்மியாக ஜெயித்தது. காங்கிரஸ் கட்சியை அறிவாலயத்தில் அடகு வைத்து விட்டதால் அவர்களும் கம்மியாக போட்டியிட்டு கம்மியாகவே வென்றார்கள். இது தான் சாக்கு என்று முந்திக் கொண்ட பாஜக, மூன்றாம் இடம் நாங்கள் தான் என்று சித்திரம் தீட்ட ஆரம்பித்தனர். பிரதமர் முதல் அனைவரும் ஏதோ தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விட்டதைப் போல பாராட்டினார்கள் .
அரசியலில் பெர்சப்ஷன் மிக முக்கியமான ஒன்று. இல்லாததை இருப்பதாக காட்டக்கூட வேண்டாம் , மக்களை நம்ப வைத்துவிட்டாலே போதும். அந்த தந்திரத்தை உள்ளாட்சித் தேர்தலில் இருந்து நன்றாகவே பாஜக செய்து வருகிறது. இரட்டைத் தலைமை பிரச்சனையால் அதிமுக தினசரி அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்க , யாரும் இல்லா ஊரில் நானும் ரவுடி தான் என்று பாஜக முஷ்டி மடக்குகிறது. ஆனால் முதலிடம் பிடிக்க அடிப்படை கட்டமைப்பே இல்லாமல் கனவு மட்டும் தானே கான முடியும்?
தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து சொச்சம் தேர்தல் பூத்துகள் உள்ளன . பூத் ஒன்றுக்கு பத்து பேராவது இருந்தால் தான் அது பெரிய கட்சி . இப்படிபட்ட கட்டமைப்பைக் கொண்ட இரண்டே கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன. ஒன்று திமுக , மற்றொன்று அதிமுக. இந்த பூத் அமைப்பே இருபது லட்சம் உறுப்பினர் கொண்ட ஒரு வாக்கு வங்கியாக அவர்களுக்கு இருக்கிறது . பாஜகவின் ஒட்டு வங்கியாக சொல்லப்படுவதே வெறும் ஆறேழு லட்சம் ஓட்டுகள்தான் . பூத் ஏஜென்ட் இல்லையேல் , யார் மக்களை அழைத்து வருவது , யார் ஓட்டு போட வைப்பது? பிறகு எங்கே ஆட்சியைப் பிடிப்பது.
சரி பாஜக வளரவே வளராதா ? இன்றைய தேதியில் வாய்ப்புகள் மங்கலாகத்தான் தெரிகின்றன . அது சூரிய அஸ்தமனத்தின் ஒளியா அல்லது சூரியோதயத்தின் ஒளியா என்பதில் தான் விசயமே உள்ளது. ஆனால் வாய்ப்பே இல்லை என்று ஒதுக்கி விடவும் முடியாது . என்ன தான் செய்ய வேண்டும் ? முதலில் பாஜக தன் உயிர் நாடியான மத அரசியலை மாற்ற வேண்டும். பாஜக என்றாலே கெட்ட வார்த்தை என நினைக்கும் 2k கிட்ஸை தன் வசப்படுத்த வேண்டும். அடுத்து அதன் உட் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். திமுகவின் ஊழல்கள் , வாரிசு அரசியல் மட்டுமே வைத்து பெரிதாக மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் ஜாதி அரசியல் மட்டுமே செல்லுபடியாகும் . ஒரு காலத்தில் பனியா , பிராமணர்களின் கட்சி என்று பெயர் எடுத்து , அதிலிருந்து சிறிது வெளிவரவே பாஜகவிற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. தமிழகத்தில் அவர்களை ஒரு சில சாதிக்கான கட்சி என்று ஓரங்கட்டப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள் . அதையும் உடைக்க வேண்டும் .
அடுத்து சிறுபான்மையினர் ஒட்டு. தொன்னூறு சதவீதம் இஸ்லாமிய மக்களின் ஓட்டு பாஜகவுக்கு விழாது. கிறிஸ்தவ மக்களின் ஒட்டும் கேள்விக்குறி தான். அவர்கள் மட்டும் பொன்னார் பக்கம் நின்றிருந்தால், அவர் எம்பி ஆகி இன்று மந்திரியாக இருப்பார். அடுத்து வன்னியர் , பட்டியலின ஓட்டுக்களைப் பெற அருப்பெரும் பாடு பட வேண்டும். இவற்றில் ஒரு பங்காவது சாய்ந்தால் தான் சிறிது வாய்ப்பு உண்டு . அதே நேரம் அதிமுக பலவீனப் பட வேண்டும், ஆனால் அதன் வாக்குகள் பாஜக ஒட்டாக மாற வேண்டும் . இதெல்லாம் நடக்கவே பத்தாண்டுகள் பிடிக்கும் . அதுவரை அண்ணாமலை தலைவராக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் , மேடைக்கு மேல் இருந்த கூட்டத்தை விட கீழிருக்கும் கூட்டம் கம்மி என்றிருந்த பாஜகவில் , அண்ணாமலை கூட்டத்தை கூட்டுவது உண்மைதான். அவர் திமுகவின் தலை வலியாக மாறி வருகிறார் என்பதும் உண்மையே. அவர் முதல்வராக இது மட்டும் போதுமா? சீமானுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறிவிட்டதா? சிவாஜி கணேசனுக்கு வராத கூட்டமா அண்ணாமலைக்கு வந்து விட்டது.
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் என்ற காமெடி ஞாபகம் வரலாம். ஆனால் பாஜக 2026ல் ஆட்சியமைக்க அத்தணை கிரகங்கள் , அண்டங்கள் எல்லாம் ஒன்று கூட வேண்டும்.
கோடியில் ஒன்றாக இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.. திமுக தன்னிலை மறந்து, ஊழலில் ஊறி , மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளானால் அது நடக்கும். கட்டவிழ்த்து விட்ட ரவுடி ராஜ்யம் , வாரம்தோறும் லாக் அப் மரணம், ரோட்டோர கடைகளில் பாக்ஸிங் என்று தேவையில்லாத பெயரைக் கெடுக்கும் அத்தனை விஷயங்களையும் திமுக செய்துவருகிறது. இத்தோடு கரண்ட் கட் , மணல் மாபியா , நில மாபியா என்று பொதுமக்களை துன்புறுத்துவது தொடர்ந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . ஏன் பொது மக்களுக்கே திமுகவுக்கு பாஜகவே தேவலாம் என்ற எண்ணம் வரலாம் .
2006-2011 கலைஞர் ஆட்சியில் தினசரி பவர் கட், எங்கு திரும்பினாலும் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு என்று மக்களே ஒரு கொதி நிலையில் இருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா மூச்சுக்கு முன்னூறு முறை , இது மைனாரிட்டி ஆட்சி என்று அறிக்கைப் போர் நிகழ்த்திக் கொண்டிருந்தார். 2011 தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்றிருந்த சமயம். ராசிபுரத்தில் ஒரு பொதுக் கூட்டம் போட்டு கலைஞர் ஆட்சியை நார் நாராக கிழித்தார் . அன்று கூடிய கூட்டம் , பொது மக்களையே வாய் பிளக்க வைத்தது. துவண்டு கிடந்த அதிமுக கட்சியினரை வெறி கொண்டு உழைக்க வைத்தது. அது அடுத்த பத்து ஆண்டுகள் அதிமுகவை ஆட்சியிலும் உட்கார வைத்தது.
இன்று அண்ணாமலைக்கு கூடும் கூட்டம் அப்படிப் பட்டதா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.