தமிழ்

அமெரிக்கா எனும் மாயை – 2024 எலக்சன்

அமெரிக்காவில் தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன.

கடந்த மாதம் நடைபெற்ற டிரம்ப் வெர்சஸ் பைடன் விவாதம் இதற்கு மிகப்பெரும் ஆரம்பப்புள்ளியாக அமைந்திருந்தது. அதற்கு முன் வரை ,பைடன் எப்படியும் ஜெய்த்து விடுவார், டிரம்ப் எலக்சன் வரை வெளியே நடமாடவே முடியாது, இன்னும் ஆப்பிரிக்கா அமெரிக்கர்களின் ஏகோபித்த ஆதரவு பைடனுக்குத் தான் உள்ளது என்று ஏகப்பட்ட ஆருடங்கள்.

இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியுள்ளன கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள். முதலில் அந்த டிபேட்டுக்குச் செல்வோம். விவாதம் செல்லும் முன்னரே டோனால்ட் டிரம்ப் , சி என் என் சேனல்காரர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். நானும், பைடனும் நின்று கொண்டே பேச வேண்டும் என்பதுதான் அது. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஒரு சீனியர் லிவிங் ஹோமில் நடக்கும் இரண்டு முதியவர்களுக்கான சண்டை என்ற வகையில் தான் இங்குள்ள இளைஞர்கள் பார்க்கிறார்கள். பைடன் 80ஐத் தாண்டி விட, அவருக்கு மூன்று வயது சிறியவராக நிற்கிறார் டிரம்ப். இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பேசுவது பெருசு பைடனுக்கு முடியாத காரியம் என்ற ராஜ தந்திரத்தில் தான் இந்த கோரிக்கையை வைத்தார் டிரம்ப்.

அவர்களின் விவாதம் ஆரம்பமானது. முதல் அரை மணி நேரம் அப்படி இப்படி சென்றாலும் , அது ஒரு மிக முக்கியமான புள்ளியை நோக்கி நகர்ந்தது.

அமெரிக்கத் தேர்தல்களில் எப்பொழுதுமே பேசப்படும் ஒரு விஷயம் இல்லீகள் ஏலியன்ஸ். ஏலியன்ஸ் என்றால் வேற்றுலக வாசிகள் என்று நினைக்க வேண்டாம். அமெரிக்காவில் சட்ட அனுமதி இல்லாமல் நாடு விட்டு நாடு வந்து, பார்டர் தாண்டி குதித்து வருபவர்களுக்கு இங்கே வைக்கப்பட்டுள்ள பெயர் தான் இல்லீகல் ஏலியன்ஸ். கீழே மெக்சிகோ, அதன் கீழே தென் அமெரிக்கா, என்று வரிசை கட்டி நிற்கும் மக்கள். எப்படியும் அமெரிக்கா வந்துவிட்டால் , பிழைத்துக் கொள்ளலாம் என்ற அசட்டு நம்பிக்கை.

இவர்களைக் கண்டாலே தெற்கில் இருக்கும் மாகானங்களுக்கு கசக்கும். டிரம்ப் போன முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான முதல் காரணம் ஹிலாரி கிளின்டன் ஈமெயில் சர்வர் சொதப்பல்கள் , புதின் மற்றும் ரஷ்யா செய்த சிட்டு வேலைகள் தான் ,என்றாலும், கன்சர்வேட்டிவ்ஸ் எப்பொழுதுமே ஆன்ட்டி இம்மிகிரேன்ஸ் பக்கம் தான் இருப்பார்கள், அதுவும் தென் மாநிலத்தவர் வெறியுடன் இருப்பார்கள் . டிரம்ப் பதவியேற்றதும், இதற்காக சில பல கோடிகளில் இரும்புச் சுவரெல்லாம் அமைத்தார். அந்தச் சுவற்றில் இருந்த இரும்பு கட்டைகளை பிடுங்கிக் கொண்டே மெக்சிகன் மக்கள் வீடு எல்லாம் கட்டிக் கொண்டார்கள் என்பதும் ஒரு நகை முரண்.

டிரம்ப் நாலு வருடத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். டெமாக்ரட்ஸ் ஆட்சிக்கு வந்ததும் , பைடன் கம் முன்னே, கிட்டத்தட்ட 10 லட்சம் இல்லீகள் ஏலியன்ஸ் நாட்டிற்குள் புகுந்து விட்டதாக தகவல்கள் சில தெரிவிக்கின்றன. இந்த ஏலியன்ஸ்களை தங்களால் பார்த்துக் கொள்ள முடியாது என்று தென் மாநிலங்கள் சில , வடிவேலு பாணியில் கை விரித்தது. அந்த ஏலியன்சை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து டெமாக்ரெட் ஆட்சி செய்யும் நியூ யார்க் போன்ற சில நகரங்களில் விட்டுச் சென்றனர்.

டெமோக்ரட்ஸ் , சில படி மேலே போய், அவர்களுக்கு நியூ யார்க் நகரின், த்ரீ ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் புக் செய்து ராஜ உபசாரம் செய்து பார்த்துக் கொண்டதெல்லாம் கடந்த ஒரு வருட வரலாறு. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் பைடனிடம் ஒரு மிகப்பெரிய கேள்வியை கேட்கிறார்கள்.

“உங்கள் ஆட்சியில் பார்டர் விஷயத்தில் நீங்கள் கோட்டை விட்டு விட்டீர்களா” என்று.

பைடன் ஆணித்தரமாக புள்ளிகளை எடுத்து வீச பேச ஆரம்பித்தவர் , திடீரென்று வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினார். வாய்க்கு வந்த வார்த்தையை போட்டு கேள்விக்கான பதிலை கொடுத்தார். இதுதான் சாக்கு என்று அதுவரை நிதான ஆட்டம் ஆடிய டிரம்ப் – இறங்கி ஒரே சிக்சராக அடித்தார்.

“அவர் பேசுவது என்னவென்று அவருக்கும் புரியவில்லை நமக்கும் புரியவில்லை, ” – இவரா உலகின் சக்திவாய்ந்த தலைவர் , என்று அவர் போட்ட போடு அடுத்த நாளிலிருந்து பற்றிக் கொண்டது.

பைடனின் சொந்தக் கட்சிக்காரர்களே, இனிமேல் இவர் நிற்கக்கூடாது , போட்டியிடக் கூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தார்கள். ஆனாலும் அசைந்து கொடுக்காமல் நான் கில்லி தெரியுமா? என்ற அடுத்த சில கூட்டங்களில் பைடன் பேசினாலும், உக்கிரைன் அதிபரை பக்கத்தில் வைத்துக் கொடன்டு, என் துணை ஜனாதிபதி புதின் (ரஷ்ய அதிபர்) தான் என்று முத்துக்களை உதிர்த்தார். பக்கத்தில் நின்ற உக்கிறைன் அதிபர் ஜெலேன்ஸ்கி அதிர்ந்தார்.

இன்றைய தேதியில் சுமார் 10 காங்கிரஸ் டெமாக்ரட்ஸ் பைடன் நிற்கக்கூடாது என்று கொடி பிடித்து நிற்கார்கள். . இவையெல்லாம் டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக அமைய ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சமயத்தில்தான், ட்ரம்ப் பிலடெல்பியாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் தன்னுடைய பிராச்சாரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அங்கே என்ன நடந்தது என்று இந்நேரம் உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். வெட்ட வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்த அவரை, சுமார் 450 அடியில் இருந்த ஒரு பில்டிங்கின் மேல், 20 வயது இளைஞன் ஒருவன் நோக்கி துப்பாக்கியால் சுட, அது அவருக்கு காதை மட்டும் பெயர்த்துக்கொண்டு போக, எம்ஜிஆரை போன்ற ஒரு அனுதாப அலை இங்கே டரம்பிற்கு வீச ஆரம்பித்துள்ளது.

இதுதான் சாக்கு என்று கன்சர்வேட்டிவ்களும் இது கடவுளின் செயல் ,இவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் , இந்த ட்ரம்ப் எங்கள் மெஸ்ஸையா , இவர்தான் இனி இங்கே எல்லாம் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணக்குப் படி, இன்று தேர்தல் நடந்தால், டிரம்ப் தான் வின்னர். பைடனை விட ஐந்தாறு பாயிண்டுகள் அதிகமாக பெற்றுவிடுவார் என்கிறார்கள்.

டரம்ப்பின் மீது துப்பாக்கி சூடு நடந்த ஒரு மணி நேரத்தில் , சில பெரும் தொழிலதிபர்கள் கோடிக்கணக்கான டாலர்களை கொடுத்து ட்ரம்பை ஜெயிக்க வைக்க போகிறோம் என்று மாத்தட்டுகிறார்கள். எலான் மஸ்க் , மாதம் 45 மில்லியன் டாலர் தருவேன் என்கிறார். டிரம்ப் , அடிப்பட்ட ஐந்து நிமிடத்தில் எழுந்து ஃபைட் என்று முஷ்டி முறுக்கி, புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக வான்ஸ் என்பவரை அறிவிக்க, அவர் மனைவி அங்கே இங்கே சுற்றி இந்தியா வம்சாவலியாக இருக்க போக நம் ஆட்களும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் .

இந்த நேரத்தில், 2020இல் ட்ரம்ப் செய்த சில்லறைத்தனங்களை பற்றி மக்கள் சற்றே மறந்திருக்கிறார்கள் என்பதும் கவலை தரும் விஷயம். ஆனால் அதைவிட கவலை தரும் விஷயம் பைடனின் வயதும், அவரது நிர்வாகத் திறனும்.

யோசித்துப் பாருங்கள் அமெரிக்காவின் மீது ஒரு தாக்குதல் நடக்க இருக்கிறது. அதிகாலை ஒரு மணிக்கு பைடனை எழுப்புகிறார்கள். அவர் குழந்தை போல ஏதோ உளறுகிறார். அவர் சொன்னால் மட்டும்தான் இங்கே எந்த ஆயுதமும் வெடிக்கும். அமெரிக்காவின் தலையெழுத்தியை மாற்றக்கூடிய ஒருவர் குழந்தை போல நடந்து கொள்கிறார். அவரை நம்பியா இந்த நாட்டை ஒப்படைப்பது என்ற கவலை இவர்களுக்கு இன்னும் மேலும் இங்கு உள்ளது.

சில கன்சர்வேட்டிவ்காரர்கள் இது பைடனே இல்லை, இது அவரது டூப் என்றெல்லாம் ஆங்காங்கே கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் சிந்தனைகளை மேலே பறக்கவிட்டு டீப் ஸ்டேட் அது இது என்று மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்பொழுது மிக முக்கியமான விஷயம் அமெரிக்காவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 5,6 மாநிலங்கள் எந்தத் தாத்தாவின் பக்கம் சாயும் என்பதுதான்.

இதில் ஒரு ஸ்விங் ஸ்டேடான ஓஹாயோ, மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் டிரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளர் வான்ஸ். இவரும் நம்மூர் வம்சாவளிக்காரரான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மோதிக் கொள்ளும் டிபேட் சுவாரசியமாக இருக்கும், அதில் யார் முன்னேறுவார்கள் என்றெல்லாம் இங்கே பெட்டிங் ஆரம்பித்து விட்டன.

சரி ட்ரம்ப் வந்தால் பிரச்சனை தானா..அவர் எந்த முறை ஆட்சிக்கு வந்தார் இதுக்கு அடுத்த முறை போட்டியிட முடியாது ஏனென்றால் அமெரிக்க ஜனாதிபதி காலம் இரண்டு தவணைகளாக மட்டும் எட்டு ஆண்டுகள் மட்டும்தான். இதையே பதம் பார்க்க டிரம்ப் முனைவாரா ? பைடன் கம் பேக் கொடுப்பாரா? இருவரும் தேர்தல் வரை தாங்குவார்களா , எல்லாம் நவம்பரில் தெரிந்துவிடும்.

இதற்கு முன் இதே சீரிசில் எழுதியவை

https://writervivek.com/2022/11/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%a

e%a9%e0%af%81%e0%ae%ae/

https://writervivek.com/2022/06/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f/

Hi, I’m tamilvalai

Leave a Reply