தமிழ்

ஒரு வல்லிய காதல் கதை

நெஞ்சு, யாரோ கதவைத் தட்டுவதைப் போல அடித்தது. கால் கட்டைவிரலில் இருந்து பாய்ந்த மின்சாரம் தலைவரை வந்து சேதி கேட்டது. குனிந்தபடி இருக்கும் என்னை நிமிர்த்த மனமும் அறிவும் முயற்சி செய்துகொண்டிருந்தன . இவை இழுத்த இழுப்புக்கு இணங்கி மறுபடியும் அவளைப் பார்த்தேன்.

வட்ட முகம். நெற்றியில் வளைந்து நெளிந்த அந்த கற்றை முடி, அசையாமல் அப்படியே நின்றது. இன்னும் பெரிய பொட்டு வைத்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பாள். வைத்துக்கொண்டால் தான் என்ன? காந்தக் கண்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் , பார்த்திருக்கிறீர்களா? இவளை வந்து பாருங்கள்.

தென்னகத்துப் பெண்களுக்கே உரிய புடைத்த மூக்கு. அதற்கு வலு சேர்க்கும் உப்பிய கன்னங்கள். அடுத்து உதடுகள் தானே என்று நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. , வேண்டாம் அவை அந்தரங்கமானவை. அதைப் பற்றி ஆரம்பித்தால் விவகாரமாகி விடும் , அடிக்க ஊரே திரண்டு விடும்.

என்னை விட மூன்று நான்கு அங்குலங்கள் கம்மியாக இருக்கக் கூடும். யார் கண்டது, அருகருகே நின்றால் , அகச் சிறந்த தம்பதிகள் என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்.

சட்டென்று பார்த்துவிட்டாள்.

ஒரே ஒரு நொடி தான்.

இரு கண்களும் சந்தித்தன.

அவள் ஆயிரம் வார்த்தைகள் சொன்னதைப் போன்ற உணர்வு. கண்களில் பாய்ந்த மின்சாரம் உடலெங்கும் செய்தி சொல்லியது. செய்தி கிடைத்து விட்டதாக, கால் விரல்கள் சுருண்டு, இதயம் படபடத்தன. தோல் மயிர்கள் ஒரு படி மேலே சென்று , சிலிர்தெளுந்து பெங்காளி நடனமாடின. அவள் கண்களிலும் ஒரு சின்ன மாற்றம். அவளுக்கும் மயிற்கூசெரிந்த்தா தெரியவில்லை. அதற்குள் நான் வேறொரு பக்கமாக திரும்பிவிட்டேன். அவள் கை கூப்பி எல்லோரையும் வரவேற்பைப் போலத் தெரிந்தது.

மறுபடியும் பார்க்க வேண்டும் என்று இதயம் கட்டளையிட்டது. அடிபணிந்தேன். அவள் யாருடனும் பேசாமல் அப்படியே நிற்க , நான் அவளையே பார்த்தேன். இத்தனை வருடம் கழித்துப் பார்த்தும், அதே பெப்புடன் இருந்தாள். அதே ரோஸ் பவுடர் பூசி இருப்பாளா என்று மனம் அவள் முகத்தைத் தாண்டி வர மறுத்தது.

இந்தக் கணமே நிறந்தமாக நிலைத்துவிட்டால் எப்படி இருக்கும். இதே தூரம் கூடப் போதும். சோறு வேண்டாம் , தண்ணி வேண்டாம் , இதே நாற்காலி, இதே திருமண மண்டபம் , எதிரில் அவள் போதும்.

பதற்றப்படாதீர்கள் .

அவள் மணப்பெண் அல்ல. நான் அந்த அளவிற்கு அல்பமும் இல்லை.

திடீரென்று யாரோ கையைப் பிடித்து இழுக்க மனம் அவள் முகத்தைத் வேண்டா வெறுப்பாய் நகர்ந்தது.

“தாத்தா ,இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்க, இந்த பொம்மை இங்கேயே தான் பன்னீர் தெளிக்ச்சுகிட்டு இருக்கும். வா ,உள்ள போய் உக்காருவோம் , அப்பா அம்மா தேடுவாங்க “ என்றான் பேரன். சட்டை பாக்கெட்டில் இருந்த மூக்குக் கண்ணாடி என்னைப் பார்த்து சிரித்ததாக தோன்றியது. அவளும் கை கூப்பிய படி சிரித்துக் கொண்டிருந்தாள்.

Hi, I’m tamilvalai

Leave a Reply