தமிழ்

ஜி டி எஸ்பிரெஸ் – சிறிய கதை

பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இருக்கிறது. இல்லையென்றாலும் முதுகில் மாட்டியிருக்கும் பேக்கில் இன்னொரு நகல் இருக்கிறது. ஆனாலும் மனம் பாக்கெட்டில் இருப்பதை தான் விரும்புகிறது. என்ன, அது தொலைந்து போனால், பையை கழட்டி , திறந்து, தேடி எடுக்க வேண்டும். அதற்கு சோம்பல். நான் எங்கிருக்கிறேன் என்று சொல்ல மறந்து விட்டேன் பார்த்தீர்களா, இப்பொழுது தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். 

Photo by Sai Kiran Anagani on Unsplash

வாசலிலேயே போலீசார் வரவேற்றனர். உருட்டிக்கொண்டு வந்த சூட்கேஸை, அங்கிருந்த இயந்திரத்தின் வாயில் தள்ளினேன். அவர்கள் முதுகுப் பையையும் கேட்டார்கள். அதில் என்ன எடுத்து வர முடியும்? ஒரு   ஜட்டி, ஒரு டவுசர், ஒரு போர்வை, அவ்வளவு தான்.  ஒரு பேச்சுக்கு துப்பாக்கியை வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். திறந்து எடுத்து, குறி பார்த்து சுடுவதற்குள் எதிரில் இருப்பவன் என் கவட்டையில் உதை விட்டு ஓடுவானா மாட்டானா? வாசலிலேயே செக் செய்வார்கள் என்பது கூட தெரியாத மங்குனியா நான். என் மடியில் கனமில்லை, அவர்களே திறந்து பார்த்துக் கொள்ளட்டும் . இதெல்லாம் தெரிந்தே தான் ,   பேக் திறந்தவுடன் தென்படும் படி பூமர் ஜட்டியை மேலாக  வைத்திருந்தேன் . என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

பையை திறந்த அந்த ஆறடி போலீஸ், ஜட்டியை பார்த்து அடுத்து என்னை பார்த்தான். நான் பக்கவாட்டில் முகத்தை திருப்பினேன். சிரித்தால்  அவர்கள் கோபித்து கொள்ள கூடும் . அவர்களின் கோபம் பொல்லாதது . போலீஸ்  ஒரு பேனாவை எடுத்து, ஜட்டியை நகர்த்தி, நாய் குப்பையை குதறுவதைப்  போல குதறிவிட்டு கொடுத்தான் . 

மணி ஐந்து. ஜி டி எக்ஸ்பிரஸ் ஆறே முக்காலுக்கு தான். நேரம் இருக்கிறது.  நான் இப்படித்தான், எல்லாவற்றிலும் முந்திக்கொள்பவன். எதையும் நேரம் தவறாமல் செய்யக்கூடிய ஆள். ரயில் என்பதால் இரண்டு மணி நேரம் முன்னர் வந்தேன், விமானம் என்றால் நாலு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தில் இருந்திருப்பேன் .

உள்ளே நுழைந்ததும் அடர்த்தியாக வரிசையில் இருந்த சேர்களை பார்த்தேன். ஒன்று சீ சா வை போல ஒரு பக்கமாக தூக்கியிருந்தது. மற்றொன்றில் மாமி ஒருவர் கஷ்டப்பட்டு உடம்பை சொருகி வைத்திருந்தார். பக்கத்தில் ஒல்லி மாமா, பஞ்சகஜத்தை சொருகிக்கொண்டு அப்பாவியாக இருந்தார். அவர்களுக்கு முன் குவா குவா என்று ஒன்று அதன் அப்பாவை சோதித்து பார்த்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் வாந்தி எடுக்கலாம். 

முன்னேறி அடுத்த வரிசைக்கு நகர்ந்தேன். அங்கே கூட்டம் கம்மியாக இருந்தது. முதல் வரிசை முற்றிலும் காலி.  காரணம் , அதற்கு முன் மினுமினுக்கும் திரை ஒன்று, எந்த ரயில் எவ்வளவு தாமதம் என்பதை சிவப்பு எல் இ டி யில்  தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது. இந்த இடம்  தான் நமக்கு தோது படும். யாரும் அருகில் வரமாட்டார்கள். ஆறு சேர்களை ஒன்றுபட ஒட்டி வைத்திருந்தார்கள். அதில் எது நடு என்று தெரியாமல் மூன்றாவதில் உட்கார்ந்தேன்.  பாக்கெட்டில் டிக்கெட்டை தொட்டு பார்த்துக் கொண்டேன்.  

உட்கார்ந்த கால் மணி நேரத்தில், பசிப்பது போல இருந்தது. முக்தா டிபன் சென்டரில் கூட்டம் கம்மியாக இருந்தது. பேருக்கு தான் டிபன் சென்டர் , ஆனால் குமுதம், விகடன் தொடங்கி சரோஜா தேவி தாண்டி காண்டம் வரை எல்லாம் கிடைத்தது . ரயில் பயணத்திற்கு எதற்கைய்யா காண்டம். காலம் கெட்டு கிடக்கிறது. 

இரவுக்கும் இங்கேயே வாங்கலாமா இல்லை ரயிலிலா என்று யோசித்தேன். ரயில் உணவு என்பது லாட்டரி விழுவது  போல,  நூறில் ஒரு முறை தான் நன்றாக இருக்கும். 

“சார் பிரியாணி சூடா இருக்கு” என்று குப்தாகாரன் விளம்பரத்தை ஆரம்பித்தான் . உன் பிரியாணியை தின்று விட்டு நாள் முழுவதும் நான் கழிவறையில் கிடக்கவா. 

 “அதெல்லாம் வேணாம்  , ஒரு பூரி செட் , ரெண்டு இட்லி தாங்க ”, பூரி ஆசைக்கு , இட்லி அத்தியாவசியம் . 

“டப்” என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். எக்ஸ்ட்ரா லார்ஜ் பெருசு ஒன்று  சூட்கேஸ் மேல் இடித்து விட்டு, அதற்கு என்னை திட்டி விட்டு, முறைத்து சென்றது . கண்ணை புடணியில் வைத்திருப்பர் போல. இடியட். 

 அடுத்து  ஒரு மசாலா டீ ஒரு வடை. அப்படியே மாலை முரசும், குமுதமும். வடை மொறுமொறுப்பாக இருக்க, டீ ,வெந்நீரில் சர்க்கரை.   பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன். 

என் பெட்டி நிற்கப் போகும் இடத்தில் கொசு இருந்தது , நாற்றம் அடித்தது, ஆனால் ஆளில்லை. குமுதத்தை மேலோட்டமாக மேய்ந்தேன் . இரண்டு நடிகை படத்தை தவிர பெரிதாக ஏதும் தென்படவில்லை . ஆனந்த விகடன் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது . 

ஜி டி  எக்ஸ்பிரஸ் ஆட்டிக்கொண்டு மெதுவாக வந்து நின்றது. ஜி 6 இருக்க வேண்டிய இடத்தில் ஜி 4. நாடு எப்படி முன்னேறும்?  ஜி 6 நோக்கி நகர்ந்தேன்.  உள்ளே சென்று சூட்கேஸை  அடியில் வைத்து பூட்டி , ஒரு இழுப்பு இழுத்து பார்த்து சமாதானம் ஆனேன். வாங்கியவற்றை லோயர் பர்தில் வைத்துவிட்டு , சார்டை பார்த்துவிட்டு வரலாமென நகர்ந்தேன். எதிரில்  வடக்கு குடும்பம் . என் பெட்டியில் இடித்து சென்ற அதே எக்ஸ்ட்ரா லார்ஜ் பெருசு. அவருக்கு  ரயிலின் நடு சந்தே பத்தவில்லை. இதில் நான் எங்கே வெளியில் செல்வது. 

என் போதாத காலம் , அவர்களும்  நான் இருந்த இடத்திலேயே டேரா போட்டார்கள். அவர் தன்னை சங்கர்லால் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.என்னுடைய லோயர் பர்த் அவுட் . இறைவன் அப்பர் பர்த் கன்பார்ம் செய்து தந்தான் . இருந்த ஆறு இடங்களில் ஐந்து பேர் இருந்தோம். ஆறாவதாக வந்தாள் அவள். 

அப்பப்பா என்ன ஒரு வாசனை. ஆறாயிரம் ரூபாய் சென்ட் போல. அந்த கம்பார்ட்மெண்ட்டே கமகமத்தது .அவளின் பை வைக்க சீட்டடியில் இடம் இல்லை . சங்கர்லால் என் சூட்கேஸை இழுத்து பார்த்து அதை நகர்த்தும் முயற்சியை கை விட்டு அவரின் சாமான்களை அடைத்தார். சங்கிலி போடாமல் இருந்தால் தூக்கி போட்டு இருப்பார் போல. அந்த சென்ட் மங்கை என்னை பார்த்து புன்னகைத்தாள், பேச்சு கொடுத்தேன். புனேவில் வீடு , சென்னையில் வேலை. நாக்பூர் வரை வந்து, அங்கிருந்து புனே என்றாள். அழகாகவே இருந்தாள், ஆனால் முகத்தில் மகாராஷ்டிரா ஜாடை இல்லை . ஒருவேளை வடக்கு தெற்கு கலப்பாக இருக்கலாம். 

பத்து நிமிடம் தாமதமாக ஜி டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. நானும் அவளும் எதிரெதிரே. ஆங்கிலத்தில் பேசினாள். என்னுடைய சுமார் ஹிந்திக்கு வேலையில்லை.தடக் தடக் சத்தத்தின் இடையே நாங்கள் பரஸ்பரம் ஒரு புரிதலை  உருவாக்க முயன்று கொண்டிருந்தோம்.  சங்கர்லால் இப்பொழுது வேஷ்டிக்கு  மாற்ற முயன்று கொண்டிருந்தார். யாரை பற்றியும் கவலைப்படாமல்  , வேட்டியை வயிற்றில் சுற்றிவிட்டு , மேல் சட்டை , உள்ளாடைகளை  கழட்டி , மனைவியிடம் தந்தார். பெண்கள் தான் இந்தியாவில் எத்தனை கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் . ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக சங்கர்லாலை பார்த்தேன்.  

இதையெல்லாம் கண்டுகொள்ளாத அவள் அந்த பக்கம் வந்த டிப் சாய் வாங்கினாள் .  வேண்டுமா என்பதைப் போல என்னை பார்க்க, சரி என்று தலையாட்டினேன். அதெப்படி அரை மணி நேரத்தில் இப்படி ஒரு அன்யோன்யம்? ஒருவேளை இவள் தான்  நான் தேடி வந்த தேவதையா. இல்லை இவள் எல்லோரிடமும் இப்படித்தான் இருப்பாளா . நாக்பூர் செல்வதற்குள் கண்டுபிடிக்க வேண்டும். 

இந்தப் பக்கம்  சங்கர்லால்  குமுதத்தில் மூழ்கி இருந்தார் . என்னுடைய குமுதத்தில். கேட்கக்கூட இல்லை. அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்க வேண்டும். விடாமல் நடு அட்டையில் இருந்த சுந்தரியை வெறித்து கொண்டிருந்தார். அருகில் இருக்கும் அவரது குடும்பத்தையும் , என்னையும்,  அவளையும் கண்டுகொள்ளாமல், வேட்டிக்குள் கையை விட்டு சொரிந்தார். என்ன ஜென்மமோ. அவரை மேலும் மனதில் திட்டி தீர்த்தேன் . வயதுப் பெண் இருக்கும் இடத்தில் இங்கீதமே இல்லாமல் , சே.  

டி டி வந்துவிட்டார். என் டிக்கெட்க்கு மட்டும் லைசென்ஸ் கேட்டார் . தமிழன் என்றால் இளக்காரம். டிடி அவளிடம் இந்தியில் வழிந்தான். என் டிக்கெட்டை பத்திர படுத்திக்கொண்டேன். நாக்பூரில் கேட்பார்கள். 

பத்து மணிக்கே சங்கர்லால் லோயர் பர்த்தில் காலை நீட்டினார். சமிக்கை அறிந்து நான் அப்பர் பர்திற்கு தாவினேன்.அவளும் தான். சிறிது நேரம் வேலை, உணவு என பேசினோம். சங்கர்லால்  டி டி எஸ் சவுண்டில் குறட்டை விட ஆரம்பித்திருந்தார் . இதனால் அவளிடம் முதுகை காட்டி தூங்க நேர்ந்தது. 

விடாமல் குறட்டை விட்ட சங்கர் லாலை திட்டிக் கொண்டே தூங்கினேன். ஆறு மணிக்கு கண் திறந்தேன். அவள் இல்லை. கழிவறைக்கு சென்றிருக்கலாம். கீழே சங்கர்லால், காலை விரித்து தூங்கிக்கொண்டிருந்தார். வேஷ்டி அபாயகரமான இடத்தில் இருந்தது.  சே என்ன இவர், இப்படி செய்கிறார் . அதுவும் அவள் இருக்கும் இடத்தில். 

சங்கர்லால் எழுந்து  சிரித்தார். நான் அவளைத் தேடுவது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் . அவள் வாராங்கல் ஸ்டேஷனில் இறங்கி விட்டதாக இந்தியில்  சொன்னார். சோகம் ஆட்கொண்டது.   ஏதோ தோன்றியவனாய் பின் பேன்டை தொட்டு பார்த்தேன் . பர்ஸ் இல்லை , டிக்கெட் மட்டும் இருந்தது.

சங்கர் லாலிடம் வழிந்து இரு நூறு ரூபாய் ,வாங்கிக் கொண்டேன். 

சங்கர்லாலை போல நல்லவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது.. 

Hi, I’m tamilvalai

Leave a Reply