பணம் ஒரு பழக்கம் – 1
மான்சா மூசா
1200 களின் பிற்பகுதியில் அபூபக்கர் எனும், ஆப்பிரிக்க அரசருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. எப்பொழுதும் போல முதல் மகன் மான்சாவை அபூபக்கரை அரசருக்காகவும், இரண்டாம் மகன் மூசாவை அதற்கு அடுத்த இடத்திற்கு வளர்க்கிறார்கள். முதலில் அரசனான மான்சாவிற்கு கடலில் பயணித்து பல சாகசங்கள் செய்ய ஆசை. அந்த ஆசை கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட ஆரம்பித்து, டைனோசர் சைசில் வளர்ந்து விட , அவர் கப்பலேறி கிளம்புகிறார். தனியாக கிளம்பவில்லை, ஆயிரக்கணக்கான வீரர்கள், இளம் பெண்கள், அடிமைகள் என ஒரு மினி ரங்கநாதன் தெரு கூட்டத்தையே கூட்டிச் சென்றார்.
கிளம்பியவர், திரும்பவே இல்லை. அவரது ஆட்சி எப்படி இருந்தது, எவ்வளவு பணம் கொண்டிருந்தார்கள், மூசாவே போட்டுத்தள்ளினாரா என்பதர்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த தம்பி மூசாவை பற்றி நிறைய கதைகள் உள்ளன. உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான் என்றால் , அது மூசாவாகத் தான் இருக்கும் என்று சத்தியம் அடித்து சொல்கிறார்கள் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள்.
அண்ணனுக்கு டாட்டா காட்டிவிட்டு, அவன் திரும்பி வரட்டும் என்று காத்திருந்தான். ஓராண்டு காலத்தில் ஒரு கடுதாசி கூட வராத நிலையில் , அரியணையில் அமர்ந்தான் மூசா. அண்ணனைப் போல , கடலையே பார்த்து பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருக்காமல், தன சுய புத்தியில் சில வேலைகளை செய்ய ஆரம்பித்தான். அவனது பரம்பரையே இஸ்லாமியர்களாக இருந்தாலும், பட்டும் படாமலே இருந்து வந்தனர். முதலில் அதை மாற்றினான். தீவிர இஸ்லாமியராக மாறி, இறை வழியை ஊரெங்கும் பரப்பினான். அவன் நினைத்திருந்தால் , மக்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்த ஊர்க்காரர்களை இஸ்லாத்திற்கு மாற்றியிருக்கலாம். ஆனால் அவன் அப்படிப்பட்ட அரசனாக இருக்கவில்லை. புனித ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாட ஆணையிட்டான் தவிர, பெரிதாக ஆரம்ப காலத்தில் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை.
சரி, இதற்கும் அவன் பெரும் செல்வந்தர் ஆனதற்கு என்ன சம்பந்தம்? ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்த மூசாவுக்கு இவ்வளவு செல்வம் எப்படி வந்தது? அரச குடும்பத்தில் பிறந்ததினால் அவர் ஆரம்பித்ததில் இருந்தே சுமார் பணக்காரராக இருந்திருக்கிறார். அதுவும், 1300 களின் முற்பகுதியில், ஐரோப்பா கண்டமே பசி பட்டினியில் உறைந்து கிடைக்க, இவருக்கு மட்டும் எப்படி செல்வம் கிட்டியது? எல்லாவற்றிற்கும் பதில் உண்டு.
இறை வழியை நாடிய பலர், நாடு , பதவி மக்களை விட்டு விலகியே இருப்பார்கள். ஆனால் மூசா அப்படிப்பட்டவன் அல்ல. பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், மாலி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தான். அருகில் இருந்த டிம்பக், காவோ போன்ற நகரங்களை, தன் வசப்படுத்தினான். வியாபார வழிகள் பெருகி , நாடே விருட்சம் பெற்றது. கடலை ஒட்டிய நாடு என்பதால், உப்பு விற்பனையில் பெரிய அளவில் லாபம் கிடைக்க ஆரம்பித்தது. அப்படியே கிடைத்த செல்வதில், சுற்றி இருந்த இருபத்தைந்து மிகப்பெரிய நகரங்களை கைப்பற்றி, சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டே சென்றான். கடல் உப்பை தாண்டி, பாறைகளிலும் , நிலங்களிலும் இருக்கும் உப்பை வெளியே எடுக்க ஆரம்பித்தார்கள். அங்கே அவர்களே எதிர்பாராத ஒன்று கிட்டியது.
தங்கம்!
பாளம் பாளமாக தங்கம் கிடைத்தது. தோண்டும் இடத்தில் எல்லாம் தங்கம். பண்டமாற்று முறை முடிந்ததில் இருந்தே, தங்கத்திற்கான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நாணயங்கள், ஆபரணங்கள் என்று தங்கம் எதிலெல்லாம் இருக்கிறதோ, அவை எல்லாம் பெரும் விலைக்கு சென்றன. மாலி சாம்ராஜ்யமே ஒரு தங்க தட்டில் தான் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஓராண்டுக்கு ஆயிரம் கிலோ தங்கத்தை தோண்டி எடுத்தார்கள். இது மூசா அரசாங்கம் எடுத்த கணக்கு. இதைத்தவிர , ஒரு சென்ட் நிலம் இருந்தவரெல்லாம் ஊரின் செல்வந்தராக மாறினார்கள் . இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி எழக்கூடும், இவ்வளவு செல்வம் கொண்ட அந்த தேசத்தை எப்படி மற்ற தேசங்களில் எல்லாம் விட்டு வைத்தன?
1300 களின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் நாடுகள் அனைத்தும் தொடர் பஞ்சத்தில் சிக்கித் தவித்தன. அமெரிக்கா என்று ஒன்றே கண்டுபிடிக்கப்படவில்லை , உலகுக்கே பயம் காட்டிய செங்கிஸ் காணும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தேசத்தில் இவ்வளவு தங்கம் என்ற செய்தியே வெளியே தெரியவில்லை. 1324 ஆம் ஆண்டு வரை இப்படி ஒரு தேசத்தில் இவ்வளவு தங்கம் இருந்தது என்று யாருக்குமே தெரியாது.
அப்படி என்னதான் நடந்தது 1324ல்? அள்ள அள்ள தங்கம் கிடைத்ததில், நாடு செழித்தது, மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர், அந்த நேரம் பார்த்து மூசாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அது அந்த தேசத்தையே மாற்றியமைத்தது. ஹஜ் புனித பயணம் செல்ல வேண்டும் என்பதே அந்த எண்ணம் . பத்தாயிரம் வீரர்கள், ஆயிரம் யானைகள், யானைகளின் மேல் தங்க பெட்டகங்கள், கணக்கில்லா அடிமைகள் என ஒரு மினி நாட்டையே கூட்டிக்கொண்டு புறப்பட்டான் மூசா. மாலி சாம்ராஜ்யத்தில் இருந்து , ஹஜ் போய்ச் சேருவதற்குள் பல அடிமைகளுக்கு குழந்தை குட்டிகள் எல்லாம் பிறந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வழியெங்கும் அவர்களை பார்த்தவர்கள் வாயை பிளந்தனர். கடைக்கோடி அடிமைகளே உடலெங்கும் தங்க ஆபரணம் தரித்து நடந்து சென்றால், யார் தான் வாய் பிளக்க மாட்டார்கள்?
மூசா மெக்காவில் தங்கியிருந்த நாட்களில் , அதன் தெருக்களில் தங்க ஆறு ஓடியது என்றால் மிகையாகாது. அதன் தங்க வியாபாரிகளே திவாலாகி , தெருவுக்கு வந்தனர். அரை லிட்டர் பாலா, பிடி ஒரு தங்க கட்டியை. மூன்று நாட்கள் தங்க ஒரு பிடி தங்கம் என்று நித்தம் தங்க மழை பொழிந்தது. அவன் நாடு திரும்புவதற்குள், ஹஜ்ஜில் இருந்து செய்தி உலகமெங்கும் பரவியது. அரசர்களுக்கெல்லாம் அரசனாக மூசா பார்க்கப்பட்டார் . ஆனால் நாடு திரும்பியது முதல் முழுக்க தன்னை இஸ்லாத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.
அவர் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. இரண்டு மூன்று தலைமுறை கண்ட பின், அவர்களது சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
மூசாவின் சொத்து மதிப்பு , இன்றைய தேதியில் 400 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்கிறார்கள். இன்றைய பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பே, 275 பில்லியன் தான்.
இப்போது சொல்லுங்கள் மூசா தானே பெரிய பணக்காரர்?