ஆதாம் ஏவாளும், அபார்ஷனும்
அமெரிக்கா எனும் மாயை தொடரின் இரண்டாம் கட்டுரை இது, முதல் கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும் – https://writervivek.com/2022/06/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f/
*****
“புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை என் இடத்தை நிறப்பக் கூடாது என்பதே எனது கடைசி விருப்பம்.”
செப்டம்பர் 2020’ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஜஸ்டிஸ் ரூத் ஜின்ஸ்பேர்க் பேடர் (சுருக்கமாக ஆர் ஜி பி ) இறக்கும் முன் கூறிய வார்த்தைகள் இவை. யோசித்து பாருங்கள், ஒரு ஜட்ஜ் இறக்கும் தருவாயில் தன் பேத்தியிடம், தன் பதவி குறித்து சொல்லி விட்டு மறைந்திருக்கிறார் என்றால் அவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும்? அப்படி என்ன பதவி வெறி என்று நினைக்க வேண்டாம். ஆர் ஜி பி இதை ஒரு காரணமாகத் தான் சொல்லிவிட்டு இறந்திருக்கிறார்.
பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவி காலியாகி விட்டால் , அமெரிக்க ஜனாதிபதி , தன் குழுவுடன் ஆராய்ந்து ஒருவரை நீதிபதியாகத் தேர்ந்தெடுத்து , அவரை செனேட்டிடம் அனுப்புவார் . அவர்கள் ஆயிரம் குறுக்கு கேள்வி கேட்டு பதவியில் அமர்த்துவார்கள் . அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் இறந்தாலோ , அல்லது தானாகவே பதவியிலிருந்து விலகிக் கொண்டால் மட்டுமே வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் . ஆர் ஜி பி இறக்கும் சமயத்தில் டிரம்ப் தன் முதல் ஆட்சிக்காலத்தின் அந்திமத்தில் இருந்தார். அவர் ஏற்கனவே இரண்டு வலதுசாரி நீதிபதிகளை பதவியில் அமர்த்தியிருந்தார். தான் இறந்ததும், மற்றுமொறு வலது சாரி நீதிபதி நியமிக்கப்படுவார், அது உச்ச நீதிமன்றத்தையே ஒரு சித்தாந்தத்திடம் அடகு வைத்து விடும் என்ற காரணத்தினால் தான் ஆர் ஜி பி முதல் வரியில் உள்ள கருத்தை தெரிவித்தார்.
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இடம் அவ்வளவு முக்கியமான ஒன்று. உலகில் வேறெங்கும் இல்லாத விதமாக , தான் ஒரு சித்தாந்தத்தை சேர்ந்தவன்(ள்) என்று வெளிப்படையாகவே பிரகடனப் படுத்துபவர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் . தன்னை ஒரு லிபெரல் -இடதுசாரி என்றோ, கன்சர்வேட்டிவ் – வலது சாரி என்றோ அடையாளப் படுத்தி விட்டு , அவரவர் சித்தாந்தத்திற்கு ஏற்ப தீர்ப்புகளை எழுத முடியும். எதிர் கேள்வி கேட்டாலும், ஊரே போரிட்டாலும் அவர்கள் எழுதிய தீர்ப்பே இறுதியானது. அந்த தீர்ப்பை காங்கிரசும், செனெட்டும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மாற்ற முடியும். அதற்கு சில பல ஆண்டுகள் பிடிக்கும்.
அமெரிக்காவில் , சட்டங்கள் சொல்லாத சில பொது மரபுகள் உண்டு. உதாரணமாக, தேர்தலுக்கு முன் அவர்கள் புது உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மாட்டார்கள். அடுத்து ஆட்சி அமைக்கும் ஜனாதிபதிக்கான வேலை அது என்று ஒதுங்கி விடுவார்கள். நல்ல மரபுகளை தெருவில் போட்டு, பூட்ஸால் நசுக்கவே ஆட்சிக்கு வந்தவர் டிரம்ப். அவர் ஊர், உலகம் , ஆர் ஜி பி என்று யார் கெஞ்சியும் கேளாமல் , ஆட்சி முடிய சில மாதங்கள் இருந்த நிலையில் தன் சித்தாந்தம் சார்ந்த பெண் ஒருவரை நியமித்தது , வலது சாரி பெரும்பான்மை உச்சநீதிமன்றத்தை நிறுவினார்.
எந்த ஒரு உச்ச நீதிமன்றமும் ஒரு சார்பாக மட்டும் தீர்ப்புகளை எழுத ஆரம்பித்தால் அவற்றின் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் இன்றைய உச்ச நீதிமன்றம், ஆறு வலது சாரி நீதிபதிகளையும், மூன்று இடது சாரி நீதிபதிகளையும் கொண்டது. இப்படிப் பட்ட வலதுசாரிப் பெரும்பான்மை கொண்ட உச்ச நீதிமன்றத்தால் எழுதப்பட்ட தீர்ப்பு ஒன்று இன்று பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது . பெண்களின் தனி மனித உரிமைக்கே வெட்டு வைக்கும் தீர்ப்பு அது. அதனால் இன்று அமெரிக்க பெண்கள் வீதிகளில் கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதே அந்தத் தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பின் முதல் வரைவு மே மாதத்தில் வெளியே கசிந்தது. அன்றே அமெரிக்காவில் ஒரு கொந்தளிப்பு எழுந்தது. இதோ உச்ச நீதிமன்றம் சம்மர் விடுமுறைக்கு செல்லும் முன் அந்த வரைவையே தீர்ப்பாக மாற்றி , பல கோடி அமெரிக்கப் பெண்களின் அடிப்படை உரிமையை தகர்த்தெறிந்துள்ளது. தீர்ப்பு வந்த ஐந்தாவது நிமிடம், பல அமெரிக்க மாகாணங்களில் அவை அமல் படுத்தப் பட்டன. அங்கிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் , அபார்ஷன் செய்து கொள்ள பல மைல் தாண்டிச் செல்ல வேண்டும். இத்தனைக்கும் இதற்கு முன் அவர்களின் அபார்ஷன் உரிமைக்கு காரணமாக இருந்த ரோ vs வேட் என்ற வழக்கின் தீர்ப்பையே அவர்கள் போராடித் தான் பெற்றார்கள்.
அது என்ன ரோ vs வேட்?
ஜேன் ரோ என்பது ஒரு புனைப் பெயர், உண்மையில் அவர் பெயர்
நார்மா மெக்கோர்வி. அவர் 1969 இல் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். அவர் இருந்த டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது. அதற்கு எதிராக ஜேன் ரோ என்ற புனைப்பெயரில் அவர் தாக்கல் செய்த வழக்கே ரோ vs வேட் என்று அழைக்கப்படுகிறது. அதன் தீர்ப்பில் அன்றைய உச்ச நீதிமன்றம் , கருக்கலைப்பு பெண்களின் தனி மனித சுதந்திரம் என்றும் , இது அமெரிக்கப் பெண்களின் அடிப்படை உரிமை என்றும் தீர்ப்பு எழுதியது(இது வெளி வந்தது 1973இல், கர்ப்பமான ரோ சுகப் பிரசவம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்தே இந்தத் தீர்ப்பு வெளிவந்தது. ). ஒரு அதி தீவிர கத்தோலிக்க நாடாக தன்னை காட்டிக் கொள்ளும் அமெரிக்க இந்த தீர்ப்பை எப்படி ஏற்கும். தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்த தீர்ப்பு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அங்கங்கே வலது சாரி மாநிலங்களின் கவர்னர்கள் , அவர்களால் முடிந்த அளவிற்கு அபார்ஷன் செய்யும் வழிமுறைகளை , இடியாப்ப சிக்கல் ஆக்கினர். அன்றிலிருந்து இன்று வரை ப்ரோ லைஃப் என்று வலது சாரி இயக்கங்கள் பல தோன்றி ரோ vs வேட் தீர்ப்பை நீர்த்துப் போக தினமும் போராடி வருகின்றன.
இந்தத் தீர்ப்பு வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. எவ்வளவோ பேர் முயற்சி செய்தும் ,எத்தனையோ வலது சாரி அரசாங்கங்களின் அச்சுறுத்தலை தாண்டி நின்றது. ஆனால் அது , டிரம்ப்பின் மூன்று நீதிபதிகள் உள்ளடக்கிய சுப்ரீம் கோர்ட்டால் இன்று குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கிறது. 5-4 என்ற ஓட்டில் அமெரிக்கப் பெண்களின் கருப்பையை, அவர்களிடம் இருந்து பிடுங்கி விட்டது.
எதிர்த்து வாக்களித்த அந்த நாலு நீதிபதிகளும் – அமெரிக்கப் பெண்களுக்காக வருந்துவதாக தங்களின் எதிர்ப்பை எழுதிவிட்டு பேனா நிப்பை உடைத்தாலும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத வரிகள் அவை. அமெரிக்க ஜனாதிபதி காங்கிரசால் அபார்ஷனை ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளிவிட்டார். காங்கிரஸ் சட்டம் இயற்றினாலும் , வலதுசாரிகள் சரி சம ஓட்டுகள் கொண்ட செனேட்டில் இது தோற்றுப் போகும். ஆக மொத்தம் போன உரிமை திருப்பிக் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சைகள் கொஞ்சம் நஞ்சமல்ல . காரணம், ஒரு பெண் முதல் ஆறு வாரங்களில் கருவை கலைக்க வில்லை என்றால் அதை அதற்கு மேல் அந்த சிசுவை வளர்த்தே ஆக வேண்டும். பெண்களுக்கு தங்கள் பீரியட்ஸ் எப்போதென்று தெரியவே சராசரியாக நான்கு வாரம் தேவைப்படும். மீதி இருக்கும் இரண்டு வாரத்தில் அவர்கள் இந்தச் சோதனைகளை செய்து பார்க்க வேண்டும். பார்த்த அடுத்த நொடி முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும்! இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இது கற்பழிக்கப் பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பது எவ்வளவு வெட்ககேடானது?
இந்த கேவலமான விதி குறித்து , அமெரிக்க செனட்டர் ஒருவரிடம் கேட்கிறார்கள், கற்பழிக்கப்பட்ட பெண் ஏன் அந்த கருவை சுமக்க வேண்டும் என்று? அவரோ நக்கலாக – அவள் ஆறு வாரங்கள் என்ன செய்து கொண்டிருந்தாள் , அதற்குள் ஏன் கருவை கலைக்கவில்லை என்று கூசாமல் எதிர் கேள்வி கேட்கிறார். யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டான், அதிலிருந்து அவள் வெளி வருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும், இதில் அவள் அந்தக் கருவை கலைக்க , கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்தே போராட வேண்டும் என்பது எவ்வளவு அபத்தமானது. இது தான் இன்றைய அமெரிக்கப் பெண்களின் நிலைமை. இது வெறும் பெண்கள் பிரச்சனை மட்டுமல்ல , இந்த உச்ச நீதிமன்றம் அடுத்து மூன்றாம் பாலினத்தின் உரிமைகள், கே ரைட்ஸ் என்று, எதைப் பறிக்கும் என்று பெட்டிங்கே நடக்கிறது.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , ஒரு பக்கம் உயர்ந்து வரும் விலைவாசியையும் கட்டுப்படுத்த முடியாமல் , மறுபக்கம் பெண்களின் அடிப்படை உரிமைகளை பிடுங்கி எடுக்கும் உச்ச நீதிமன்றங்களை ஒன்றும் செய்ய முடியாமல், கையைப் பிசைந்தபடி உக்ரைன் போரில் மட்டும் கவனம் செலுத்துகிறார். மக்களின் கோபம் அவர் பக்கம் திரும்பி, அவர் கட்சிக்கே வேட்டு வைக்கலாம் . இது வரவிருக்கும் மிட் டேர்ம் எலெக்ஷனில் எதிரொலிக்கலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு உச்ச நீதிமன்றத்திற்கு இவ்வளவு அதிகாரம் இருக்கலாமா என்ற கேள்வி எல்லா மூலைகளிலும் எதிரொலிக்கிறது. பூனைக்கு மணி கட்ட வேண்டிய இடங்களான – உச்ச நீதிமன்றம், செனேட் என்று அனைத்தும் வலதுசாரிகளின் பக்கம் உள்ளது (எதிர்த்து சட்டம் இயற்ற செனெட்டில் 60/40 என்ற விகிதத்தில் பெரும்பான்மை வேண்டும்).
நூற்றுக்கு எழுபது அமெரிக்கர்கள் , தங்களுக்கு இந்த உச்ச நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனாலும் எதையும் மாற்ற முடியாது.
மேலோட்டமாக பார்த்தால், நம்மைப் போன்ற இந்தியர்களுக்கு இது ஒரு பெரும் விஷயமாகவே தெரியாது. காரணம், நமக்கு அபார்ஷன் உரிமைகள் மிகத் தெளிவாக , தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சித்தாந்தத்தை தூக்கிப் பிடிக்கும் எந்த ஒரு அதிகாரமிக்க அமைப்பும், கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் என்பதற்கான சமீபத்திய உதாரணம் அமெரிக்கா.
இந்தியாவே பரவாயில்லை என்று தோன்றினால் , கம்பெனி பொறுப்பல்ல.
2 Comments