பணம் ஒரு பழக்கம் -2
செங்கிஸ் கான்
“பேரக் கேட்டா சும்மா அதிருதில்ல” –
இந்த வசனம் ரஜினிக்கு எந்த அளவிற்குப் பொருந்தியதோ அதே அளவிற்கு செங்கிஸ் கானுக்கும் பொருந்தும். இவர் பெயரை கேட்டு எதிரி நாட்டு மன்னர்கள் தூக்கம் தொலைத்தார்களோ இல்லையோ, அதை விட பன்மடங்கு அவரின் அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கள் பயந்தார்கள். எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் , ஒரு சிறு கிராமத்தையே அந்தப்புரமாக வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஆயிரம் பெண்கள் அவரது மனைவிகளாக இருந்தார்கள். (ஒரு மனைவிக்கே.. என்ற எண்ணமெல்லாம் பொது மக்களுக்குத் தான் தோன்றும்)
நிற்க.. இது பெரும் பணம் படைத்தவர்களின் தொடர் தானே, இதில் மனைவிகளின் கணக்கு எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள், ஆயிரம் மனைவிகள் , தலைக்கு பத்து பவுன் நகை போட்டாலே , பத்தாயிரம் பவுன் – ஆயிரம் கிலோ தங்கம். இது ஒரு டப்பா கணக்கு தான் என்றாலும், செங்கிஸ் கானின் செல்வங்கள் கணக்கில் அடங்காதவை. ஒரு கட்டத்தில் , உலகின் ஒட்டு மொத்த நிலப் பரப்பில், நாற்பது சதவிகிதம் இவர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அந்த நிலப்பரப்பின் அத்தனை செல்வங்களும் அவருடையதாக பொருள் கொள்ளலாம். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் , மான்சா மூசாவை விட செங்கிஸ் கான் தான் பணக்காரர் என்று ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்கள். சரி யார் இந்த செங்கிஸ் கான், என்ன செய்தார், எப்படி பணம் சேர்த்தார்?
அது ஆயிரத்தி நூறாம் நூற்றாண்டின் நடுப் பகுதி. மங்கோலியாவை, நூற்றுக் கணக்கான நாடோடிக் கும்பல்கள் சிறு நிலங்களாகப் பிரித்து வாழ்ந்து வந்தனர். தன்னை விட,அளவில் பெரிய கூட்டம் ஒன்று தாக்க வந்தால், ஒன்று ஓடி ஒளிவார்கள், இல்லை தாக்க வந்தவர்களுக்கு தங்கள் நிலத்தை கொடுத்துவிட்டு , கூட சேர்ந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடோடிக் கூட்டத்தின் தலைவருக்கு மகனாகப் பிறந்தவர் தான் டெமுஜின்(செங்கிஸ் கானின் இயற்பெயர்) . செங்கிஸ்கானுக்கு எட்டு வயதாகும் போது, அவர் அப்பா இறந்துவிட, அவர்களின் கூட்டம் அவரை கைவிட்டது.நிர்கதியாய் நின்றார். அதன் பிறகு அவர் செய்ததெல்லாம் கே ஜி எஃப் படத்தையே மிஞ்சும் சாகசங்கள்.
எட்டு வயதிலேயே வேட்டையாடி உண்ண வேண்டிய சூழல். பல நாள் பட்டினி. கடும் குளிர். தினமும் மரணத்தை பார்க்கும் குழந்தைப் பருவம்.ஒரு கட்டத்தில் உணவிற்காக சொந்த தம்பியை அடித்துக் கொள்ளும் அளவிற்கு போயிருக்கிறார். இவை தான் செங்கிஸ் கானை ஒரு இரத்த வெறி பிடித்த மனிதனாக மாற்றியிருக்க வேண்டும். நாடோடியாக சுற்றித்திரிந்த அவர், கிடைத்ததை உண்டு, எப்படியோ ஒரு சிறு கூட்டத்தில் தஞ்சமடைந்து, அங்கே ஒரு பெண்ணை மணந்து , அக்கூட்டத்தில் முக்கிய பொறுப்பிற்கு உயர்ந்தார். ஆனால் விதி விடாமல் துரத்தியது.
அவர்களை ஒரு பெரும் கூட்டம் தாக்குதல் நடத்தி கைப்பற்றுகிறது . அதில் அவரும், அவர் மனைவியும், அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் . தலைவன் என்றுமே தலை குனிந்து நிற்க மாட்டான் என்பது போல , அவர்களை எதிர்த்து ஒரு சிறு உளியாக , கொஞ்சம் கொஞ்சமாக அந்த மக்களை வென்று தலைவர் ஆகிறார்.
தன் நிலம் போனால் என்ன, கூட இருக்கும் கூட்டம் போனால் என்ன, இதோ இந்த செங்கிஸ் கான் இருக்கிறான் என்று மங்கோலியா முழுதும் பரவி இருந்த சிறு சிறு கூட்டங்களை ஒன்றிணைத்து , ஓர் பெரும் படையை தயார் செய்கிறார். அவர்களை ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறு படைகளாக உருவமைத்தது, எட்டுத்திக்கும் பரவ விடுகிறார். அவர்களுக்கு பொன்னும் பொருளும் தந்து, சுக போகிகளாக வைத்திருந்து , ராஜ விசுவாசம் கொண்டவர்களாக மாற்றினார். எதிர்த்த தலைவர்களின் தலைகள் உருண்டன. மங்கோலியா அவர் வசமானது. சாதாரண அரசர்கள் அங்கேயே நிறுத்தி இருப்பார்கள். செங்கிஸ் கான், மன்னர்களுக்குல்லாம் மன்னர், சும்மாவா இருப்பார். உலகை வென்று வர ஆயத்தமானார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரின் சாம்ராஜ்யம் விரிந்தது. ஒட்டு மொத்த மங்கோலியாவை கைப்பற்றிய பின் , தன் சொந்தங்களை முக்கிய பொறுப்பில் அமர்த்தினார். அடுத்தது சீனா, திபெத், இன்றைய பாகிஸ்தான், ஆப்கான் என்று தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்தார். ஏனோ இந்தியா அவரின் கையில் சிக்கவில்லை. காஷ்மீர், முதல் டெல்லி வரை தொட்டுச் செல்கிறார். அவர் நடந்து சென்ற இடமெல்லாம் பிணங்கள் விழுந்தன. அவரின் குதிரைப்படை, கால் பட்ட இடமெல்லாம், இரத்த ஆறுகள் ஓடின. செங்கிஸ் கானால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட நாலு கோடி பேர் இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தான் போர் தொடுக்கப் போகும் நாட்டிற்கு ஒரே ஒரு முறை சரணடைய அனுமதி தருவார், எதிர் நாட்டு மன்னர் ஒப்புக் கொண்டால் பிழைத்தார். இல்லையேல் அந்த நாடே கபளீகரம் செய்யப்படும். எதிர்த்து நிற்க ஒரு அரச குடும்ப வாரிசு கூட மிஞ்சாது. அவர்கள் வீட்டுப் பெண்கள், செங்கிஸ் கான் அந்தப்புறத்தில் பத்தோடு பதினொன்றாக சேர்க்கப்படுவர் . அந்த நாட்டின் தங்கமும் வைரமும் செங்கிஸ்கானுக்கு சொந்தமாகிவிடும். செங்கிஸ் கானின் உறுமலுக்கே நாட்டை விட்டு ஓடிய குறுநில மன்னர்கள் பலர். எதிர்த்து நின்று, வென்ற கதை சொல்ல , யாரையும் செங்கிஸ் கான் விட்டதில்லை.
இப்படி ஒரு வெறி பிடித்த மிருகமாக இருந்தாலும், அவருக்கென்று சில கோட்பாடுகள் இருந்தன. அவரை எதிர்த்து அபாரமாக போர் புரிந்த தளபதிகளை தன் தளபதிகளாக மாற்றி அழகு பார்ப்பார். மக்களுக்கு எந்த மதம் விருப்பமோ அந்த மதத்தை அவர்கள் தொடர்ந்து வழிபடலாம். தன்னை எதுவெல்லாம் எதிர்க்க முடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்.
இப்படி சீனா முதல் ஐரோப்பா வரை அவரின் சாம்ராஜ்யம் வளர்ந்தது . இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை இதுவரை வேறு எந்த ஒரு மன்னரும் கட்டி எழுப்பியதில்லை. எழுப்பவும் முடியாது. செங்கிஸ் கான் உயிருடன் இருக்கும் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை.
அவரின் சொத்து என்றால் , கணக்கிடவே முடியாது. காரணம் , எந்த நாட்டை வென்றாலும், பொன் பெண் இரண்டும் அவருக்கு,. அந்நாட்டின் நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்படும். எதிர் நாட்டு மன்னர் சரணடைந்து விட்டால், அந்த நாடு, செங்கிஸ் கானின் ஆட்சிக்குள் வந்துவிடும். கப்பமாக கேட்கும் அனைத்தையும் கொடுக்க வேண்டும், முக்கால் வாசி நேரங்களில் தங்கம், வைரம் போன்றவை பெறப்படும். இப்படி அவரிடம் இருந்த தங்கம் மட்டுமே இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடிகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவரின் படையில் லட்சக் கணக்கான குதிரைகள் இருந்தன. அவரின் வைரங்களை அடுக்கினால் பிரமிடுகளை விட உயரமாக இருக்குமாம். இவையனைத்தையும் பாதுகாக்க மட்டும் ,இரண்டாயிரம் அரண்மனைகளும் , கோட்டைகளும் தேவைப்பட்டன. இதனால் தான் இவர் மூசா வை விட பெரிய பணக்காரர் என்ற பஞ்சாயத்து இன்றும் நிலைக்கிறது. பல நூறு மனைவிகள், ஆயிரக் கணக்கான குழந்தைகள் என்று ஒரு குறு நாட்டையே உற்பத்தி செய்திருக்கிறார். இன்று சுமார் இரண்டு கோடி பேருக்காவது இவரின் டி என் ஏ இருக்கக் கூடும் என்று சமீபத்திய ஆய்வு சொல்கிறது. யாருக்கு தெரியும் இதைப் படிக்கும் யாரோ ஒருவர் கூட செங்கிஸ் கான் வம்சமாக இருக்கலாம்.
சரி இப்படி வாழ்ந்தவர் எப்படி இறந்தார்,?அவரின் சொத்து என்ன ஆனது என்று பெரிய விபரங்கள் இல்லை. ஒரு பக்கம் போரின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டதால் இறந்துவிட்டார் என்றும், மறுபக்கம் , பிளேக் நோய் தாக்கி இறந்தார் என்று முரண் பட்ட வரலாற்று தரவுகள் கிடைக்கின்றன.
இன்றளவும் , செங்கிஸ் கான் என்றால், அவர் ஒரு சைத்தான், வெறி பிடித்த மனிதர், இத்தனை மக்களைக் கொன்றார், இத்தனை நாடுகளை சூறையாடினர் என்று தான் வரலாறு சொல்லுமே தவிர, அவர் இவ்வளவு பெரிய பணக்காரர் என்பதைச் சொல்லாது. ஊரார் சொத்தை தூக்கி தன் ஜோப்பில் போட்டுகொண்டு தான் இவர் பணக்காரர் ஆகியிருக்கிறார். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழ மொழி உள்ளது, அதைப் போலவே, பொது சொத்தும் ,குல நாசம் தான் போல. மங்கோலியப் பேரரசு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி அஸ்தமணமானது .
இவரோடு ஒப்பிட்டால், செல்லும் வழியெல்லாம்,ஊர் மக்களுக்கும் , தன்னை சார்ந்தோருக்கும் தங்கத்தை வாரி இறைத்து , அள்ளிக் கொடுத்த மூசா தான் பெரிய பணக்காரர்.