ஏசி குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஏழு பேர் அமர்ந்திருந்தனர், ஒரு நவ நாகரீக பெண் சரளமாக ஆங்கிலத்தில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறு பேருக்கு அவள் சொல்வது புரிந்திருக்க வேண்டும், பாலுவிற்கு அவளது பெயரான, அபிநயாவை தவிர பெரிதாக ஒன்றும் புரியவில்லை. அவள் பேசி முடித்த உடன், மற்றவர்கள்  பேப்பரை எடுத்து எழுத தொடங்கினர் , அதை பார்த்து நமது பாலுவும் ஆரம்பித்தான். பாலு இது வரை பதிமூன்று இன்டெர்வியூக்கு சென்று தோற்று பழக்கப்பட்டதால் அவற்றை பதினைந்தே நிமிடத்தில்  முடித்தான், ஒரே மாதிரியான  கேள்விகள், என்ன இதில் ஒரு கட்டுரை எழுத சொல்லி கூடுதலாக  கேட்டிருந்தார்கள், அதற்கு  மட்டும், கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டான்.  மற்றவர்கள் சிரத்தை எடுத்து இன்னும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

 இவன் அறையை நோட்டம் விட்டான். அபிநயா ஒரு ஓரத்தில் நின்றாள், வாளிப்பான பெண், மாநிறம் என்றாலும் , அதை செவ்வனே பராமரித்து ஒரு பள பளக்கும் தன்மையில் வைத்திருந்தாள் .  இவனுடன் வந்திருந்த அனைவரும் ஆண்கள், இவனை தவிர வேறு யாருக்கும் மீசை இல்லை. இவன் மட்டுமே கருப்பு. ஒரு வழியாக அனைவரும் எழுதி முடித்து அவளிடம் சமர்ப்பித்தனர் . அவளருகே சென்ற போது, ஆளை மயக்கும் அளவுக்கு ஒரு வாசனை வந்தது, அடேயப்பா, இப்படி ஒரு வாசனையை அவன் வாழ்க்கையில் நுகர்ந்து இல்லை. அவள் அத்தனை பேருக்கும் அதே  புன்னைகையை செலுத்தினாள் .இத்தனை ஆண்களுக்கு மத்தியிலும் அவள் சலனமற்று செயல்பட்டாள். மறுபடியும் ஆங்கிலத்தில் ஏதோ சொல்ல, இந்த முறை பாலுவிற்கு கொஞ்சம் புரிந்தது. அடுத்து வட்ட மேஜை மாநாடு(குரூப் டிஸ்கஷன்) என்று கூறி இவள் வெளியேற சுரேஷ் உள்ளே  வந்தான்.

சுரேஷிற்கு  வயது முப்பதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் பார்ப்பதற்கு நாற்பதை தாண்டிய ஒரு தோற்றம், காதோரம் நரை, நெஞ்சின் கீழ் ஆரம்பிக்கும் தொப்பையை கஷ்டப்பட்டு பேண்டினுள் திணித்திருந்தான். அவள் அளவுக்கு ஆங்கிலமும் இல்லை. அனைவரையும் இந்தியாவின் மத்திய வர்க்கத்தை எப்படி மேம்படுத்துவது என்று பேச சொன்னார்கள். முதலில் பேச ஆரம்பித்தது அந்த மைதா மாவு கலரில் இருந்த கண்ணாடி. கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல், மக்கள் வரி கட்டுவது இல்லை, ரிசர்வேஷன் வந்ததால் தான் ஊழல் அதிகரித்தது என்று அவன் பாட்டுக்கு அவிழ்த்து விட்டான்.பேசி முடித்ததும், சட்டையின் ஓரத்தில் எட்டி பார்த்த அந்த நூலை உள்ளே சொருகி அமர்ந்தான் . 

அடுத்து வந்தவன் அதையே வழி மொழிவது போல அவன் பங்குக்கு ஒரு  சாதி சார்ந்த மக்களின் மேல் இவனுக்கு உள்ள வன்மத்தை காரி உமிழ்ந்தான், நேரடியாக சாதியை சொல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து துவைத்தான்.அதாவது கூவத்தை கூவம் ஆக்கியது சேரி மக்கள் தான் என்றும், இவர்களால் தான் இந்தியா முன்னேறவில்லை என்று ஆரம்பித்தான். சேரி வாழ் மக்களால் தான் கொசு பிரச்சனை என்று வரலாற்று சிறப்பு மிக்க முத்துக்களை சிதறினான். இது பாலுவிற்கு தான் இருக்கும் சைதாபேட்டையை நியாப்படுத்தி கோபத்தை உண்டு செய்தது . இவனுக்கு அருகே இருப்பவன், சமத்துவம் வேண்டும், கிராமப்புற மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று இவன் பேச வைத்திருந்ததை  அவிழ்த்து விட்டான். இவனுக்கு வியர்வை எட்டி பார்த்தது. பாலு  பேச ஆரம்பித்தான். முன்னாள் சொன்ன அனைவரின் கருத்துக்களை கிழித்து எறிந்தான். கூவத்தில் கொட்டும் சாக்கடை யாருடையது என்று கேட்டு , மற்றவர்களின் வாயை அடைத்தான்.  ஏன் ரிசர்வேஷன் இன்றும் தேவை , அதனால் எப்படி விளிம்பு நிலை மக்களை முன்னேறலாம் என்று புள்ளி வாரியாக பகுத்தாய்ந்தான். அம்பேத்காரை மேற்கோள் காட்டி மாற்றாக என்ன செய்யலாம் என்பதையும் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் சொன்னான். மைதா மாவு பையனுக்கும் , கொசு பாயிண்ட் பேசிய தம்பிக்கும் முகம் சிவந்திருந்தது.

அனைவரின் கருத்துக்களையும் பொறுமையாக கேட்டறிந்த சுரேஷ், சிறிது காத்திருக்கவும் என்று சொல்லி விட்டு வெளியேறினான். மற்றவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். கொசு மைதா மாவுடன் குழைந்தான் . ஐந்து  நிமிடத்தில் அபிநயாவும் சுரேஷும் உள்ளே வந்து, இரண்டு பேரை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், மற்றவர் அடுத்த முறை முயற்சிக்கலாம் என்று சொல்ல . பாலு எழுந்து செல்ல முற்பட, அபிநயா, இவன் அருகில் வந்து ஒரு பேப்பரை நீட்டி , யு ஆர் செலக்டட் , கங்கிராட்ஸ் என்று சொல்ல, இவனுக்கு இதயம் வேகமாக துடித்தது. அவள் அடுத்தாக அதே போன்ற ஒரு பேப்பரை மைதா மாவு கோவிந்தனுக்கு கொடுக்க , அவன் இவனை பார்த்து ஒரு கேவலமான பார்வை பார்த்தான் . அதாவது என் மயிருக்கு நீ சமானம் என்பது போல இருந்தது அந்த பார்வை. பாலுவை விட ஆங்கிலத்தில் சரளமாக பேசி இருந்த அந்த கொசு தம்பிக்கு கண்ணீரே வந்து விட்டது. இவனுக்கெல்லாம் வேலையா என்று அறையில் இருந்து வெளியேறும் வரை பாலுவை பார்த்து முறைத்தான்.

அனைவரும் வெளியேற சுரேஷ் இவன் அருகில் வந்து, அம்பேத்கரை மேற்கோள் காட்டி பாயிண்ட் பாயிண்டாக பேசியதால் தான் இவனுக்கு வேலை கிடைத்ததாக சொல்லி கை குடுத்தான். இவன் புன்னகையுடன் கை குலுக்க , சுரேஷின் ஷர்ட்டின் ஓரம் அதே நூல் எட்டி பார்த்தது.  

பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் அம்பேத்கர் சிரித்துக் கொண்டிருந்தார்.  

Hi, I’m valaithinni

Leave a Reply