ஹாம் பர்கரும் , ஆயிரம் தோட்டாக்களும்
அமெரிக்காவில் ஒரு விதமான பதட்ட சூழ்நிலை நிலவுகிறது . உயர்ந்து வரும் விலைவாசி, கொரோனாவால் ஏற்பட்ட சப்ளை செயின் பிரச்சனைகள் என்று அமெரிக்காவின் மேல் சனி பகவானின் பார்வை ஸ்திரமாக உள்ளது. இதன் தாக்கத்தால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில்(பார்முலா) இருந்து டாயலட் பேப்பர் வரை சகலத்துக்கும் தட்டுப்பாடு. இதிலிருந்து மீள்வதற்குள், ரஷ்யா-உக்ரைன் போர். இவையெல்லாம் படிப்படியாக பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்தி நடுத்தர வர்க்கத்திற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கேலன் பெட்ரோல் கிட்டத்தட்ட ஐந்து டாலர் என்று வரலாறு காணாத விலையில் விற்கப்படுகிறது. அமெரிக்காவின் மினிமும் வேஜ் எனப்படும் அடிப்படைச் சம்பளமே ஒரு மணி நேரத்திற்கு ஏழேகால் டாலர் தான். இதில் நாலைந்து டாலர்கள் பெட்ரோலுக்கே போய்விட்டால்? மிக விரைவில் ரீசசன் வரும் என்று சத்தியம் அடித்து சொல்கிறார்கள் வல்லுநர்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி அம் மக்களை அச்சுறுத்தும் ஒரு பெரும் பிரச்சனை உள்ளது.
அது அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகள். அமெரிக்கா என்றவுடன் சுதந்திர தேவி சிலையும், நயாகரா பால்சும் , ஆயிரக்கணக்கான நியான் பல்புகள் நிறைந்த நியூ யார்க் சந்துகள் மட்டுமே ஞாபகம் வரும் சிலருக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். அப்படி என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்?
கடந்த மே மாதத்தில் மட்டும், மூன்று மிகப் பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்திருக்கின்றன. ஒன்று நியூயார்க் மாநிலத்தின் சூப்பர் மார்க்கெட்டில் கறுப்பினத்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டது . அடுத்தது, டெக்சாஸ் மாநிலத்தில் சிறார் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்டது. அதில் பத்து வயதே ஆன 19 குழந்தைகள் இறந்தனர். மிகச் சமீபத்தில் அதே டெக்சாஸ் மாநிலத்தின் மருத்துவமனை ஒன்றில் நாலு பேர் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதை எழுதி வெளியிடும் நேரத்திற்குள் இன்னும் ஒரு சில துப்பாக்கிச்சூடுகள் நடக்கலாம். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பள்ளிகள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் இப்படி துப்பாக்கி சூடு நடக்க என்ன காரணம்? இதைச் செய்தவர்கள் யார்?
முதல் இரண்டு சம்பவங்களுக்கு காரணமானவர்கள் 18 வயதே ஆனவர்கள். அந்த இருவரும் வெள்ளையர்கள், மூன்றமானவர் கறுப்பினத்தவர் – அவர் சுட்டதற்கான காரணம் சொந்த பகை என்று சொல்லப்படுகிறது . மற்ற இருவருக்குமான காரணங்கள் , அமெரிக்காவிற்கே உரியவை. பள்ளிக்கூட துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய ராமோஸ் என்பவன், தனது பதினெட்டாவது பிறந்த நாள் வரை காத்திருந்து, துப்பாக்கியை வாங்கி, முதலில் தன் பாட்டியை கொன்றுவிட்டு, நூறு கிலோமீட்டர் காரில் பயணித்து , லத்தீன் அமெரிக்கர்கள் அதிகம் செல்லும் பள்ளிக்குச் சென்று, 19 குழந்தைகளை கொன்றிருக்கிறான். காரணம்? திக்குவாய் என்பதனால் பள்ளியில் அவனுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களும், இன்டர்நெட்டில் பரப்பப்படும் புரட்டுகளை நம்பியதாலும் , அதி தீவிர சிந்தாந்த எண்ணங்களும் , ஒழுங்கற்ற குடும்பச் சூழலும் இவர்களை இந்த இடத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இது ஏதோ தற்செயலான ஒரு விஷயமும் அல்ல.
அமெரிக்காவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு துப்பாக்கிச் சூடு. இவையெல்லாம் ஏன் நடக்கின்ற என்பதை ஆராய அமெரிக்காவின் மூலத்திற்கே செல்ல வேண்டும்.
அமெரிக்கர்களுக்கு நெருக்கமான ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டால் அதில் கட்டாயம் இரண்டு விஷயங்கள் இடம் பெரும். ஒன்று பர்கர், மற்றொன்று கன்ஸ். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை அவர்களின் அரசியல் அமைப்பு சட்டம் தாராளமாக வழங்குகிறது. இந்த உரிமை செயல்பாட்டில் இருக்கும் கடந்த இருநூறு ஆண்டுகளில், சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டாலும், 18 வயது நிரம்பிய எந்த ஒரு அமெரிக்கரும் அரை மணி நேரத்தில் ஒரு துப்பாக்கியை வாங்கி விடலாம்.
இந்தியாவை விட மூன்று மடங்கு பெரிய நாடான அமெரிக்காவில் , மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை தான் .ஆனால் மக்கள் தொகையை விட அவர்களிடம் துப்பாக்கிகள் அதிகம். சராசரியாக நூறு பேருக்கு நூற்றுப் பத்து துப்பாக்கிகள். எங்கிருந்து வந்தது இந்த துப்பாக்கி மோகம்? எதற்கு இவ்வளவு துப்பாக்கிகள் என்று நமக்கு கேள்வி எழலாம். இங்குதான் அமெரிக்கர்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளவேண்டும்.
அமெரிக்கர்கள் முக்கால்வாசிப் பேர் தனித்தனி வீடுகளில் இருப்பதையே விரும்புபவர்கள். அப்படி தனித் தனியே இருக்கும் வீடுகளில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை அமெரிக்கா தருகிறது . ஒருவரின் வீட்டில் அனுமதி இல்லாமல் நுழைந்தால் சுட்டுத்தள்ள கூட உரிமை உண்டு. இதை பயன்படுத்திக் கொண்ட ஆயுத கம்பெனிகள் கைத்துப்பாக்கியில் ஆரம்பித்தது இன்று போர்களில் பயன்படுத்தப்படும் M15 துப்பாக்கிகள் வரை , ரோட்டில் சமோசா விற்பதைப் போல விற்க ஆரம்பித்து விட்டார்கள் .
இதிலிருந்து தான் பிரச்சனை பூதாகாரமாக மாற ஆரம்பித்தது . தன்னை , தன் வீட்டை பாதுகாத்துக்கொள்ள ஒருவனுக்கு கைத்துப்பாக்கியும், ஷாட் கண்ணும் போதும்! எதற்கு ஒரு நொடிக்கு ஆறு குண்டுகள் சுடும் துப்பாக்கி? அந்த துப்பாக்கிகளையாவது தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க டெமோகிராடிக் கட்சி போராடி வருகிறது. அவர்களின் நேரெதிரான ரிபப்லிக் கட்சியோ- இவர்கள் சொல்வது மட்டும் நடந்துவிட்டால், அடுத்ததாக நம் துப்பாக்கி உரிமையையே பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கர்களை திசை திருப்புகிறது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து, துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புலம், அவர்களின் மனநல சான்றிதழ், அவர்களின் ஆன்லைன் சோசியல் ப்ரொபைல் போன்ற சில சரடுகளை சரிபார்த்து, அவர்களுக்கு துப்பாக்கி விற்கும் முடிவை எடுக்க, சட்டம் கொண்டு வரலாம் . ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். காரணம் இக்கட்சியில் இருக்கும் சில செனேட்டர்களே இதை விரும்ப மாட்டார்கள், சட்டமாக்கவும் விட மாட்டார்கள். ஆயுத லாபி அப்படிப்பட்டது. இந்த லாபி கொடுக்கும் பணத்தை வைத்து வெற்றி பெற்ற செனட்டர்கள் அவர்களுக்கு எதிராக எப்படி வாக்களிப்பார்கள்?
நான் ஒரு தீவிர டெமோகிராடிக் நண்பர் ஒருவரிடம் கேட்டே விட்டேன், ஏன் இப்படிப்பட்ட துப்பாக்கி மோகம் என்று. அவரின் விடை என்னை யோசிக்க வைத்தது. அதாவது இன்றிருக்கும் அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு, அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர்களின் சரித்திரத்திலேயே இல்லாத வகையில் லாஸ் வேகாஸ் நகரின் விண்ணைத்தொடும் கட்டிடங்களில் ஒன்றில் இருந்து , அதன் கீழே நடக்கும் நிகழ்ச்சியில் இருந்தவர்களை குறிபார்த்து சுட்டுக் கொன்றான் ஒருவன். ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் குண்டுகள் மழையாக பொழிந்து, அறுபது பேர் இறந்து, அமெரிக்காவே சோகத்தில் ஆழ்ந்த தினம் அது. அதன் பிறகு கூட இங்கே ஒரு துரும்பும் நகரவில்லை என்று நொந்து கொண்டார். இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து சில ரிபப்ளிக்கன் செனேட்டர்களின் உதவியால் மாற்றம் வந்தாலும் , அவர்களின் உயிருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரே போடாக போட்டார்..
அமெரிக்காவில் இதற்காகத் தான் துப்பாக்கிச்சூடுகள் நடக்கின்றன என்று எந்த ஒரு வட்டத்திலும் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது. உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பேட்மேன் படத்தை வெளியிட்ட தியேட்டர் ஒன்றில், செமி ஆட்டோமேட்டிக் ரைபிள் சகிதம் புகுத்த ஒருவன், படம் பார்க்க இருந்த பன்னிரண்டு பேரைக் கொன்றான் . அடுத்து தி ஜோக்கர் என்ற ஒரு படம் வெளிவந்தவுடன், அதன் பாதிப்பில் துப்பாக்கிச்சூடுகள் அதிகரிக்கலாம் என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்கள் அமெரிக்க வல்லுநர்கள். வெறும் ஒரு ஒரு படம் வெளி வருகிறது, அதற்கு இவ்வளவு பீதி . இது தான் இன்றைய அமெரிக்கா.
இங்கே தொடர் துப்பாக்கிச் சூடுகள் நிகழும் போதெல்லாம் ஒரு கொதி நிலை உருவாகி, அது ஐந்தாறு நாட்களில் , பெட்டிச் செய்தியாக மாறுகிறது . அவ்வளவே. பாதிக்கப்படுவது என்னவோ பாவமறியா சிறு பிள்ளைகளும், நடுத்தர மக்களும், கறுப்பர்களும், மெக்சிக்கர்களும் தான்.
எந்த ஒரு சித்தாந்தமும் அதன் அதிதீவிர எல்லைக்கு செல்லும் பொழுது ப்ரளயங்களை உண்டு செய்யும் . இடதுசாரி, வலதுசாரி, நடு சாரி என்ற எந்த ஒரு சார்பு நிலைக்கும் இது பொருந்தும். அந்தச் சித்தாந்தத்தின் ஈசானிய மூலையில் நின்றுகொண்டு எடுக்கப்படும் முடிவுகள் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இப்படி பல ஆண்டுகளாக எடுத்த/எடுக்காத முடிவுகளின் விலையை , இன்று அமெரிக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறது .
இதை படித்து முடிக்கும் பொது, இந்தியாவே பரவாயில்லை என்று தோன்றலாம். ஆனால் இதை அப்படியே இந்தியாவிற்கும் பொருத்திப் பார்க்கலாம் . துப்பாக்கிக்கு பதில் பட்டா கத்தி, பத்து கொலைகளுக்கு பதில் ஒரு கொலை, அவ்வளவு தான் வித்யாசம் . அமெரிக்காவில் கிடைப்பதைப் போல நம்மவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடத்தித்தால்? அமெரிக்காவை விட இந்தியாவில் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் .
One Comment